Saturday, September 17, 2011
தமிழ்த் தேசியமும் தலித்தியமும்
பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் அண்மையில் நடந்திருக்கும் சாதிக்கலவரம்
மீண்டும் சில தவிர்க்க முடியாத ஐயப்பாடுகளை என் போன்றவர்களுக்கு
ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் மரண தண்டனைக்கு எதிரான எழுச்சியில் அனைத்து தமிழர்களும்
ஒன்றாகக் குரல் கொடுத்ததும் தமிழக அரசும் அதற்கேற்ப இசைவாக நடந்த
சூழலில் தான் இச்சாதிக்கலவரம் குறித்த ஒரு மூன்றாவது பார்வையும் தேவைப்படுகிறது
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் அக்னிக்குஞ்சாக வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் உணர்வு
இம்மரண தண்டனைக்கு எதிரான அணிவகுப்பில் திரண்டு நின்ற போதுதான்
தயிர்க்கடையும் போது தாழி உடைந்தது போல இக்கலவரம் திட்டமிடப்பட்டே
வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
சாதியம் தமிழ் மண்ணில் இல்லை, தமிழர்களிடன் இப்போதெல்லாம்
சாதி வெறி இல்லை என்று கற்பனையில் கூட எழுத முடியாத யதார்த்தம்
முகத்தில் எச்சிலைத் துப்பிக்கொண்டே தான் இருக்கிறது என்றாலும்
அதையும் தாண்டி துடைத்துக்கொண்டு அணிவகுத்தால் எங்கேயோ
யாருக்கோ அந்த அணிவகுப்பு உகந்ததாக இருப்பதில்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழனின் அணிவகுப்பை
வெகு எளிதாக உடைப்பதற்கு ஒவ்வொரு தமிழனிடமும்
சாவுக்குப் பிறகும் தொடரும் சாதி கொடிய ஆயுதமாக அவனை
வெட்டி வீழ்த்திவிடுகிறது..
மூவரின் மரண தண்டனைக்காக நேற்றுவரை ஒரே அணியில் நின்றவர்கள்
இன்று எதிரெதிர் அணியில், பகைவர்களாக.. !
தமிழ்த்தேசியம் தலித்துகளுக்கு பகைவனா நண்பனா?
தமிழ்த் தேசியத்திற்கும் தலித்தியத்திற்குமான உறவு நட்பு முரணா? பகை முரணா?
ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதிதிராவிடன் உயர்ந்தவனா????
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழ்த்தேசியவாதிகள் மட்டுமே தங்கள்
வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் தங்கள் அடையாளத்தை
உறுதிப்படுத்தியே ஆகவேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.
நாணயத்தின் இன்னொரு பக்கம் போல
தமிழன் என்ற அடையாளத்தின் இன்னொரு பக்கம் சாதி தான் என்றால்
தலித்துகளுக்கு தமிழனாக இருந்தால் என்ன? இந்தியனாக இருந்தால் தான் என்ன
குடி முழுகிப்போய்விடும்?!
ஊர்த்தட்டிப் பறித்திட
உயர்சாதி என்பார் இஃதை
மார்தட்டிச் சொல்வேனடி - சகியே
மார்தட்டிச் சொல்வேனடி!
சாதி ஒழிந்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் - மற்ற
பாதி துலங்குவதில்லை
சாதிக் களைந்திட்ட ஏரி- நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப்பிணிப்பற்ற தோளே-நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்-
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
No comments:
Post a Comment