பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு
நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால்
அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில் - என்றும்
'நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில்
இயற்கை தந்த இனிய வாழ்வை
இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும் - நாங்கள்
இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்
நாங்கள் வாழவேண்டும் இந்தப் பூமியில்
யாழினி வரனின் இனிய குரலில் சி.ஜெயசங்கர் எழுதிய உருக்கமான
பாடல் வரிகளுடன் துவங்கியது
பெண்ணிய உரையாடலில் முதல் அரங்கம். யாழினி இலங்கையிலிருந்து வந்திருந்தார்.
"“முகாம் கூத்துச் செயற்பாடுகளில் பெண்கள்” வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையங்களை மையமாகக் கொண்ட- ஓர் பார்வை.
என்ற தன் கட்டுரையை அவர் வாசித்த விதம் மட்டுமல்ல, கட்டுரை பேசிய பொருளும் மிகுந்த கவனத்திற்குரியதானது.
ஈழத்து தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளில் ஒன்றான கூத்து ஈழத்துத்தமிழர் மத்தியில் மகிழ்வுடனும், அழகியலுடனும் பயிலப்பட்டு வருகின்றது. ஈழத்துத் தமிழர் எங்கெல்லாம் செறிந்து வாழ்கின்றார்களோ அவ்வாறான பிரதேசங்களில் எல்லாம் அவர்களுக்கான பாரம்பரியக் கூத்து வடிவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமது பண்பாட்டுத் தளத்தில் நின்று சடங்குக்குரியதாகவும் மகிழ்வூட்டலுக்குரியதாகவும் கருத்திலெடுக்கப்படும் கலைச் செயற்பாடொன்று தமது வாழ்வின் இருப்புப் பெயர்க்கப்பட்டு இடப்பெயர்வு திணிக்கப்பட்டதான முற்றிலும் புறம்பான முகாம் வாழ்வுச் சூழலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் பாரம்பரியத் தொடர்ச்சிமிக்க வன்னிப் பெருநிலப்பரப்பிலே ஏற்பட்ட யுத்தப் பேரழிவு, இடப்பெயர்வு அதன் பின்னரான முகாம் வாழ்வுச் சூழலிலும் அம்மக்கள் தமது பாரம்பரியக் கூத்துக்களை முன்னெடுத்துள்ளனர்.
போர்க்கால கூத்தரங்கின் அனுபவங்கள,;; பொருளிழப்பு, உயிரிழப்பு, சமூகச் சிதைவு, குடும்பச் சிதைவு, தனிமனிதச் சிதைவு என்பவை வெளிக்கிளம்பும் துயரங்களின் சேர்க்கையாகி கூத்தரங்கின் அதிர்வை, அதுதரும் அனுபவப் பகிர்வை வீச்சாக்குவதாகவும், கூத்தரங்கினதும், கூத்துப் பனுவலதும் அர்த்தங்களையும், அனுபவங்களையும் புதிய தளங்களுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கின்றது. இந்தப் பிண்னனியிலேயே வன்னிப் பேரழிவின் பின்னரான முகாம் வாழ் கூத்துச் செயற்பாட்டை சிறப்பாக அச் செயற்பாடுகளில் பெண்கள் பங்களிப்பை பேசுவது இக்ட்டுரையின் நோக்கம் என்று கூறிய யாழினி தொடர்கையில்
இலங்கை முகாம்களில் நடக்கும் கூத்துக்கலை பற்றிய செய்தியின் ஊடாக அவர் காட்டிய சித்திரம், போருக்குப்
பின்னரான வாழ்க்கைப் போராட்டத்தின் முகம். முகாம்கள் அனைத்தும் இன்றைக்கும் அரசின் அதிகப்படியான கவனிப்பு வட்டத்தில் தான் இருக்கின்றன. யார் முகாமுக்குள் நுழையலாம், யாருக்கு அனுமதி உண்டு , யாருக்கு அனுமதி கிடையாது என்கிற சட்டதிட்டங்களின் கெடுபிடிகள்.
