Monday, March 1, 2021

அவள்களின் நாட்குறிப்புகள்



திரெளபதிி என்ற பாஞ்சாலி எனது பதின் பருவத்தில் அறிமுகமானது ராஜாஜியின் வியாசர் விருந்து வழியேதான் . அந்த வயதின் வாசிப்பு அனுபவத்திற்கேற்ப பாஞ்சாலி பாரதத்தில் வரும் ஆயிரக் கணக்கான 

கதை மாந்தர்களில் ஒருவள் . அவ்வளவே . 

பின்னர் சில வருடங்கள் கழித்து பாரதியாரின் “ பாஞ்சாலி சபதம் “ முழுமையாக வாசித்து முடித்ததும் பாஞ்சாலி குறித்த 

என் பார்வை சற்றே அகலமானது . அதன் பின்னர் 

மகாபாரதத்தின் வெவ்வேறு மீள்பார்வைகளாக உருவான 

பல கதைகள் பாஞ்சாலி குறித்த பார்வைகளை விரிவு படுத்திக் 

கொண்டே போயின . ஆனால் 2015 ல் வாசித்த 

“ யார்லகட்ட லஷ்மிப்ரசாத் “ எழுதிய தெலுங்கு நாவலான

 “ திரெளபதி “ யின் தமிழாக்கம் , திரெளபதி குறித்த எனது

 பார்வையையே திருப்பிப் போட்டு விட்டது . 

மகாபாரதம் பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்ட நாவல் அது

 . [ குறிப்பாக திரெளபதியின் பார்வையில் ] 

அதை வாசித்தபின் திரெளபதி என்பது வெறும் பெயரோ 

அல்லது ஒரு கதை மாந்தரோ அல்ல – அது ஒரு குறியீடு

 என்பதை உணர்ந்தேன் . அதுவாவது 350 பக்கங்களுக்கு 

மேற்பட்ட ஒரு நாவல் . அதன் விரிவான தளத்தில் 

படைப்பாளிக்கு திரெளபதி குறித்த ஒரு புதுப் பார்வையை

 உருவாக்குவது எளிதாக இருந்திருக்கலாம் . ஆனால் 

கவிதை என்ற குறுகிய வடிவத்தில் பாஞ்சாலியை

 இன்றைய காலகட்டத்தின் அன்றைய பிரதிநிதியாக 

உருவகப்படுத்த முடிந்திருக்கிறது புதியமாதவிக்கு 

அவரது புதிய கவிதைத் தொகுப்பான “ அவள்களின் நாட்குறிப்புகள் “ 

மூலம் . 

மொத்தத் தொகுப்பும் திரெளபதியை முன்னிலைப் படுத்தி 

எழுதப்படாத போதும் , கவிதைகளில் வரும் எல்லாப் பெண்

 குரல்களும் திரெளபதியின் குரலாகவே ஒரு பிரமையை உருவாக்கி விடுகின்றன . ஆண் X பெண் எனும் இரு பாலினத்தரில் 

ஏன் பெண் தொன்மம் தொட்டே இரண்டாம் இடத்திலேயே வைக்கப் பட்டிருக்கிறாள் என்ற கேள்வியை உரக்க எழுப்புவதோடு 

சமயங்களில் அந்த பிம்பத்தை உடைக்கவும் செய்கிறார் 

தனது வலிமையான மொழி மூலம் .

 ஒவ்வொரு கவிதையுமே வாசிப்பவனின் பிரதியாக மாறி 

படைப்பாளி காணாமல் போகிறார் .

 விளைவாக எண்ணற்ற கேள்விகளை வாசிப்பவனிடம்

 உருவாக்கி விடுகிறது பிரதி . நீள் கவிதைகளும் , குறுங்கவிதைகளுமாக அறுபது கவிதைகள் . தொன்மங்களை பயன் படுத்துவதின் மூலம் நிகழ்காலத்து நிஜமான அவலங்களை வெறும் குமுறல்களாக 

இல்லாமல் அறிவு பூர்வமான அறச் சீற்றக் குரல்களாக

 வெளிப் படுத்துவதில் படைப்பாளி வெற்றி பெறும் தருணங்களை 

தொகுப்பை முழுவதுமாக வாசித்து முடித்ததும் உணர முடிகிறது . 

ஒவ்வொரு கவிதையும் ஏராளமான கேள்விகளை

 எழுப்பிச் செல்கின்றன வாசிக்கையில் . 

முதல் கவிதை –

கிருஷ்ணை நதிக்கரையில் / குளித்துக் கரையேறியவள்
நினைவுகளை உலர்த்துகிறாள் .
பீமனின் எச்சில் முத்தங்கள் / அவளைத் தின்று பசியாறுகின்றன .
அவள் அவர்கள் தேசத்தில் / அரசியா அடிமையா
கண்ணன் அறியாத புல்லாங்குழல்
பெண்மொழியின் அர்த்தங்கள் புரியாதவனா
புருஷோத்தமன் !
காதலரின் பால்வீதியில் / அவள் சிறகுகளின் படபடப்பு .
அந்தப்புர மனைவியர் பார்க்காத உலகம்
அவள் மவுனத்தை வாசிக்க முடியாமல்
தடுமாறுகிறான் தருமபுத்திரன் .
சிதையில் சொற்களை எரித்து / காற்றுவெளியில் கரைவதற்குள்
எழுத்துக்கூட்டியேனும் வாசித்துவிடுவானா / காண்டீபன்

திரெளபதியின் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் விடைகள்

 கிடைத்து விடுமா ? ஆனால் வாசிப்பவனுக்கு இன்னொரு 

கேள்வி எழுகிறது . மூவரைச் சொன்னவள் ஏன் நகுலனையும் , சகாதேவனையும் விட்டு விட்டாள் ? அவர்கள் மாத்ரியின் புத்திரர்கள் என்பதாலா ? தனது அந்த நிலைக்குக் காரணமான வேண்டுகோளை 

[ பொதுவானதுதான் எனினும் ] வைத்த குந்தியின் மீதான கோபமாக இருக்கலாமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது .

 முதல் கவிதையைத் தொடர்ந்து மேலும் சில கவிதைகளும் 

பாஞ்சாலியின் குரல் வழியாகவே வெளிப்படுகின்றன 

. இன்னொரு கவிதை - 

கொட்டு மழையே கொட்டு .

 / யுகம் யுகமாகச் சுமந்தலையும் 

காதலும் காமமும் கரைந்து / போகட்டும் . 

கொட்டு மழையே , கொட்டு . 

ஆடைகளை அவிழ்த்துவிட்டேன் . / 

முழுவதும் நனைந்தாக வேண்டும் .

 கொட்டு மழையே கொட்டு . / கொட்டித் தீர்த்துவிடு 

. மழை என்பது மழைதானா , இல்லை 

கண்ணீரின் உருவகமா ? யோசித்துக் கொண்டிருக்கையிலேயே 

இடையில் வரும் இரு வரிகள் ஓர் அழுகைக் கவிதையை

 அழகியல் கவிதையாக்கி விடுகின்றன . **************************************************** 

மழையில் நனைவதும் மழையை ரசிப்பதும் ஒன்றல்ல . ******************************************************** 

 நீலகண்டனைப் பிரசவித்த வலியுடன் 

அலைகள் கரை ஏறுகின்றன . 

வந்தச் சுவடு தெரியாமல் / 

காற்றில் கரைகிறேன் .

 நீலகண்டனின் ஆகாயத்தில் / 

மலைக்குன்றுகள் அசைகின்றன . 

சிவனைப் பார்த்து சக்தி பேசுவதாக ஒரு கவிதை – 

சக்தியில்லையேல் சிவமில்லை என்ற கூற்றினை 

கேலி செய்வதுபோல . 

உன் கோட்டைகள் அதிர / 

வெற்றிமுரசுகள் ஒலிக்க உன்னோடு ஆட ஓடோடி /

 வருகிறேன் … 

என்பவை போன்ற வரிகளில் சக்தியின் ஊழிக்கூத்து 

வெளிப்படுகின்றன .

 [ எழுத்துப் பிழைகள் அவ்வளவாக இல்லாத தொகுப்பில் 

“ உன்னோடு “ என்ற சொல் “ உன்னேனாடு “ என்று உள்ளது 

பிழையா அல்லது வேறு பொருளிலா ? ] 

தோழீ .. வருவான் தானே கவிதையின் சிதையில் கனவுகளுக்கு

 எரியூட்ட ..

 ********************************************** 

 முத்தங்களின் சுமையுடன் நானும் கடலும் . 

பாய்மரக்கப்பலில் வருவதாகச் சொன்ன 

அவனை மட்டும் காணவில்லை . -

 போன்ற வரிகளில் சங்க காலக் கவிதைகளின் 

தாக்கம் தூக்கலாக நிற்கின்றது . ஆனால் அவை காட்டுவதோ 

கணினிக் காலத்தை . படைப்பாளியின் சொற்கிடங்கின்

 ஆழம் காட்ட தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன வரிகள்

 … வெட்கமறியாத காமத்தீயில் / 

கங்கையைத் தெளித்து 

புனிதங்களைப் போர்த்தாதே . 

******************************************** 

 இரவு கேட்காததை / பகலின் வெளிச்சம் கேட்குமோ 

. பனித்துளிகள் அவன் தாகம் தீர்க்குமோ .. ? **********************************************

 வெயிலின் வெக்கையும் / 

நினைவுகளின் புழுக்கமும் தாளாமல் 

எத்தனை முறைதான் / குளித்துக் கரையேறுவது ? ! ********************************************** 

 ஆண்டாளின் தாயின் குரலாக ஒலிக்கும் கவிதையில்

 நிகழ்காலமும் சேர்த்தே கேள்விக்குள்ளாகின்றன . 

கருவறை நெருப்பில் / 

 துளசிமாடம் எரியுதடி . 

ஆண்டாளு .. அடியே ஆண்டாளு .. 

மொத்தத்் தொகுப்பின் சாரத்தையும் படைப்பாளி தன்னுடைய முன்னுரையில் ஒரு பகுதியாக தந்து விடுகிறார் . 

நம் வீடுகளில் கன்னி தெய்வங்களின் காலடி மண்ணில் 

புதைந்திருக்கிறது அவளின் நாட்குறிப்பு பக்கங்கள் – 

என்ற வரிகளை மனத்தில் இருத்தி வாசிக்கையில் 

தொகுப்பின் கனம் புலப்படுகிறது மிகத் தெளிவாக . 

வழக்கமான பெண்ணியக் குரலாக இல்லாமல் 

அழகியலோடு அவலத்தையும் சரியான விகிதத்தில் 

கலந்து நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது

 தொகுப்பு . 

 “ அவள்களின் நாட்குறிப்புகள் “ [ கவிதைத் தொகுப்பு ] 

ஆசிரியர் – புதியமாதவி 

வெளியீடு – அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

 விலை – ரூ 100 / [ முதல் பதிப்பு டிசம்பர் 2020 ] பக்கங்கள் – 88 .

 சென்னை புத்தகக் காட்சி 2021 அரங்கு எண் 264 [ அம்ருதா பதிப்பகம் ] 


#சுப்ரா


மிக்க நன்றி சுப்ரா & வாசிப்போம்  குழுமம்

No comments:

Post a Comment