தான் நேரில் பார்க்காத கவரிமா குறித்து திருவள்ளுவர் பேசுவது ஏன்?
தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய வெளி அதன் முதற்பொருள் தெற்கே குமரியும் வட எல்லை வேங்கடமும் தாண்டி விரிகிறது. அந்தக் குதிரைப் பாய்ச்சலில் தமிழ்மண் அறியாத கருப்பொருள்களும் இடம்பெறுகின்றன. காரணம் அக்கருட்பொருட்கள் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளி அறிந்ததும் அதைப் பற்றிய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது என்பதும் தெளிவாகிறது.
உண்மையில் கவரிமான் என்கிற மான் வகை தமிழ் நாட்டில் உள்ளதா?
இல்லை…
காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்.
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் "
(அதிகாரம்:மானம் குறள் எண்:969)
பொழிப்பு: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
கவரிமா என்பது என்ன?
கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. பனி மலையில் வாழும், எருமைபோல் தோற்றமுள்ள, யாக்(Yak) என்று அறியப்படுவதையே கவரிமா என்று இலக்கியங்கள் குறிப்பதாக இன்றைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதன் உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்று சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா ஆகும். இமயமலையில் வாழும் இந்த விலங்கு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரைத் தாங்க முடியாமல் இறந்துவிடும். இதைத்தான் வள்ளுவர் இக்குறளில் குறிப்பிட்டார் என்பது அறிஞர்களின் கூற்று.
கவரி இமயமலையில் வாழ்கின்ற விலங்குகளில் ஒன்று என்பதற்கு புறநானூற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் சான்று பகர்கின்றன.
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமயம்(புறநானூறு: 132) இதில் இமயமலையில் வாழும் கவரி என்ற குறிப்பு உள்ளது.
மேலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் எனும் புலவர், இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கின்ற நின்புகழாகிய செல்வத்தை இனிது கண்டோம் என்று வாழ்த்திய பாவில் கவரியைக் குறிப்பிடுகிறார்:
(பதிற்றுப்பத்து 11:21 – 24)
மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் இவர்கள் அனைவரும் கவரிமா என்றனர். பரிதியார் அதைக் கவரிமான் என்று தம் உரையில் கூறினார். மு.வை.அரவிந்தன் 'காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்!' என்கிறார்.
மணக்குடவர் 'ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார்' என்றும்
பரிதியார் 'ஒரு மயிர் சிக்கினால் பிராணனைவிடும் கவரிமான் போல' என்றும் காலிங்கர்: தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின் மானித்துப்பின் உயிர் வாழாது. அம் மயிர் துவக்குண்ட இடத்துநின்று, வற்றிவிடூஉம் கவரிமா அன்ன' என்றும்
பரிமேலழகர்: தன் மயிர்த் திரளின் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார் என்றும் உரை கூறினர்.
வ சுப மாணிக்கம் 'மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர்' என்று தன் உரையில் 'பறிப்பின்' என்ற சொல்லை ஆள்கிறார்.
‘மயிர்’ என்று திருவள்ளுவர் பொதுவாகவே கூறியுள்ளார். ஆனால், பழைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒரு மயிர் என்றே பொருளுரைத்தனர்.
"காட்டில் வாழும் கவரிமான் தன்னிடமுள்ள நீண்டமுடியில் ஒரு முடி அற்று விழுந்து விடுமேயானால், அதற்கு மானம் பொறாமல் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இயல்புடையதாகும், இவ்வியல்பைத் தெரிந்த வேடர்கள் அம் மான் செல்லும் வழியில் அடர்ந்த முள்ளைக் கொண்டு போட்டிருப்பார்களென்றும் கவரிமான் அவ்வழியாகச் செல்லும்பொழுது அதன் நீண்ட முடி அம்முள்ளில் சிக்கிக் கொள்ளுமென்றும் அவ்வாறு சிக்கிக் கொண்டமுடி சிதைந்தாலும் அறுந்தாலும் அம் மான் அவ்விடத்திலேயே உயிர் துறக்குமென்றும் கூறுகின்றார்கள்." என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை.
குன்றக்குடி அடிகளார் "கவரிமான் என்பது மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்!" என்று குறித்துள்ளார்.
கவரிமா, மானம் மிக உடைய விலங்கு என்று கருதி ஒரு மயிரை இழந்த மானக்கேட்டால் அந்த இடத்திலேயே உயிர்விடுகின்ற இனம் என்று உரையாசிரியர்கள் மொழிந்தனர்.
வள்ளுவருக்குப் பின் வந்த புலவர்களுள் திருத்தக்க தேவர் ‘மானக்கவரி’ (சிந் - 2120) என்றார்; கம்பர் ‘மானமா’ என்றார். புகழ்பெற்ற இப்புலவர் பெருமக்களும் கவரிமாவை மானத்துக்கு உவமையாகக் கொண்டனர். மேலும் வான்மயிர் துடக்கின் தானுயிர் வாழாப் பெருந்தகைக் கவரி என்று பெருங்கதை (35, 233, 4) கூறியது
வள்ளுவர் காலத்துக்கு முந்திய நூல்களான புறநானூறும் பதிற்றுப்பத்தும் கூறிய செய்திகளின் அடிப்படையில் கவரிமா என்றது இமயமலையில் வாழும் விலங்கு பற்றியே என்று முடிவு கொள்ளலாம். ஆனால் அது மயிர் நீங்கினால் வாழ இயலாது என்று வள்ளுவரே முதலில் கூறியதாகத் தோன்றுகிறது. கவரிமா ஒருமயிர் நீங்கினால் உயிர்விடும் என்று பெரும்பான்மையினரும், மொத்த மயிற்கற்றையும் உடலில் இருந்து போய்விடுவதால் உயிர் நீக்கும் என்று சிலரும் மயிர்க்கற்றை சிக்கினால் இறந்துபடும் என்று மற்றவரும் கூறியுள்ளனர். இவை எவற்றிற்கும் சான்றுகள் இல்லை.
தன் மயிர் உதிர்வதால் உயிர்விடுகின்ற விலங்கு இருக்க முடியாது; இது இயற்கைக்குப் பொருந்தாதது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவர்.
முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர்,
பாலைமட்டுமே பிரித்து அருந்தும் நுட்பம் கொண்ட அன்னப்பறவை,
சிங்கம் போன்ற உருக்கொண்ட யாளி, பெரும் உருவும் வலிவும் கொண்ட டைனோசர், முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர் போல காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம். எனவே மயிர் இழப்பால் உயிர் நீங்கிய கவரிமா என்றொரு விலங்கினமே கிடையாது என்று கூறமுடியாது.
திருவள்ளுவர் தமிழ்க்குடியின் மானமாக குடியியல் பேசும்போது தமிழ்க்குடியின் நம்பிக்கைகளை தன் குறட்பாவில் கையாண்டிருக்கிறார்.
💥💥💥💥
#கவரிமா_கவரிமான்
#புதியமாதவி_கவரிமான்.
No comments:
Post a Comment