Thursday, December 6, 2007
தலித் மாநாடு
நன்றி: கீற்று மின்னிதழ்
(http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_5.php)
தலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்
புதியமாதவி, மும்பை
ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.
தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்.. இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ்ப் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெறும் அரசியல் சட்டங்களினாலும் சட்டமனற மசோதாக்களாலும் நிறைவேற்றப்பட்டு ஏட்டில் இருக்க வேண்டியவை மட்டுமல்ல. சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் விடுதலையே விடுதலைக்கான பாதையாக இருக்க முடியும் என்பதை சற்று உரத்தக் குரலில் பதிவு செய்த மாநாடு இது.
இந்த மாநாட்டிற்கு போகும் முன்பே சூலை 2007, தலித் முரசு இதழில் சி. ஜெய்சங்கர் அவர்களின் நேர்க்காணல் வாசித்திருந்தேன். அதில் ஈழத்தில் நிலவும் சாதியம் பற்றிய நிலவரத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. (மூன்றாவது கண், தேர்ட் அய் என்று தமிழ், ஆங்கில இதழ்கள் நடத்துபவர். தோழமை ஓவியர் வாசுகியின் கணவர்)
போர்ச்சுழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்" என்று சொல்லியிருந்தார்.
இந்தளவு புரிதல்களுடன் தலித் மாநாட்டில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் அருந்ததி அவர்கள் 'புòதூரில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான்' என்று யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னதை மேற்கோளாக சொன்னார். இந்த மாதிரியான எதிர்மறுப்பு எதில் கொண்டு போய் முடியும்? இரண்டுமே வரலாற்றின் கறைகள். கறைகளை கறைகளால் மட்டுமே கழுவ முடியும் என்பது எந்தக் கறைகளையும் நீக்குவதற்கான தீர்வாகிவிட முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.
இசுலாமியர்களிடம் சாதியம் இருப்பதை எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் தன் எழுத்துகளில் பதிவு செய்திருப்பதையும் அதற்காக தக்கலை ஜமாத் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருப்பதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் ஜமாத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருப்பதைச் சொல்ல வரும் நோக்கத்தில் அப்போது நினைவில் வந்த "ரசூலில் தலையை வெட்டிவிடலாம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளை என்ன செய்யப்போகிறீர்கள்?" என்ற கவிஞர் இன்குலாப்பின் கூற்றை எடுத்துரைத்தேன்.
இலண்டனிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் பசீர் அவர்கள் கலந்துரையாடலில் சொன்ன மறுமொழியில் 'இன்குலாப் புலி ஆதரவாளர்..' என்றார். பசீரின் இந்த மாதிரியான மறுமொழி என்னைக் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. இன்குலாப் புலி ஆதரவாளாரா.. இல்லையா ? என்பதல்ல இங்கே கேள்வி. அவர் சொன்ன கருத்து மட்டுமே. இன்குலாப் புலி ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவர் சொல்வதை நம்பகத்தன்மையுடன் ஏற்க மறுப்பது என்ன மாதிரியான புரிதல்?
ராயகரன் குறுக்கிட்டு இசுலாமியர்களிடமும் சாதியம் இருப்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் என்னுடைய கூற்றை பசீர் ஓர் இசுலாமியராக மட்டுமே தன் வட்டத்துக்குள் நின்று கொண்டு மட்டுமே பார்ப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் முஸ்லீம் சமூகத்தில் சாதிப் பிரிவினைகள் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாவிதர், மரைக்காயர், வெள்ளாட்டிகள் என்ற பிரிவுகளில் நாவிதர்கள் மற்றவர்களால் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். மரைக்காயர் போன்ற உயர் பிரிவினர் திருமண உறவுகளை நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை முஸ்லீம்களுக்கும் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கும் இடையே திருமண உறவுகள் கிடையாது என்பதை நானறிவேன். அதுமட்டுமல்ல, புதிதாக இசுலாத்திற்கு மதமாறி வரும் தலித்துகளை இவர்கள் சரிசமமாக நடத்துகிறார்களா என்றால் சில ஊர்களில் புதிதாக மதம் மாறியவர்கள் எதையாவது முறையிடும்போது 'அட..மொறையப் பத்தி எல்லாம் பறையங்க கிட்டேப் பேசணுமோ?" என்று பெரியதனக்காரர்கள் சொல்லியும் இருக்கிறார்கள்.
