Friday, November 17, 2017

பத்மாவதி திரைப்படம்

Image result for padmavati movieபத்மாவதி திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று சொல்பவர்கள் சில காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்துகிறார்கள்.
அவர்கள் முன்வைக்கும் முக்கியமான காரணங்கள்:
* இரத்தத்தால் எழுதப்பட்ட எங்கள் வீரமிகு வரலாற்றை திரித்து சிதைத்து
திரைப்படக்காட்சிகள் மூலம் கறைபடிய விட மாட்டோம்"
* சத்தீஸ்கர் அரண்மனையின் மருமகள் ஹீனாசிங் திரைப்படத்தில் 
வரும் பாடல்காட்சியைச் சுட்டிக்காட்டி
 "இரஜபுதனத்து அரசியர் எப்போதும் அடுத்தவர் முன்னிலையில்,
 அரண்மனையில் எல்லோரும் பார்க்கு ம் படி நடனம் ஆடுவதில்லை.!." 

*பத்மாவதியின் தியாகம் பேசப்படாமல் அவளின் காதல் பேசப்படுகிறது.
.அதிலும் குறிப்பாக அவள் அலாவுதீன் கில்ஜியுடன் சேர்ந்து
 காதல் டூயுட் பாடுவது போல காட்சிகள் வருவதால் எங்கள் இனப்பெண்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இந்து ராஜ்யத்தின் அரசி எப்படி நாடு பிடிக்க வந்த இசுலாமியனைக் காதலிக்கிற
மாதிரி படம் எடுக்கலாம்?!!
இதுதான் பத்மாவதி திரைப்படத்தை எதிர்ப்பவர்கள்
முன்வைக்கும் முக்கியமான காரணம்!
எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இந்த ஆகச்சிறந்த காரணத்தைக் 
கொஞ்சம் அலசிப் பார்ப்பதற்கு முன் சில தகவல்கள் :.
இராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரின் அரசி பத்மினி / பத்மாவதி .
 வட இந்தியாவில் நாடுகளைக் கைப்பற்ற பெரும்படையுடன் 
வந்த அலாவுதீன் கில்ஜி.
வளமான குஜராத் பகுதியை போரில் வெல்ல வேண்டுமென்றால்
 வழியில் இருக்கும் சித்தூர் அரசை வெற்றி கொள்ள வேண்டும்
 என்று முடிவு செய்கிறான். பெரும்படையுடன் வந்தவனை
 ரஜபுதனத்து போர்ப்படை எப்படி எதிர்கொண்டது,
அரசி என்ன செய்தாள் என்பது தான் கதை. 

ரஜபுதனத்து அரசி பத்மாவதி இசுலாமிய அலாவுதின் கில்ஜியுடன்
 கனவில் கூட காதலிக்கும் காட்சி சினிமாவில் கிடையாது 
என்று இயக்குநர் சத்தியம் செய்கிறார்.
 இத்திரைக்கதையை இயக்கி இருக்கும்
சஞ்சய்லீலா பன்சாலி இவர் பல்வேறு பிரமாண்டமான
 திரைப்படங்களை எடுத்தவர்.
பத்மாவதி திரைப்படம் எந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது
 என்பது திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தப் பிறகுதான்
 சொல்லமுடியும்.
அலாவுதீன் கில்ஜி என்ற பாத்திரம் கற்பனை அல்ல.
வரலாற்றில் நிஜமான கதைப் பாத்திரம்.
ஆனால் பத்மாவதி..??
சித்தூர் அரசி பத்மாவதி கற்பனையா? நிஜமா?
படத்தை எதிர்ப்பவர்களுக்கு அவள் நிஜமான அரசி.
அலாவுதீன் படை எடுத்து சித்தூரை கைப்பற்றிவிடும் தருணத்தில்
 சித்தூரின் போர்ப்படை சகா வழியை பின்பற்றுகிறது. 
அதன்படி, ஒவ்வொரு படைவீரனும் எதிரியின்கையில்
உயிருடன் அகப்படுவதை விட தன்னால் முடிந்த அளவுக்கு 
எதிரிகளைக் கொன்றுவிட்டு அவனும் வீரமரணம் அடையும் முடிவு.
 இரஜபுதனத்து பெண்கள் ஜூஹர் என்ற உயிர்த்தியாகம் 
செய்யும் முடிவை எடுக்கிறார்கள். எதிரி கையில் அகப்பட்டு 
அவர்களின் வல்லாங்குக்கு இரையாவதை விட 
அப்பெண்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் குழந்தைகளுடன்
தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்துவிடுவார்கள்.
அப்படியான உயிர்த்தியாகம் செய்த அரசியாக ரஜபுதன வரலாற்றில்
 வாழும் பெண் பத்மாவதி.
ஆனால் பத்மாவதி பாத்திரம்  சூஃபி கவிஞர் மாலிக் முகமது ஜெயசி எழுதிய கவிதையின் கற்பனைப் பாத்திரம் என்கிறார்கள்.
பத்மாவதி கற்பனைப் பாத்திரம் என்று சொல்வதற்கோ நிஜக்கதை என்று சொல்வதற்கோ.. இரு கருத்துகளுக்கும் இடமிருக்கிறது.
ஆனால் எதிர்ப்பு கிளம்பி இருப்பது
 பத்மாவதி கற்பனையா நிஜமா என்பது குறித்தல்ல.
பத்மாவதி என்ற கதைப்பாத்திரம் திரைப்படமாக வரும்போது எப்படி காட்டப்பட்டிருக்கிறது என்பது குறித்துதான்.

