Friday, November 30, 2018

புனிதவதி எழுதும் சிவசூத்திரம்








இடியும் மின்னலும் இறங்கி வந்த நாளில்.
கோடானிக்கோடி கரங்களுடன் என்னைத்தழுவினான்.
பூமியும் ஆகாயமும் பயணிக்கும்
மின்னல்பாதையில் என்னைக் கடத்திச் சென்றான்.
மலை முகடுகளில் மோதி
அவனை எதிர்த்து எதிர்த்து
தோற்றுப்போனது இடி.
சாதகப்பறவைகள் அவனைக் கண்ட அச்சத்தில்
உருமாறி சிட்டுக்குருவிகளாய் சிறகடித்தன.
உடலற்ற அவன் முகம் 
என்னை நெருங்க நெருங்க
அவன் முத்தத்தின் வாசனை என்னைச் சுட்டது.
நினைவு அறைகளை அவன் தீ நாக்குகளால்
துடைத்து எடுக்கிறான்.
பூசைக்கு வந்த வேட்டுவர்கள்
அச்சத்தில் விட்டுச்சென்ற பஞ்சகந்தங்கள்
பாதை எங்கும் சிதறிக்கிடக்கின்றன.
காடெங்கும் பச்சைக்கற்பூர வாசனை.
வாழைகள் குலை தள்ளுகின்றன.
முடிவில்லாதவன்
காலத்தை வென்றவன்
மின்னலென கருவறைத் திறந்து
தன்னை உயிர்ப்பித்து கொள்கிறான்.
உடலற்றவனின் கருவைச் சுமப்பது
பிரம்மன் அறியாத படைப்பின் ரகசியமாய்
எனக்குள் புதைகிறது.
ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
ஏழுகடலும் ஏழு கண்டமும் 
எண்ணிலடங்கா நட்சத்திரப்பெண்களும்
சூரியச் சந்திரர்களும் 
ராகு கேதுவுடன்
என் பிரசவ நாளுக்காய் 
வாசலில் காத்திருக்கிறார்கள்.
யுகம் யுகமாய் மரக்கிளைகளைத் தழுவிக்கிடந்த 
மலைப்பாம்புகள் விழித்துக்கொள்கின்றன.
தன்னைத் தானே இறுகத் தழுவி
இறுகத் தழுவி 
கால இடைவெளியை நிரப்புகின்றன.
காலத்தில் ஏறி காலத்தைப் புணர்ந்து
காலத்தைச் சுமந்து
காலத்தைக் கடந்து 
வெறுமையே முழுமையாய்
மூலப்பிரகிருதியைப் பெற்றெடுக்கிறேன்.
அமுதும் நஞ்சும் வடியும் முலைப்பால்
பாற்கடலாய் பெருகி நிறைக்கிறது.
ஒளியும் இருளுமாக 
ஆடுகின்றான் தொட்டிலில்.
சொற்களை எரிக்கும் 
அவன் நெற்றிக்கண் சூட்டில்
காரைக்கால் வீதிகள் தலைகுனிகின்றன.
பனிமுகடுகளில் பொன்னொளி சூடிய கங்கை
புனிதவதியின் பாடல்களைப் பாடுகிறாள்.
பேயுரு களைந்து என் உரு கண்ட
அவன் விழிகளில் திருவந்தாதி.
#SHIVA _புனிதவதி_சிவசூத்திரம்
#shivasuthiram_punithavathi

(கோடுகள் - நவ2108 இதழில் வெளிவந்திருக்கும் கவிதை.
 கோடுகள் ஆசிரியருக்கு நன்றியுடன்)