இத்துடன் இன்னொரு செய்தியையும் சேர்த்தே சொல்லியாக வேண்டும். 'மனுசங்க' இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த இராசேந்திரன் என்ற இளந்துறவி இசுலாத்தைத் தழுவிய பின் கும்பகோணம் அருகிலுள்ள தன் கிராமத்தில் இசுலாமியத் தெருவிலேயே குடியிருக்கிறார். அங்குள்ள ஜமாத்திற்கு அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சாதியை வென்ற மதமாக இசுலாம் மட்டுமே உள்ளது.
கக்கூசு இல்லாத கலாச்சாரம் உள்ளவன் தமிழன்! இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது? என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் ஒருவர். (பெயர்?) அந்த நேரத்தில் அவர் கேள்விக்கு ஓங்கி கரவொலி எழுப்பியது நானும் தான். நேரம் போகப் போக இந்தக் கேள்வி பல்வேறு தளங்களுக்கு இட்டுச் சென்றது.
கக்கூசு கட்டிய பிறகுதானே அதைச் சுத்தம் செய்ய ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டான்? மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது? தமிழன் இந்த அடிமைத்தனத்தை மனிதச் சாதியில் ஏற்படுத்தவில்லை, தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில் இந்த இழிநிலை இருந்ததில்லை என்பதற்காக உண்மையில் பெருமைப்பட வேண்டும்!
தமிழர்கள் வாழ்விடங்கள் (இன்றைய அகதிகளான புலம்பெயர்வு அல்ல) பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. பேச்சு வழக்கில் இதை "வெளியில் போய்ட்டு வருவதாகவே இன்றும் சொல்வதைக் கேட்கலாம். வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.
தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம். ஐரோப்பா போன்ற குளிர்ப்பிரதேசங்களிலும், மத்திய ஆசியாவிலும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாகத் தான் அந்தச் சமூகங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
தலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி 'அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்' என்று கொஞ்சம் சூடாக கலந்துரையாடலில் சொன்னதும் 'நானும் தலித் தான்' என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது.
அசுரா சிந்துவெளி நாகரிகத்தைச் சுற்றி தன் கட்டுரையை நகர்த்திச் சென்றார். நான்கு வேதங்களும் பல நூறாண்டுகள் வாய்மொழியாக வந்து அதன் பிந்தான் எழுத்துரு பெற்றன சிந்து வெளி நாகரிகத்தை ஆய்ந்து அவர்கள் திராவிடர்கள் என்றும் அவர்களின் மொழி திராவிட மொழியான தமிழ் மொழியின் ஆதிவடிவம் என்பதையும் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளார்கள். குறிப்பாக டாக்டர் நா.மகாலிங்கம், முனைவர் மதிவாணன் போன்ற அகழ்வாய்வு அறிஞர்களின் கருத்துகளைச் சொல்லலாம்.
சிந்துவெளி நாகரிகத்தை ஒத்த தடயங்களும் முத்திரைகளும் எழுத்துருவங்களும் இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள் அல்லர், அவர்களில் பலர் காலம் காலமாய் இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை மிகவும் வலுவாக முன்வைக்கும் அகழ்வாய்வு கண்டுபிடிப்பு இது.
சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது குறித்து பல்வேறு வரலாற்று பார்வைகள் உண்டு. அசுராவின் கட்டுரை இவைகளுக்குள் புகவில்லை எனினும் ஓர் ஆய்வு மனப்பான்மையுடன் வித்தியாசமான பார்வையில் அமைந்திருந்தது.
