ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் குறித்து திண்ணை மின்னிதழில் வெளிவந்த
"ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்" என்ற
விமர்சனக்கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய விமர்சகர் நண்பர் கே.ஆர்.மணிக்கு
என் நன்றி
"முரண்வெளியில் புன்னகைப்பதும் கைகுலுக்குவதும் நமக்குச் சாத்தியம் தான்"
Last Kilo byte 12 : (தொலைபேசி} மெளனம் பேசியது
கே. ஆர். மணி
ஏழாம் உலகத்தை வெங்காய வாசத்தோடு தரிசத்த புண்ணிய ஆத்மா புதியமாதவிக்கு !
ஏழாம் உலகம் - அந்த புத்தகம் என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதிவுபோல எழுதவேண்டும் என்கிற நினைப்போடு சோம்பேறித்தனமும் சூழ்ந்துகொள்ள தப்பித்துபோனது என் பதிவு. இவ்வளவு உன்னிப்பாய் கதை எழுத வருவரின் கதை விமர்சக்கப்படும்போது நிறைய ஆழம் வேண்டுமென எண்ணிய நிறைய விமர்சனங்களும் பாதியிலே தடம் புரண்ட பெட்டிபோல தவறிக்கிடக்கின்றன. நேர் செய்யவேண்டும்.
ஏழாம் உலகத்திற்கு வருவோம். மும்பை புனா ரயில் பயணநேரத்திற்குள் அந்த ஏழாம் உலகத்தை கடந்தபோது, கனமானது அந்த ஞாயிறு. படித்துக்கொண்டிருக்கும்போதே என் ரயில் அறையின் பக்கத்து குழந்தை பார்த்து பயந்தே போனேன். நல்லவேளை, அதன் பெயர் ரஜினிகாந்தல்ல. அது சிரித்தது. சிரித்துக்கொண்டே மொபைல் போட்டே எடுத்தேன். பயத்தில் என்றுமில்லாமல் அன்று என் ஐந்துவயதுப்பையனை கட்டிக்கொண்டேன் இரவில். அவனுக்கு கை,கால் எல்லாம் ஓழுங்காகத்தானிருந்தது.
சில எழுத்துக்கள் மேலுக்கு மருந்து. சிலவை கையில் ஊசி. சிலது நரம்பு தேடி, விடைக்க வைத்து, கைமூட்டி அழுத்திபோடும் ஊசி. ஏழாம் உலகம் இந்தவகை. இது அப்பட்டமான ஆலயதரிசனம். ஆலய தொழிற்சாலை என்று சொன்னாலும் சொல்லலாம். கோயிலுக்கு
போனோமா, கும்பிட்டோமா, சாமி, தேவையா என்று வாதிட்டோமா, முன்னோர் பெருமை பேசி முதுகு சொறிந்தோமா என்றில்லாமல் இப்படியில்லாம் உண்மைத்தேடல் தேவைதானா என்ன? தேவைதான், ஆன்ம சுத்தியோடு சரீர சுத்திக்கு அந்தக்குளம் தேவைப்படுகிறது. அந்த பொதுக் குளத்தில் மீன்கள் வந்துபோனாலும் அதீத மக்களாலும், நிறைய பராம்பரியத்தாலும் அழுக்கு,
அழுக்கு சேர்ந்து, மேலே எத்தனை பூப்போட்டாலும் மூடத்தனத்தின் முடை நாற்றம்.
முதலாளி பண்டாரம், மூலதனம் முத்தம்மை, அப்புறம் உருவாகிற, உருவாக்குகிற பிச்சைக்கார உருப்படிகள், பக்த வாடிக்கையாளர்கள், அவர்களின் பயங்களையும், புண்ணியம் வேணுமென்கிற ஆசையையும் குறிவைத்து வீசப்படுகிற தர்ம வார்த்தைகள், அவர் அவர்களுக்கான பார்வைகள், அவர்களுக்கென கண்ணாடிகள், கண்ணீர்கள், வரம்புகள், விழுகிற சில்லறைகள் என கொட்டிக்கிடக்கிறது
யதார்த்தம். கொஞ்சம் பயங்கர யதார்த்தம். கன்னியாகுமரிபோல எழுந்துவிழும் உள்ளுணர்ச்சியில்லை, பின் தொடரும் குரல்கள் போல தத்துவசட்டம் அலசும் விவாதமில்லை, யாரும் திரும்பிபடுத்து புராணங்களும், கோபுரங்களும் தோன்றுவதுமில்லை, காடில்லை, காவிய நாயகிகளில்லை. பரவாயில்லை. சாதரண மாந்தர்கள். கொஞ்சம் உண்மையாயிருக்குமோ - இருக்கக்கூடாதென்கிறது பயமான மனம்.
