Wednesday, October 9, 2013
கண்ணனின் குழலோசையில் மயங்காத எருமைகள்
எருமைமாடுகள் எல்லாம் சோகம் ததும்பும் தங்கள் கதையை
கவிதையாக எழுதிக்கொண்டிருந்தன. நித்தமும் சகதியில்
புரண்டுக் கொண்டிருப்பதையே குளியலாகக் கொண்டிருக்கும்
வாழ்க்கையின் அவலத்தை எருமைகளை விட எவரால் எழுதிவிட முடியும்?
எருமைகளின் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தச் சகதியின் ஈரம் யானைகள் குளித்துவிட்டு வந்ததில் விழுந்த
நீரின் ஈரமல்ல. பன்னிகள் கூட்டமாக காடுகளில் உலவிவிட்டு
வந்து செருமிய எச்சிலில் பட்டுத் தெறித்த ஈரமும் அல்ல.
அந்த ஈரம் எருமைகளுக்கு மட்டுமே உரியது. சகதியில்
இறங்கி முழங்கால் அளவுக்கு சீலையை தூக்கிக் கட்டிக்கொண்டு
நாற்று நடும் பெண்ணுக்கு எருமையின் ஈரம் தெரியும்.
அவள் எருமையை வெறுப்பதில்லை. எருமையின் கவிதைகளை
அவள் வாசித்ததைவிட எருமைகளுடன் பேசிப் பேசி எருமைகளைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களை அவள் தன்
வலி தீர பாடிக்கொண்டுதான் இருக்கிறாள்.
ஆனால் என்ன செய்வது?
மீண்டும் பசுக்களுக்கே வெற்றி உறுதியானது.
பசுவின் பால் வெள்ளையாக இருப்பதை உலகமே வியந்து பாரட்டியதுடன் இது பசுவாக்கும், பார்க்க அழகாக இருக்கிறது,
பால் கொடுக்கிறது என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து ஒரு
டாகுமெண்ட்ரி ஃபிலிம் எடுக்கும் அளவுக்குப் புகழ் சேர்த்துவிட்டார்கள்..
நரேந்திர மோதிக்கு ஒரு ஏஜன்சி இருக்கிறது. அந்த ஏஜன்சி மோதியின் புகழ்ப் பாடுவதில் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறது.
இதைக் கேள்விப்பட்ட எருமை
என்ன விலை கொடுத்தேனும் அந்த ஏஜன்சியின் கஸ்டமராக
வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.
எவ்வளவோ எருமையிடம் சொல்லிப்பார்த்தேன். எருமை
கேட்கத் தயாராயில்லை.
எருமைக்கு எப்படியும் புகழ்ப்பெற்ற பத்திரிகைகளில்
கவர் ஸ்டோரியாக வர வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.
எருமையிடம் கேட்டுப் பார்த்தேன் உன் ஒரே காதல் கணவன் எமராஜனை நீ வெறுத்து ஒதுக்க வேண்டும்.
அவன் உனக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறான் என்று
நீ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று
முதல் அட்வைஸ் சொன்னேன்.
அய்யய்யோ.. எங்க எமராசாவை அப்படி எல்லாம் குறை சொல்ல முடியாதே! ரொம்ப நல்லவராச்சே, முடியாது என்று
மறுத்துவிட்டது..
'ஃபேர் அன்ட் லவ்லி போட்டு உன் கலரை மாத்தி ஆகனும்.
இது என்ன கறுப்பு! அவலட்சணம்.. உன் கலர் தான் உனக்கு எதிரா இருக்கும் பிரச்சனையே! மைக்கல் ஜாக்சன் மாதிரி
உன் தோல் நிறத்தை மாற்றி ஆபரேஷன் செய்து பசுக்களின்
தோலை உன் மீது ஒட்டிவிடலாமா? கேட்டேன்.
'அய்யய்யோ வேண்டாமே... அப்புறம் எங்க பெருமை எல்லாம்
பசுவின் பெருமையாகிவிடும்... முதலுக்கே மோசம் வந்திடும்..
வேறு வழி சொல்லுங்கள்" என்றது எருமை.
இருந்தாலும் இந்த எருமைக்கு தன் கறுப்புக்கலரின் மீது இவ்வளவு அசட்டுத்தனமான பெருமை இருக்க வேண்டாம்
என்று மனசில் நினைத்துக் கொண்டேன்!
எருமை கொஞ்சம் புத்திசாலியாக இருப்பதாகவே பட்டது.
