Thursday, December 6, 2007
நேர்காணல்
நேர்காணல்
வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி
(http://www.vaarppu.com/interview.php?ivw_id=3)
செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்)
கடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு என்பவற்றில் கலந்து கொண்டீர்கள். இச் சந்திப்புக்கள் உங்களுக்கு புது அனுபவங்களைத் தந்திருக்கிறதா?
நிச்சயமாக. இதுவரை நான் எட்டிப் பார்க்காத பல வாசல்கள் திறந்தன. அதனுள் பயணிக்கும்போது உண்மைகளை ஏற்றுக்கொள்வதும் அதை உணர்த்துவதும் எவ்வளவு கடினமானது என்பதை முதல் முறையாக அனுபவித்தேன். எங்கள் ஊடகங்களும் தலைவர்களும் எனக்குள் கம்பீரமாக கட்டி எழுப்பியிருந்த கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிதறிய போது உண்மையிலேயே நானும் உடைந்து போனேன் மௌனமாக?
பெண்கள் சந்திப்பின் ஆக்கபூர்வமான தன்மைகளாக எவற்றை அடையாளம் கண்டீர்கள்?
எதிர்மறையான கருத்துள்ளவர்களையும் அழைத்து தங்கள் சந்திப்பில் பேசவைத்து அவர்கள் கருத்துகளுக்கும் செவிசாய்க்கும் பண்பு,- எந்த அரசியல் பின்புலமோ பணபலமோ இன்றி பெண்கள் தங்கள் கூட்டு முயற்சியால் தாங்களே முன்னின்று 17 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தியிருக்கும் 26 சந்திப்புகள்,- பெண்களின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் ஆக்கப்பூர்வமான செயல்,- எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் இருத்தலை நிச்சயப்படுத்திக் கொள்வதின் ஊடாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சி.
இச் சந்திப்பின் பின்னரான உங்கள் உணர்வுநிலை எவ்வாறு இருந்தது?
அலைகளில்லாத ஆழ்கடல் போல அமைதியாக இருந்தேன். பேசப்பட்ட பல்வேறு செய்திகளை மனம் அசைப்போட்டது. தமிழ்நாட்டில் ஏன் இது போன்றதொரு சந்திப்புக்கான வாய்ப்புகளில்லை என்று யோசிக்கவைத்தது. இவர்களை எல்லாம் அழைத்துவந்து அவர்களின் ஆதித்தாய் மண்ணில் -( தமிழ்நாட்டில்) ஒரு சந்திப்பு நடத்தினால் என்ன என்று கனவு கண்டேன். அந்தக் கனவே ரொம்பவும் இனிமையானதாக இருந்தது.
தலித் மாநாட்டு நிகழ்ச்சி உங்கள் எதிர்பார்ப்போடு பொருந்திப் போனதா அல்லது மாறுபாடாக இருந்ததா?
இந்தக் கேள்விக்கு என் பதில் 'இரண்டும் தான்.' சிலவற்றில் பொருந்திப்போனதையும் சிலவற்றில் மாறுபாடாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
எதில் பொருந்திப்போனது? எதில் மாறுபாடாக இருந்தது?
ம்ம்ம்.. தேசியநீரோடையில் கலக்காமல் இந்திய மண்ணில் பாபாசாகிப் அம்பேத்கர், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், இவர்களுக்கு முன்னோடியாக பாதை அமைத்த அயோத்திதா சப்பண்டிதர், மகாத்மாபுலே இவர்கள் அனைவரும் சமூக விடுதலையை முன்னிறுத்திப் போராடினார்கள். அம்மாதிரியான ஒரு போராட்டக்குரலை -கலகக்குரலை- எழுப்பும் கட்டாயத்தில் காலம் இவர்களைத் தள்ளி இருக்கிறது என்று எண்ணினேன். அதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது.
எதில் மாறுபாடாக இருந்தது என்றால் இந்த மாநாட்டில் தரவுகளை வைப்பதற்கான களப்பணியோ, ஆய்வுகளோ செய்யப்படவில்லை. கலகக்குரலாக மட்டுமே இருந்ததே தவிர எதிர்காலத் திட்டங்கள், தீர்மானங்கள் பற்றிய தெளிவில்லை. தலித் அரசியல் பற்றிய பார்வையை முன்வைக்கவில்லை. இந்த மாநாடு குறித்த என் கருத்துகளைத் தனிக்கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.
இலங்கையின் சாதியமைப்பு முறை பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது ஏற்கனவே அறியப்பட்டவைகளாக அவை இருந்ததா?
