தமிழ் எழுத்துலகில் பெண்ணியம் குறித்த கருத்துகளை மேற்கத்திய பெண்ணியத்துடன் ஒப்பிட்டும் தமிழின் பொற்கால சங்க இலக்கியத்துடன் அதன் போக்குகளை நுணுகி ஆராய்ந்தும் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் ராஜ்கெளதமன் முக்கியமானவர். இந்த ஆய்வுகளின் மூலம்
தமிழரின் பெண்ணியப் பெருவெளியை அடையாளம் காட்டுகிறார்.
குடும்பம், தனிச்சொத்து , அரசு – தோற்றம் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்த ஏங்கெல்ஸின் குடும்பம் குறித்தும் அது பெண்ணிய தளத்தில் பொய்யாகப் போனதையும் பண்பாட்டு ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தியவர் ராஜ்கெளதமன் அவர்கள்.
சங்க காலம் :
சங்க இலக்கியம் இருவேறு பெண்களைக் காட்டுகிறது. மலை, காடு, கடல், வயல் பகுதிகளில் உழைத்தவர்கள் குறமகள், கொடிச்சி, பரதவப்பெண், நுழைச்சி, உமணப்பெண், உழத்தியர், கடைசியர், ஆய்மகள், எயினப்பெண், மறப்பெண், புலைத்தி, பருத்திப்பெண், கட்டுவிச்சி, அகவன் மகள், விறலி, பாடினி, மூதில்மகள், வெறியாடும் மகள் என்றெல்லாம் சுட்டப்படம் இப் பெண்கள் உழைக்கும் பெண்கள். பேராசிரியர்களும் சங்க காலத்தைப் பொற்காலமென நிறுவ முயலும் ஆய்வாளர்களும்.சங்க காலத்தில் பெண் சுதந்திரமாக இருந்தாள் என்றும் ஆண் பெண் உறவில் பெண்ணுக்கு சுதந்திரமும் உரிமையும் இருந்தது என்பதற்கும் இன்றும் சங்க காலத்தின் இப்பெண்களை மட்டுமே எடுத்துக்காட்டுவார்கள் . ஆனால் இப்பெண்களுடன் வாழ்ந்த மேட்டுக்குடி பெண்கள் சங்க காலத்தில் ஏற்படுத்திய சமூக மாற்றங்களையும் அவர்களின் வாழ்க்கை குடும்பம் சமூக தளத்தில் இன்றுவரை பண்பாட்டு மேனிலை ஆக்கமாக உருமாறி இருப்பதையும் தன் ஆய்வுகளின் வழி வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் ராஜ்கெளதமன் அவர்கள்.
குடும்பம் ,ஒருதார மணமுறை , ஆணாதிக்க தந்தை வழிப் பண்பாட்டில் வந்தவர்கள்தான் என்ற வகையில் இந்தப் பெண்களுக்கு ஒற்றுமை உண்டே தவிர இவர்களின் வாழ்க்கை வேறாக இருந்தது அந்த வேறுபாடு பொருளாதர ரீதியால் வரையறுக்கப்பட்டிருந்தது என்றாலும் அந்த வரையறையின் கோடுகள்தான் பண்பாட்டு தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
இனவிருத்தி இருவருக்கும் பொது. ஆண் தலைமை குடும்பம் பொது என்றாலும் உழைக்கும் பெண்களுக்கு உற்பத்தியில் பங்கு இருந்தது. வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல், உழைப்பின் பொருட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து செல்லும் சுதந்திரம் இருந்தது. ஆனால் மேட்டுக்குடி பெண்கள் சுகபோகத்தில் வாழ்ந்தாலும் பசி வறுமை அறியாதவர்கள் என்றாலும் அவர்களின் வாழ்க்கை அதிகார மையத்தின் கைகளில் இருந்தது. எனவே நிச்சயமற்றதாக இருந்தது. கட்டுப்பாடு , காவல் மிகுந்ததாக இருந்தது. தலைவனுக்கு அவளைத் தவிர வேறு ‘உரிமை மகளிரும் ‘ அவனுடைய பாலியல் விருப்பத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாக வேண்டும். இப்பெண்களின் உலகம் முழுக்கவும் ஆண் சார்பு நிலையில் இருந்ததைக் கவனப்படுத்துகிறார் ராஜ் கெளதமன். பண்பாட்டு ரீதியாக பெண் சுதந்திரத்தை அனுபவித்த உழைக்கும் பெண்கள் கீழ் நிலைப்படுத்தப்பட்டு உழைக்காத இந்த மேட்டுக்குடி பெண்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் புனிதங்களும் பண்பாட்டு ரீதியாக ஒட்டுமொத்த பெண்களுக்குமானதாக கட்டமைக்கப்பட்டதையும் விளக்குகிறார். சங்க கால புலவர்களின் பாடல்களில் வெளிப்படும் வருணனை முதல் வாழ்க்கைச் சடங்குகள் வரை அனைத்திலும்
இது எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக முன்வைக்கிறார்.