இதற்கு நடுவில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின்
சகஜநிலை வாழ்வுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒன்றாகத்தான் முகாம்களில்
நடத்தப்படும் கூத்துவகைகளும். இன்னும் சொல்லப் போனால் அரசாங்கத்திற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் கூத்து நடத்துவதற்கான நோக்கமும்
முகாம்களில் கூத்துக்கலைஞர்கள் தொடர்ந்து கூத்து நடத்திக் கொண்டிருப்பதற்கான நோக்கமும் ஒன்றல்ல.
இரண்டும் வேறானவை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ந்து கண்ணகி கூத்தும் காத்தவராயன் கூத்தும் நடக்கின்றன. ஏன்? கதையும் கதைவசனமும் கூட அங்கு வாழும் அனைவருக்கும் தெரிந்ததாகவே இருக்கும். இருப்பினும் கண்ணகியின் அறச்சீற்றத்தில் நடக்கும் கூத்து ஏதொ ஒருவகையில் " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்கிற உளவியல் மருந்தாகி அவர்களைத் தேற்றுகிறது. காத்தவராயன் தனக்கு விடப்பட்ட சவால்களை எல்லாம் நேர்க்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்ற கதை வாழ்க்கையில் அவர்களுக்கு ஓர்
நம்பிக்கை வெளிச்சத்தை தருகிறது.
கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு முகாமில். குடும்ப உறவுகள் என்ற கூடு
முகாம் வாழ்க்கையில் சிதைக்கப்பட்டிருக்கிறது. தன் குஞ்சுகளைத் தேடும் தாய்ப் பறவைகளாக, தன் இணையைத் தேடும் பறவையாக அலைக்கழிக்கப்பட்டிருக்கிறது முகாம்களில் இவர்களின் வாழ்க்கை. கூத்துக்கலைஞராக அடுத்த முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பின் ஊடாகவே தங்கள் உறவுகளைத் தேடும் விழிகளின் பயணமும் தொடர்கிறது.
கைகளை இழந்த போராளி ஒருவர் கூத்துக் கலைஞராக
தன் மனக்குரலை வேறு ஒரு தொனியில் ஒலிக்கவும்
இந்தக் கூத்து தான் கை கொடுக்கிறது. அதுவும் தன் கைகளில் சாக்ஸ் உறைகளை மாட்டிக்கொண்டு அவர் கூத்து நடத்துவதாக தெரிகிறது.
தமிழ்ச்சமூகத்தில் கூத்தும் பாட்டும் சாதியுடன் தொடர்புடையது தான். ஈழமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வேஷங்கட்டி ஆடிவந்தக் கூத்து இன்றைக்கு முகாம்களில் சாதியம் கடந்து நிற்கிறது என்று யாழினி
என் கேள்விக்குப் பதிலாகச் சொன்னபோது, கூத்து
மேடையில் சாதியம் கடக்க முகாம்கள் வரை வர வேண்டியதாகிவிட்ட அவலம் முகத்தில் அறைந்தது.
போரில். கலவரத்தில் மாண்ட இன்னாரின் நினைவாக
என்றும் கூத்துகள் நடத்தப்படுவதை ஆதாரங்களுடன்
பட்டியலிட்டார் யாழினி.
பெருந்தோட்ட பெண்கள் மீதான ஒடுக்குமுறையும்- வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளும் - என்ற தலைப்பில்
சந்திரலேகா கிங்ஸலி (கொட்டகல மலையகம் இலங்கை) கட்டுரை வாசித்தார். சந்திரலேகா கிங்ஸ்லி நம்மால் பதில் சொல்ல முடியாத இன்னொரு கேள்வியையும் வைத்தார்,
"நான் மலையகத்தின் தமிழச்சி,
எங்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லையா? " என்று கேட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை, பெண்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவமும் குடும்பமும்
என்று அவர் கட்டுரை விரிந்தது. லைன் வீடுகள் என்று
சொல்லப்படும் தீப்பெட்டிகளை வரிசையாக வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட வீடுகளும்
அந்த வாழ்விட சூழலும் பெண்ணுக்கு ஏற்படுத்தி இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை அவர் பட்டியலிட்டார். அதிலும் குறிப்பாக பெண்ணின் கற்பைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகத்தில் தான் பெற்ற குழந்தைகளை தகப்பனை நம்பிக் கூட தனியே விட்டுவிட்டு செல்ல முடியாத தாய்மார்களின் பேரச்சத்தையும் பதிவு செய்தார். கல்வி கற்று
ஓரளவு வசதி வாய்ப்புகள் வந்தப் பின் மலையகத்தமிழர் தம்மை மலையகத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை முற்றிலும் தவிர்ப்பதைச் சுட்டிக் காட்டினார்.