சரி, கவனமாக பேச வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டேன்.
சரி, எருமையைப் பற்றி ஒரு டாகுமெண்ரி எடுத்து
டிஸ்கவரி சேனலிலோ அல்லது அனிமல்ப்ளாநெட்
சேனலிலோ போட்டு ஒளிபரப்பி விட்டால் நம் எருமையின்
பெருமை உலகம் எங்கும் பரவி விடும். அதன் பின்
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா ஐரோப்பா
கண்டத்திலும் எருமை தான் கவர் ஸ்டோரியாகும் என்று
கற்பனை செய்துக் கொண்டு எருமையைப் பற்றி
டாகுமெண்ரிக்கு தயார் ஆனோம்.
எருமை குட்டையில் குளித்துவிட்டு எழுந்துவரும்,
அதை அப்படியே க்ளோஸப்பில் காட்ட வேண்டும்.
இதுதான் என் குளியல் என்று சொல்லிவிட்டு
எருமை ஓவென்று அழ வேண்டும், அந்தக் காட்சியைக்
காட்டும் போது அப்படியே பசு எப்படி ஓடும் நதியிலோ
குளத்திலோ குளிக்கிறது என்பதையும் மற்ற பிராணிகள்
ஓடும் நதியில் குளிப்பதையும் காட்ட வேண்டும் என்று
நினைத்தேன். எருமை குட்டையில் குளித்துவிட்டு
முகம் நிறைய சந்தோஷத்துடன் அசைந்து தேர் போல
எழுந்து வந்தது.
எவ்வளவோ சொல்லியும் குட்டையில் குளித்துவிட்டு
அழ வரவில்லை எருமைக்கு.
எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது, திஸ் இஸ் வாட்
ஐயம் என்று திமிராக வேறு எருமை சொல்லி
என்னை வெறுப்பேற்றியது.
அந்த ஐடியாவையும் கை கழுவி விட்டேன்.
எருமையிடம் நீ எமனை டைவர்ஸ் செய்துவிட்டு சிவனை
லவ் பண்ணினால் பரபரப்பான செய்தி ஆகிவிடும் என்று
சொன்னேன். கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தது எருமை.
பிறகு தலையை ஆட்டிக்கொண்டு
ம்கூம் முடியாது; என்றது.
என் எமனிடம் இல்லாத என்னது சிவனிடம் இருக்கு,
அவனை லவ் பண்ண?
ஊருக்கு ஒரு வப்பாட்டி வச்சிக்கிர ஆளு அவன்,
எனக்கு அவனை லவ் பண்ற மாதிரி கற்பனை செய்யக் கூட
முடியல என்று கையை விரித்துவிட்டது.
எருமை எழுதி இருக்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன், வயலில் சகதியில் இறங்கி நாற்று நடும் பெண்,
அவள் தாலாட்டு, வயக்காட்டில் அவள் பெத்தெடுக்கும் பிள்ளை,
குளக்கரை ஓரம் காரில் வந்து இறங்கி கறுப்புக் கண்ணாடியைக் கழட்டாமல் புகைப்படம் எடுக்கும் பெண்மணி , எதைப் பற்றியும்
கவலைப்படாமல் இருக்கும் ஞானயோக சித்தியை அடைவது எப்படி என்று இப்படியாக என்னவெல்லாமோ எழுதி வைத்திருந்தது அந்த எருமை. அந்த எருமையின் எழுத்தில்
எங்குமே ஒரு மருந்துக்கு கூட இல்லை...
கண்ணனின் குழலோசையும் அந்த இசையில் மயங்கிய ஆயர்குல ஆடு மாடுகளும் நிர்வாணமாக நின்ற கோபியர் கதைகளும்.
ஆமாம் ... கண்ணனின் குழலோசையில் மயங்கியதாக
எருமைகள் காட்டப்படவே இல்லையே ...
ஏன்?
அப்போது ஆயர்பாடிகளில் எருமைகள் இல்லையா?
எருமைகள் எங்கிருந்தன அப்போது?
எனக்கு அழுகை வந்தது.
எங்கிருந்தன என் எருமைகள் அப்போது?
காற்றில் கலந்து வந்த கண்ணனின் குழலோசையை
என் எருமைகளுக்கு எட்டாமல் ஆக்கியது யார்?
கண்ணனா...? கண்ணணின் ஆயர்பாடிக் கூட்டமா?