இருக்கலாம். இருந்தால் என்ன செய்ய. எவ்வளவோ கழிவுகள் தூரெடுக்கப்படவேண்டியவை, இதில் அதுவுமொன்று. அவ்வளவுதான்.
குருக்கள் ஆசப்படுற அளவுக்கு முத்தம்மா இருப்பாளென்ன, ச்சீ.. எழலாம், உங்களுக்குள்ளும் ஆசை எழலாம். பாவம் குருக்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், நம் நாட்டில் முனிகள், ரிஸிகள் எல்லாமே நியோக கலவையில்தானே வந்தார்கள். முத்தம்மாவுக்கு வசிஸ்டனோ, துர்வாசனோ, துரோணணோ, வால்மீகியோ .. எதுவோ ஒரு லக்கடித்திருக்கலாம். பண்டாரத்திற்கு அந்த வருச புரடக்சன் போய்விடும். மூலதனத்தை ஒரு வருடம் எந்த முதலாளிதான் முடக்கிபோடுவான்.
கதையெல்லாம் சரி, அதனால் அறியப்படும் நீதியாதெனில், உணர்வுயாதெனில் என்கிறபோதுதான் என்னால் புதியமாதவியோடு உடன்பாடமுடியவில்லை. அதைப்படித்தவுடன் என்னுள் என்ன எழுந்தது. எனக்கான பயம், மானுட கூச்சல், எப்படி சரியாக்கலாம் என்கிற பதைபதைப்பு. மனவிடுதலை நோக்கி, அகம்பிரம்மாஸ்மியை நோக்கி இந்தக்கோயில்கள் எப்போது நகரப்போகின்றன? கோவில்கள் எல்லாம் நமக்குள்ளே இறங்குவதற்கான படிக்கட்டுகளே என்று வேதங்களெல்லாம் கத்தி, கதறிக் கூறியும் மானுட
உள்விடுதலைக்குத்தான் எத்தனை தடங்கல்கள். அப்படியும் ஏன் என்னால் மதநிறுவனத்தின் மீது காறித்துப்ப முடியவில்லை.
எந்த நம்பிக்கை இதெல்லாம் திருந்தி என் மதம் புனிதப்படும் என்கிற நம்பிக்கையை எனக்கு கொடுக்கிறது. வெறும் கானல் நம்பிக்கையோடும், புரட்டு வேதாந்தங்களோடும் காலம் தள்ளும் என் மனம் இறந்த நூற்றாண்டின் எச்சமா? மெளனம் என்னுள்ளும் கத்தியை இறக்கியது. Am i Over confident fool ?
--------------------------------------------------------------------------------
" தந்தை பெரியாரை விட அதிகமாக மத நிறுவனத்தின் மீதான எதிர்ப்புணர்வு கூர்மையடைந்தது. ...... அவை அனைத்திலும் ஏற்படாத ஒரு ஆழமான பாதிப்பை ஏழாம் உலகத்தைத் தரிசிக்கும் போது என்னுள் ஏற்படுத்தியவர் ஜெயமோகன " புதியமாதவி
மதநிறுவனம் எதிர்க்கப்படுவதும் அதன் அதிகாரங்கள் கைமாறிக்கொண்டேயிருப்பதும் எந்த சமூகத்திலும் புதிதொன்றுமில்லை. எப்போதுமே எதுவுமே மதமோ, அரசியலோ நிறுவனப்படுத்தப்படும்போது அந்தக்குளத்தில் கால ஓட்டத்தில் கசடுபடிந்து விடுகிறதென்பதை நாம் அறிவோம். ஆனாலும் ஓரளவாவது நிறுவனப்படுத்தபடாவிடின் அதனால் எந்த செயலையும் மேற்கொண்டு செய்யமுடியாது போய்விடும் என்பதும் நிதர்சனம். ஆகவே இரண்டு தன்மைகளிலும் பலம், பலவீனமும் இருப்பதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கான எதிர்ப்பை தொடர்ந்து மானுட சமுதாயம் செய்து வந்திருக்கிறதென்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மதம் மட்டுமின்றி, எல்லா அரசியல் கொள்கைகளுக்கும் பொருந்தும். மார்க்சின் கொள்கைகள் நிறுவனப்படுத்தப்பட்டதால் எழுந்த 'ஆகா' புரட்சிகளின் விளைவுகள் நமக்கெல்லாம் தெரியும். ஆனாலும் அவை தவிர்க்கமுடியாத சோதனைகளாகவே அதன் பாடங்கள் அதிக விலைகொடுத்து படித்தபாடங்களாகவே சமூகம் மெல்ல ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் அதன் சில நல்ல பக்கங்களை மெல்ல மற்ற கொள்கைகள் தங்களுக்குள் சுவீகரித்துக்கொண்டுள்ளன.