மேட்டுக்குடிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நோன்பு , விரதம் இருந்தார்கள். தை நீராடித் தவமிருந்தார்கள். பிள்ளைகள் பெற வேண்டி சாமியைக் கும்பிட்டார்கள். உழைக்கும் பெண்களிடம் இதைக் காணமுடியவில்லை. தெருவில் உப்பு விற்ற உமணப்பெண், மீன்விற்ற பரதவப்பெண், பரணில் கிளி விரட்டிய குறவர்மகள், பால் தயிர் விற்ற இடையர் பெண் ..இவர்கள் எல்லாம் தனக்கான ‘நல்ல’ கணவன் வேண்டுமென எந்தக் கடவுளிடமும் வேண்டுதல் செய்யவில்லை.
விரதமிருக்கவில்லை. தனக்கான ஆணைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையையும் அது மறுக்கப்படும்போது அவனோடு உடன்போக்கு செல்லும் துணிச்சலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் இனக்குழு சார்ந்தும் தங்களின் தொழில் சார்ந்துமே அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஆனால், மேட்டுக்குடி பெண்கள் ,
‘மனைக்கு விளக்கு’ , ‘மனையோள்’ , ‘மனை மடந்தை ‘ , இல்லாள், இல்லாட்டி என்று வீடு குடும்பம் சார்ந்தே பெண்ணின் அடையாளத்தை ஏற்படுத்தினார்கள். ஆண் குழந்தையைப் பெற்று வம்சவிருத்திக்கு உதவுவதே பெண்ணின் சிறப்பாக போற்றப்பட்டது. தந்தையாலும் தமையனாலும் கொண்ட கொழுநனாலும் மட்டுமல்ல அவள் ஈன்ற ஆண்மகவாலும் அப்பெண் அடையாளப்படுத்தப் படுகிறாள். பெண்ணுக்கு என்று தனி அடையாளமாக உழைக்கும் பெண்களிடம் இருந்தவை அனைத்தும் பண்பாட்டு ரீதியின் மேனிலை ஆக்கத்தில் காணாமல் போனது.
பெண்ணின் அறியாமையை பேதை, மடமகள், மடவரல், மடந்தை என்று சொல்லி அதையே அப்பெண்ணின் அழகியல் பண்பாக புலவர்கள் போற்றினார்கள். ஆண் இதற்கு மாறாக சான்றோன், பேரறிவாளன், புலவன் என்று அறிவுடன் தொடர்புடையவனாக போற்றப்பட்டான்.
பெண் தான் விரும்பும் ஆணுக்கு முன் நாணி தலைகுனிவது இயல்பான மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடு ஆணுக்கும் உண்டு என்கிறார் ராஜ்கெளதமன்!
மேலும் இந்த மெய்ப்பாடுகள் இச்சமூகத்தால் உருவாக்கப்பட்டு அவள் மீது திணிக்கப்பட்டவை. “இப்படிக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சூழலில் வெளிப்படும் மெய்ப்பாடுகளே, பெண்ணின் முழுநேர , முழுவாழ்க்கைக்குரிய உயர்ந்தப் பண்புகளாக போற்றி உரைக்கப்பட்டன. பெண்ணுக்கு உயிர் ஆண் என்ற ஆணாதிக்கச் சித்தாந்தம் கொடிகட்டிப் பறந்தது. பெண் உடலால் உணர்ச்சியால் அளக்கப்பட்டாள், ஆண் அவனது சமூகச் செயலால், அறிவால் அளக்கப்பட்டான். பெண் செயலற்றவள், அடக்கமானவள், ஆண் செயலூக்கமானவன். பெண்ணுக்கு உலகம் அவள் வீடு . அவள் உடல். டிஆணின் உலகம் அறிவு, சமுதாயம்.” ( தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு பக் 145) இக்கருத்துகளை நிலை நாட்டியதில் சங்க இலக்கியத்திற்கு பெரும்பங்குண்டு. பண்பாட்டு ரீதியாக இதை நோக்கியே தமிழ்ச் சமூகம் நகர்ந்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
மார்க்சியப் பெண்
நிறப்பிரிகை 1991ல் (7/7/91) நடத்திய பெண்ணியம் கூட்டுவிவாதம் பற்றிய ஒரு எதிர்வினையாக ராஜ்கெளதமன் இந்தியப் பண்பாட்டு தளத்தில் மார்க்சியப் பெண்ணும் மேற்கத்திய பெண்ணும் எங்கே நிற்கிறார்கள் ? ஏன் ? என்ற ஒரு சிந்தனைப் புள்ளியைத் தொடுகிறார்.
