Wednesday, May 19, 2021

காலம் இப்படித்தான் நைனா... (கி..ரா.. )


 எந்த அறிஞர் அண்ணாவைப் பற்றி

நாலு வார்த்தை உங்களுக்குப் பேச வரலியோ...

அந்த அறிஞர் அண்ணாவின் அரசியல் உங்களுக்கு
அரசு மரியாதையோடு வழியனுப்பி வைத்திருக்கிறது.
நைனா... காலம் இப்படித்தான்!
**
திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத்
தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான்
காரணம்- கி.ரா. பேட்டி.
திராவிட இயக்கத்தின் கலை இலக்கிய பங்களிப்பு
தொடர்ந்து இலக்கிய மேதாவிகளால் இருட்டடிக்கப்படுகிறது.
அப்படியே யாராவது திராவிட இயக்கத்தின் கலை
இலக்கியப் பங்களிப்பு என்று பேச ஆரம்பித்தால்
அப்படிப் பேசுபவரின் கலை இலக்கியப் பங்களிப்பையே கேள்விக்குட்படுத்தி’விடுவார்களோ என்ற அச்சத்தில்
பலர் இன்றும் வாய்த்திறக்காமல் மவுனமாக இப்பக்கங்களைப் புரட்டிவிடுகிறார்கள்.
இதற்கான காரணங்களை மூத்த எழுத்தாளர்
கி. ராஜநாராயணனின் நேர்காணல் மிகத் தெளிவாக
முன்வைக்கிறது.
கி.ராவும் தன் மவுனத்திற்கான காரணத்தை ஒற்றைவரியில் சொல்லிச் சென்றிருப்பதும் இன்னும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
இந்து பத்திரிகையிலிருந்து சமஸ் கேள்வி:
(மாபெரும் தமிழ்க்கனவு.. பக். 270)
தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை
சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப்
புறக்கணித்தும் எதிர்த்துமே செயல்பட்டிருக்கின்றன.
நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார்
சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும்
இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால்
தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும்
இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல.
தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை
உணர்வும் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ்
இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது.
நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை.
ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன்.
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள்
இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான
இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம்
இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது
என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால்,
இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது.
திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது.
இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை
எப்படிப் பார்க்கிறீர்கள்?
கி.ராவின் பதில்:
சரிதான். இந்த பிராமணியத்தைப் பத்திச் சொன்னீங்க பாருங்க,
அந்தக் கருத்துல ரொம்ப ரொம்ப உடன்பாடு உண்டு எனக்கு.
அது ‘மணிக்கொடி’ ஆட்கள்கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது.
நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப்
பேசியிருக்கோம். நீங்க சொன்ன ரெண்டு சாதிகளைக் கடந்தும்
இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா,
பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது.
மேலும் இதே நேர்காணலின் இறுதியில் கிராவின் வாக்குமூலமாக
வெளிவரும் சொற்கள் …” எங்களால ‘மணிக்கொடி’ பக்கமும்
போக முடியல, ‘திராவிட நாடு’ பக்கமும் போக முடியல.
ரெண்டு மேலேயுமே விமர்சனம் இருந்துச்சு. ……
நாம இதை ரெண்டையுமே சொல்லக்கூடிய நிலையில இல்லை.
சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான்
உண்மை நிலை. ஆனா, இன்னைக்குத் தோணுது, நீங்க கேட்கும்போது, அண்ணாதுரையைப் பத்தி நாலு வார்த்தை பேசக்கூட
நமக்கு வரலியேன்னு. நொந்துக்க ஏதுமில்ல, காலம் இப்படித்தான்!...
***
மும்பை இலக்கிய கூடம் நிகழ்வில் இணையம் வழி கலந்துகொண்ட
கி.ரா.விடம் இதைப்பற்றி நான் கேட்டபோது அவர்.. மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் கடந்து சென்றதும் நினைவுக்கு வருகிறது.
***
என்ன சொல்ல நைனா...
காலம் இப்படித்தான்..
எந்த அறிஞர் அண்ணாவைப் பற்றி
நாலு வார்த்தை உங்களுக்கு பேச வரலியோ...
அந்த அறிஞர் அண்ணாவின் அரசியல் உங்களுக்கு
அரசு மரியாதையோடு வழியனுப்பி வைத்திருக்கிறது.
நைனா... காலம் இப்படித்தான்!
(கி.ராவின் கதைகள் எனக்கும் பிடிக்கும். ஆனாலும்
எழுத்துலகின் அரசியல் கதைப் பிடிக்கலை!)

No comments:

Post a Comment