ஜெயமோகனின் வெள்ளையானை


 Image result for வெள்ளையானை

 நாவல் வெளிவந்தவுடன் வாசித்த அடிக்கோடுகள்
இன்றும் அதே புள்ளியில் என்னைக் கொண்டு வந்து
 நிறுத்தி இருக்கின்றன. அந்தப் புள்ளியில் நின்று கொண்டு
மீண்டும் வெள்ளையானையைப் பார்க்கிறேன்.
தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் அதில் மடிந்த இலட்சக்கணக்கான
தலித்துகள் , தொழிலாளர்களின் முதல் போராட்டம்
ஆங்கிலேயர்களை விட தலித்துகளைக் கொடுமை செய்த
ஆதிக்கச்சாதியினர்.. 
இந்த வரலாற்றின் பின்புலத்தை
ஒரு ஆங்கில ஆட்சியின் கேப்டன் ஏயிடன் கதைப் பாத்திரத்தில்
கொண்டுவரும் போது..
புதினத்தின் இறுதிப்பகுதியில்
ஏயிடனுக்கும் காத்தவராயனுக்கும் நடக்கும் உரையாடல்கள்.
இந்த உரையாடல்கள் ஏன்?
யதார்த்த நிலையை மீறிய உரையாடல்பகுதியை
ஜெயமோகன் வைத்திருக்கும் இடம்..
மீண்டும்  மீண்டும்  அதே பக்கங்களை வாசிக்க வைக்கிறது.
ஜெ.மோ என்ன சொல்ல வருகிறார்?
 நான் அதைத் துறந்துவிட்டேன் என்று தன் வைணவ மத
அடையாளத்தை நம்பிக்கையைத் துறந்த காத்தவராயன்
ஏயிடனுடன் பேசும் நீண்ட உரையாடல்
காத்தவராயனுக்கு ஐஸ் ஹவுஸ் தாக்குதல் 
ஏன் விசித்திரமாபிரமையைக் கொடுத்த து
பாயும் குதிரைகளுக்கு நடுவில்
அவன் கண்கள் கண்ட அந்த முகம், அதிலிருந்த நாம ம்..

அது உக்கிரமான பரவசத்துடன் சிதறித் தெறிக்கும் எங்கள்
ரத்த த்தைப் பார்த்து கொண்டிருந்த து. அதன் நாவில் எச்சில்
ஊறிக்கொண்டிருந்த து. நான் அந்த்த் தெய்வத்தைப் பார்த்து
விட்டேன். அது என்ன என்று தெரிந்து கொண்டேன்
தீவிர வைணவ பக்தியில் இருந்தக் காத்தவராயன் தான்
இத்தனையும் சொல்கிறான். அத்துடன் நிறுத்தவில்லை.
தான் இதுவரை நம்பியிருந்த படித்த வைணவத்திற்கு
மாற்றாக அவன் தான் அர்த்தம் புரியாமல் அடிக்கடி
சொல்லியபுண்ணியம்கருணை , தர்ம்ம் என்ற மாற்று
கலாச்சார வடிவத்தை முன்வைக்கிறான்.
அயொத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன் என்பதால்
இந்த உரையாடல் பகுதி இன்னும் கனமுள்ளதாகிறது.
ஆனால் அது மட்டுமல்ல..
இந்திய சமூக வரலாற்றில் தர்ம ம் அருளிய  ஞானத்தின் விதை
தோற்கடிக்கப்பட்ட து எங்களைப் போலவேஎன்று
காத்தவராயன் சொல்லும் வரலாற்றில் இந்திய
வரலாறு ஆட்சி அதிகாரம் ஒடுக்கப்பட்டவர்களின்
மறைக்கப்பட்ட கதைகள் போராட்டங்கள் என்று
வெள்ளையானை சொல்லாத இன்னும் சில வரலாற்று
பக்கங்களுக்கு வாசகனை இழுத்துச் செல்கிறது.
சித்தார்தனின் தாய் கனவில் கண்ட தும் வெள்ளையானையைத்
தான்.  ஸ்ரீனிவாச அய்யங்காருக்கு வெள்ளையானை புனிதமானது.
டாக்டர் சொல்கிறார்  வெள்ளையானை என்பது தோல் குறைபாடு
உடையஅல்பினோயானை!

யுதரான ஏசு ரோமானிய அரசனின் முகத்துடன்
வடிவமைக்கப்பட்ட து.. ..வாசகனை இன்னும் ஆழமாக
காத்தவராயன் கண்ட காட்சிக்குள் தள்ளுகிறது.

இங்கே அடையாளங்கள் என்பது வெறும் அடையாளங்கள்
மட்டுமல்ல.
அடையாளங்களின் இரத்தம் தோய்ந்த கதைகளைத்
துடைத்து புனிதப் படுத்தினாலும்
அடையாளம் தன் அதிகாரத்தின் ஆணவமுகத்தை
காலம் தோறும் காட்டிக்கொண்டே இருக்கிறது.
வெள்ளையானை
தம்ம வாழ்வை அழித்தொழித்த வெள்ளையானை
அல்பினோ வெள்ளையானை.
ஆனாலும் வெள்ளையானைஐராவதம் வெள்ளையானை
புனிதமானது.
கருப்பான யுத இனத்தில்/ தீண்டப்படாதவர்
இனத்தில்  பிறந்த ஏசுவுக்கு
அழகான ரோமானிய அரசனின் முகம்..
ஆஹா..
காத்தவராயனுக்கு மட்டுமல்ல..
நமக்கும் புரிந்து விடுகிறது..
வெள்ளையானைஅது என்ன என்று.
(மீள்வாசிப்பு பக் 387 – 398)