வே.யமுனாதேவி இலங்கை தோட்டப்புற கர்ப்பினி பெண்களின் வாழ்க்கையைச் சித்திரமாக வரைந்துக் காட்டினார். கர்ப்பினி பெண் வேலைப்பார்க்கும் தேயிலைத் தோட்டம் செங்குத்தாக இருக்கும். அவள் குழந்தைப் பேறுக்கான மருத்துவமனை மலையடிவாரத்தில் இருக்கும். எப்போதும் பிரசவத்திற்கு முந்தின நாள் வரை தோட்டத்தில் வேலைப்பார்க்கும் இப்பெண்கள் பிரசவவலி வந்துவிட்டால் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல டிராக்டர்களைக் கூட பயன்படுத்துவோம். எப்போதும் வயிற்றைச்சுற்றிக் கட்டிய கூடையுடன் இருப்பதாலோ என்னவோ பிரசவம்
அவர்களுக்கு பெரும்பாலும் எளிதாக இருக்கிறது, அதனாலேயே அவர்களில் பெரும்பாலோர் "மாதம் ஒரு முறை ஏற்படும் மாதவிடாய் ' போலவே பிரசவத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள், எனவே பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளாகவே இருக்கின்றன என்றார். அத்துடன்
பிரசவத்திற்கு கொடுக்கப்படும் விடுமுறையும் மருத்துவ
வசதிகளும் கூட எப்படி அவர்கள் வாழ்க்கையில் அந்தப்
பெண்ணுக்குப் போய் சேர்வதில்லை என்பதையும்
தெளிவாக விளக்கினார்.
அடுத்து ஆழியாள் பேசிய படகு மனிதர்கள்.
என்னவோ ஆஸ்திரேலியா அகதிகளின் சொர்க்கம்
என்ற கருத்து நிலவுகிறது. பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் அக்கருத்து எவ்வளவு பொய்யானது என்பதை ஆழியாளின் படகு மனிதர்கள் விவரித்தது. இலங்கையிலிர்ந்து வரும் அகதிகளுடன் சேர்த்து சூடான். ஆப்கானிஸ்தான். ஈரான். ஈராக் என்று
போர் சூழ்ந்த மண்ணிலிருந்து வந்த அனைத்து மனிதர்களின் முகங்களையும் காட்டினார் ஆழியாள்.
குடியுரிமை திட்டத்தில் குடிவரவுத்துறை அகதி ஒருவருக்கு குடியுரிமைக்கான அனுமதி கொடுத்தப்பிறகும் பாதுகாப்புத்துறையும் அந்த அனுமதியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே குடியுரிமை
கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு துறை குடியுரிமையை நிராகரிப்பதற்கான காரணங்களை
எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இப்படியாக
தங்கள் நாடுகளை விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடியுரிமைக் கனவுகளில் வந்தவர்கள் எந்த நாட்டுக்
குடிமக்களாகவும் வாழாமல் முடிந்துவிடும் அவலங்கள்,
குடியுரிமைக்காக காத்திருக்கும் நாட்கள் வருடங்களாகி
முடிந்துப் போகும் வாழ்க்கை.. என்று ஆஸ்திரேலியாவின் படகுமனிதர்களாக வந்தவர்களின்
வாழ்க்கையைப் பதிவு செய்தார் ஆழியாள். அத்துடன்
படகில் வந்து இறங்குபவருக்கும் விமானத்தில் வந்து
இறங்குபவருக்கும் ... இருவருமே அகதிகளாக இருந்தாலும் அவர்களை அந்த அரசாங்கம் நடத்தும்
முறை வித்தியாசமானது தான் என்பதையும் ஒத்துக் கொண்டார்.
