தோழர் மலரின் கதை.
இது புனைவல்ல. உண்மை.
சில அதிசயங்களும்
சில நம்பிக்கைகளும்..
🔥🔥🔥🔥
அவளை மாடு முட்டி காலால் மிதித்தது. அவ்வளவுதான் அவளுக்கு இன்றுவரைத் தெரியும். மற்றதெல்லாம் அவளைப் பற்றி அவள் பெற்றோரும் உடன்பிறப்புகளும் அண்டைவீட்டாரும் பள்ளிக்கூடத்தில் அவளுடன் படித்த
அவள் தோழியரும் சொல்ல அவள் அறிந்தவைகளாக மட்டுமே இருக்கின்றன.
காஞ்சிபுரம் ஐயன்பேட்டை கிராமத்தில் கோவி. கலியமூர்த்தி, சந்திரா இருவருக்கும் பிறந்த மகள் மலர்விழி. மாடு முட்டுவது மாடு மிதிப்பதெல்லாம் மிகவும் சாதாரணமாகவும் அதனால் ஏற்படும் காயங்களும் வீக்கங்களும் கைவைத்தியத்தில் சரியாகிவிடும் என்பதே மக்கள் நம்பிக்கையாக இருந்தது. எனவே மகள் மலர்விழியை மாடு மிதித்துவிட்டது என்பதை யாருமே பொருட்படுத்தவில்லை. மலர்விழிக்கு வலி இருந்த இடத்தில் தைலமோ கைமருந்தோ தடவி இருப்பார்கள். ஆனால் இரவு தூங்கி எழுந்தப் பின் மலர்விழியின் உடல் வீங்கி ஒரு விகாரமான தோற்றம் ஏற்பட்டது. அத்துடன் காய்ச்சலும் சேர்ந்துக் கொண்டது. அவள் உடலின் வீக்கம்தான் காய்ச்சலைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைப் பெற்றொருக்கு கொடுத்திருக்கும்.
அவர்கள் காஞ்சிபுரம் பார்த்தசாரதி மருத்துவமனைக்கு
தங்கள் மகளைக் கொண்டு காட்டுகிறார்கள். உடல் பரிசோதனைக்குப் பிறகு
மருத்துவர் குழந்தையின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால்தான் உடல் வீக்கம் எடுத்திருக்கிறது என்று சொல்லி உடனடியாக அவளுக்கு ஓரு ஊசிப்போட்டாக வேண்டுமென சொல்கிறார். அந்த ஊசியின் விலை 1983 ல்
ரூ 600. மலர்விழி சொல்கிறார் அந்தப் பணம் என் அப்பாவின் ஒரு மாதச் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு என்று. மகளின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று கலியமூர்த்தி கடன்பட்டு ஊசி வாங்கி சிகிச்சை எடுக்கிறார்கள். மலரின் உடல் வீக்கம் சற்று குறைகிறது என்றாலும் மலர் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவளுக்கு தன்னைச் சுற்றி யார் என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. மருத்துவர்களால் அவள் நிலைக்கு காரணம் இதுதான் என்று தெளிவாக சொல்லவும் முடியவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
மலர்விழியின் அம்மாவும் அப்பாவும் வேறு வழியின்றி தங்கள் மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து தங்கள் வீட்டுக்கு வரும் வழியில் மலர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.
மலரின் அம்மா சந்திரா வரும் வழியில் தன் குழந்தையுடன் இறங்கி அந்தக் கோவிலுக்குப் போய்விடுகிறார். ஐயன்பேட்டையிலிருக்கும் சந்தோலி அம்மன் கோவிலின் வாசலில் உட்கார்ந்து விடுகிறார்.
“தாயே என் மகளை நீ குணப்படுத்தாமல் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” சங்கல்பம்…எடுக்கிறார். அவருடைய மன உறுதியை யாராலும் அசைக்க முடியவில்லை. கணவர் கலியமூர்த்தி மருத்துவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இது தேவையில்லாத வீம்பு, நம் மகளுக்கு இதுதான் தலைவிதி, இதை மாற்றமுடியாது , ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார்;. ஆனால் மலரின் அம்மா யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. சந்திரா தன் மகளுடன் சற்றொப்ப ஆறு மாதங்கள் அந்தக் கோவிலில் தன் வேண்டுதலுடன் உட்கார்ந்திருக்கிறார்.
அவருக்கு உணவு, மாற்று உடை என்று வீட்டிலிருந்தும் ஊரிலிருந்தும் கொண்டுவருகிறார்கள். நாள்கள் செல்ல செல்ல அனைவருக்கும் அவள் செயல் முட்டாள்தனமாக தெரிகிறது. ஆனால் அவள் மட்டும் உறுதியாக இருக்கிறாள். தாய் சந்திராவுக்கும் ஊர்த்தெய்வம் சந்தோலி அம்மனுக்கும் நடுவில் காலம் மெளனமாக இருக்கிறது. கோவிலில் பூஜைக்குப் பின் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் (தண்ணீர்) மட்டும்தான் சந்திரா தன் மகளுக்குன் கொடுத்த ஒரு மருந்து எனலாம்.
மலர் அழவில்லை. சிரிக்கவில்லை. ஏன் கோவிலில் இருக்கிறோம் அம்மா என்று கேட்கவும் இல்லை. அவளுக்கு அவளைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் எதுவுமே தெரியவில்லை. அவள் தன் சூழலுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றவில்லை.