Tuesday, November 27, 2018

அயோத்தியகாண்டம்


 அவதாரங்களின் அதிகாரம் அரசியலானது
அயோத்தி குறுக்குச்சாலை முகவரியுடன்
ஹேராம்..
உன் ஜன னம் ஏன் சாபக்கேடானது?
குரங்குகளின் இதயத்தில்
குடியிருக்கும் நீ
மனிதர்களின் இதயத்தில்
வாடகைக்கு கூட
வரமறுக்கிறாயே.., ஏன்?
கதறல் அழுகை ஒப்பாரி..
கடந்த காலத்தில் அடங்கிப்போனது
மவுனத்தில் உறைந்து கிடக்கிறது..
இன்றைய விடியல்.
வெடிகுண்டுகள் வெடித்த பெரு நகரம்
ஓடிக்கொண்டே இருக்கும் சக்கரங்கள்
பல்லிடுக்குகளில் அடையாளமின்றி
சிதைந்து தொங்கும் வாழ்க்கை.
குண்டுதுளைக்காத நாட்களுக்காக
தவமிருக்கும் தண்டவாளங்கள்…
ஓடிக்கொண்டே..






Monday, November 26, 2018

நான் இந்து தான். நீ இந்துவா..?


 நீ இந்துவா..?

ஆம்..

வா.. நாம் இருவரும் சேர்ந்து இந்து ராஜ்ஜியத்தை
ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்.வா..

வருகிறேன். ஆனால் என் கேள்விக்கு மட்டும்
பதில் சொல்.
நீ இந்துவா ?”

என்ன கேள்வி இது.. ? நாமிருவரும்  இந்து..

ஆனால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது
அது எப்படி நீயும் நானும் இந்துவாக
இருக்க முடியும் என்று?”

இப்போது தானே சொன்னாய்..  நீ இந்து என்று

-         ஆம்.. இப்போதும் சொல்கிறேன். நான் இந்து தான்
-         என்று. ஆனால் என் சந்தேகம் எல்லாம் நீ இந்துவா
-         என்பதைப் பற்றி தான்

குழப்புகிறாயே..

குழப்பமில்லை.
என் கடவுளர்கள் எல்லாம் அடர்த்தியான மீசையும்
கையில் அரிவாளுமாக .. இருக்கிறார்கள்.
அது எப்படி உன் கடவுள்கள் மட்டும்
க்ளீன் ஷேவ் செய்த மாதிரி.. மொழு மொழுனு!
ஷாருக்கான் மாதிரி!

அப்புறம் என் கடவுள்கள் அனைவருமே நான்வெஜ்
சாப்பிடுவார்கள். அவர்களுக்கு பெரிசா கோவில்
கட்டிடமெல்லாம் வேண்டாம். ஊர் எல்லையில்
கூரையில்லாத வெட்டவெளியில் இருப்பார்கள்.
அது ஏன் உன் கடவுள்களுக்கு மட்டும் அரண்மனை
மாதிரி கோவில் கட்டனும்னு சொல்ற….
இன்னொரு சந்தேகம்.. என் கடவுள்களின் மனைவியர்
எல்லோரும் எங்க பொம்பளங்க மாதிரி
சிம்பிளா இருக்கிறப்போ
அது எப்படி உன் கடவுள்களின் மனைவியர் மட்டும்
எப்போதும் ஆபரணம் பூட்டி அலங்காரத்தோடயே
இருக்க முடியுது.. வீட்டில எதுவும் வேலையே செய்ய
மாட்டாங்களோ..
உன் கடவுளுக்கும் என் கடவுளுக்கும்
தோற்றம்,  நடை, உடை, உணவுப் பழக்கம்,
உறவு, வழிபாடு, பூசை, பூசாரி, உறைவிடம்,
மனைவியர் , பிள்ளை குட்டிகள்,
சண்டைச் ச ச்சரவுகள்
இத்தியாதி எதுவுமே ஒன்றுபோலில்லை.
அதனாலே தான் ..
கேட்கிறேன்..
நான் இந்துதான்..
நீ இந்துவா என்று.