நளாயினி தாமரைச்செல்வன் - புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவர்களின் மனநிலையும் -- என்ற கருத்தில் உரையாடும் போது புலம்பெயர் சூழலில் ஐரோப்பா போன்ற நாடுகளில் வாழும் தம் பிள்ளைகள் சந்திக்கும் கலாச்சார பண்பாடு குறித்த அதிர்ச்சிகளை
ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றார். அவர் சிரித்துக் கொண்டே பேசினாலும் ஒரு தாயாக அவரின் வலி,
எதிர்காலம் குறித்த கவலை அவர் பேச்சில் வெளிப்பட்டது. தமிழ்நாட்டின் தமிழ் தொலைக்காட்சிகளின் தொடர்களில் மூழ்கிக்கிடக்கும் ஐரோப்பிய புலம்பெயர் தமிழ்ப்பெண்களைப் பற்றியும்
மெகா தொடர்களின் தாக்கங்களைக் குறித்தும் பேசினார்.
புலம்பெயர்ந்த வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட மொழிச் சிக்கலைத் தாங்கள் எப்படி எதிர்கொண்டோம்,
எங்கள் இருந்தலுக்கான போராட்டத்தில் மொழி தெரியாத தேசத்தில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள
எடுக்கும் முயற்சிகளையும் நகைச்சுவையாக எடுத்து வைத்தார். அத்துடன் புலம்பெயர்ந்த பெண்கள் பலர் மன அழுத்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளதையும் இரு கலாச்சார விழுமியங்களை கடக்க முடியாமல் அவதிப்படுவதையும் சுட்டிக்காட்னார்
றஞ்சி தன் உரையாடல்களில் பல்வேறு கருத்துகளைப்
பேசினார். புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்பு அடைந்தபின்னர் பெண்விடுதலைச் சிந்தனைகள் மேலும் தோன்றின சில பெண்எழுத்துக்கள் -தெரிந்தோ தெரியாமலோ- ஆண்நோக்கு நிலையிலிருந்தும் எழுதப்படுகின்றன.
இலங்கையின் போர்ச்சூழல், இயக்க அராஜகங்கள, உடனடி உயிர்ப் பாதுகாப்பு என்பவற்றால் மட்டுமன்றி இதைப் பாவித்து பொருளாதார காரணிகளால் புலம்பெயர்ந்தவர்களிடமும்கூட முற்றுமுழுதான வேறான கலாச்சார சூழல், இந்த நாடுகளின் இயற்கைக்கு முகம்கொடுப்பதில் இருந்த சிரமங்கள், கூட்டுவாழ்க்கையினைப் பிரிந்து உதிரியானமை, மொழிப் பிரச்சினை, நிறவெறி போன்ற பல காரணிகள் இவர்களின் வாழ்வியலைத் தாக்கியதால் அவை இலக்கியங்களிலும் வெளிப்பட்டன. அவை பெண்எழுத்துக்களிலும் வெளிப்பட்டன. இயக்கங்களிலிருந்த வந்த ஆண்களால் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பிலிக்கியப் போக்கு ஆரம்பத்தில் பெண்ணியத்தில் வெளிப்படவில்லை என்பதை இலங்கையின் போராட்ட அரசியல் நிலைமைக்குள் வைத்தே பார்க்க வேண்டும். என்றார்
றஞ்சி தன் உரையாடல்களில் பல்வேறு கருத்துகளைப்
பேசி இருந்தாலும் இரண்டொரு கருத்துகள் மிக முக்கியமானவை. ஒன்று ஐரோப்பாவைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த பெண்கள் பெரும்பாலும் திருமணத்தை நோக்கித்தான் புலம் பெயர்ந்தார்கள்
என்பது. இன்னொன்று ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தங்கள் கலாச்சார அடையாளமாகக் கட்டிக் காக்கும்
"பூப்பு நீராட்டு" அதையும் ஹெலிகாப்டரில் அந்தப் பெண்ணை உட்கார வைத்து விழா நடத்தும் இடத்தில்
பூத்தூவி இறக்கி கொண்டாடும் ஆடம்பர அந்தஸ்த்து
அடையாளமாகி இருக்கும் நிலையை வருத்தத்துடன்
பகிர்ந்து கொண்டார்.