மென்பொருள் துறையிலும் என்னால் இதற்கு சில உதாரணங்கள் கொடுக்கமுடியும். ஓப்பன் ஸோர்ஸ் ( Open Source ) என்கிற இயக்கம் [ காற்றும், நீரும் இலவசமாய் கிடைக்கும்போது ஏன் மென்பொருளுக்கு பணம் கட்டவேண்டும்?. அது மானுட உரிமையாகவே அமையவேண்டும் ] மெந்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகி (கிட்டதட்ட மதநிறுவனம்போல), அடாவடி தாதாவாகி அலும்பு செய்துகொண்டிருந்த மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலி கொடுத்து, பின் ஓப்பன் சோர்ஸின் சில நல்ல கொள்கைகளை பிடித்தோ, பிடிக்காமலோ கடைபிடிக்க வேண்டியதாயிற்று. ஓப்பன் ஸோர்சிலும் இப்போது சில நிறுவனங்கள் மெல்ல மெல்ல நிறுவனமாகிக்கொண்டு வருகின்றன. தாதா மைக்ரோசாப்டும் சில இலவசங்களையும், தனது இறுக்கமான பீடங்களையும் தளர்த்திக்கொண்டது இரு கொள்கைகளும் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான அறிகுறி. மத, அரசியல், தொழில் நிறுவனங்களின் மீதான புற எதிர்ப்போ, அக எதிர்ப்போ அவ்வப்போதைய குறைகளை களைவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருக்கமுடியும்.
ஆகவே எந்தத்துறையிலும் நிறுவனமாக்கப்படலும், அதை எதிர்த்து நீர்க்கச்செய்தலும் மறுபடியும் அது எதற்காக எதிர்த்ததோ அதன் முனையிலே அது கெட்டிப்பட்டு நிறுவனமாக்கப்படுதலும் கால இயல்பினதுதானே.
ஆனால் கேள்வி, மதநிறுவனத்தின் மீதான எதிர்ப்பு எதற்காக, அதன் நேரம், காலம், நோக்கம், வழிமுறையென்ன என்பதில்தான் நம் சமூக சிந்தனையாளர்களெல்லாமே வேறுபடுகிறார்கள். மதநிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களெல்லாம் இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்யவந்த மாமணிகளில் ஒருவராக, இருப்பார்களா இருப்பாரா என்பது என்னளவில் சந்தேகமே.
மதத்திலிருந்தே மாற்றங்கள் செய்து, மதத்துவேசத்தை பரப்பாது ஒருங்கிணைத்து உழைத்த பெரியார்கள்தான் நாளடைவில் இந்துமதத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துசென்றார்கள். It should be integrating force, not differentiating force.. ஜெயமோகன் நாரயணகுருவை ஏற்றுக்கொள்வதும் பெரியாருக்கான எதிர்ப்பும் அந்த தளத்திலிருந்து வருவதாகத்தான் எனக்குபடுகிறது. என் கணிப்பு/ வாசிப்பு தவறாகவுமிருக்கலாம்.
இந்துமதம் மற்ற மதங்களைபோல வளராததற்கு முக்கிய காரணம் அதன் குறுகிய market sizeம், அதற்குள்ளான பிரிவுகளும், சண்டைகளுமே என்பது இன்றைய உலகமயமாக்கப்பட்ட, திறந்த, மதச்சந்தையின் கண்டுபிடிப்பு. விவேகானந்தரைப்போல இந்து மதத்தின் உயர்சாதி மதநிறுவனத்தை திட்டியவர்கள் வேறெவெருமில்லை. எல்லாம் எந்த நோக்கத்திற்காக, குளம் சுத்தப்படுத்தப்படுவதற்காக. மண்போட்டு மூடப்படுவதற்காகயில்லை. இல்லை பெரியாரின் நோக்கமும் இந்துமதத்தை சீர்படுத்துவதற்காகவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையே என நீங்கள் வாதிடலாம். ஆனால் அதன் நீண்டகாலப்பயன் Long term usability, நோக்கத்தின் வழிமுறை, அதனால் விளைந்த செயற்பலன், அதன் அடுத்த தளத்திற்கு எடுத்துசெல்வதற்கான நேர்மறை அணுகுமுறை பற்றி கேள்விகள் எழுப்பபடலாம். [அறுவை சிகிச்சைக்கு கடப்பாரை எதற்கு ? கேட்டது ஜெயமோகன் என்று ஞாபகம் ]
புரோகிதத்தையும், வைதிகத்தையும் திட்டுகிறார் என்பதற்காக நீங்கள். 9/11 புகழ் பின்லேடனை பாராட்டி கவிதை எழுதிவிடக்கூடாது.