திடீரென ஒரு நாள் அந்த விடியல் மட்டும் வேறொரு சூரியனை அனுப்பியது. சந்தோலி அம்மன் முதல் முறையாக பேச ஆரம்பித்தாள். ஆம்,
குழந்தை மலர் வாய்திறந்து பேசினாள். “அம்மா, நம்ம வீட்டுக்குப் போகலாம்”
அவ்வளவுதான் அவள் பேசிய வார்த்தைகள்!
அதுவரை வாய்த்திறந்து எதுவும் பேசாத மகள் பேசிவிட்டாள், இனி எல்லாமும் சரியாகிவிடும் என்று அம்மா சந்திரா நம்பினாள். ஊரும் உறவுகளும் அந்த நாளைக் கொண்டாடின. மகளை வீட்டிற்கு அழைத்துவந்து சடை விழுந்த கூந்தலில் நீருற்றி நீராட்டினாள். சடை சடையாக பின்னலிட்டு இருந்த கூந்தல் தண்ணீரை ஊற்றியவுடன் அப்படியே கையொடு வந்துவிட்டது. தலைமுடி மட்டுமல்ல, அவள் புருவம், இமை முடிகளும் உதிர்ந்துவிட்டன. ஒரு விகாரமான தோற்றத்தில் குழந்தை மலர்விழி
மெல்ல மெல்ல மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள்.
சில ஆண்டுகள் தான் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்ததே இல்லை என்கிறார் மலர்விழி. அவர் வீட்டில் மட்டுமல்ல, அண்டை வீடுகளிலும் அக்குழந்தையின் மன நலம் பாதுகாக்கப்பட்ட து. யாரும் அக்குழந்தையின் விகார தோற்றத்தைக் காட்டியோ பேசியோ அக்குழந்தையின் மனசைத் துன்புறுத்தவில்லை. இதெல்லாம் அவர்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்காமல் வந்தப் பண்பாடு. நயத்தக்க நாகரிகம்.
மலர்விழியின் அம்மா அவருக்கு தேங்காய்ப் எண்ணெய் மட்டுமே தேய்ப்பாராம். முடி வளர்ந்திரும் பாருங்க.. என்று நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார் சந்திரா. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.
மலரின் வாழ்க்கையில் இத்துயர சம்பவம் நடந்தப்போது அவர்
ஐயன்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் அரசு மேல் நிலைப் பள்ளி சின்ன காஞ்சிபுரத்தில் ஒன்பது முதல் பதினொரு வரை படித்திருக்கிறார்.
வடக்குத் தெரு, நடுத்தொடு, கந்தபார் தெரு என்று மூன்று தெருக்களும் அவற்றை இணைக்கும் சதுரவடிவில் அமைந்த ஊரும் அவரை ஒதுக்காமல் தங்கள் வீட்டில் ஒரு குழந்தையாக அரவணைத்திருக்கிறது.
மலர் தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது அந்த ஐயன்பேட்டை சந்தோலி அம்மனைப் பார்க்கணுமே என்றேன்.
வீட்டுக்கு வாங்க தோழர், எங்க அம்மா சந்திராவைப் பாருங்க..” என்றார்.
அவருக்கு அவர் வாழ்க்கையின் நிகழ்ந்த அதிசயங்களை சந்தோலி அம்மனுடன் முடிச்சுப் போட விருப்பமில்லை. ஒரு தாயின் உறுதி , நம்பிக்கை என்று விளக்கம் தருகிறார். என் அம்மா செய்ததெல்லாம் எனக்கு தினமும் அக்கோவில் துளசி நீரைக் கொடுத்ததுதான் என்று அறிவியல் விளக்கமும் தருகிறார் தோழர் மலர்.
சந்திரா என்றால் என்ன? சந்தோலி என்றால் என்ன? இருவருமே மலருக்கு அன்னையர்தான். அம்மா என்ற மாபெரும் சக்தியில் சந்தோலி அம்மனும் கரைந்து கண் திறந்திருப்பாள் தானே.
இன்று தோழர் மலர்விழி, தமுஎகச வின் மிக முக்கியமான களப்பணியாளர். 2008ல் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை “செம்பருத்தி குழந்தைகள் உலகம்” என்ற பெயரில் ஆரம்பித்தார். விருதுநகர், திருச்சி, இராமநாதபுரம் , மதுரை, கடலூர், சென்னை என்று பரந்துப்பட்ட அவர் பயணம் மாணவர்களின் பல மேம்பாட்டு திறன்களுக்கு வழிகாட்டியது. அதன் செயல்வடிவமாகவே ‘மழலைச்சொல் ‘ என்ற பதிப்பகம் ஆரம்பித்து குழந்தைகள் பெற்றோர்கள் ஆசிரியர்களைக் கொண்டு குழந்தைகளுக்கான கதைகளை எழுத வைத்தார்.
39 புத்தகங்கள், 16 பக்கங்களுக்குள் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
இன்றும் குழந்தைகளின் கால்களாகவும் காதுகளாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறார் தோழர் மலர்விழி.
(தோழர் மலரும் நானும் வள்ளியூரில் நுங்கு சர்ப்பத்துடன்)
No comments:
Post a Comment