Wednesday, August 4, 2010
நெல்லிக்கனி
என் நண்பனே,
எங்கே நீ ஒளிந்து கொண்டாய்?
துயரங்கள் சுமையாகும் போது
உன் தோள்களைத் தேடுகின்றேன்.
சுமைகளைத் தூக்க அல்ல
சுமைதாங்கி இளைப்பாற.
பூமி உருண்டையில்
நாம் மீண்டும் சந்திப்போம்- என்றாய்.
பூமி உருண்டை
என்பது உண்மைதான்.
ஆனால் நம் சந்திப்பு மட்டும்
எப்படிப் பொய்யானது?
வேண்டியவர்கள்
வேண்டாதவர்கள்
பெரியவர்கள்
சிறியவர்கள்
எல்லோருடனும்
பேசி- சிரித்து
உண்டு - உறங்கி
ஏறி - இறங்கி
பயணம் செய்து
களைத்துப் போய்
கண்மூடி..
கனவில் என்னுடன்
நீ பயணம் செய்வாய்
என்ற நப்பாசையில்.
ராக்கி கட்டி
நம் நட்பை
சகோதரப் பாசமாக
பரிணாமம் செய்ய நினைத்தேன்.
நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்.
நட்பு மேலானது
என்பதால் தான்
எட்டாத வானத்தில் நீ
உன்னை எட்டிவிடும்
கனவுகளில் நான்.
நாம் மூவேந்தர் வளர்த்த
தமிழ் என்றாய்.
மூவேந்தர்களிடன்
நட்பு வாழ்ந்ததில்லையே
என்றேன்.
நீயோ
-யார் அந்த மூன்றாவது வேந்தன்?-
என்றாய்.
முத்தமிழ் என்றும்
பிரிந்ததில்லை
என்றேன்.
ஆம்.
நான் இயல்
நீ இசை
என்றாய்.
நம் நட்பு நாடகம்
என்று
சொல்லாமல்
விட்டுவிட்டாய்!
நான் அவ்வை
நீ என் அதியமான்
என்றேன்
எங்கே என் நெல்லிக்கனி?
என்றாய்.
தொலைந்துப்போன
நெல்லிக்கனியைத்
தேடி அலைகின்றேன்.
(என் கவிதை நூல் - ஹேராம்- தொகுப்பில்
நெல்லிக்கனி கவிதையில் சில வரிகள்..)
No comments:
Post a Comment