நிலம் பெண்ணுடல்
இரண்டும் இணைகோடுகள். எப்போதுமே சேர்வதில்லை.
வாழ்க்கைப் பயணம் இணையாத இந்தக் கோடுகளில்
சீராக பயணிக்கும்படி சமூகம் திட்டமிட்டிருக்கிறது.
தலைவன் தலைவி காதலைக் கொண்டாடும்
போதெல்லாம் தலைவனின் நிலமும் அந்த நிலத்திற்கான
கருப்பொருளான மரம் செடி கொடி மலர் நதி ஊர்வன
பறப்பன எல்லாமும் வந்துப்போகும்.
காரணம் இதெல்லாம் தலைவனுக்குரிமை உடையவை.
அவனுக்கான அடையாளங்கள்.
பெண்ணுக்கு அதாவது தலைவிக்கு இதெல்லாம்
பெரிய்ய அடையாளம் கிடையாது.
பெண்ணுரிமையை உரக்கப்பேசியதாக நாம் நம்பும்
மகாகவி பாரதியும்
“தந்தையர் நாடென்ற போதினிலே..
ஒரு சக்திப் பிறக்குது மூச்சினிலே”
என்று தாய் நாட்டை “தந்தையர் நாடாக” சொல்வதன்
உட்பொருள் என்ன?
அப்படி சொல்லும்போது
ஏன் , எதற்காக சக்தி பிறக்கிறதாம்??????!!!
அவன் பிரிந்துவிட்டால்
அவளுக்குத்தான் பசலை வரும். வந்தாகனும் .!
அவனில்லாமல் அவள் விருந்தோம்பல்
இழந்துவிட்டதற்காக வருத்தப்படுவளாம்!
என்ன ஒரு கொடூரமான சமூக மரபு.
கேவலமான உட்பொருள் கொண்டது. !
அவள் தான் உருகி உருகி… கரைந்துப்போவாள்.
அதை அப்படியே இன்றுவரை ..
(நான் உட்பட..) கடைப்பிடிக்கிறோம்.
காரணம் அவன் தான் பெண்ணுக்கு வாழ்க்கை
நாங்களும் விடுபடவில்லை!!
காரணம் இன்றுவரை வாழ்க்கை என்பதன் அடையாளத்தையே
அவனோடு மட்டுமே இணைத்திருப்பதால்தான்!
அண்மையில் திருப்பத்தூர் இலக்கிய நிகழ்வில்
பாலைத்திணையில் ஒரு பெண்ணைக்கொண்டு போய்
தெய்வமாக நிறுத்தி இருக்கும்
தமிழர் வாழ்வியலைச் சுட்டிக் காட்டினேன்.
அப்போது கேள்வி நேரத்தின்போது ஒரு பெண்,
பெண்கள் பலசாலிகள், அவர்களால்தான் பாலையிலும்
தன் குடியைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.
அதை நான் ரசித்தேன். எனினும் அப்போது சொன்னேன்,
விவசாயக்கடனில் தற்கொலை செய்து கொண்டவன் ஆண்.
ஒரு பெண் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை.
கோட்டா நீலிமாவின் The shoes of dead நாவலைக்
குறிப்பிட்டேன். ஆனால் இப்படியே பேசி
நம்மையும் நம்ப வைத்திருக்கிறார்கள்.
என்றைக்கு குறிஞ்சி மருதம்
முல்லை நெய்தலின் உரிமையில்
பெண்ணுக்கும் சம்பங்களிப்புண்டு
என்று சொல்லப்போகிறார்கள்.??
நாம் இனி, அரசு அதிகாரத்தில்
பெண்ணுக்கான இட த்தை,
அவளுக்கான உரிமையைக் கேட்கிறோம்
என்று பதிலுரைத்தேன்.
நிலம் அதிகாரத்தின் அடையாளம்.
பெண்ணை நிலமாக உருவகித்ததெல்லாம் போதும்.
அதனால் எல்லாம் ஒரு காணி நிலம் கூட
பெண்ணுக்கு கிடைத்துவிடவில்லை.
உருவகங்களில் படிமங்களின் கட்டமைப்பில்
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான்
எங்கள் இடத்தை உங்கள் மொழி சிறைப்படுத்தி
வைத்திருக்கும்?!
No comments:
Post a Comment