கண்ணனின் கீதையைக் கொண்டாடும்
நீங்களா?
யார்?
எருமைகளைப் பற்றிய என் தேடல் இருக்கட்டும்.
நேற்று எனக்கு அறிவுரை என்ற பெயரில்
எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருவர் எழுதியிருந்த
டிப்ஸ்கள் சில... (எருமைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்காதீர்கள். எருமையைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது இதுவும் வந்தது என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை
என்று சத்தியமாக சொல்கிறேன்)
பேரும் புகழும் அடைய ....
இலக்கிய உலகத்தில் பிதாமகன்களின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும், நெருக்கமாக இருக்க வேண்டும்
அதிலும் குறிப்பாக சில பதிப்பகங்களுக்கும் பத்திரிகைகாரர்களுக்கும்!
(இதெல்லாம் நமக்குத் தெரிந்தச் செய்திதான்.
வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பலர் வெவ்வேறு
பெயர்களுடன் தாங்கள் எழுதியிருப்பதற்கு தாங்களே
மறுவினை/எதிர்வினை எழுதிக் கொண்டே இருக்கின்ற
இன்னொரு டெக்னிக்கும் பலர் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இப்படி எழுதிக்கொண்டிருப்பவர்களில் பலர்
இந்தமாதிரி எழுதப்படுவதை கண்டுபிடிக்க முடியும் என்பதை
அறிந்துதான் எழுதுகின்றார்களா? தெரியவில்லை!)
உங்களுக்குத் தெரிந்ததாக நீங்கள் சொல்லும் பெரியமனிதர்கள்
எல்லோரும் வெஸ்ட் பேக்கேஜ். அவர்களை வைத்து உங்களுக்கு எதுவும் நடக்காது. ..
உங்கள் கணவர் வேறு அநியாத்திற்கு நல்லவரா இருப்பதாக
சொல்லிக்கொள்கிறீர்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை மாதவி.
அப்படி எல்லாம் இருக்கிறமாதிரி ஒரு எழுத்தாளர் சொல்லப்பிடாது! ஆண்கள் என்றைக்காவது பெண் விடுதலையை ஆதரித்ததாக உண்டா? உங்கள் பெரியார் என்ன சொல்லி இருக்கிறார்? நினவிருக்கிறதல்லவா? எனவே உங்கள் கணவர் ரொம்ப கொடுமைக்காரர், நீங்கள் எழுதுவதை அவர் ஆதரிக்கவில்லை, அப்புறம் நீங்க பாத்ரூமில் உட்கார்ந்து
லேப்டாப்பில் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்ல வேண்டும்,
நீங்க லேட்டஸ்ட்டா எழுதியிருக்கும் ஒரு கதையை வாசித்தேன்.
ஒரு பெண் தொழிலாளி பற்றிய கதை. அதில் வீட்டிலும் வேலைப்பார்க்கும் இடத்திலும் அவள் பட்ட கஷ்டங்களை
எழுதி இருக்கின்றீர்கள். அதில் நீங்கள் தலைமுடியை பிடித்து
இழுத்து இடுப்பில் உதைத்தான் என்ற வரிகளில் தலைமுடி
என்பதற்குப் பதில் 'முலை' என்றும் இடுப்பு என்பதற்குப் பதில்
"யோனி" என்றும் மாற்றிவிட்டேன், இப்போது வாசித்துப் பாருங்கள் கதை சூப்பராக இருக்கிறது..
(தலைமுடியைப் பிய்த்துக் கொண்டேன். கதையை சூப்பர் கதையாக்கும் உத்திகள் இப்படி எல்லாம் இருக்கிறது என்று
எவரும் சொல்லவில்லையே என்று!)
ஒரு நேர்க்காணலுக்கும் ஏற்பாடு செய்கிறேன்.. அந்த நேர்க்காணலில் நீங்கள் தாராவியில் ரொம்பவும் கஷ்டப்பட்டதாகச் சொல்ல வேண்டும், அப்புறம் உங்கள் கணவர் எப்படி எல்லாம் உங்கள் எழுத்துக்கு எதிராக இருந்தார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும், தேவைப்பட்டால் உங்கள் நண்பர்கள்
யாராவது உங்களுக்கு ரகசியமாக ஆறுதலாக இருந்ததாகச் சொல்லவேண்டும். உங்கள் நண்பருக்கும் அதனால் லாபம் தானே! அதன் பின் தாராவியில் கடற்கரையோரம் இருந்த அந்தக் குடிசையின் மாலா (குடிசைப்பகுதியின் மாடி) விலிருந்து நீங்கள்
பார்த்துக்கொண்டிருந்த வோப்பன் தியேட்டர் தான் நீங்கள் பார்க்க கிடைத்த உலகம் என்று சொல்ல வேண்டும்.
