Thursday, December 27, 2012

பாலியல் வன்புணர்வு தேசமும் கள்ளமவுனமும்




கடந்த வாரம், டிசம்பர் 16 இரவு ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை 6 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ சம்பவம் நேற்றுவரை இந்தியாவின் தலைநகரை உலுக்கி எடுத்துவிட்டது. மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டி இருப்பது ஒருவகையில் நம்பிக்கை தருகிறது. மாணவர்கள் இந்தியா கேட்டுக்கு செல்வதைத் தடுக்க 9 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடும் நிலை உருவாகி இருப்பதுடன் பிரதமர் நாற்காலியில் இருக்கும் மன்மோகன்சிங்கும், பிரதமராக அதிகாரம் படைத்த சோனியா காந்தியும் கலந்து பேசி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன வழக்கம் போல.... ஆட்சியாளர்களுக்கே உரிய ஆயுதத்தை எடுப்பார்கள்.
தனியாக ஒரு கமிஷன் போட்டு ஆராயப் போவதாக அறிவிப்பார்கள். ஏதாவது ரிடையர்டான... இவர்களுக்கு வேண்டிய கனம் நீதிபதிகள் யாருக்காவது அந்தப் பதவியைக் கொடுத்து விடுவார்கள்.
கமிஷன், இந்தியா ஏன் பாலியல் வன்புணர்வுகளின் தேசமானது என்பதையும் பாரதமாதாவின் பாலியல் வன்புணர்வு புத்திரர்களின் (இவ்விடத்தில் பாரதமாதாவைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ புத்திரர்கள் என்று வாசிக்கும் உரிமை வாசகர்களுக்கு உண்டு) தகுதி திறமைகளையும் ஆராய்ந்து சில நூறு பக்கங்களுக்கு அறிக்கைத் தயாரித்துக் கொடுக்கும். அப்புறம் அந்த அறிக்கை என்னவாகும் என்பதோ, யாரிடம் அந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்பதோ அந்த அறிக்கை மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன் என்பதோ சிதம்பர ரகசியமாகிவிடும். மறந்துவிடும். ஏனெனில் ஆறிப்போன அறிக்கையை விட சுடச்சுட அவ்வ‌ப்போது விற்கப்படும் சுண்டலை வாங்கித் தனியாகவோ கூட்டமாகவோ கொறித்துக் கொள்வ‌துதான் ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் வாடிக்கை.
மாணவர்களின் கிளர்ச்சி ஒரு பக்கம் என்றால் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக சொல்லி விட்டார்கள்.
2004ல் தன் சகோதரியைக் கேலி செய்த வாலிபனைத் தட்டிக்கேட்ட மராட்டிய மாநிலம் புல்தானா பகுதியைச் சார்ந்த நிதின் ஜோஷி என்ற சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டான். அந்த வழக்குக்கு இப்போது நீதி வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் "பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் மரண தண்டனை விதிக்கலாம்" என்று சொல்லி இருக்கிறார்கள்.
மருத்துவக் கல்லூரி மாணவியைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌வர்களைப் பற்றிய குறிப்புகளும் ஏற்கனவே டில்லியில் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவைகளாக இருக்கின்றன.
மருத்துவக்கல்லூரி மாணவி வழக்கில் குற்றவாளிகள்:
1)ராம்சிங் - வயது 33, செக்டர் 3, ரவிதாஸ் கேம்ப், ஆர்.கே.புரம் பகுதியில் வசிப்பவர்
2)முகேஷ் - வயது 24, ராம்சிங்கின் தம்பி, மற்றவர்கள் அப்பெண்ணைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ போது பேருந்தை ஓட்டியவர்.
3)வினய் சர்மா - வயது 20, லோக்கல் ஏரியாவில் (ஜிம்)உடற்பயிற்சி நிலையத்தின் உதவி டைரக்டர்
4)பவன் குப்தா - வயது 18, பழவியாபாரி
5)அக்‌ஷய் தாக்கூர் - வயது 26 பஸ் க்ளீனர்
6)ராஜ்ஜூ - வயது 25 பஸ் க்ளீனர்
உள்துறை அமைச்சரின் தகவல் படி இந்தியாவில் பாலியல் வன்புணர்வு குற்றங்களின் பட்டியல்:

2011
2010
2009
டில்லி
453
550
491
மும்பை
221
194
182
பெங்களூரு
97
65
65
கொல்கத்தா
46
32
42
சென்னை
76
47
39
ஹைதராபாத்
59
47
47
சில வழக்குகளின் முடிவுகள்:

எஸ்.பி.ஏஸ் ராத்தோரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
மாடலிங் ஜெஸ்ஸிக்கா கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்ட மன்னுசர்மா காங்கிரசு அரசியல் கட்சியைச் சார்ந்த விநோத் சர்மாவின் மகன். குற்றத்திலிருந்து எவ்விதத்திலும் தப்பிக்க முடியாத நிலையில் சட்டம் மன்னுசர்மாவைக் கைது செய்தது. 2009ல் 30 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த சர்மா நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் அன்னையைப் பார்க்க பரோலில் வந்தார். அப்போது சர்மாவின் அன்னை ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பது நமக்குத் தேவையில்லாத செய்தி தான்! பரோலில் வந்த சர்மா டில்லியின் இரவு நேர விடுதி கேளிக்கையில் ஜாலியாக இருக்கிறார். இதுதான் நம் சட்டமும் நீதியும்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான், செப் 28, 2002ல் தன் டோயோட்டா காரில் வேகமாக வந்து மும்பை பாந்திரா பகுதியிலிருக்கும் பேக்கரியில் மோதி ஒருவர் அந்த இடத்திலேயே இறந்தார், நான்கு பேர் காயமடைந்தார்கள். இந்த வழக்கும் இன்றுவரை அதாவது பத்து வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது! கோர்ட்டில் ஆஜார் ஆகாமல் இதுவரை 82 தடவை தட்டிக் கழித்திருக்கும் சல்மான் இந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்த பின் தான் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திருவாய் மலர்ந்திருக்கிறார். அதுவும் அவரைக் கனவிலும் கண்டு ஏங்கிக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு முக்கியமான செய்தியாகவே இருக்கிறது.
இன்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழும் எம்.பிகளும் சரி, ஆவேசமாக குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று கர்ஜிக்கும் கிழட்டு சிங்கங்களும் சரி, இவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு வர கதவுகளைத் திறந்துவிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சரி... எவ்வளவு போலித்தனமானவர்கள் என்பதை 2009 நாடாளுமன்ற தேர்தல் உறுப்பினர்களின் தகுதிகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதை பார்க்கத் தவறியதுடன், இருட்டை வெளிச்சம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தேசிய தேர்தல் கண்காணிப்பு (national election watச்ஹ்) புள்ளிவிவரங்களின்படி, பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 6 பேர் அரசியல் கட்சிகளால் தங்கள் உறுப்பினராக தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டார்கள். கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கு அரசியல் கட்சிகள் சீட் கொடுத்திருப்பதும் உண்மை.
260 உறுப்பினர்கள் மீது பெண்கள் சம்பந்தப்பட்ட வன்கொடுமை, கேலி கிண்டல் இத்தியாதி குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுப்பினர்களே தங்கள் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு பதிவு செய்திருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த தகுதிகள்! இந்த தகுதிகளைக் கொண்ட உறுப்பினர்கள் இருக்கும் நாடாளுமன்றம் நம் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதும், நம்மைப் பாதுகாப்பதாக உறுதி அளிப்பதும் கேலிக்கூத்து!
காவல்துறை:
என்ன செய்கிறது நம் காவல்துறை? மேற்சொன்ன தகுதி மிக்க நம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காகவே இருக்கிறது நம் காவல்துறை! டில்லியில் மட்டும் வி.ஐ.பிகள் பாதுகாப்புக்கு 50059 போலீசார். 28298 போலீசார் மட்டுமே சட்டப்படி பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் சட்டத்தை மீறி (காவல்துறையே சட்டத்தை மீறி இருப்பதைக் கவனிக்கவும்) 21761 போலீசார் கூடுதலாக வி.ஐ.பி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் நலன் பாதுகாக்க 131 பொதுமக்களுக்கு ஒரு போலீசார் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் 761 நபருக்கு ஒரு போலீசார் இருக்கிறார் என்பதே உண்மை நிலவரம்! டில்லி நகரத்தில் மட்டும் ஒரு வி.ஐ.பிக்கு 20 போலீசார் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சில வழக்குகள் மட்டுமே ஊடகத்தின் அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளின் அதீதமான கவனத்திற்கு உள்ளாவதும் பல வழக்குகள் இருட்டடிக்கப்படுவதும் ஊடகங்களும் கள்ளமவுனம் சாதிப்பதும் ஏன்? இதன் உள்ளரசியல் என்ன? வாச்சாத்தி வழக்கும் கயர்லாஞ்சி வழக்கும் சாதிச்சண்டையாக மட்டுமே ஏன் பேசப்பட்டன? அந்த உழைக்கும் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட வல்லாங்கு கொடுமைக்காக, அந்தப் பெண்களின் யோனி கிழிந்து நாற்றமடித்த போதும் வாய்திறக்கவில்லைpயே நம் அறிவுஜீவிகள் ..!!.
இன்றைய போராட்டத்தையோ கிளர்ச்சியையோ குறை சொல்வதோ அல்லது டிசம்பர் 16ல் வல்லாங்கு செய்யப்பட்ட பெண்ணுக்காகப் போராடுவது தவறு என்றோ சொல்வது என் நோக்கமல்ல. ஆனால் வாச்சாத்தி பெண்களுக்காக பெண்ணியம் பேசிக்கொண்டிருக்கும் என் இனிய தமிழ் நாட்டு தோழியர் கூட எவரும் வாய்திறந்ததாகவோ வாச்சாத்தி பெண்டிரின் யோனிகள் சிதைக்கப்பட்டதற்காக தங்கள் கவிதைகளைக் கூர்வாளாக்கியதாகவோ செய்தியாகக் கூட எதுவும் கேள்விப்படவில்லையே. இந்த மவுனங்களுக்கெல்லாம் என்ன காரணம்?
ஒட்டுமொத்த ஊடகமும் ஒரு புள்ளியில் தன் கவனத்தைக் கொண்டுவரும் போது அரசியல் கட்சிகளும் அதை வழிமொழிந்து செல்லும் போது இந்த நாட்டின் திரை மறைவில் வேறு என்னவோ நடக்கிறதா? அந்த திரை மறைவு காட்சிகள் மீது எவர் கவனமும் வராமலிருக்க 453 பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் நடந்திருக்கும் டில்லியில் திடீரென ஒரு குற்றச்சாட்டு ஊடகத்தின் கவனத்திற்கு திட்டமிட்டே காட்டப்பட்டு தொடர்ந்து நாம் ஏமாற்றப்படுகின்றோமா?

நன்றி: கீற்று டாட் காம்