றஞ்சி பகிர்ந்து கொண்ட இன்னொரு முக்கியமான செய்தி ஐரோப்பாவில் பள்ளி கூடங்களில் கவுன்சிலிங் என்ற பெயரால் குழந்தைகளுக்கு நடத்தப்படும் தெரபி
கொடுமை. அதாவது ஐரோப்பா குழந்தைகளும் ஆசியக்குழந்தைகளும் நிறத்தால் மட்டுமல்ல, சில அடிப்படை குணத்தாலும் வேறுபட்டவர்கள். இந்த
அடிப்படை உண்மையை ஐரோப்பா அரசு முற்றிலும்
நிராகரிப்பதுடன் அவர்களுக்கான அளவுகோளையும் ஒரேமாதிரியே வைத்திருக்கிறது. அதன் விளைவு
ஆசியக்குழந்தைகள் அதிகம் குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள். நம் பார்வையில் குறும்பு என்ற அந்த
துடிப்பான குழந்தைகள் அவர்களின் பார்வையில் வன்முறையைக் கையாளும் குழந்தைகளாக, அதாவது
அக்குழந்தையும் துறுதுறுப்பு அடக்கப்படாவிட்டால்
வன்முறையாகிவிடும் என்ற கருத்து அவர்களுக்கு
இருக்கிறது. இதனால் மூன்று முறைக்கு மேல் குழந்தை விதிகளை மீறிவிட்டால், தண்டனைக்குள்ளானால் பெற்றோர் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பத்தில் பெற்றோரிடம் கை எழுத்து வாங்கப்படுகிறது. மொழிச்சிக்கல் காரணமாக பல பெற்றோர்கள் எதற்கு கை எழுத்திடுகிறோம் என்பதை அறியாமலேயே கையொப்பம் இடுவது நடக்கிறது. அதன் பின் தெரபி என்ற சிகிச்சைக்குள்ளாகும் குழந்தை , அதுவரை நார்மலாக இருந்தக் குழந்தை அப்நார்மலான குழந்தையாக மாற்றப்படுகிறது. அப்நார்மல் குழந்தைகளுக்கு என்று ஒதுக்கப்படும் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே எதிர்காலத்தில் செய்ய வேண்டிய நிலைக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தள்ளப்பட்டிருக்கிறது, பெற்றோர்களிடம் இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் றஞ்சி.
இவை தவிர தமிழகச்சூழலில் கோ. சுஜாதா வாசித்த ஆய்வுக்கட்டுரை என் கவனத்தைப் பெற்றது. "திராவிட சொல்லாடல்களில் பெண்" என்ற தலைப்பிலான அவர் கட்டுரை அறிஞர் அண்ணாவின் படைப்புகளை எடுத்துக் கொண்டு பேசியது. மனையாள் , இல்லத்தரசி, வேசி,
நடனக்காரி என்ற சொற்களின் ஊடாக பெண் என்பவளை எப்படி இன்பம் என்ற நுகர்ப்பொருள் அடையாளமாக்கி இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் காட்டினார். ஆனால் அவ்ர் கட்டுரையில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதை அங்கும் பதிவு செய்தேன்.
எப்போதும் எவ்விடத்தும் அண்ணாவை எவரும் ஒரு
பெண்ணியவாதியாக எடுத்துக் கொண்டதே கிடையாது.