ஏங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து , அரசு – தோற்றம்’ நூலில் தனிச்சொத்துடமை உருவாக்கம் எவ்வாறு குடும்பம் அமைப்பு தோன்ற காரணமாக இருந்தது என்பதை விளக்குகிறார். இதை எடுத்துக்கொண்ட ராஜ்கெளதமன், “ தனிச்சொத்துடமை முறை நீங்குகிற போது , குடும்பமும் நீங்கும் என்பது இதன் தர்க்க நீட்சி” என்பார். (தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பக் 49) பெண் முதலாளியச் சமூக உற்பத்தி முறையில் நுழைகிறபோது அவளுடைய விடுதலை சாத்தியமாகும் என்ற எங்கெல்ஸ்சின் கருத்தும் பொய்த்துவிட்டது என்பதுதான் ராஜ்கெளதமன் முன்வைக்கும் கருத்து. சோசலிஸ்டுகளின் சிந்தனாப் போக்கிலும் தந்தைவழி சமூக மதிப்பீடுகளே இருக்கின்றன என்பதை வரலாற்று ரீதியான தரவுகளுடன் முன்வைக்கிறார் ராஜ்கெளதமன்.
பூர்ஷ்வா , நிலவுடமை சமூக அமைப்பிலும் சோசலிச சமூக அமைப்பிலும் ஆணுக்கு இணையாகவும் , ஏன் அதிகமாகவும் சம்பாதிக்கும் இன்றைய பெண்களுக்கும் விடுதலை கிடைத்துவிட்டதா? பொருளாதர சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அவளுக்கான முழு விடுதலையை சாத்தியப்படுத்தி இருக்கிறதா ? என்று இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதுதான் ராஜ்கெளதமன் அதை தன் சமூகப் பார்வையாக முன்வைத்திருக்கும் பெண்வெளி விரியும்.
சமகாலம்
“இந்திய நடுத்தர வர்க்கத்தின் மற்றொரு பண்பைப் பார்க்க வேண்டும். இன்று பெண்கள் படிப்பது, பணம் சம்பாதிப்பது, ஆணுடன் சமமாக கைகோர்த்து நடப்பது எல்லாமே, ‘விடுதலை’ போல தெரிந்தாலும் , இவை பெரிதும் ஆணாகப் பார்த்து , அவன் செளகரியம்- கெளரவம் ஆகியவற்றுக்காகப் பெண்ணுக்கு வழங்கிய சலுகைகள்தாம். இது ஆணாகப் பார்த்துப் பெண்ணுக்கு வழங்கிய ‘சுதந்திரம்’ ஆதிக்க சாதிகள், அடிநிலைச் சாதிகளுக்குத் தருகிற சில ‘சலுகைகள்’ போல இவை” என்று சமகால சமூக யதார்த்தத்தை முன்வைக்கிறார். ராஜ்கெளதமன். (தலித்திய விமர்சனக் கட்டுரைகள் பக் 55) நாம் நம் அனுபவங்களின் ஊடாக இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் “பெண்கள் படிக்கவும் சம்பாதிக்கவும் தரப்பட்டிருக்கும் சலுகைகளும் அவளுக்கான திருமணச் சந்தையில் அவள் மதிப்பீடுகளுக்கானவைகளாக மாறிவிட்டன ‘ எனலாம்.
பெண் விளிம்பு நிலையில் நிற்கிறாள், அனைத்து ஆதிக்கச் சக்திகளும் அவளை அடக்குவதில் போட்டிப்போடுகின்றன. பொருளாதர ரீதியில் வர்க்க்கமாகவோ , சாதி மத ரீதியில் தீண்டத்தாகாதோர் பட்டியலிலோ உழைப்பு ரீதியாக பாட்டாளி என்றோ அவளை தனித்து வகைப்படுத்திவிட முடியவில்லை. இவை எல்லாமும்தான் அவள் என்றாலும் அவளை அப்படி எவரும் அடையாளப்படுத்துவதில்லை. இந்தப் பொது அடையாளத்திலும் பெண்ணை விட ஆண் மட்டுமே தெரிகிறான். பெண் இதிலும் அவனுடன் வாழும் அவன் மனைவியாகவோ தாயாகவோ மகளாகவோ மட்டுமே இருந்து அவளுக்கான இந்த அடையாளங்களையும் இழந்திருப்பது வெளிப்படை.