"தந்தை பெரியாரின் தடியாய் முளைத்த மாமணியே, உன் தாடிக்குள் இருப்பது முடியல்ல. ஐயாவின் தடி. உன் விமானங்கள் என் சகோதரனை உள்ளே விடாத கோயில் விமானங்களை தகர்க்கட்டும் "
என்று மடக்கிப்போட்டு அவரை பாராட்டிவிடுவீர்களோ என்கிற பயம்தான் என்னை இந்தகடிதம் எழுத தூண்டிற்று. ஆகவே மதநிறுவன எதிர்ப்பு மட்டுமே எல்லா தலைவர்களையும் இணைக்கும் புள்ளியாகிவிடாது.
ஒரு புதிய கோணத்தில் யோசிப்போம்.
இந்த நாவல் மதநிறுவனத்திற்கு எதிராக எழுதப்பட்டதாய் எனக்கு தெரியவில்லை. இதிலெங்கே மதநிறுவனம் வந்தது. பக்தகோடிகளின் பயமான மனம் வணிகரீதியான பார்வையால் சுரண்டப்படுகிறது. எல்லாம் வயிற்றுப்பிழைப்புக்கும், ஒரு வேளை சோற்றுக்கும். அன்னதானம் கிடைக்கிற கர்நாடக கோயில்களில் கண்டிப்பாய் பண்டாரம் போன்றவர்கள் தொழில்செய்வது கடினமான ஓன்று. ஓழிக்கப்படவேண்டியவை கோயில் வாசல்காரர்களின் பசி மற்றும் பக்தர்களின் ஆன்மீகம் பற்றிய கண்ணோட்டம் என்கிறது என் இந்திய மனம்.
ஒரே புத்தகத்தை படிக்கிற இருவருக்கு திருத்தப்படவேண்டியதுதான் என்று தோன்றுவதும், உடைக்கப்பட வேண்டியதுதான் என்று தோன்றுவதற்கும் நமக்கு அணிவிக்கப்பட்ட, பழக்கப்பட்ட கண்ணாடிகளின் நிறத்தைதவிர வேறென்ன வித்தியாசமிருக்கமுடியும்.
உண்மைகளை விட, நேர்மறையாய் செய்ய வேண்டியவைகளைவிட எது நம்மிலிருந்து கொப்பளித்து விழுகிறது ? விதைக்கப்பட்ட வெறுப்பு என்று வெறுமனே நான் எளிமைப்படுத்தினேனென்றால் நான் எவ்வளவுபெரிய மடையனாவேன். "டேய், அப்பேன், இந்த கம்பூயிட்டரெல்லாம் மயிரு வெறும் ஒண்ணும், ஜீரோவும்தானமேடே அப்படியா " என்று கேட்கிற பெரியப்பாபோல நானாகிவிடமாட்டேனா ?
மதத்திற்கும், ஆன்மிகத்திற்குமான தொடர்பு மெல்லியது, முக்கியமானதும் கூட. ஆன்மிகம் அரசாங்கம் போன்றது அது Macro Environment மதம் அதை செயல்படுத்தும் Micro Environment. ஆன்மிகத்தின் குறிக்கோள்களை எல்லா தரப்பிற்கும் எடுத்துச்செல்லும் முகவராக மட்டுமே மதபீடங்கள் இருந்துவரவேண்டும். பெரும்பாலும் அப்படித்தானிருந்து வந்திருக்கின்றன. எப்போதெல்லாம் குளத்தின் கழிவு நாற்றம் அதிகரித்ததோ அப்போதெல்லாம் தூர்நாற்றங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன, சில தடியோடு, சில ஆர்பாட்டமாய், சில அமைதியாய். இதே கருத்தில் ஜெயமோகனின் Blogல் http://www.jeyamohan.in அதைப்பற்றிய நீண்ட கட்டுரை பிரமாதமான ஒன்று உண்டு.