நாம் கவனிக்க வேண்டியது
இம்மாதிரி எதிர்ப்புகளுக்கு உள்நோக்கம் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக அரசியல் நோக்கம் இருக்கிறது.
படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் , அரசு நிர்வாகத்தை
கேலிக்குரியதாக்கும் செயல்.
ஒரு திரைப்படம் வெளிவர வேண்டுமா கூடாதா 
என்பதைத் தீர்மானிக்க ஏற்கனவே அரசு தணிக்கை துறை 
இருக்கும் போது அதை இவர்கள்
கையில் எடுத்துக் கொள்வது ஏன்? 
மகாத்மாகாந்தியைக் கொன்ற நாதுராம்கோட்சே பேசுவதாக 
ஒரு நாடகம் வெளிவந்தது.
“மை நாதுராம் கோட்சே போல்தா” 
(நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்) என்ற நாடகம் மூலம் 
காந்தி கொலையை, கோட்சே பார்வையில் சங்பரிவார் கும்பல் நியாயப்படுத்தியது. அந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்தப்போது அதையும் என் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நாடகம் போட்டு காந்தியின் கொலையை நியாயப்படுத்தி விட முடியுமா ? என்ற எதிர்கேள்வியை முன்வைத்தோம்.
இப்போதும் பத்மாவதி திரைப்படம் வந்துவிட்டால் ரஜபுதனத்து அரசிகளின் தியாகம் மறைக்கப்பட்டுவிடுமா? என்ற கேள்வியை மட்டுமே முன்வைக்க வேண்டி இருக்கிறது.
எழுதப்பட்ட வரலாறும் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாறுமாக
கறுப்பும் வெள்ளையுமாய் விரியும் காட்சிகளில்.. 
பத்மாவதி.. திரையில் வரட்டுமே

Monday, November 6, 2017

ஊடறு பெண்நிலை சந்திப்பு

ஊடறு பெண்நிலை சந்திப்பு ... மும்பையில்...
தோழமை உறவுகளுக்கு ,
வணக்கம்.
இம்மாதம் மும்பையில் பன்னாட்டு பெண்கள் கருத்தரங்கம்
 நிகழ இருக்கிறது.
சுவிட்சர்லாந்திலிருந்து செயல்படும் "ஊடறு" பெண்கள்
 அமைப்புக்காக இக்கருத்தரங்கை மும்பையில்
 ஏற்பாடு செய்திருக்கிறோம்.
சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை,
 மலேசியா நாடுகளில் இருந்தும்
இந்தியாவில் டில்லி, சென்னை, மதுரை , மும்பை நகரிலிருந்தும் எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள்
கலந்து கொள்கிறார்கள்.
1)காரிக்கிழமை  25-11-17 காலை 10 முதல் மாலை 5 வரை
பெண்ணிய உரையாடல்கள்
பெண்களும் திருநங்கைகளும் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வு.

2) ஞாயிறுகிழமை 26-11-17 காலை 10 முதல் மாலை 6 வரை
பல்வேறு தலைப்புகளில் பெண்ணிய கருத்தாடல்கள்.
அனைவரும் கலந்து கொள்ளலாம்.
கருத்தரங்க தலைப்புகள் சார்ந்த விவாதங்களில் அனைவரும்
பங்கேற்கலாம்.

3) "ஈழப் பெண் போராளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு
"பெயரிடாத நட்சத்திரங்கள்" இரண்டாம் பதிப்பு
நூல் வெளியீடும் அறிமுகக்கூட்டமும் நடைபெற இருக்கிறது.

4) கருத்தரங்க நிகழ்வை ஒட்டி பெங்களூரிலிருந்து
 புஸ்தகா அமைப்பினர் வருகை தர இருக்கிறார்கள்.
உங்களின் புத்தகங்களை  இலவசமாக மின்னூலாக்கி
உலகளாவிய வாசகர் தளத்தை உருவாக்கித் தர
 முன்வந்திருக்கிறார்கள்.
அச்சில் வெளிவந்த/ வெளிவராத உங்களின்
 தரமான படைப்புகளை யுனிக்கோட் எழுத்துருவிலோ
அல்லது புத்தகமாகவோ கொண்டுவரவும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்
 உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

இக்கருத்தரங்கையும் நிகழ்வுகளையும் நடத்த எம்முடன் கைகோர்த்திருப்பவர்கள்
1) திருவள்ளுவர் மன்றம், பாண்டூப்
2) பிரைட் உயர்நிலைப் பள்ளி, பாண்டூப்
3) தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
4) தமிழர் நலக்கூட்டமைப்பு - மும்பை
5) விழித்தெழு இயக்கம் - மும்பை
6) பகுத்தறிவாளர் கழகம் - மும்பை
7) ஸ்பேரோ - மும்பை
8) மகிழ்ச்சி பெண்கள் அமைப்பு - மும்பை
9) வணக்கம் மும்பை வார இதழ் - மும்பை
10) புஸ்தகா மின்னூல் அமைப்பு - பெங்களூர்.
முறையான நிகழ்ச்சி நிரல் ... விரைவில்.

அன்புடன்,
றஞ்சி - ஆழியாள்- புதியமாதவி.