இப்போ நீநீ தான் இந்துனு
 கோர்ட்லே போயி நீ உத்தரவு
வாங்கிட்டு வந்திடுவே!
அப்போ நான் யாரு?
நான் இந்து இல்லைனு ஆயிடும்!
 இப்போ.. பாரு ..
சத்தியமா.. என் முண்டைக்கண்ணி
அம்மன் சத்தியாமா
எனக்குப் புரியல..
கோழி அறுத்து பொங்கல் வச்சி
பூசைப் போட்டு
மாடசாமிக்கூட என் மைனி
 அருள் வந்து ஆடும் போது
வா.. 
அவ இந்து தானா ?
என்று கேட்போம்.
என் ஆத்தா..
அவ என்ன சொன்னாலும்
சொல்றது படி கேட்டுக்கறேன்..
அவ..
ஏட்டி.. என்ன கேள்வி கேட்க வந்துட்டேனு
என்னை ஓங்கி அடிச்சானா
என்ன செய்யறதுனு
எனக்கும் பயமாதான் இருக்கு..
ஆத்தா.. நீ இந்து தானே னு
பாவிமவன் நீ கேட்டு 
அவ மயங்கி விழுந்திட்டானா
போச்சு.. போ..
அது சாமிக்குத்தமாயிடும்.
பாத்துக்கோ.. சொல்லிப்பிட்டேன்.

இப்பவும் கேட்கிறேன்.
நான் இந்து  என்றால்
நீ இந்து வா என்று!


Wednesday, November 21, 2018

காலச்சுவடும் சு.ராவின் நினைவுக்குறிப்பிலிருந்து..

காலச்சுவடு.. .. சு.ராவின்
நினைவுக்குறிப்பிலிருந்து சில வரிகள்
இதை இப்போ ஏன் எழுதுகிறேன் என்று
வாசிப்பவர்கள் குழம்ப வேண்டாம்.
சத்தியமா இப்போ நான் தேடியது பாரதிதாசனையும்
பாப்லோ நெருடாவையும் தான்.
வீட்டில் நான் இல்லாத சில மாதங்களில் என் 
புத்தகங்களின் அடுக்குவரிசை
மாறியதால் வந்த வினை இது!

என் கையில் இப்போது அகப்பட்ட து எப்போதோ
நான் வாசித்த சுந்தர ராமசாமியின் புத்தகம்
“வானகமே இளவெயிலே மரச்செறிவே” 
சு.ராவின் நினைவிலிருந்து சில குறிப்புகளில்
அடிக்கோடிட்ட என் பென்சில் ...
இன்னும் கூர்மை மாறாமல் என் கண்களில்
அப்படியே தென்பட்டது..
நீண்ட இடைவெளிக்கும் அனுபவத்திற்கும் பிறகு
சில அடிக்கோடுகள் வெறும் குறிப்புகளாக
மட்டும் மாறி இருக்கின்றன.
ஆனால் இந்த அடிக்கோடுகள்..?
காலையிலிருந்து இந்த வரிகளை
அசைப்போட்டுக்கொண்டிருக்கிறேன்.
சில கதவுகளைத் திறக்கின்றன.
சில கதவுகள் ‘டாமர்’னு மூடும் ஓசை ..
காற்று வேகமாக அடிக்கிறது.
இதோ அந்த வரிகள்..:
“நான் காலச்சுவடு இதழை ஆரம்பித்த போது
தெளிவான மன நிலையில் இருக்கவில்லை. …
….இதழின் பெயரைக் கண்டுப்பிடிக்கும் தவிப்பில்..
சிற்றிதழ்களுக்குப் பொருந்தும் சுமார் 100 பெயர்கள்
வரைத் திரட்டினோம். அதன் பின் கடந்த 
அரை நூற்றாண்டில் மலர்ந்த சிற்றிதழ்களின்
 அநேகத் தலைப்புகள் எங்கள் பட்டியலில்
 இருந்தவையோ பரிசீலனையில் இருந்தவையோ தாம். 
ஆனால் சுபமங்களா, கவிதாசரண்,சுந்தர சுகன்
 போன்ற சில பெயர்கள் எங்கள் கற்பனைக்குத்
 தட்டுப்படாதவை. 
இந்தச் சந்தர்ப்பத்தில் க. நா.சு. சொன்னது நினைவுக்கு 
வருகிறது. அவர், ஒரு முறை 
பிரபலமான புள்ளி ஒருவரைப்
பார்க்கப் போனாராம். அப்போது அவர்
க.நா.சுவிடம்
ஒரு பத்திரிகை தொடங்கப்போகிறேன்.
‘க’ வில் தொடங்கும் தலைப்பு ஒன்று சொல்லு
என்று கூற க.நா.சு. “கக்கூஸ்” என்றாராம். 
மூன்று ‘க’ இருந்தும் கூட ஏனோ அவர்
அந்தப் பெயரை வைக்கவில்லை 
என்று வருத்தப்படுவது போல சொன்னார் க.நா.சு.
…….
எழுதக் கேட்க வேண்டியவர் பெயர்களையும்
கேட்க கூடாதவர் பெயர்களையும் பட்டியல் போட்ட
போது , முதல் பட்டியல் மிகச் சிறியதாகவும்
இரண்டாம் பட்டியல் மிக நீளமாகவும் இருந்தது.

