(1)
சிவாஜி பெயர்ப்பலகை:
மும்பையில் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர்
சத்ரபதி சிவாஜி மகாராஜ்.
விக்டோரியோ டெர்மினஸ் என்றழைக்கப்பட்ட VT ரயில்வே நிலையம்
சத்ரபதி சிவாஜி ரயில்வே நிலையமானது.
எல்லா ரயில்வே நிலையங்களிலும் 'சத்ரபதி சிவாஜி டெர்மினல்' செல்லும்
வண்டிகளைப் பற்றிய அறிவிப்புகள் மராத்தி, இந்தி, ஆங்கிலத்தில்
அலறிக் கொண்டிருக்க அறிவிப்பு பலகைகள் CST என்று மாற்றம் பெற
ஒரு வழியாக நாங்களும் VT யிலிருந்து CST க்கு மாறிவிட்டோம்.
அப்புறம் விட்டார்களா.. விமானநிலையத்திற்கும் சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட்
என்று பெயர் மாற்றினார்கள்.
பயணிகள் மகிழ்வூர்தியில் அமர்வதற்கு முன் மிகவும் கவனமாக சத்ரபதி
சிவாஜி ஏர்போர்டா, சத்ரபதி சிவாஜி ரெயில்வே ஸ்டேஷனா என்பதைத்
தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
வெளிநாட்டு பயணிகள் தான் ஆரம்பத்தில் இந்தக் குழப்பத்தில் மாட்டிக் கொண்டு
அவஸ்தைப் பட்டவர்கள்.
நம்மவர்களுக்கு இந்தக் குழப்பமே வரவில்லை.
ரயில்வே ஸ்டேஷன் என்றும் டொமஸ்டிக் ஏர்போர்ட் என்றும் இண்டர்நேஷனல்
ஏர்போர்ட் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டு அப்படியே வழக்கப்படுத்திக்
கொண்டார்கள். யாரும் சத்ரபதி சிவாஜியைக் கண்டு கொள்ளவில்லை!
(2)
சிவாஜி ரசிகர்
---------------
எங்க ஊரிலிருந்து நாட்டாமை வந்திருந்தார். அந்தக் காலத்திலேயே
அவருக்கு வக்கீல் நாட்டாமை என்று பெயர். எந்த ஒரு பிரச்சனைக்கும்
வக்கீல் மாதிரி பாயிண்ட் பாயிண்டா பேசுவாராம்.
அவர் வந்திருந்தப் போது சிவாஜி ஜெயந்தி. சாலை எங்கும் சிவாஜிப்
புகைப்படங்கள், சிலைகள், மாலை மரியாதை, ஒரு சில இடங்களில்
ஊதுபத்தி மணத்துடன்..பிரசாதம் வழங்காதக் குறையாக பூசைகள் நடக்க
ஆரம்பித்திருந்தன. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
அவர் அமைதியாக எங்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
வழக்கம்போல மறுநாள் ஆபிசிலிருந்து வந்தவுடன் என் மகன்
(அவனுக்கு அப்போது 7 வயது இருக்கும்) சோபாவில் ஏறி
தன் சீருடையில் அணியும் பெல்டை எடுத்துச் சுழற்றி சுழற்றி வீசிக்கொண்டு
'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ' என்று தன் மழலைத் தமிழில்
பாடி அங்கும் இங்கும் தாவித் தாவி குதிக்கிறான்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மீசைக்காரத் தாத்தா அன்று பகல் முழுவதும் உட்கார்ந்து ஹீரோனா
சிவாஜி இல்ல எம்.ஜி.ஆரு தானு சொன்னாராம். அதுவும் எம்.ஜி.ஆர் பாடல்களை
பாடியும் ஆடியும் காட்டி வகுப்பு எடுத்திருக்கிறார் என்பது என் மகள் மூலம்
தெரியவந்தது. அவரும் என்னிடம் தன்னிலை விளக்கம் சொன்னார் பாருங்கள்..
'பின்னே என்னமா.. இந்த ஊருல சிவாஜியைக் கொண்டாடதீங்க..
நம்ம மக்கள் திலகம் எம்சிஆரை மறந்திட்டயளெ எல்லாரும்' னு வருத்தத்தோடு
சொன்னார்.!!
எனக்கு எப்படி இருந்திருக்கும்?
சிவாஜியின் ராய்காட் கோட்டை மர்மங்கள்
----------------------------------------
எழுத்தாளர் பாவண்ணனை மும்பைக்கு அழைத்திருந்தோம்.
இலக்கியக் கூட்டம் முடிந்து நண்பர்களுடன் சிவாஜியின் ராய்காட் போயிருந்தோம்.
நான், கே ஆர் மணி, ரவிப்பிள்ளை, சாருஸ்ரீஇ எங்களுடன்
பாவண்ணனும் அவர் மனைவி அமுதா பாவண்ணனும்.
மலைமீது கோட்டையில் ஏறுவதற்கு கொஞ்ச தூரம் ரோப்கார் வசதி உண்டு.
அதன் பின் நாம் நடந்துதான் ஏற வேண்டும்.
மலை மீது சிதிலமடைந்த கோட்டை. சிவாஜி 1656ல்
கோட்டையைக் கைப்பற்றி அதைப் பலப்படுத்துகிறான்.
