Friday, August 6, 2010
எழுதாதக் கவிதை
அம்மா..
எங்கே போகிறாய்?
எனக்குத் தெரியும்
என்னை உன்னிலிருந்து
எடுத்து வீசப் போகிறாய்..
அம்மா..
எத்தனைக் கவிதைகள் எழுதியிருப்பாய்..?
என்னை மட்டும் ஏனம்மா
எழுத மறுக்கின்றாய்?
நான் உன் எழுத்தல்லவா
எனக்கு மட்டும் ஏன் உன் பக்கங்கள்
மூடிக் கொண்டன.?
எத்தனைச் சிந்தனைகளை
உன்னில் உருவாக்கி
மண்ணில் விதைக்கப் போராடுகிறாய்?
உன் உயிரணுவில்
கலந்துவிட்ட என்னை மட்டும்
ஏனம்மா..
கல்லறை இல்லாத கழிவறையில்
தள்ளுகின்றாய்..
அம்மா..
நான் உன் சிந்தனைத் துளி அல்லவா..
புரட்சியின் மனித ஆயுதமாக
என்னை மாற்ற வேண்டிய நீ...
மருத்துவச்சியின் கூராயுதங்களால்
என்னை வெடித்து
ரத்தப் பிண்டமாய்
ஏன் சிதறடிக்கப் போகிறாய்?
அம்மா..
இரண்டுக்கு மேல் வேண்டாம்
என்பதால் மட்டுமே
உன் முகம் காண
தடைச் சட்டமா?
உண்மையைச் சொல்..
இரண்டுக்கு மேல் வேண்டாம் என்றால்
ஏனம்மா நான் உன்
மகனா மகளா என
அறிந்துவிட துடித்தாய்?
என்னை அறியும்
சோதனைச் செய்யாமலேயே
என்னை நீ
கலைத்திருக்கலாம்..
அப்போது-
ரத்தப் பிண்டமாய்
சிதறும் போது மட்டும்தான்
வலித்திருக்கும்.
இப்போது..
அம்மா...
பிறப்பின் பிரபஞ்சமே வலிக்கிறது
உன் முகம் பார்க்கத் துடித்த
என் கவிதை
நீ வாசிக்காமலேயே
கிழிந்துப் போகிறது
தாய்ப் பார்க்காத முகம்
தமிழ்ப் படிக்காத எழுத்து
நீ எழுதாதக் கவிதை..
இதோ...
மரணத்தைக் கூட அனுபவிக்காத
வேதனையில்
மறைந்துவிட்டது..---
:)
ReplyDeleteவலிக்கிறது.....
ReplyDeleteஅதுவும் தமிழ் சமுதாயம் தானே, இன்னும் இது போல சுருக்கான வரிகளால் செருப்பால் அறையுங்கள்.
ReplyDeleteஅதுவும் தமிழ் சமுதாயம் தானே, இன்னும் இது போல சுருக்கான வரிகளால் செருப்பால் அறையுங்கள்
ReplyDeleteமரணத்தைக் கூட அனுபவிக்க முடியாத வேதனை...
ReplyDeleteஅருமையான வரிகள்