சாதிகள் இடையில் வந்தவை தான், சாதிகளில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றால் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக் காப்பாற்றிக்கொண்டு வரும் சமுதாயத்தை எப்படி மாற்றப் போகிறோம்? என்ற கேள்விக்கு காலம் எழுதும் எல்லா பதில்களும் குறைபாடுகள் கொண்டதாகவே உள்ளன. அதுவும் இந்திய-இலங்கை மண்ணில் சாதியம், சாதி அடுக்குமானங்கள், சாதிகளுக்குள் நிலவும் உட்சாதிகள், எல்லா சாதிகளுக்கும் தன்தன் வக்கிரத்தைக் காட்ட அவனை விட கீழ்ப்படிநிலையில் ஒருவன் என்ற படிநிலை அமைப்பு- ஏன் தலித்துகளுக்குள்ளும் வாழும் தலித்துகள்.. நினைத்துப் பார்த்தால் இப்படியான ஒரு படிநிலை சமுதாய அமைப்பு முறை உலகில் வேறு எங்குமிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்வி விசவரூபமெடுத்தது.
சிவகுருநாதன் சில சட்ட ஆலோசனைகளை முன்வைத்தார். அவர் வைத்த சட்ட ஆலோசனைகள் 99.9% இந்திய சட்டத்தில் வெறும் எழுத்துகளில் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மாநாட்டில் சொன்னேன். தலித் அரசியல் அதிகாரத்திற்கு பாபாசாகிப் அம்பேத்கர் வைத்த "இரட்டை வாக்குரிமை" என்ற தீர்வை சிவகுருநாதன் பெயருக்கு கூட குறிப்பிடவில்லை. அதுகுறித்து யாரும் கதைக்கவும் இல்லை.
இந்தியாவில் அயோத்திதாசர் பண்டிதரும், தந்தை பெரியாரும், பாபாசாகிப் அம்பேத்கரும் இந்திய விடுதலைக்கான அன்றைய தேசிய நீரோடையில் கலந்தவர்களில்லை. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தைப் பற்றி "இந்தியாவில் தீண்டாமைப் பரப்பும் இவர்கள் ஜோன்ஸ்பர்க்கில் நியாயம் தீர்க்கப் போகிறார்களா?" என்றும் "ஆறுகோடி மக்களையும் நாசம் செய்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மேலுக்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு பெரிய வேஷக் காங்கிரஸாகவே நடத்தி வருகிறார்கள்" என்று எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.
இந்திய விடுதலையை துக்க தினமாகவே அறிவித்தவர் தந்தை பெரியார்.
1947ல் இந்திய பெற்ற சுதந்திரத்தை "அதிகார மாற்றம்" என்றும் "பெறப்பட்ட ஒப்பீட்டளவு சுதந்திரம் ஆதிக்க சாதியினருக்கானதே" என்றும் சொன்னவர் பாபாசாகிப் அம்பேத்கர்.
இவர்களை இந்திய தேசியவாதிகள் "தேசத்துரோகிகள்" என்றே வசை பாடினார்கள். எனினும் அயோத்திதாசப் பண்டிதர் தீண்டப்படாத மக்களை தென்னாட்டின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் என்று நிறுவினார்- சாதி பேதமற்ற திராவிடர்கள் (non-caste dravidians) என்றழைத்தார். 'தமிழன்" என்று தன் இதழுக்கு பெயர் வைத்து தன்னைத் தமிழன் என்ற அடையாளத்துடனேயே முன்னிறுத்தினார்.
திராவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை பெரியார் தன் இறுதி நாட்களில் "தமிழ் தேசியம்" பேசினார். இந்திய விடுதலையை எல்லா தளங்களிலும் விமர்சித்த பாபாசாகிப் அம்பேத்கர்தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதினார்.
தலித் மாநாட்டில் கலகக்குரலை முன்வைத்தவர்கள் இந்த வரலாறுகளையும் புரட்டிப் பார்க்க வேண்டும். தரவுகள், களப்பணி, குழு மனப்பான்மையை விட்டொழித்தல், தலித் அரசியலை வென்றெடுக்க தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளல்... என்று ஒரு நீண்ட பயணத்திற்கு இந்த மாநாடு குளிர்ப்பிரதேசத்தில் ஓர் அக்னிக்குஞ்சாய் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது.
அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
-
No comments:
Post a Comment