http://jeyamohan.in/?p=271
http://jeyamohan.in/?p=253
சில குறிப்புகள் Blogலிருந்து "ஈவேரா இங்குள்ள எல்லா தீமைகளும் ஒருசில சமூகங்களின் சதிவேலை மட்டுமே என்று எளிதாகச் சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் அவரது தனிப்பட்ட வெறுப்பு. ஆகவே வெறுப்புதான் வளர்ந்தது. நோயின் காரணம் தப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டமையால் நோய் நித்தம் வளர்ந்தது. "
"இன்னொன்று ஈவேராவின் இயக்கத்தில் உள்ள எதிர்மறைத்தன்மை. ஒரு சமூக இயக்கம் அப்படி கசப்பையும் வெறுப்பையும் கொட்டியபடி இயங்கினால் தீய விளைவுகளே உருவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஒரு மாபெரும் கல்வி இயக்கமாக இருக்கும். நாராயணகுருவின் இயக்கம் அத்தகையது. ஆகவே தான் அங்கே அவ்வியக்கம் சார்ந்து மாப்ரும் அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் உருவானார்கள்."
"மாறாக இன்று 'பெரியாரியர்கள்' என்று சொல்லி பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். வெறும் வெறுப்பை மட்டுமே எங்கும் எவ்விடத்திலும் கொட்டுகிறார்கள். ..... ஆக்கபூர்வமாக எதுவுமே இல்லை."
கண்ணாடியின் நிறத்தை கொஞ்சம் மங்கமுயற்சிக்கவேண்டும். கறுப்புக்காமாலை அதிகமாகமல், மஞ்சள்துண்டை அணிந்துகொண்டவர்கள் போல "எழாம் உலகத்தை வாசித்துவிட்டு அந்தப் படைப்பின் ஊடாக தந்தை பெரியாரின் ஆவி கைத்தடியுடன் உலாவுவதாக " புதியமாதவி எதற்கு ஆவிகளை பற்றியெல்லாம் நம்பிக்கையில்லாதவரை வீணாக தொந்தரவு செய்யவேண்டும். ரவிசங்கரும், வேதாத்திரி மகரிசியும், அமிர்தானந்தமயி அம்மாவும், ராமக்ருஸ்ண மடமும் தூர் எடுக்கும் வேலையை எடுத்துக்கொள்வார்கள். அதற்காக கோயிலுக்கு போகாமலும் இருந்துவிடாதீர்கள். காசியும், கங்கையும், திருச்செந்தூரும், வேளாங்கண்ணியும் நமக்கு தேவை. வேதாத்திரி சொல்வது நம்மால் நமது மனதையே அறிவுத்திருக்கோயிலாக மாற்றும் திணவும், தெளிவும் வரும்வரைக்கும்.
புதியபார்வைகள், மறுவாசிப்பும் கொண்ட Change Agentஆய் நீங்கள் இருக்கவேண்டும் என்கிற பேராசை அதற்கு காரணமாயிருக்கலாம் என்பதை தவிர வேறெதுவுமில்லை பராபரமே. அதீத வைதிகவாதிகள் போல உங்களுக்கு பிடித்தமான ஈசமும் உங்களோடு தேவைக்கதிகமாக, உதிர்க்க முடியாத படி, உதிரத்தில் கலந்துவிட்டதோ, அது ஒரு நுணுக்கமான படைப்பாளிக்கு சிலுவையாகிவிடுமோ என்கிற பயம்தான். இலக்கியப்பறவைகள் எந்த ஈச சட்டைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதில் நம்மிருவருக்குமே சந்தேகமிருக்காது என்கிற ஆசுவாசத்தில் என் பயம் - அது தேவையற்றதாக கூடயிருக்கலாம். அதற்கப்பறம் நம்மிருவருக்கும் கனவுத்தொல்லைகளிருக்காது. ஏழாம் உலகம் போன்ற புத்தகத்தை படித்து வம்படியாய் திண்ணையில் எழுதிக்கொண்டிருக்கவும் மாட்டோம்.
இருக்கலாம். எனக்குள்ளும் அழுக்கு குளம். என்னையும் சில கண்ணாடிகள் மறைக்கலாம். ஆனாலும் எழுத்துக்கள் தவிர என்னை எது சுத்தம் செய்யும். ஆதலின் இலக்கியவாதிகள் காவிச்சட்டையோ, கருப்புச்சட்டையோ போடாமல் இருக்கும்போது அதன் மையப்புள்ளிகள் பலமாகுமே என்கிற ஆதங்கம்தான். நானறியமேலே எனக்குமிருக்கும் கண்ணாடி. நீங்கள் பார்த்தீர்களெனில் தயவுசெய்து என் கண்களில் படாமல் உடைக்கமுயற்சியுங்கள்.
--------------------------------------------------------------------------------
netwealthcreator@gmail.com
திண்ணையில் கே. ஆர். மணி
Copyright:thinnai.com
No comments:
Post a Comment