Tuesday, November 20, 2018

இந்திய இராணுவம் < தெலுங்கானா விவசாயிகள்


சர்தார் வல்லபாய் படேலின் இரும்புக்கரங்கள் தான்
இதையும் செய்தன. இந்திய வரலாற்றின் இந்தப் பக்கங்களைப்
பற்றிப் பேசப்படவில்லை. குறிப்புகள் கிடைப்பதில்லை.
562 சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இன்றைய
இந்தியாவை சர்தார் படேல் உருவாக்கியதில் இந்தப் பக்கம்
மட்டும் அச்சிடப்படவில்லை.
 ஐதராபாத் சமஸ்தானத்திற்கு
இந்தியா இராணுவம் அனுப்பிய நாள் 12-9-1948.
அதன் பின் 5  நாட்களில் அதாவது 18-9-1948ல்
 நிஜாம் சரணடைந்துவிட்டார்.
ஆனால் இந்திய இராணுவம் 21-10-1951 வரை
3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியது?
யாரை எதிர்த்து ?! ஏன்?

தெலுங்கனா பகுதியில் வாழ்ந்த விவசாயிகள்
பண்ணையார்களுக்கு
எதிராகப் போராடி நிலத்தை கைப்பற்றி விவசாயம் செய்து
விளைந்த தை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த
 குழு வாழ்க்கையை / சமதர்ம வாழ்க்கையை இந்திய இராணுவம்
எதிர்த்து போராடியது.. விவசாயிகள் தங்கள் நிலங்களை மீண்டும்
பண்ணையார்களிடம் கொடுத்தாக வேண்டும் என்று ஆணையை
எதிர்த்து போரிட்டார்கள். அதுவும் இராணுவப் பயிற்சி இல்லாத
விவசாயிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் போராடி இருக்கிறார்கள்.
இந்திய இராணுவம் 21-10-1951  தன் வெற்றியை அறிவித்தது.
தெலுங்கானாவில் மலர்ந்திருந்த ஒரு சோஷலிச அமைப்பு முறை
வாழ்க்கை இப்படியாக இரும்புக்கரம் கொண்டு அழிக்கப்பட்ட து.
இந்த தெலுங்கனா வரலாற்றை எழுதுவதும் பேசுவதும் அறிந்து கொள்வதும்
இந்தியர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
(செய்தி ஆதாரம் “ சிந்தனையாளன் இதழ் நவ 2018)




