Tuesday, December 16, 2008
கண்ணீர்த்துளிகளின் கடைசிப்பக்கம்
இயல் தமிழ் தந்தை - தமிழர்
இதயத்து வேந்தன்
காஞ்சியின் கவிதை - தமிழர்
காத்திருந்தக் கனவு.
நாடகச்சோலை - கூத்து
நடனமாடும் மின்னல்
அரசியல் வானம் -அவனுக்குள்
ஆயிரம் சூரியன்
காவியம் படைக்காத
கம்ப ரசம்
வேலைக்காரி பார்க்காத
பணத் தோட்டம்
தீ பரப்பும்
சந்திரோ தயம்
ஆரிய மாயை
பிணி தீர்த்த
திராவிட மருந்து
பகுத்தறிவு விருந்து .
இந்தியக் கோட்டையில் -இவன்
எழுந்து நின்ற போது
இமயம் இவனை
அந்நாந்துப் பார்த்து
அதிசயித்துப் போனது.
இவன் - உலகின்
எட்டாவது அதிசயம்.
இந்து சாம்ராஜ்யம் -இவன்
எழுத்து முனையில்
பொடிப் பொடியானது
என்றாலும்
திருமூலருக்கு
இவந்தான் தேர்ப்ப்பாகன்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
திருமந்திரம்
இவன் திருநா தொட்டப்பின்னே
பொதுமந்திரமாகி
புதுமந்திரமானது
ஒரு புதிய சகாப்தம்.
பூமி உருண்டையை
புரட்டிப் போடும்
வானம்பாடிக் கவிஞருக்கெல்லாம்
இவனே வாத்தியார்.
"தம்பி" என்ற
ஒற்றைச் சொல்லால் - தமிழ்
உலகையே அளந்த
'வாமந' அவதாரம்.
அடடா.. மன்னித்துவிடுங்கள்
இவன் அவதாரங்களை வென்ற
அதிசயப் பிறவி.
ஈரோட்டு போர்முரசே -திராவிடர்
ஈடில்லா தமிழ்முரசே
நினைவிருக்கிறதா.. அண்ணா..
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
கடைசிப் பக்கம்
'தலைவர் அவரே என்றாய்
பகை வெல்லும்
துப்பாக்கி ஒன்றே என்றாய்'
அண்ணா..
ஈரம் உலராத
கண்ணீர்த்துளிகளை
உன் இமைகளுக்குள்
புதைத்துவிடு.
இன்று-
ஊரெல்லாம் தலைவர்கள்
ஒவ்வொரு நாளும்
புதிது புதிதாகப் பறக்கும்
கழகக்கொடிகள்
இதயக்கனிகள்
அத்தனையும் உன் பெயரால்.
நித்தமும் தொடரும்
அறிக்கை யுத்தங்கள்
தொலைக்காட்சி சாம்ராஜ்ய
அடாவடிச் சண்டைகள்
வாரிசுகளின் பனிப்போர்
அண்ணா ..
காலம் எழுதாமல் விட்ட
கண்ணீர்த்துளிகளின்
கடைசிப்பக்கம்..
அண்ணா..
'எதையும் தாங்கும் இதயம் உன்னிதயம்' என்று
எவர் சொனனாலும்
நம்ப வேண்டாம்
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
சாட்சியாய்
சத்தியமாய்ச் சொல்லுகிறேன்
'இதையும் தாங்க உன்னால் முடியாது அண்ணா"
புறநானூறு படைத்த
சங்கத் தமிழனை
எத்தனைக் கடிதங்களில்
எழுதி எழுதி வளர்த்தாய்
அத்தனையும் மொத்தமாக
கடல்தாண்டி தெரிகிறது
தெற்கே " தமிழன்படை"
எட்டிப்பார்..
-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு-
அண்ணா
உன் கண்ணீர்த்துளிகளால்
மீண்டும் எழுது
'தம்பி உடையான் சிங்களப் படைக்கு அஞ்சான்'
'வெற்றி நமதே" என்று.
No comments:
Post a Comment