பெண்ணைப் பற்றி எழுத வந்த சங்ககாலப் புலவர்கள் அவளுடைய உடலைப் பற்றியே பாடினார்கள். அவளின் அங்கங்கள், அவற்றுக்குரிய பாலியல் பெறுமதிகளையும் அது ஆணின் பாலியல் நுகர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் மட்டுமே எழுதினார்கள். இன்றைய நவீன கவிதைகளிலும் இதுவே தொடர்கிறது. இன்றைய நுகர்ப்பொருள் கலாச்சாரத்தில் சோப்பு விற்பனைக்கு அருவியில் குளித்து ஈரத்துடன் காட்சி தரும் பெண்ணுடல் தேவைப்படுகிறது. கார் விற்பனைக்கும் கருவி விற்பனைக்கும் .. சந்தையில் விற்கப்படும் அனைத்தையும் விற்பதற்கு விளம்பரப்பலகையாக பெண்ணுடல் மாறி இருப்பது அன்றைய பெண்ணுடல் வருணனையின் தொடர்ச்சிதான்.
குடும்பம் என்ற ஆண்மைய அமைப்பு பெண்ணை அவள் பாலியல் அடையாளத்துடன் மட்டுமே வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. அதை ஓர்மையுடன் காப்பாற்றி வருகிறது. அதைப் பண்பாட்டு ரீதியாக காப்பதில் மொழியும் சங்க காலம் முதற்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இலக்கியங்களும்
மதங்களும் நம்பிக்கைகளும் அடித்தளமிட்டிருக்கின்றன. காலப்போக்கில் தோன்றிய சிந்தனைப் பள்ளிகளும் பெண் , குடும்பம் என்ற புள்ளியில் போதாமைகளுடன் இருப்பதும் தெளிவாகிறது. இக்கட்டமைப்புகளுக்கு எதிராக பெண்கள் திரளும்போதும் குரல் கொடுக்கும்போதும்
“பெமினிஸ்டுகள் போக்கிரிகள், பொறுப்பற்றவர்கள், பெமினிசனம் இவர்களுக்கு ஒரு பொழுதுப்போக்கு, இவர்கள் நளினமற்றவர்கள், குடும்ப நிம்மதியைக் குலைக்க வந்தக் கோடாரிகள், விடுதலை என்ற போர்வையில் யாரோடும் படுக்க விரும்பும் இசை கேடான வாழ்க்கை நடத்துபவர்கள், “ என்ற குற்றச்சாட்டுகள் எளிதாக பெண்களாலேயே பெண்கள் மீது சுமத்தப்படுகின்றன. குடும்பம் பெண்ணின் தேவை கருதி உருவாக்கப்பட்ட சமூக அமைப்பு என்பது கூட பாதி உண்மையாக இருக்கலாம். ஆனால் யாருடைய தேவை கருதி யார் உருவாக்கிய அமைப்பு என்பது தான் நம் கேள்வி.
குடும்பம் என்ற அமைப்பின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் பொய் அபத்தங்கள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. இக்கட்டமைப்பு தீடிரென யாரோ ஒரு தனி நபரால் உருவாக்கப்பட்டதல்ல.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரலாற்று ரீதியான மாற்றங்களுக்கு வளைந்து கொடுத்து பண்பாட்டு ரீதியாக பெண்ணின் புனிதங்களாக அவள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
இன்றைய இந்திய மகளிர் அமைப்புகள் பொருளாதர நலன்களுக்காக போராடுகின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடக்கும்போது பேரணி நடத்தி தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன. இதெல்லாம் பெண் விடுதலையைப் பெற்றுத் தருமா? என்பதை ராஜ்கெளதமன் முன்வைக்கும் பண்பாட்டு ரீதியாக அணுக வேண்டி இருக்கிறது.
**********
ஆக.25, 2025
பேரா. ராஜ் கெளதமன்
75 வந்து பிறந்தநாள்.
வரலாற்றை மீள் வாசிப்பு செய்து
வழிகாட்டிய ராஜ் கெளதமன் அவர்களுக்கு 🌹💐💥💥💥🙏🙏🙏
துணை நின்ற நூல்கள்:
>தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு – ராஜ்கெளதமன்.
கெளரி பதிப்பகம் , புதுச்சேரி. 1994.
தலித்திய விமர்சனக் கட்டுரைகள் – ராஜ்கெளதமன்.
காலச்சுவடு . 2003.
அருமையான பதிவு. பெண்ணுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் என்பது மாயையாகவே உள்ளது. பெண் பணிக்குச் சென்று திரும்பி காலணியைக் கழற்றும் போதே தன் சுயத்தையும் கழற்றி எறிந்து விடவேண்டுமென எதிர் பார்க்கப்படுகிறது.
ReplyDelete