சித்தார்த்தா..
என்னை மன்னித்துவிடு.
இன்று உன்னை சந்திக்க மறுக்கும் என்னை மன்னித்துவிடு.
உன் மீது நான் கொண்ட தீராக்காதல்
இன்று தோற்றுப்போய்விட்டது.
எல்லாம் துறந்துவிட்டதாய் நீ
அலைந்து திரிந்தாய்,
ஆனாலும் உன்னைச் சந்திக்க அன்று நான் வரவில்லை என்பதை மட்டும்
எப்படிக்கண்டுப்பிடித்தாயே.. அந்தநாள் நினைவிருக்கிறதா சித்தார்த்தா....?
என் விழிகளை உன் நினைவுகள் மறக்கவில்லை என்றால்
உன் போதிமரத்தின் இலைகளில் நானே உன் பச்சையமாய்
இருந்ததை மறுக்கமுடியுமா..
அப்போதெல்லாம் தோற்றுப்போகாத நம் காதல்..
ஏ.. என் சித்தார்த்தா..
நீ அரசாளுவதாக சொல்லும் மண்ணில்
கம்பீரமாக உன் சிலைகளைப் பார்த்த தருணத்தில்
நேபாளத்து பூகம்ப சிதைவுகளைப் போல
சிதைந்து விழுந்தது.
என் காதல் தோற்றுப்போனதற்காக
என் கவிதைகள் கண்ணீர்விட்டன.
காந்தி தேசம் அஹிம்சை ஆயுதங்களைக் கொடுத்தப்போது
உன் புத்ததேசம் என் காதலைக் கொலை செய்தது.
சித்தார்த்தா...
என் புத்திரசோகத்தை நீ அறிவாயோ..?
மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்க என்னை அனுப்பாதே..
யுத்தமில்லா பூமியில் எங்காவது உன்னைச் சந்தித்தால்
அப்போது வருவேன்..
மீண்டும் உன் காதலியாக.
புத்தம் சரணம் கச்சாமி..
No comments:
Post a Comment