Sunday, March 5, 2017

நானும் எழுதுகிறேன்


நானும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்
ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை.
நேற்று சொன்ன காரணங்கள் இன்று என்னைப் பார்த்து சிரிக்கின்றன.
நான் எழுதிதான் புரட்சி ஏற்பட்டுவிடப் போகிறது என்பதலோ
சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்துவிடும் என்பதலோ எழதவில்லை.
நான் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ்த்தாய் ஒன்றும் தற்கொலை
செய்து கொள்ளப்போவதில்லை ! என்பதை நன்கு அறிவேன்.
ஆகச்சிறந்த எழுத்தாளராக பிரபலமாகி கொண்டாடப்படுவதற்காக
எழுதும் எந்த லட்சணங்களும் எனக்கோ என் எழுத்துக்கோ
கொஞ்சமும் இல்லை. அந்த வரிசையில் நானும் என் எழுத்துகளும்
இல்லை இல்லை என்பதால் வருத்தப்படுவதற்கு மாறாக
அதுவே எனக்குத் தலைக்கனமாகி இருப்பதாக என்னையும் என்
எழுத்துகளையும் அறிந்த தோழி சொல்கிறாள். அவள் அப்படி
சொன்னவுடன் என் தலையைத் தூக்கி சுமப்பது எனக்கே பெரும்
சுமையாகி அதைக் கழட்டி வைக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறேன்.
ஆனாலும் எழுதுகிறேன் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
எழுத்து என் இருத்தலுக்கான மூச்சாகிவிட்டதால் எழுதிக்கொண்டு
 இருக்கிறேனா? அல்லது  எழுத்து மவுனமொழிக்குள் வசப்படும்
 யோக நிலையை எட்டமுடியவில்லை என்பதால்
 எழுதிக்கொண்டு இருக்கிறேனா..?
நானும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

10 comments:

  1. நம் மன இச்சை தீர எழுதுவோம்! பாரம் குறையும்.

    ReplyDelete
  2. //அல்லது எழுத்து மவுனமொழிக்குள் வசப்படும்
    யோக நிலையை எட்டமுடியவில்லை என்பதால்
    எழுதிக்கொண்டு இருக்கிறேனா..?
    நானும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.//
    இந்தக் காரணம் சிறப்பு..!
    யாரோ ஒரு வாசகர் இருக்கும் காரணமும் தான்

    ReplyDelete
  3. சலிப்பு இல்லாமல் தொடருங்கள்...

    ReplyDelete
  4. எழுதுங்கள்
    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரியாரே

    ReplyDelete
  5. நமது எழுத்தால் புரட்சி ஏற்படுதோ இல்லையோ நிச்சயம் சிலரின் மனத்திலாவது மலர்ச்சி ஏற்படும் அதனால் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  6. எழுதிக்கொண்டு இருப்பதால்
    உள்ளத்துச் சுமைகளை இறக்கி வைக்கின்றோம்.
    அதனால்,
    நெடுநாள் வாழ வழி இருக்கே!

    ReplyDelete
  7. வலைப் பக்கத்தில் 2007 மார்ச் தொடங்கி இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டு இருப்பதற்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  8. எழுதுவது நமக்கு திருப்தி தரும்வரை எழுதிக்கொண்டே போகலாம்...

    ReplyDelete
  9. பேசுகிறீர்கள். ஏன் பேசுகிறோம் என்று யோசிக்கிறீர்களா? சிரிக்கிறீர்கள். ஏன் சிரிக்கிறோம் என்று யோசிக்கிறீர்களா? எழுகிறீர்கள். என் எழுகிறோம் என்று ஏன் யோசிக்கவேண்டும்? எல்லோர்ராலும் பேச முடியும், சிரிக்க முடியும், ஆனால் எழுத முடியாது. எனவே, எழுத ஆரம்பித்து விட்டவர்கள் எழுதிக்கொண்டே போவதுதான் சரி. என்றாவது ஒருநாள் அந்த எழுத்து கொண்டாடப்படலாம். வள்ளுவரே ஓராயிரம் ஆண்டுக்குப் பின்னால் தான் அறியப்பட்டார். உங்களுக்கு ஏன் இந்த அவசரம்?
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete