மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் வலைப்பதிவில்
http://jeyamohan.in/?p=412 பக்கத்தை வாசிக்கச் சொல்லி எனக்கு மின்னஞ்சல்கள்
வந்து குவிகின்றன.
ஏழாம் உலகத்தை நான் வாசித்தவுடன் நான் உணர்ந்ததில் நான்
எழுதியிருப்பது ரொம்பவும் சொற்பம் என்பது என் எண்ணம்.
பாவம், புண்ணியம், நரகம், சொர்க்கம்,
பிச்சைக்காரர்களுக்குத் தர்மம் செய்வது புண்ணியம் என்ற
மேம்போக்கான நம் மத நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதில் ஏழாம் உலகம்
மிகப்பெரிய சாதனையைப் படைத்திருப்பதாக நான் உணர்ந்தேன்.
அதையே என் பார்வையில் பதிவு செய்திருந்தேன்.
உங்களின் கொற்றவை படைப்பு குறித்து தமிழ்நேயம் கோவை ஞானி அவர்கள்
விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பு நூலை அனுப்பியிருந்தார்.
அதன் பின் அந்த நாவலை வாசிக்க காத்திருக்கிறேன்.
அண்ணன் ராஜ்கவுதமன் கூட தன் கட்டுரைகள் "பாட்டும் தொகையும்
தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் ' நூலில்
கண்ணகியைக் காரைக்கால் அம்மையாராக கோடிட்டு காட்டியிருக்கிறார்.
"மத அமைப்புமீதான எதிர்ப்பை என்னைப்போன்ற ஒருவன் இந்துமத எதிர்ப்பாகவே வெளிப்படுத்த முடியும், ஏனெனில் நான் இந்து. உடனே இந்துஞானமரபையே ஒட்டுமொத்தமாக நான் எதிர்க்கவேண்டும் என்றும், இந்திய பாரம்பரியத்தையே தூக்கி வீச வேண்டும் என்றும் ஒரு சாரார் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு இம்மரபைப்பற்றியும் பாரம்பரியம் பற்றியும் எதுவுமே தெரியாது. எனக்குத்தெரியும். ஆகவே இவர்களின் கண்மூடித்தனத்தை என்னால் ஏற்க இயலாது. இவர்களுக்கு தங்களுடன் சேராத எவரையுமே மறுபக்கம் சேர்த்துத்தான் பேசமுடியும். " என்று எழுதியிருக்கிறீர்கள்.
"அவர்களில் இருந்து நான் வித்தியாசமானவள்" என்பதை மட்டுமே நான் இப்போது
உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
சுவாமி விவேகானந்தரின் இந்து மதக் கருத்துகள் சிலவற்றை வாசித்தப்பின்
இதெல்லாம் சொன்னது சுவாமி விவேகானந்தரா அல்லது ஈ வே ரா பெரியாரா
என்ற சந்தேகம் வரும். ஆனால் யாரும் விவேகானந்தரின் கருத்துகளை
முன்னெடுத்துச் செல்வதில்லை. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை குறித்து
இந்து மதத்தினர் பேசுவதில்லை!
என் கருத்துகளுடன் உடன்படுபவர்களுடன் மட்டுமல்ல
மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்களுடனும் என் நட்புறவு தொடர்கிறது.
கருத்து முரண்வெளியில் பயணிப்பதும் கைகுலுக்குவதும் சாத்தியம் தான்
என்பதற்கு என் நட்பு வட்டங்களே நல்லதொரு சாட்சியங்கள்.
என்னைப் பற்றி நண்பர் நாஞ்சில்நாடன் மூலம் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
நாஞ்சில்நாடன் சொல்லியிருந்தால் சரியாகத்தான் சொல்லியிருப்பார்.
நாஞ்சில்நாடனிடன் இதைப் பற்றி நேற்று பேசினேன்.
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை.
(எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்து)
http://jeyamohan.in/?p=412
இணையத்தில் சில கட்டுரைகளைக் காண நேர்ந்தது. அவற்றுக்கு என் எதிர்வினைகளைக் கோரி கடிதங்கள் வந்தன.
திருமதி புதியமாதவி பற்றி நாஞ்சில் நாடன் சொல்லியிருக்கிறார். ஏழாம் உலகம் நாவல் பற்றிய அவரது எதிர்வினையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிலுள்ள அமைப்பு எதிர்ப்பு என்பது அதைவிட தீவிரமாக விஷ்ணுபுரத்தில் உண்டு என்பதே என் எண்ணம். பொதுவாகவே படைப்பூக்கம் என்பது அமைப்புநோக்குக்கு எதிரானதாகவே இருக்கும். தனிப்பட்ட முறையில் நான் எப்போதுமே நிறுவனத்தன்மைக்கு எதிரானவன். மத நிறுவனம் மீது எப்போதுமே கடுமையான எதிர்க்கருத்தே எனக்கு உள்ளது. ஏழாம் உலகமும் அதையே வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அமைப்பு எதிர்ப்பை ஒரு படைப்பாளி வெளிப்படுத்தும்போது அவன் பழமையான அமைப்புகளையே அதிகமும் இலக்காக்குகிறான். உடனே அவனிடம் அவற்றை எதிர்க்கும் புதிய அமைப்புகளுடன் சேர்ந்துகொள்ளும்படி கோருகிறார்கள். அந்த அமைப்பையும் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால் அவனை அவர்கள் தங்கள் எதிரிப்பக்கம் சேர்த்துவிடுகிறார்கள். நல்ல படைப்பாளி எல்லாவகையான அமைப்பு மனிதர்களாலும் தங்கள் எதிரியின் தரப்பைச் சேர்ந்தவன் என்று அடையாளம் காட்டப்படுவான். என் எழுத்துக்கு எப்போதுமே இதுதான் நிகழ்ந்து வருகிறது. அதை மதவாதிகள் எதிர்ப்பார்கள். மத எதிர்ப்பாளர்களும் எதிர்ப்பார்கள்.