Wednesday, November 14, 2018

நேருவும் குழந்தைகளும்



Obviously, the highest type of efficiency is that which can utilise existing material to the best advantage.நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக்
கொண்டாடுவது ரொம்பவும் குழந்தைத்தனமாக
இருக்கிறது
நேருவின் பிறந்த நாள் இன்று நவம்பர் 14.
குழந்தைகள் தினமாக க் கொண்டாடுகிறோம்.
ஏன்?
இந்தக் கேள்விக்கு ஒரே பதில் ஒற்றைக்குரலில்
கேட்டு கேட்டு பழகிவிட் ட து.
சாச்சா நேருவை/ நேரு மாமாவை குழந்தைகள்
மிகவும் நேசித்தார்கள் / நேரு குழந்தைகளை 
மிகவும் நேசித்தார்..! 
யார் தான் குழந்தைகளை நேசிக்க மாட்டார்கள்?
எல்லா தலைவர்களும் குழந்தைகளை
எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவே
பார்க்கிறார்கள். அதில் நேருவும் ஒருவர்.
அவ்வளவுதான். 
நடந்துது என்ன?
1964 மே மாதம் நேருவின் மறைவுக்குப் பின்
 அவருடைய பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது 
என்று நாடாளுமன்றம்தீவிரமாக யோசிக்கிறது. 
நவம்பர் 20 உலக குழந்தைகள் தினம்
என்று ஏற்கனவே ஐ.நா. அறிவித்துவிட்ட து.
நேருவின் பிறந்த தினத்திற்குமிகவும் அருகில்
 இருந்த (உலக) குழந்தைகள் தினத்தை 
அப்படியே ஒரு வாரம் முன்னதாக க் கொண்டாடி விடலாம்
என்று நினைத்தார்களோ என்னவோ..
நேருவின் பிறந்த நாள் இப்படியாக இந்தியாவில்
குழந்தைகள் தினமாக மாறிவிட்ட து.
குழந்தைகளுடன் புன்னகைக்கும் நேரு
பார்க்க அழகாகவே இருக்கிறது. . 
குழந்தைகளும் இன்றுவரை சாச்சா நேரு வேடமணிந்து
 நேருவின் பொன்மொழிகளைஅவரவர் 
மனப்பாட த் திறனுக்கேற்ப முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்..
நேரு என்ற மாமனிதர் குழந்தைகளின் இன்னொரு
விளையாட்டு பொம்மையாகிவிட்டார் என்பதை
இன்றுவரை நேருவின் குழந்தைகளே உணர்ந்துக்
கொள்ளவில்லை!
மும்பையில் என் தோழர் ஒருவர் நேருவின்
 பிறந்த நாள் ஏன் குழந்தைகள் தினமாக க் 
கொண்டாடப்படுகிறது என்ற கேள்விக்கு 
மிகவும் நகைச்சுவையாக சொன்ன பதில் 
நினைவுக்கு வருகிறது.
நேரு தன் குடும்பத்தின் 3 தலைமுறை
 குழந்தைகளுக்கு (அரசியல்) வாழ்வளித்தவர் ஆயிற்றே!”
 என்றார்.
இது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல.
நேருவை ஆரம்ப பாடசாலைக்கு அப்பால் எடுத்துச்
சென்றிருக்க வேண்டும்.
நேருவின் மாடர்ன் இந்தியா கனவுகள்,
நேரு வழிபட்ட அணைக்கட்டுகள்
நேரு கொண்டுவந்த ஐந்தாண்டு திட்டங்கள்
நேரு பேசிய சோஷலிஷம்
நேருவின் பஞ்ச சீலம்
ஆசிய ஜோதி நேரு…
இவை எல்லாம் குழந்தைகள் பேச வேண்டிய கருத்து
அல்ல. குழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தில் வரும் 
சாச்சா நேருவே போதும். 
அவரை எடுத்துச் செல்ல வேண்டிய இடங்கள்
அவரைப் பற்றி பேசவேண்டிய கருத்துகள்
அவரைப் புரிந்து கொள்ள வேண்டிய புள்ளிகள்
இத்தனை பிரமாண்டங்களையும்
வெறும் குழந்தைகள் தின வாழ்த்து
வீணடித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் சில தகவல்களையும் சேர்த்து 
வாசித்தாக வேண்டும்.
நேரு குழந்தைகளுக்கு என்று சிறப்புத் திட்டங்கள்
 எதுவும் கொண்டுவரவில்லை. 
குழந்தைகளுக்கான கல்வி ஆரோக்கியம் 
என்று இருப்பதெல்லாம் கூட அவர் 
கொண்டுவந்த திட்டங்களின்
பகுப்புக்குள் அடங்கிவிடும் துணைத்திட்டங்கள் மட்டும் தான்.
நேரு ஆரம்பக்கல்விக்கு என்று ஒதுக்கிய 
நிதித்தொகை குறைவு தான்.
நேருவின் காலத்திலேயே இது பற்றிய விவாதங்கள் வந்துவிட்டன.

The establishment of IITs was initiated by Nehru.
The establishment of IIMs was initiated by Nehru.
Nehru also the reason of AIIMS in New Delhi.
இதெல்லாம் நேருவின் சாதனைகளும் கனவுகளும். 
இந்த இடங்களில் எல்லாம் நேருவைப்
பேச வேண்டும். பேசி இருக்க வேண்டும். 
இந்திய அரசியலுக்கும் ஏன் காங்கிரசு 
அரசியலுக்கும் கூட இதெல்லாம் 
உதவியாக இருந்திருக்க முடியும்..
நேருவின் பிறந்த நாளை ஒரு தொலை நோக்குத்
திட்ட த்துடன்கொண்டாட தவறிவிட்டோம்.

குழந்தைகள் தினமாக கொண்டாடுவது 
ரொம்பவும் குழந்தைத்தனமாக இருக்கிறது.
சாச்சா நேருவுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன்
என்பது புரியும்.
.. எதுவும் புரியாமல் நேரு வேடமணிந்து
 உலாவரும் குழந்தைகளை நினைத்தால் தான்
 பாவமாக இருக்கிறது!

Saturday, November 10, 2018

சத்தியவாணி முத்து


 நான் சிறுமியாக இருந்தப் போது ரசித்த
ஒரு பெண் ஆளுமையின் நினைவு நாள். (11/11/99)
சத்தியவாணி முத்து குறித்து சில வரிகள்
இன்றைய அரசியலுக்கு நினைவு படுத்த வேண்டியதாக
இருக்கிறது!
அரசியலில் இப்பெண் 1957ல் சுயேட்சையாக பெரம்பூர்
தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் என்பதுடன்
சேர்த்து வாசிக்க வேண்டும். இரு முறை தேர்தல் களத்தில்
தோற்றவரும் இவர் தான். அது வேறு செய்தி.        
ஓரகடம் பகுதியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான
காப்பகம் அமைக்கும் போது அக்காப்பகத்திற்கு
சத்தியவாணிமுத்து வைக்க விரும்பிய பெயர் கனிமொழி
காப்பகம்.  கனிமொழி யார் என்ற வெளிச்சம்
அந்தக் காப்பகத்திலிருந்து மையமிட்டு இன்று மைய அரசியல்
வரை சென்று விட்ட து. 
என்னைப் பொருத்தவரை 
அந்தக் கனிமொழி , அன்றைய கனிமொழி
இன்றைய கனிமொழி இல்லை !
 கனிமொழியின் பெயரை அவர் காப்பகத்திற்கு
வைத்த தற்கு அரசியல் காரணங்கள்
 அல்லது கனிமொழியின்
தந்தையை மகிழ்விக்கும் காரணங்கள் இருந்திருக்கும்.

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் 
அரிஜன நலத்துறைஅமைச்சராகவே
 சத்தியவாணிமுத்து அதிகாரத்திற்கு வருகிறார்.
இந்த இடம்… 
இன்னும் கவனமாக கவனிக்க வேண்டிய இடம்.
க க்கனை காமராசர் வைத்திருந்த இடமும்
சத்தியவாணிமுத்துவை திராவிட அரசியல் வைத்திருந்த இடமும்
இன்னும்  பேசப்படவில்லை. 
இனியாவது பேசியாக வேண்டும்.