நான் அறிந்தது சொற்பம். இந்த மாநாடு இன்னும் நான் அறிந்து கொள்ள வேண்டியவைகளைக் கோடிட்டுக்காட்டியது மட்டுமல்ல தமிழகத்தின் ஊடகங்கள் சொல்லாத பலச்செய்திகளை நோக்கி என்னைச் சிந்திக்க வைத்தது.
தமிழ்த் தேசியம், தலித்தியம் இடையிலான முரண்களில் இந்த மாநாடு தெளிவான பார்வையொன்றைத் தந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
தரவில்லை. அதற்கான கேள்வியை நான் மாநாட்டிலேயே வைத்தேன். இந்த மாநாடு தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான இருத்தலைப் பற்றியும் தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான சமவாய்ப்புகள் குறித்தும் குரல் எழுப்பி இருக்கிறதா அல்லது தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவே- குரல் எழுப்பி இருக்கிறதா.. இந்தக் கேள்வியுடனேயே நான் இந்தியா திரும்புவதாக அவர்களிடன் சொன்னேன். அதையே தான் உங்களிடமும் சொல்கிறேன்.
இம் மாநாட்டில் வைக்கப்பட்ட உங்கள் கருத்துக்கள் கவனிப்புப் பெற்றதாக அறிந்தோம். அதுபற்றி சொல்லமுடியுமா?
கவனிப்பு பெற்றிருந்தால் மகிழ்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட 30 நிமிடங்களில்.. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கும் தலித்துகளின் பக்கங்களைச் சொன்னேன், வரலாறு எப்போதும் வெற்றிபெற்ற வேடர்களின் பார்வையிலேயே எழுதப்படுவதைச் சுட்டிக்காட்டினேன். ஆதித்தமிழர்கள் நாம் தான், எவ்வாறு நாம் சேரிகளில் தள்ளப்பட்டோம் என்பதையும் குறிப்பிட்டேன். எல்லா மதங்களும் சாதிக்காப்பாற்றும் மதங்கள் தான். சட்டத்த்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது எங்களுக்கான சமத்துவ உரிமைகள். இந்திய அரசு சாதிக்காப்பாற்றும் அரசுதான். என்று தரவுகளுடன் சொல்லி, இறுதியாக தலித்துகளுக்கிடையில் இருக்கும் உட்சாதிப்பூசல்களை ஒழிக்க வேண்டும். தலித் விடுதலையில் முதல் படி இதுதான் என்பதை வலியுறுத்தினேன். நான் இறுதியாகச் சொன்ன தலித்துகளுக்கிடையில் நிலவும் உட்சாதிப்பூசல்கள் குறித்த கருத்தை எந்தளவுக்கும் இந்த மாநாட்டினர் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது இன்றுவரை சந்தேகம்தான்.
.இது உங்கள் முதலாவது வெளிநாட்டுப் பயணம், மற்றும் வெளிநாட்டில் பங்கேற்கும் சந்திப்புகள் என்ற வகையில் உங்களுக்கு திருப்திதந்த விடயங்கள், திருப்திதராத விடயங்கள் என்றுஎவற்றைச் சொல்கிறீர்கள்?
நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்தால்தானே ஏமாற்றங்கள் இருக்கும்! எனவே திருப்திதராதது என்று சொல்வதற்கு எதுவுமில்லை. நான் ரொம்பவும் சாதாரணமானவள். ஈழப்போராட்ட வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் புஷ்பராணி அக்காவைச் சந்தித்தது, மகிழ்ச்சி. அதைப் போலவே மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மட்டுமே அறிந்திருந்த உறவுகளை நேரில் சந்தித்ததும் அவர்களுடன் ஒருத்தியாக ரொம்பவும் இயல்பாக என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் என் வாழ்வின் இனிய நினைவுகள்.
இன்றைய குடும்ப அமைப்பிலிருந்து இயல்பாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் சமூக கட்டுமானங்களால் மிகக் குறைவு எனக் கூறப்படுகின்றதே இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பெண்கள் சந்திப்பில் முதல் நாள் நான் 'உறவுச்சிக்கல்கள்' என்ற தலைப்பில் வாசித்தக் கட்டுரையின் மையப்புள்ளி இதுதான். இல்லாள், மனைமாட்சி, தாய்மை என்ற கருத்துருவாக்கங்களின் மூலம் சமூகக்கட்டுமானங்கள் குடும்பத்தின் சுமையை பெண்ணின் தோள்களில் ஏற்றி சவாரி செய்கின்றன. சமூக வெளியில் ஓர் ஆணைப்போல இயல்பாக கரைந்து செயல்படுவது என்பது இன்றும் பெண்ணுக்கு எட்டாதக் கனிதான். இன்றைய பெண் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமையில் ஆணுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்ந்தவள். எனவே பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கிறாள். அந்த எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படும்போது குடும்பம் என்ற அமைப்பையே ஒரு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நிலமைக்குத் தள்ளப்படுகிறாள்.