இன்னொரு விஷயம் உண்டு. மத அமைப்புமீதான எதிர்ப்பை என்னைப்போன்ற ஒருவன் இந்துமத எதிர்ப்பாகவே வெளிப்படுத்த முடியும், ஏனெனில் நான் இந்து. உடனே இந்துஞானமரபையே ஒட்டுமொத்தமாக நான் எதிர்க்கவேண்டும் என்றும், இந்திய பாரம்பரியத்தையே தூக்கி வீச வேண்டும் என்றும் ஒரு சாரார் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு இம்மரபைப்பற்றியும் பாரம்பரியம் பற்றியும் எதுவுமே தெரியாது. எனக்குத்தெரியும். ஆகவே இவர்களின் கண்மூடித்தனத்தை என்னால் ஏற்க இயலாது. இவர்களுக்கு தங்களுடன் சேராத எவரையுமே மறுபக்கம் சேர்த்துத்தான் பேசமுடியும். ஆகவே இந்து ஞான மரபின் சாரம் பற்றி பேசும் என்னை இந்து மதவாதி என்று முத்திரை குத்துவார்கள்.
நான் பாரம்பரியத்தின் சாரமான பகுதிகள் கற்கப்பட்டு, ஒவ்வொரு கணமும் மறுபரிசீலனைசெய்யப்பட்டு, ஓயாமல் புத்தாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் ஒரு படைப்பாளி. என்னால் முடிந்த வரையில் அதற்கு முயல்பவன். என் ஆக்கங்களே அதற்கு ஆதாரங்கள்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60804171&format=html
*
ஈ.வே.ரா அவர்கள் பற்றிய என் கருத்தை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்துமதம் மீதான ஈ.வே.ரா அவர்களின் கடும்தாக்குதல்களை அதே வேகத்தில் நானும் செய்யக்கூடியவனாகவே இருக்கிறேன். வேதாந்திகளாக இருந்த என் குருநாதர்களும் அந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களே. நாராயணகுருவின் இயக்கத்துடன் ஈ.வே.ரா அவர்களுக்கு நீண்ட தொடர்பும் ஈடுபாடும் இருந்தது. நாராயணகுருகுல இயக்கம் இக்கணம் வரை ஈ.வே.ரா அவர்களை அதன் மூல ஆசிரியர்களில் ஒருவராக வைத்திருக்கிறது.
எனக்கு ஈ.வே.ரா அவர்கள் மீதுள்ள முக்கியமான மாற்றுக்கருத்து இரண்டுதான். அவரது எதிர்மறை நோக்கு அழிவுத்தன்மை கொண்டது. அடிப்படையில் தீங்கு விளைவிப்பது. இரண்டு அவர் ஒரு மக்கள்க்கூட்டம் மீது முன்வைத்த வெறுப்பு மிக மிக அபாயகரமானது. எந்நேரமும் வன்முறையாக மாறக்கூடியது. வரலாற்றின் தவறுகளை ஒருபோதும் ஒருவகை வரலாற்றுச் சதிகளாகக் காணலாகாது. அவை வரலாற்றின் போக்கில் பலவேறு காரணிகளால் உருவாகி வருபவை. உலகின் மாபெரும் வன்முறைகள் அனைத்துமே வரலாற்றுச் சதி என்ற பிரச்சாரத்தில் இருந்து தொடங்குபவையே.
ஒரு சீர்திருத்தவாதி எதிர்மறை அணுகுமுறையை எடுத்தால் அந்த எதிர்ப்பை மட்டுமே அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வெறுப்புவிவசாயிகளே அவரைத் தொடர்ந்து உருவாவார்கள். நட்டு வளர்த்து காடாக ஆக்குவார்கள். ஆக்கபூர்வமாக ஏதும் நிகழாது. ஈவேரா அவர்கள் இந்திய மரபை முழுக்க நிராகரித்தவர் அல்ல. பௌத்தம் முதலிய அவைதிக மரபுகள் சார்ந்து அவருக்கு ஆர்வம் இருந்தது- கல்வி இல்லாவிட்டாலும். அத்தளத்தில்கூட இங்கே பொருட்படுத்தும்படி ஒரு பத்து பக்கம் எழுதப்பட்டதில்லை. அவரது தாக்குதல்களை வசைகளாக மாற்றி முன்வைப்பவர்களே கண்ணுக்குத்தெரிகிறார்கள்.
சமீபத்தில் நிகழ்ந்த விவாதங்களை ஒட்டி ஈவேரா அவர்களைப்பற்றி தொடர்ந்து நண்பர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘பகைவர்களாக’ வந்த பல பெரியாரியர்கள் நண்பர்களாக ஆனதுதான் இப்போதைய ஆச்சரியம். ‘பாமரன்’ வகையறாக்களை வைத்து நான் ஈவேராவை மதிப்பிடுகிறேன், அவரது மூலநூல்களை போதிய அளவுக்குப் பயிலாமல் - என்பது முக்கியமான குற்றச்சாட்டு. ஈவேரா குறித்து முழுமையான விரிவான வாசிப்பு ஒன்றை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20804241&format=html
No comments:
Post a Comment