Friday, November 9, 2018

செல்லாத பணம்

செல்லாத பணம் - இமையம்
நாவலுக்கான கதையும் களமும் சிறுகதையாவதும்
சிறுகதைக்கான கதையும் களமும் நாவலாக விரிவதும்பத்திரிகை வாசகர்கள் சார்ந்து நடக்கிறதா அல்லது
எழுத்தாளர்கள் சுயபரிசோதனை முயற்சியாக இதை எல்லாம்செய்கிறார்களா தெரியவில்லை. இன்று வாசித்த இமையம் எழுதிய
நாவல் “செல்லாத பணம் “ என் வாசிப்பு அனுபவத்தில் ஒரு சிறுகதைக்கான கதையும் களமும் கொண்ட துதான். ஆனால் ஒற்றை சம்பவத்தைமுன்வைத்து கதையின் மாந்தர்களும் அவர்களின் உணர்வுகளும்
உரையாடல்களின் வழி நகர்த்தப்படுகின்றன.
மகள் ரேவதி தீக்குளித்துஇறக்கும் தருவாயில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
போராடிக்கொண்டிருக்கிறாள். பெற்றோரின் விருப்பமின்றிகாதலித்து திருமணம் செய்து கொண்டவள். அவள் பி.இ. மெரிட்டில்
தேர்ச்சி பெற்றவள். ஒரு ஆட்டோக்காரனின் காதல் வலையில் விழுகிறாள்.
காதலுக்கு கண்ணும் இல்லை அறிவும் இல்லை என்ற நிலையில்அவள் முடிவு. மகளின் இந்த முடிவை அவள் அம்மா அப்பா அண்ணன்
அண்ணனின் மனைவியான அவள் தோழி இத்தனைக்கும் காரணமாக
இருக்கும் அவள் காதல் கணவன் ரவி.. எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.
தீப்பிடித்த மகள், ஜிப்மர் மருத்துவமனை என்று ஒரு புள்ளியில்ஒரு களத்தில் நடக்கும் கதை. சில உரையாடல்கள், நர்சுகள், காத்திருக்கும்
உறவினர்கள், என்று கதை ஒரே புள்ளியில் மீண்டும் மீண்டும் அழுதுக்கொண்டே
இருக்கிறது. நம்மையும் அழ வைக்கிறது.
கதையின் திருப்புமுனையே எல்லோரும் கொலைகாரன் என்று நினைக்கின்ற
ரேவதியின் கணவன் ரவி அருண்மொழியிடம் கேட்கும் கேள்விகள் தான்.
நான் அவளைச் சாகடிக்கவில்லை..
அவளைச் சாகடித் த து நீங்கள் எல்லோரும் தான் ..
ஆட்டோக்காரன்  பொண்டாட்டி என்று சொல்லி சொல்லியே அவளைச் சாகடித்தீர்கள்..
…. என் பொண்ணு ஆட்டோக்காரனுக்குத் தான் பொண்டாட்டியா போவா.
அது உங்களுக்கு வெக்கமா இருக்கும். ஒங்கள மாதிரி படிச்சவங்கவேலயில இருக்கிறவங்க மட்டும் தான் ஒலகத்தில உயிரோட இருக்கணும்,
மத்தவங்க எல்லாம் செத்துப் போவனும்…..”
இந்தப் பார்வை வாசகனை நாம் யோசிக்காத இன்னொருபுள்ளியிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கச் சொல்கிறது.
நம்மால் அந்தப் பார்வையின் கூர்மையை விலக்கி விட்டுஓட முடியாது.
இந்த நாவல் சமூக ஏற்றத்தாழ்வு கொண்ட ஆணும் பெண்ணும்யதார்த்த வாழ்க்கையில் எரிந்துப் போவதையும் அதை
ஒவ்வொரு தருணத்திலும் உறவுகள் பார்க்கும் பார்வையையும்
யதார்த்தமாக முன் வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்னிக்கு சாவக்கிடக்கும் போது ஓடி வரும் அண்ணனும்அப்பாவும் அன்னிக்கு அவக்கூட ஒரு வார்த்தை பேசி இருக்கலாமே என்று தாய் அமராவதி கேட்கும் போது பெண்கள் தான் எவ்வளவு மன அழுத்தங்களை
தங்களுக்குள் வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்கின்றார்கள்
உறவுகள் சமூகம் அந்தஸ்து என்ற போர்வைக்குள் நடுத்தர வர்க்கம்எப்போதுமே இழுத்துப் போர்த்திக்கொண்டு தங்கள் கிழிசல்களையும்
மறைக்க முடியாமல் அவஸ்தைப் படுகிறது.
அமராவதி, லட்சுமி, முருகன், நடேசன் இவர்கள் அனைவருமேநடுத்தர வர்க்கத்தின் முகங்கள்.
ரவி அவர்களில் ஒருவனாவது சினிமாக்காதலில் மட்டுமேகண்டு களிக்கும் காட்சியாக இருக்க முடியும்.
செல்லாத பணம் என்ற இத்தலைப்பு
காதல் செல்லாது , அச்சடித்த நோட்டு செல்லாது,
உறவுகள் செல்லாது, அழுகை செல்லாது,
பதவி செல்லாது, படிப்பு செல்லாது,
மருத்துவம் செல்லாது , மனிதன் அறிவு செல்லாது…
என்று பல “செல்லாததுகளை “ உள்ளடக்கி இருக்கிறது.
இப்புத்தகத்தின் துன்பியல் காட்சிகள்…
இக்கதையை இன்னொரு முறை மறுவாசிப்பு செய்யமுடியாதஅளவுக்கு மனப்பாரத்தை ஏற்றி விடுகின்றன.
இதுவே இந்த எழுத்தின் வெற்றியும்
இக்கதையின் பலகீனமும் என்று நினைக்கிறேன்.
இமையத்திற்கு என் வாழ்த்துகளும் அன்பும்.