பெண்ணியம், பெண்மொழி உருவாக்கம் பற்றி பேசுகின்ற போதிலும் பெண் தனது உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துக்களில் பிரயோகிப்பதை பலர் எதிர்த்து வரும் நிலையில் நீங்கள் ஒரு கவிஞர் என்ற ரீதியில் இவ்எதிர்ப்புக்களை, இப்பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்.?
மொழியும் மொழிவழி நம் சிந்தனைகளும் ஆணின் பார்வையிலேயே காலம் காலமாய் இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெண்ணின் உடல்மொழியை ஓர் ஆண் எழுதுவது என்பதற்கும் பெண் எழுதுவது என்பதற்கும் அடிப்படையில் இருக்கும் வித்தியாசங்களை பெண்கள் எழுதவந்தப் போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.
கவிஞர் அ.வெண்ணிலா
பேற்றின் வலியோடு
அலறும் குரலில்
இணைந்தே ஒலிக்கிறது
என் நிர்வாணத்திற்கான
அழுகையும்
என்று எழுதும்வரை பிரசவத்தைப் பற்றி என்ன எழுதிக்கொண்டிருந்தார்கள்? பிரசவ வலியின் அழுகையின் ஊடாக பெண் அனுபவிக்கும் இந்த வலியை ஓர் ஆணால் உணரவும் முடியாது, எழுதவும் முடியாது! தன்னை ஆணிலிருந்து வேறுபடுத்தும் தன் உடல் உறுப்புகள் தன்னை அவன் அடிமையாக்கும் அடையாளங்கள் அல்ல என்ற எண்ணம் வந்தப் போது பெண் தன் உடல் உறுப்புகளை நேசிக்கவும் பாராட்டவும் பெருமை கொள்ளவும் துணிந்தாள். அந்த வகையில் தான் பெண் தனது உடலுறுப்புகளைப் பற்றி எழுதிய போது ஓர் அதிர்வலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்று வெளிவர இடம் கிடைத்தால் மிகவும் வேகத்துடன் வருவது போலவே பெண்ணின் உடல்மொழி கவிதைகளின் வேகம் இருந்ததாக நினைக்கிறேன். இந்த அதிர்வலைகளை மட்டுமே நம்பி அதற்காகவே பெண் தன் உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துகளில் கையாளும் விளம்பரத்தனங்கள் வந்த போது தான் நெருடலாக இருந்தது. தன்னுடல்சார்ந்த உணர்வுகளைத் தாண்டி, பெண்ணின் உடல் சமூகத்தில் எல்லா தளங்களிலும் கீழ்த்தரமாக ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் கருவியாக்கியிருப்பதை பெண்களின் உடல்மொழி கவிதைகள் ஏன் கண்டுகொள்ளவதில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
உங்கள் ஹேராம், நிழல்களைத் தேடி கவிதைத்தொகுதிகள் இலக்கியத்தளத்தில் எப்படியான கவனிப்பையும் விமர்சனங்களையும் பெற்றது?
ஹேராம் கவிதைகள் என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. என் இலக்கிய வட்டத்தை விசாலமாக்கியது. அரசியல் தளத்தில் சில கேள்விகளை எழுப்பி ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது உண்மை. அயோத்தி பாபர்மசூதி இடிப்பு, அதன் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள், மதக்கலவரங்கள் ... இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவனின் கேள்விகள். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாதிப்புகளில் ஏற்பட்ட வலியின் அலறல். அத்துடன்,
ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதி திராவிடன் உயர்ந்தவனா?'
என்று திராவிட இயக்கங்களை நோக்கி அந்தக் குடும்பப்பின்னணியில் வந்த அதன் இரண்டாம் தலைமுறை வைக்கும் கேள்வி.. இப்படியாக நிறைய உண்டு. நிறைய விமர்சனங்களும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தன. அமீரக நண்பர்கள் கவிஞர் அறிவுமதியை அழைத்து அமீரகத்தில் (துபாய்) ஹேராம் நூலை வெளியிட்டு அறிமுகம் செய்தார்கள
நிழல்களைத் தேடி கவிதைநூலுக்கு 2006 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசு கிடைத்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நிழல்களைத் தேடி கவிதைகளை ஆய்வு செய்தார்கள். ஆனாலும் ஆய்வுகளும் சரி விமர்சனங்களும் சரி, நிழல்களைத் தேடி என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் 11 கவிதைகளுக்குள் புகவில்லை என்பது என்னை வருத்தப்பட வைத்த விசயம்தான்.