தன் தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்கிறான்.
கோட்டையில் சந்தையும் இருக்கிறது. அந்தச் சந்தையில் கடைகளில்
பொருட்களை குதிரை மீதமர்ந்து வீரர்கள் வாங்குவதற்கு தோதாக
உயரமாகவும் வரிசையாகவும் இருக்கிறது. கோட்டையில் "டக்மக்டோக்"
என்ற முனையில் தான் குற்றமிழைத்தவனுக்கு மரண தண்டனையாக
அந்த முனையிலிருந்து பள்ளத்தில் உயிருடன் தள்ளிவிடுவார்களாம்!
இப்படியொரு தண்டனை அந்தக் காலத்தில்.
சிவாஜிக்கு எப்போதுமே தன் கோட்டையின் பாதுகாப்புகள் குறித்து
அதீத அக்கறை இருந்திருக்கிறது.
ஒருமுறை மலையடிவாரத்திலிருந்து வந்த இடையர்குலப்
பெண் மோர் விற்றுவிட்டு மாலையில் வழக்கம் போல வீடு திரும்ப
வரும்போது தாமதமாகிவிடுகிறது. கோட்டைக்கதவுகளை மாலையில்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாத்திவிடுவார்கள். அதன் பின் மறுநாள்
காலையில்தான் கோட்டை வாசல்கள் திறக்கும். கோட்டைக் காவலர்கள்
அவள் எவ்வளவொ கெஞ்சியும் கதவுகளைத் திறந்துவிட மறுத்துவிடுகிறார்கள்.
அவளுக்கோ அவள் பிள்ளைகளின் நினைவு, குழந்தைகள் அவளைக் காணாமல்
தவிப்பார்களே என்று எண்ணி அவளும் தவிக்கிறாள்.
ஒவ்வொரு கதவாகச் சென்று கெஞ்சுகிறாள். எதுவும் நடக்கவில்லை.
ஆனால் மறுநாள் கோட்டைக் காவலர்கள் அவள் வழக்கம்போல
தலையில் மோர்ப்பானையுடன் மோர் விற்பதைக் கண்டு
"இவள் எப்படி மலையடிவாரம் சென்று திரும்பி இருக்கமுடியும்?"
என்று ஐயம் கொள்கிறார்கள்.
அவளும் இரவில் எப்படியோ ஒரு வழியில் மலையடிவாரம் போய்விட்டதாக
ஒப்புக்கொள்கிறாள்.
செய்தி சிவாஜி மகாராஜை எட்டுகிறது.
கோட்டையின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட பின்னரும் ஒரு பெண்ணால்
கோட்டையிலிருந்து வெளியில் செல்ல முடிந்திருக்கிறது என்ற செய்தி
கோட்டையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருப்பதாக நினைக்கிறான்.
கோட்டையைச் சீரமைத்தவர் அழைக்கப்படுகிறார். மீண்டும் கோட்டைப்
பலப்படுத்தப்படுகிறது...
ஆனால் அந்தோ பரிதாபம்... கோட்டைக்குள்ளேயே சிவாஜி
உயிராபத்து இருந்திருக்கிறது. அதுவும் அவருடைய இரண்டாவது மனைவி
சோயரபாய் மூலமாகவே!
அதிர்ச்சியாக இருந்தது கோட்டையைச் சுற்றிக்காட்டியவர் சொன்னபோது.
மூத்ததாரத்தின் மகன் சம்பாஜி அரசனானது சோயரபாய் தன் மகன் ராஜாராமுக்கு
மூடிசூட எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சம்பாஜி முறியடித்த
வரலாறை வாசிக்கும் போது உண்மையாக இருக்குமொ என்ற எண்ணம்
வரத்தான் செய்கிறது.
சிவாஜிக்கு 8 மனைவியர். அவர்கள் மூலம் 2 ஆண்மக்களும் 6 பெண்மக்களும்.
கோட்டையில் சிவாஜியின் எட்டு மனைவியருக்கும் இருந்த அந்தப்புரத்தை ராஜ்கோட்டில் பார்க்கலாம். .
ஒவ்வொரு குழு/குலத்திலிருந்தும் சிவாஜியின் திருமண உறவுகள்!
சிவாஜி இறக்கும்போது வயது 50 தான்.
சிவாஜியை உட்கார்ந்தாலும் தும்மினாலும் கொண்டாடும் மராத்திய மண்ணில்
இன்றுவரை சிவாஜியின் மரணம் ஒரு மர்மம்தான்.
----
அருமையான பதிவுகள். இன்னும் படிக்கவேண்டும்போலிருக்கிறது!
ReplyDeletenice 1 ..
ReplyDeletecan u post more about this ..
எம்.ஜி.ஆரை மறக்கலாமோ.....
ReplyDeleteஆமாம் அந்த மோர்க்காரம்மா எப்படி வெளியில் போனாங்க...
இன்றும் அந்தச் சம்பவம் இனிய நினைவாக.. என் வீட்டில்.
ReplyDeleteமோர்க்கார அம்மா தன் பிள்ளைகள் நினைவால் வழி கண்டு பிடித்தாள் என்றும்
அவளுடன் வந்த ஆடு வழிகாட்டியதாகவும் .. நாட்டுப்புற பாட்டும்
கதையும் .