ஒருவகையில் சொல்லப்போனால் அக்காலக்கட்டத்தில்
தந்தை பெரியார் மட்டுமே பெண்ணியவாதி. தந்தை பெரியாரின் பெண்ணிய கருத்துகளை எந்தளவுக்கு
அவரை ஏற்றுக்கொண்ட அறிஞர் அண்ணாவும் அவர் தம்பிமாரும், மற்றும் பாரதிதாசன் வகையாறாக்களும்
பேசினார்கள், முன்னிலைப்படுத்தினார்கள் என்பதை எல்லாம் நாம் மறுவாசிப்பு செய்தே ஆகவேண்டும்.
எப்படி இருந்தாலும் அண்ணாவின் சங்க கால, காப்பியக்கால பெண்ணின் மீட்டுருவாக்கம் என்பது முழுக்கவும் அரசியல் சார்ந்த பின்னணியில் பார்க்கப்பட வேண்டியதாகும். சுதந்திர போராட்ட காலத்தில்
இந்தியா எங்கும் ஆங்கிலேயரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு
எதிராக இந்திய கலாச்சாரமாக வேத இந்தியாவின் கலாச்சாரம் வைக்கப்பட்டது. இந்திய மொழிகள் எங்கும் இதன் தாக்கம் இருந்தது. மகாகவி பாரதி " ஆரியதேசம்"
என்று கொண்டாடுவதெல்லாம் இந்தப் பின்னணியில் தான். ஆனால் 2000 ஆண்டுக்கும் பழமையான கலாச்சாரமும் தேசிய அடையாளமும் கொண்ட தமிழினத்தை அண்ணா சங்க காலத்திலிருந்தும் சிலம்பிலிருந்தும் எடுத்துக் கொண்டார். என்று அரசியல் காரணங்களை முன்வைத்தேன்.
சாதியம் பெண்ணின் பிறப்புறுப்பில் பத்திரமாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று
சாதியம் குறித்து பேச வந்த கவின்மலர் அண்மையில் தர்மபுரியில் நடந்த இளவரசன் திவ்யா
காதல் விவகாரத்தில் வெளிப்பட்ட சாதிய முகத்தை தன் கருத்துகளுக்கான வலுவான ஆதரமாக
எடுத்துக்கொண்டு பேசினார்.
பெண் விவசாயிகளுடன் தொடர்ந்து களப்பணியாற்றும் ஷீலு, மற்றும் தலித் பெண்களுடன்
களத்தில் நிற்கும் தலித் போராளி ஃபாத்திமா பெர்நாட் இருவரும் தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து கொண்டனர்.இந்தியாவில் மதச்சாற்பற்ற நிலை சாத்தியப்படுமா என்ற கேள்வியின்
ஊடாக அதன் சாத்தியப்பாடுகளையும் அதற்கான தேவை அரசியல் சூழலில் வரவேண்டியதன்
அவசியத்தையும் தன் கட்டுரையில் விளக்கினார் காப்ரியல் டீட்ரிச். உலக மயமாக்கலில்
பெண்களின் பாதிப்புகள், வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், போராட்டங்கள்,
வாழ்வாதரங்களின் பாதிப்பு என்று பல்வேறு தளங்களை நோக்கி தமிழகத்து பெண்ணிய
சிந்தனையாளர்களும் களப்பணியாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை பல்கலை கழக மாணவ மாணவியர் மட்டுமின்றி சிதம்பரம் அண்ணாமலை
பல்கலை கழகத்திலிருந்தும் திருநெல்வேலி மனோண்மணி பல்கலை கழகத்திலிருந்தும்
எத்திராஜ் பெண்கள் கல்லூரி பேராசிரியர் முனைவர் அரங்கமல்லிகா, மற்றும் அவர்
கல்லூரி மாணவியரும் பேராசிரியர் கல்பனா சேக்கிழார், வழக்குரைஞர் ரஜனி , முனைவர்
தங்கம், தெ. மதுசூதனன், மரப்பாச்சி நாடகக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டு
கலந்துரையாடலில் தங்கள் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தார்கள்.
இவைதவிர என்னில் அதிர்ந்து கொண்டிருக்கும் இன்னும் சில:
*இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா கொண்டு வரப்பட்ட தமிழர்களுக்கு குடியுரிமை
கொடுப்பதைப் பற்றி எவரும் பேசவில்லை.
ஏனேனில் அவர்கள் காடுகளில் விலங்குகளுடன் விலங்காக விடப்பட்டார்கள்.
*நோக்கியா தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் அதிகம். அவர்களும் உள்ளூர்ப் பெண்களாக இருப்பதில்லை. தூரத்து ஊர்களிலிருந்து மிகக்குறைந்த
சம்பளத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறது நோக்கியா.
*கிளிநொச்சி குடியேற்றப்பகுதி தான் போருக்குப் பின் வங்கிகளின் கிளைகள் அதிகம் திறக்கப்பட்ட பிரதேசம்.
வாங்கியக்கடனைத் திருப்பிக் கட்டமுடியாமல் தொடரும் தற்கொலைகள்.
*தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள்.. இவர்கள் மீது
திணிக்கப்பட்டிருக்கும் கட்டாயக்கடன்.
பெண்களை ஒடுக்கும் அரசின் முகம்.
*கடந்த 4 ஆண்டுகளில் சிங்கள விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது.
*2100ல் நெல் உற்பத்தி 80% குறையும்.
*புலிகள் காப்பகம் என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன.
*பிறமாநிலங்களிருந்து தமிழகத்தில் வாழ்வாதாரம் தேடி வந்திருக்கும் இன்றைய சூழலில் உருவாகி இருக்கிறது
சென்னைக்குள் இன்னொரு நிழல் சென்னை.
*தமிழகத்தில் இன்றைக்கும் ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு என்று தனிநாள் ஒதுக்கப்படுகிறது.
ஆழியாளின் கருநாவு என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. மரப்பாச்சி குழுவினரின்
கவிதை நாடகத்துடன் நூல் வெளியீடு நிகழ்ச்சி
வெகு சிறப்பாக நடைபெற்றது.
இரு நாட்களிலும் காலை மாலை என்று தொடர்ந்து
நடந்த அரங்கு நிகழ்வுகளை மிகவும் செம்மையாக
ஒருங்கிணைத்து கட்டுரை வாசிப்புக்குப் பின் கேட்கப்பட்ட கேள்விகளின் ஊடாகவும் பல்வேறு செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்தனர் வ.கீதாவும்
ரேவதியும் மங்கை அவர்களும். கட்டுரைகள் புத்தக
வடிவமாகும் போது இக்கலந்துரையாடல்களும் இணைக்கப்பட்டால் கட்டுரைகள் தொடர்பான பிற
செய்திகளும் கணக்கில் கொள்ளப்பட்டு பெண்ணிய உரையாடலுக்கான தளம் விரிவடையும்.
கருநாவு கவிதைநூலில் இருந்து சில வரிகள்:
எல்லா கதவுகளையும்
முகத்தில் அடித்து மூடுபவர்களே!
ஜன்னல்களை
அறைந்து சாத்துபவர்களே!
காற்றுப் புகும் வழிகளையும்
வெளிச்சம் கசியும் எல்லாத் துளைகளையும்
இறுக்கி அடைப்பவர்களே!
எங்களை முற்றிலுமாய்க் கைவிடுங்கள்
எங்களை முற்றிலுமாய்க் கைவிடுங்கள்
அப்போதுதான்
கடும் உறை குளிரிலும்
பிரிண்டபெல்லா மலைக்காடுகளை அண்டாத
பண்டுலக்ஸ் கிளிக்கூட்டங்களுக்குக்
கிட்டியது போல்,
நாங்களே தேடிக்கொள்வோம்
எங்களுக்கான தானியங்கள்
விளைந்து இறைந்து கிடக்கும் இடங்க்ளையும்
எங்களுக்கான நகரங்கள்
எழும் நாட்களையும்.
(வாசித்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறார்கள். கட்டுரைகளின் ஊடாக என் அனுபவங்களின் சில துளிகளை மட்டுமே பதிவு செய்திருக்கின்றேன். மற்றவை அச்சில் வெளிவரும்)