என்று அந்தக்கடிதம் நிறைய வழிமுறைகளை எழுதியிருந்தார்.
பல பிரபலங்களை உருவாக்கியவர் எழுதியக் கடிதம் அது.
அதனால் தான் அதைப் பற்றி எழுதியாக வேண்டிய
நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது!.
நண்பர்களே... அக்கடிதத்தில் எழுதி இருக்கும் எந்த வழிமுறைகளையும் என்னால் பின்பற்ற முடியாது!
ஏனேனில் அம்மாதிரியான பொய்முகங்களை அணிய வேண்டிய
அவசியம் எனக்கில்லை.
நான்குத் தலைமுறையாக இந்த மும்பை
மண்ணில் வாழ்ந்தக் குடும்பப் பின்னணியில் சமூக வெளியில்
தாராவியின் ஒவ்வொரு சந்தும் என்னைப் பற்றி சகலமும் அறியும். என்னைப் பற்றி யாரும் குறும்படம் எடுக்கவில்லையே என்றெல்லாம் எனக்கு வருத்தப்பட நேரமில்லை.
தலையில் இட்லி பாத்திரத்துடன் இரண்டு தூக்குச்சட்டியில் சட்னியும் சாம்பாரும் வைத்துக்கொண்டு விற்றுப்பிழைக்கும் என் அண்ணன் தம்பிகள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல இலட்சம் இட்லிகளை விற்கும் அவர்களைப் பற்றி யாராவது குறும்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
தாராவியின் ஒவ்வொரு முகமும் என்னில் புதைத்து வைத்திருக்கும் கதைகள் பலகோடி. என் மக்களுக்கு நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்காக ஓடவே எனக்கு நேரமில்லை.
எப்படி புகழ் அடைவது?
இன்னாருக்கு இன்னார் எழுதிக் கொடுக்கிறார்.என்று தண்ணி அடித்து விட்டு உலறும் கிசுகிசுக்கள்
ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதும் கவர் ஸ்டோரி
அதற்குப் பின்னால் இருக்கும் சில காரணிகளும் காரணங்களும்..
நீங்கள் அறியாதது அல்ல.
தொடர்ந்து என்னிடம் புலம்பித் தீர்க்கும் உங்கள் கவலை
எனக்குப் புரிகிறது.
பாவம் நீங்கள் ..
உங்கள் ஆதங்கத்தை நான் புரிந்து கொள்கிறேன்.
ஆனால் உங்களுக்கு எப்படி புரியவைப்பது..?
வாழ்க்கை உங்களுக்கு ஒலிம்பிக் பந்தயம்.
வாழ்க்கை எனக்கும் என் எழுத்துகளுக்கும் என் மக்களுக்கும்
தங்கள் இருத்தலுக்காக எடுத்து வைக்கும் அடி.என்பதை.
(இதைக் கட்டுரைப் பிரிவில் சேர்க்கவா அல்லது
கதைப் பிரிவில் சேர்க்கவா என்று குழப்பமாக இருக்கிறது.
வாசிப்பவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன்)
" எருமைகளின் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தச் சகதியின் ஈரம் யானைகள் குளித்துவிட்டு வந்ததில் விழுந்த
ReplyDeleteநீரின் ஈரமல்ல. பன்னிகள் கூட்டமாக காடுகளில் உலவிவிட்டு
வந்து செருமிய எச்சிலில் பட்டுத் தெறித்த ஈரமும் அல்ல.
அந்த ஈரம் எருமைகளுக்கு மட்டுமே உரியது. சகதியில்
இறங்கி முழங்கால் அளவுக்கு சீலையை தூக்கிக் கட்டிக்கொண்டு
நாற்று நடும் பெண்ணுக்கு எருமையின் ஈரம் தெரியும்.
அவள் எருமையை வெறுப்பதில்லை. எருமையின் கவிதைகளை
அவள் வாசித்ததைவிட எருமைகளுடன் பேசிப் பேசி எருமைகளைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களை அவள் தன்
வலி தீர பாடிக்கொண்டுதான் இருக்கிறாள்.