பெண் அரசியல், பெண்மறுப்பு அரசியல் பற்றி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
உடற்கூறும் அதனால் விளையும் உளவியல் சிக்கல்களும் அரசியல், சமூகத் தளத்தில் பெண்ணை இரண்டாம் நிலைக்கு (subordinate) இட்டுச் செல்வதாகவும் இயற்கையிலேயே அதிகாரத்தை (power) வென்றெடுக்கும் உடல்வலியும் மனவலியும் ஆணுக்கே இருப்பதாகவும் சொல்லப்படும் கருத்துகள் பெண் மறுப்பு அரசியலை முன்வைக்கின்றன, இன்னும் சிலர் ஆள்பலம், அடிதடி, குத்து, கொலை, ஏமாற்று என்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடப்பியல் சூழலில் ஆணின் துணையின்றி பெண் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் சொல்வதை முற்றும் புறக்கணிக்கும் நிலை வரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி அம்மையாரைப் பற்றிச் சொல்லும்போது 'அவர் ஒருவர்தான் காங்கிரசில் ஆண்' என்று சொன்னதை நினைவுப் படுத்த விரும்புகிறேன். ஏனெனில் அரசியல் அதிகாரம் பெண்ணிடம் வரும்போது அதையும் 'ஆணாக' பார்க்கும் பார்வையே நம்மிடம் இருக்கிறது! ஒவ்வொரு பெண்ணின் அரசியல் நுழைவும் கூட இங்கே அரசியல் தலைவரின் மகளாக, விதவை மனைவியாக, உடன்பிறந்தவளாக..ஆணின் பினாமி பெயரில் ரப்பர் ஸ்டாம்பாக ... இருக்கும்வரை பெண் அரசியலைப் பெண்கள் அடையாளம் காண வெகுதூரம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.
பெண்களைப்பற்றிய கருத்தாக்கங்கள் மாறும்போது குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்ற வாதம் பிழையானது என்று கருத்து வைக்கப்படுகிறது இது பற்றி உங்கள் கருத்துக்கள் எவை?
உங்கள் கேள்வியில் இருக்கும் 'குடும்பம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது' என்ற சொற்றொடரில் இருக்கும் 'பாதுகாப்பு 'என்ற சொல்லே மரபியல் சார்ந்த கருத்து தான். பாதுகாப்பு என்பதே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஒரு தந்திரமான பாதுகாப்பு வளையம்தான் பாதுகாப்பு என்ற சொல்லின் கருத்துருவாக்கத்தைப் பெண்கள் உடைத்து வெளிவர வேண்டும். யாருக்கும் யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. .துணை என்பதும் சேர்ந்து வாழ்வது என்பதும் குடும்ப உறவுகள் என்பதும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் சிலுவையில் அறையப்படக் கூடாது. பெண் கல்வி, அதனால் கிடைக்கும் பொருளாதர பலம், பணிநிமித்தம் தனித்து வாழும் சூழல் இவை எல்லாம் 'குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது' என்ற கருத்துருவாக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படும் ஒரு கருவியாக பெண்ணின் பாலியல் தன்மை கருதப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது என்ற கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
நிச்சயமாக. எங்கெல்லாம் தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறதோ அதற்கான பின்னணியைப் பாருங்கள். உதாரணமாக ஒரு தலித் ஆண் ஆதிக்கச்சாதியை எதிர்த்தால் அவனை அடக்கவும் ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் செய்யும் செயல் அந்த தலித் ஆணின் தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவனுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்வது.இந்தமாதிரியான பாலியல் பலாத்காரம் ஆணின் காமயிச்சையையோ , தனிமனித விகாரத்தையோ காட்டும் செயலாகவோ இருப்பதில்லை. முழுக்க முழுக்க ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பெண்ணின் பாலியல் தன்மையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது .ஆணாதிக்க சமூகத்தில் போர் முடிந்து எதிரி நாட்டின் பெண்களைச் சிறைப்பிடித்து வந்ததாக சொல்லப்படும் வரலாற்றிலிருந்து இதை நாம் பார்க்கலாம். சாதி மேலாதிக்கத்தில் மிகவும் தீவிரமாக இக்கருத்தியல் செயல்படுகின்றது.
