Saturday, February 15, 2025

அஃகேனம் நவகவிதை

 சகோதரி கவிஞர் புதியமாதவி அவர்களுக்கு

எனது அன்பும் பாராட்டுகளும்… 

என்று ஆரம்பிக்கும் இக்கடிதம் 6 பக்கங்களில் 9.2.25 ல்எழுதப்பட்டிருக்கிறது.

ஓம் சக்தி இதழின் ஆசிரியராக பணியாற்றிய அய்யா கவிஞர் 

பெ. சிதம்பரநாதன் அவர்கள் இக்கடிதத்தை எழுதி முடிக்கும்போது நேரம் இரவு 3.10. ..

கவிதை என்ன செய்யும்?

கவிதை இதை எல்லாம் செய்யும்.. ! 

நன்றி அய்யா.

அவர் எழுதி இருப்பதை அப்படியே பகிர்கிறேன்.

******

அஃகேனம் –  நவகவிதை

------------------------------------------------- பெ. சிதம்பரநாதன்


பாரதி சொல்லுவான், “சொல் புதிது, சோதிமிக்க நவகவிதை” என்று. 

உங்கள் கவிதைகள்  நவகவிதைகள். சவ கவிதைகள் எழுதுவோர் பலருண்டு. அதில் படைப்பாளனும் செத்துக்கிடப்பான், வாசகனும்தான். இச்சூழல் இன்று தமிழகத்தில் மலியத் தொடங்கிவிட்ட நிலையில், உங்கள் நவ கவிதைகள் உங்களை “இன்று புதிதாய் பிறக்கச் செய்துள்ளதுடன், வாசகனை  இக்கவிதைகளை அனுபவிக்காமல் மரணித்திருந்தால், உயிருக்கான உன்னதமாக சுகத்தைப் பெறாமல் போயிருப்போமோ என எண்ணுமாறு செய்துள்ளது.


நவராத்திரகளின் ஒன்பது இரவுகளும் புதிய கோணத்தில். உருவம்தான் பழையது. உள்ளடக்கமோ ரசாயணக் கலவையாக சிலிர்க்க வைக்கிறது.

சொற்கள் - … சொட்டுச் சொட்டாய் பட்டுத்துணியை வெட்டி வெட்டிச் சட்டை செய்தது போல.

எங்கள் ஓம்சக்திப் பத்திரிகை தீபாவளி மலரில் நீங்கள் எழுதிய கவிதைகளை வாசித்ததுண்டு. அதே வெப்பம், அதே நுட்பம், அதே தட்பம்

இந்தக் கவிதைகளிலும் நிரம்பி வழிகிறது.

“இந்த ஓரிரவிலேனும்

வெள்ளைத் தாமரையில்

என்னுடல் பூத்திருக்கட்டும்.

ஹே சென்னிமல்லிகார்ஜூனா…”

இன்றைய சூழலில் பாலியல் கொடுமைகளுக்கு பலியாகும்  சின்னஞ்சிறுசுகள்

வக்கிரமனிதர்களின் சூறையாடல்கள், இந்த ஓரிரவிலேனும் என்ற உங்கள் கோரிக்கையைக் கேட்டு மூர்க்கர்கள் ஸ்தம்பித்து நிற்பார்களா?

ஐந்தாம் கவிதையில் “ இமயத்தில் இருக்கும் இறுமாப்பா” எத்தனை பெரிய கம்பீரம் நிறைந்த சொல்லாடல். வானமே வளைந்து வந்து பாராட்ட வேண்டும். 

தீபத்தில் இரவு எரிகிறது என்ற உங்கள் சிந்தனை இரவைப் புதிதாகப் பிரசவித்துள்ளது. அது என்ன “வேத்த்தின் காமம்” யோசிக்க வைக்கிறது. யோசித்து யோசித்து இரவுகள்தான் எரிகின்றன. பகல் தட்டுப்படவில்லை.

“நெருப்பின் கண்ணீர் துடைக்காதே – சுட்டுவிடும் “ இப்படித் தலைகீழாயச் சிந்தித்து நிற்கிறது ஏழாவது  இரவு.  ‘ மாரம்பு ‘ இதுவரை யாரும் கையாளப்படாத கற்பனை. “ படைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில்” என்ன ஊசாலாடுகிறது? என்னமோ தெரிகிறது. என்னவென்றுதான் தெரியவில்லை. இப்படித் தெரியாமல் தெரிவதுதான் பிரம்மமோ? பிரம்மத்தைப் பற்றி பிரமாண்டமாகப் பேசக் கூடாதுதான். நீங்கள் பேசிவிட்டீர்கள்!.