ஆனால் என்ன செய்வது?"
really wonderful lines Madhavi. that s a poetry .. poetry of neglect....the pure narration of today.. great ma..
Ammu
Re: [தமிழ் உலகம்] PuthiyaMaadhavi:கண்ணனின் குழலோசையில் மயங்காத எருமைகள்
ReplyDeletesulaiman annan
Schedule cleanup
12-10-2013
[Keep this message at the top of your inbox]
Groups
To: tamil_ulagam@googlegroups.com
Picture of sulaiman annan
எருமைப் பிறவியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
மிருகங்கள் அனைத்தின் முகபாவங்களும் எப்போதுமே சோகமாக இருப்பதாகவே தெரியும்;
என்றாலும் எருமையின் முகபாவம்மட்டும் எதோ தவத்தில் லயித்திருப்பதுப் போலவே எனக்குத்
தோன்றும்; அது எனது பிரமையாகக்கூட இருக்கலாம்.
தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் எருமை பால்தரும் ஒரு வளர்ப்புப்
பிரயாணி அவ்வளவே!
அண்டை மாநிலமான கேரளத்தில், எருமை பால் கொடுக்கும்; ஏர் உழும்;
இறைச்சியைக் கொடுக்க வெட்டுப்பட்டு
இறந்து போகும்...; இனி, உபயோகமாகாது என்பதாலோ-பணத்தேவையின் காரணமாகவோ;
தமிழகத்து எருமைகள் விலையாகி, கேரளத்துக்கு நெருக்கியடித்து நின்றபடி
கனரக வாகங்களில் யாத்திரையை
மேற்கொள்ளும்!
சாலை சந்திப்புகளில் போக்குவரத்து-காவல் அய்யனார்களை தரிசித்து வணங்கி
தட்சணைகளும் வழங்கும்..!
எருமை விற்ற காசு கத்தாது!
அப்போது எருமைகளுக்குத் தெரியாது...; நாம் பல துண்டுகளாகி பல்வேறு வடிவம்
கொண்டு மோட்சம்
அடையப் போகிறோமென்று..!
நிற்க,
திருநெல்வேலியில் மூன்று மனித எருமைகள், கல்லூரி முதல்வரை குத்திக்
கொன்றிருக்கின்றன;
அரக்கோணத்தில் மூன்று எருமைக் கன்றுகள் தலைமையாசிரியரை உதைத்திருக்கின்றன!
கீதாச்சாரியனின் உபதேசத்தால் அர்ச்சுனனின் தலை தப்பியது..
அது மகாபாரதத்தோடு சரி; அதற்குப்பின் எந்த மாமனிதனும் நமது பாரத்தத்தில்
தப்பவில்லை!
அதனால்தான் மகாத்மாவும்கூட குண்டடிபட்டு குடை சாயும்போது..,
கண்ணாவென்றழைக்காமல் 'ராமா'வென்று அபயக்குரல் கொடுத்தாரோ..?
(அப்படி அவர் அழைக்கவேயில்லையென கோபால்கோட்சே ஒரு பத்திரிக்கை பேட்டியில்
சொன்னார்..
அது வேறு விசயம்)
ஒருவேளை, ஏகலைவனின் கட்டைவிரலை பறிக்காமல் இருந்திருந்தால் தப்பியிருந்திருப்போமோ!?
ஏகலைவனின் சாபம்தான் தொடர்கிறதோ..?!
'இனி இவன் வில்லையேத் தொடக்கூடாதென' செய்த குருவின் தந்திரம் சீடனின்
சாபமாகிவிட்டதோ!?
அதனால்தான் இன்றைய குருமார்கள் யாவரும் உதையாபிசேகம் பெருகிறார்களோ!?
சரி, இதுவெல்லாம் போகட்டும்... அவதாரங்கள் என்றால் அப்படித்தான்; உயர்குல
காத்திரபாத்திரங்கள் என்றால்
அப்படித்தான்; அதில், ஏதேணும் நல்ல நோக்கங்களோ-படிப்பினைகளோ இருக்கலாம்;
நமக்கு அதுவெல்லாம் புரியாது!
நமக்கு புரிகிறமாதிரி தெளிவாக இரட்டைவரிகளில் 'குறள்' வழியே பாதை
அமைத்துக் கொடுத்துவிட்டுப் போனாரே...
வள்ளுவர் என்ற பெருந்தகை...! அவரை மறந்தோமல்லவா..! அந்தப் பாதையிலிருந்து
மாறினோமல்லவா..!
அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ..!?