இனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம்.
சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ் இனக்குழுவும்
நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக வாழ்ந்தக் காலம். இரு தேசத்திலும்
ஓடிய நதி ரோகிணி. நதி நீர்ப் பங்கீட்டில் இரு இனக்குழுவும் சண்டை
போட்டுக் கொள்கிறார்கள். யார் முதலில் நதி நீர்ப் பயன்படுத்துவது, எவ்வளவு
பயன்படுத்துவது இத்தியாதி பிரச்சனைகளில் அடி தடி கொலை.
ஊர்ப்பஞ்சாயத்து கூடுகிறது. சாக்கியர் இனக்குழு பஞ்சாயத்து முடிவுகள்
அம்மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை. 20 வயதுக்கு மேல்
ஆண்மக்கள் அக்குழுவில் உறுப்பினராகை சங்கத்திற்கு கட்டுப்படுவேன்
என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நதி நீர்ப் பங்கீடு
பிரச்சனையில் சாக்கிய இனக்குழுவிலிருக்கும் சேனாதிபதி கோலியாஸ்
மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர் செய்து முடிவு காண வேண்டும்
என்று முடிவு செய்கிறான். சித்தார்த்தனோ அந்த முடிவை எதிர்க்கிறான்.
உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பது தவறு. இரு பக்கமும் தவறுகள்
நடந்திருக்கின்றன.
யுத்தம் எதற்கும் தீர்வல்ல, யுத்தம் இன்னொரு யுத்தத்தை மட்டுமே
விளைவிக்கும் என்று சொல்கிறான்.
சங்கத்தில் ஓட்டெடுப்பு நடக்கிறது.
சித்தார்த்தனின் கருத்தை தோற்கடிக்கிறார்கள்.
இறுதியாக சித்தார்த்தன் சங்கத்தில் பணிவுடன் கெஞ்சி
தன் கருத்தை முன் வைக்கிறான்.
“யாருக்கு எதிரான போர்? நேற்றுவரை நமக்கு நெருக்கமாக
வாழ்ந்த கோலியாஸ்க்கு எதிரான போர் ஏன்? அண்ணன் தம்பிகளாக
வாழ்ந்தவர்கள் நாம்..!’
சித்தார்த்தனை மனு தர்மம் வெற்றி கொள்கிறது.
ஆம்..
மன்னிப்பது பிராமணர் குணம். போரிடுவது ஷத்திரியர் கடமை, வணிகம்
வைசியர்களின் தொழில், இவர்களுக்கெல்லாம் சேவகம் செய்வது
சூத்திரனின் கடமை என்ற புகழ்பெற்ற சட்டம் சித்தார்த்தனை
விரட்டுகிறது.
சங்கத்தின் பெரும்பான்மை முடிவுக்கு மாறாக செயல்பட முடியாது.
சித்தார்த்தம் ஆயுதம் ஏந்தியாக வேண்டும் , போர் செய்தாக வேண்டும்..
இல்லை என்றால் சங்கத்தின் விதிப்படி…
அவன் குடுமபத்து சொத்துகளை (நிலங்கள்) பறிமுதல் செய்து அவன்
குடும்பத்தை ஊர் விலக்கம் செய்வார்கள்.
அல்லது சித்தார்த்தனுக்கு தூக்குத்தண்டனை/நாடுகடத்தல்.
முதலிரண்டும் சாத்தியமில்லை என்பதால் சித்தார்த்தன் மூன்றாவது
முடிவை எடுக்கிறான். அவனைத் தூக்கிலேற்றினால் கோலியஸ் மக்களும்
அரசும் தங்களுக்காக எதிரணியில் ஒருவன் கொலை செய்யப்பட்டான்
என்று எண்ணிவிடுவார்கள்.
எனவே நாடுகடத்துகிறார்கள்..
சித்தார்த்தன் நாடு கடத்தப்படுகிறான்.
மனு, வேதம் இதை எல்லாம் தேடி அலைகிறான்..
உண்மையை அறிந்து அதையே தன் வாழ் நாளில் பரப்புரையாக
கொண்டு வாழ்கிறான்.
மனைவியை மறுமணம் செய்து கொள்ள சொன்னதாகவும்
ஒரு கதை உண்டு. சித்தார்த்தனுக்கு மனைவி குடும்பம் இல்லை
என்று சொல்பவர்களும் உண்டு. அன்றைய சமூகத்தில்
சமூகத்தை அறிவதற்கு உறவுகளை விட்டு பயணிக்கும்
வாழ்க்கையும் இருந்திருக்கிறது..
சித்தார்த்தனின் வரலாற்றை அரண்மனையில் வாழ்ந்தவன் மூப்பு,
பிணி, மரணம் கண்டு பயந்து அதற்கான விடை தேடி தன் காதல்
மனைவி யசோதரையிடம் கூட சொல்லிக்கொள்ளாமல்
இரவோடு இரவாக ஓடிப்போய்விட்டதாக சொல்லிவைத்தார்கள்!
அதையே காலம் காலமாக பாடப்புத்தகத்தில் பாடமாக்கினார்கள்.
அரண்மனை, அரசகுலம், ஷத்திரியன் எப்படி மரணம் கண்டு
அச்சம் கொள்வான் ? என்று நாங்கள் எவரும் கேட்கவில்லை.
எங்களுக்கு அவன் இரவோடு இரவாக ஓடிப்போன கதை
சுவராஸயமானதாக இருந்தது. இருக்கிறது.. எனக்கும் தான்.
அருமையான பதிவிது
ReplyDelete