“ஒன்பதாவது திசையில்

சீதை எழுதும்

ஸ்ரீராவண ஜெயம்”

என்ன புதுமையிது. சீதை ராம்ஜெயம்ம் செய்யாமல் ராவண ஜெயம் செய்கிறாளே….என்னமோ சொல்கிறீர்கள்..என்னமாய்ச் செல்லியிருக்கிறீர்கள். காலம் இதன் உட்பொருளைக் கண்டுபிடிக்கும். அதற்கான வாசகன் வருவான்.

உன்னை வென்ற அமுத சுரபி என் மடியில்.. கர்ணபுத்ரிதான் யாரோ ?!

“காற்று மூச்சுத்திணறலுடன் சிரமப்படுகிறது”

“ இருளைக் களவாடிய பகல்” 

நினைத்து  நினைத்து அனுபவிக்க கிடைத்த வரிகள். இவை வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளாக இருக்கக்கூடாது. ஊட்டியில் தாவரப் பூங்காவில் மலர்க் கண்காட்சியில் இடம் பெறுமானால், இவை ஊருணியாகப் பயன்படும்.

பொய்களின் தேசத்தில் – கொள்ளையடிக்கப்பட்ட மணல் மேடுகள், புதர் மண்டிக்கிடக்கும் அவளுடைய கனவு தேசம்.

மீனாட்சியில் தோளிருந்த பச்சைக்கிளியைக் காணவில்லை. பறந்துவிட்டதா ? யாராவது அபகரித்துக் கொண்டார்களா? அப்படியானல் அவளுடைய வைரமூக்குத்தி ? ஏன் அவளே என்ன ஆனாள்?  இப்படியாக சிந்திக்க வைக்கிறது இந்த வரிகள். வரிக்கு வரி சிரமத்திற்குள் சிக்கிக் கொள்கிறேன். 

முகத்தில் கீறும் நகங்களை

முத்தங்களால் தடவும் நீ

இது காதல் கவிதை எல்ல.. தேசத்தின் நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிற கவிதை. தெரு நாய்கள் சண்டை போடுகின்றன. எங்குப் பார்த்தாலும் இந்தச் சண்டைகள்தான். “இரவு மிருகம் இளைப்பாறுகிறது” மறுபடியும் எனது முதுகில் ஒரு பிரம்படி. சுளீர் என்று படுகிறது. அடித்தது 

இக்கவிதை தான்.

“இரவும் பகலும் அறியாத யுகம்” பூமியைப் பிரசவிக்கவில்லை, இருளின் போர்வை ஆதி நிலத்தில் – நெருப்பு மலர்கள் – யார் பறிப்பது? ஏதோ பனை உச்சிக்குப் போய் நின்று நீங்கள் வாசகனைப் பார்க்கிறீர்கள். அவனோ தரையில் கிடக்கிறான். அவனையும் உங்கள் முதுகில் சுமந்து உச்சிப்படுத்த முடியுமா? 

காலத்தின் விஷத்துளிகளை

அருந்துகிறேன்.

மரணித்துக் கொண்டே வாழும்

ஜீவ நதி..

பிறவிக்கடலின் ஆதிநிலம்..

பிறவிக்கடல் எப்படி ஆதி நிலமாகியது ? மாற்றிச் சிந்தித்திருக்கிறீர்கள்? ‘பிறவிக் கடல்’ வள்ளுவன் சொல்வான். அதுதான் நமது ஆதி நிலமா?

வள்ளுவனுக்கு புது வண்ணம் தீட்டியிருக்கிறீர்கள். வள்ளுவன் மேலும் வனப்பாகிறான். 

‘முற்றுப் புள்ளிவரை” வாசித்த சுகத்தை எழுத எழுத, என் மனம் சுகப்படுகிறது.

ஒரு கேள்வி , கவிதைக்கான யுகம் காலாவதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. உரைநடையே உச்சத்தில் உலா வருகிறது. கவிதைகளை இப்போது பலரும் வாசிப்பதாகவும் தெரியவில்லை. அதனால் உரைநடையில் ஊடுபயிராகவே கவிதையும் வலம் வருகிறது. இத்தருணத்தில் உங்கள் கவிதைகள், கவிதை யுகம் முடிந்து போகவில்லை, ஒருவேளை ஓளவையைப் போல சுட்ட பழம் கேட்டு நிற்கும் காட்சியை, உங்கள் கவிதை மூலம் கண்டு களிபேருவகை அடைந்தேன்.

வாழ்க. 

தங்களன்புள்ள

பெ. சிதம்பரநாதன்.

09/2/25 இரவு 3.10



No comments:

Post a Comment