அண்மையில் வெளிவந்த ஈழத்து பெண்கவிஞர்களின் தொகுப்பான பெயல்மணக்கும் பொழுது என்ற கவிதைத்தொகுப்புப் பற்றி -நீங்கள் ஒரு கவிஞர் எழுத்தாளர், என்ற வகையிலும் பெண்கள் சந்திப்பில் அந்நூலை விமர்சனம் செய்தவர் என்ற வகையிலும்- நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
பெண்கள் சந்திப்பில் கவிதைகளுக்கான என் விமர்சனத்தை வைத்தேன். அதுதவிர இத்தொகுப்பு குறித்து சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. பெண்களின் கவிதைகளைத் தொகுக்கும் இந்த முயற்சியில் பெண்கள் பெயரில் எழுதும் சில ஆண்களின் கவிதைகளும் தவறுதலாக இடம் பெற்றுவிட்டன. யுத்த பூமியில் தனக்கான நாளைய விடியல் நிச்சயமில்லாத பொழுதில் ஆண்கள் பெண்கள் பெயரில் எழுதுவதும், ஒருவரே பல பெயர்களில் எழுதுவதும் தவிர்க்க முடியாதது என்றே நான் நினைக்கிறேன். இம்மாதிரியான தொகுப்பு நூல்களில் கவிஞர்களைப் பற்றிய பின்னூட்டங்கள் கட்டாயம் தேவை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சஞ்சிகைகளில் வந்த கவிதைகளை இவர்கள் அப்படியே எடுத்து போட்டுக்கொண்டுவிட்டார்கள் என்பது மாதிரியான தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்த்திருக்க முடியும். அதேநேரத்தில் என்னவோ இத்தொகுப்பை வெளியிட்டு இதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ இதன் மூலம் தான் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓர் அவசியம் நிச்சயமாக இந்நூலைத் தொகுத்த அ.மங்கை அவர்களுக்கு இல்லை என்பதையும் இம்மாதிரியான விமர்சனங்களை வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, நான்கு சுவர்கள், கூரை, வீடு என்று வாழும் பெண் ஒரு நிமிடத்தில் அனைத்தும் இழப்பதும் அகதி முகாம்களில் வாழ்வதும் மிகவும் கொடுமை. அதிலும் ஒரு பெண் அதில் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். எனினும் இக்கருப்பொருளில் ஓரு கவிதை கூட இத்தொகுப்பில் இல்லை. பெண்கள் இதைப் பற்றிய கவிதைகள் எழுதவே இல்லையா என்ற கேள்வி இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் தன்னிச்சையாக எழுகிறது.
பெண், ஆண்களால் எழுதப்படும் பெண்ணிய எழுத்துக்களை வைத்து பெண்களால் மட்டும் எழுதப்படும் பெண் எழுத்துக்களின் தேவையை நிராகரிப்பது பற்றிய உங்கள் பர்ர்வை என்ன?
பெண்ணிய எழுத்துகளை பெண் எழுதுவதற்கும் ஆண் எழுதுவதற்கும் நிச்சயமாக வேறுபாடுகள் உண்டு. கவிஞை அ.வெண்ணிலாவின் கவிதையை உதாரணம் காட்டி நான் ஏற்கனவே சொல்லியிருப்பது இதைதான். இதைச் சொல்லும் போது பெண்ணிய எழுத்துகளை ஆண் எழுதினால் அது நிராகரிக்கப்படவேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. பெண் எழுத்துகளின் தேவையை எந்த தளத்திலும் ஏற்கனவே எழுதப்பட்ட எந்த அளவுகோலை வைத்துக்கொண்டும் இனி எவராலும் நிராகரிக்க முடியாது. யாருடைய எழுத்தையும் யாரும் நிராகரிக்கவும் முடியாது தானே!. எழுத்துகளின் இருத்தலை நிச்சயப்படுத்துவது காலம் மட்டுமதான.
கவிதைகளுக்கான வார்ப்பு மின்னிதழ் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
'எனக்குத் தொழில் கவிதை' என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. கவிதையும் கவிதை சார்ந்தும் மட்டுமே இயங்குதல் என்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலையும் கம்பீரத்தையும் பாராட்டுகிறேன். வளரும் கவிஞர்களைத் தாலாட்டியும் வளர்ந்த கவிஞர்களைச் சீராட்டியும் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிக்கும் வார்ப்பு பலர் கவிதைகளுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்ததன் மூலம் தன் முகவரியை கவிதை உலகில் நிச்சயிப்படுத்திவிட்டது. வார்ப்பு ஆசிரியர் குழுவுக்கு என் வாழ்த்துகளும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
No comments:
Post a Comment