Monday, February 11, 2008
கறுப்புக்குதிரையில் கவிதைகளின் ஊர்வலம்
மும்பையில் காலாகோடா (Gala godha) -
கறுப்புக்குதிரை என்ற பெயரில் ஒவ்வொரு
ஆண்டும் நிகழும் கலைத்திருவிழா இந்த
ஆண்டு கடந்தவாரம் மிகச்சிறப்பாக
நடைபெற்றது. (02/2/2008 முதல் 10/2/2008
வரை)
நாட்டுப்புற கலை முதல் மேற்கத்திய இசை
வரை எல்லாம் பல்வேறு அமைப்புகளின்
உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும்
நடைபெறுகிறது. இந்த மும்பை மாநகரத்தில்
வாழும் மாநகரக்கவிஞர்களை அழைத்து
இந்த மாநகரத்தைப் பற்றிய கவிதைகளை
வாசிக்கும் ஒரு நிகழ்வு டேவிட் சாசன் நூலக
பூங்காவில் பனிவிழும் முன்னிரவில் 100
முதல் 150 வரை எழுத்தாளர்கள் கூடி இருக்க
ஆங்கிலத்திலும் இந்தியிலும் மராத்தியிலும்
விரும்பினால் அவரவர் தாய்மொழியிலும்
வாசிக்கும் அனுபவம் கொஞ்சம்
வித்தியாசமானது.
ஆனால் ஒவ்வொரு முறையும் இம்மாதிரி
அனுபவங்களில் சின்னதாக ஒரு பெருமிதம்
எற்படும். எல்லா கவிஞர்களும் கிட்டத்தட்ட
ஒரே நேர்க்கோட்டில் நிற்பது தெரியும்.
அன்றும் அப்படித்தான்.
09/2/2008 மாலை 6 முதல் 7 வரை கவிதை
வாசிப்பின் முதல் பகுதியில் என்
கவிதைகளுக்கான நேரம்
ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வுக்கு என்று கவிதை எழுத
நேரமில்லை. ஏற்கனவே நான் எழுதியிருந்த
இருகவிதைகள் அந்த நிகழ்வுடன் மிகவும்
தொடர்புடையதாக இருந்ததால் அந்த இரு
கவிதைகளையும் வாசித்தேன்.
(ஆங்கிலத்தில் தான்) என்னதான்
ஆங்கிலத்தில் வாசித்தாலும் என்னவோ
அந்தக் கவிதையின் ஒட்டுமொத்த
ஜீவனையும் கொடுத்த மனநிறைவு
ஏற்படுவதில்லை. இம்மாதிரி நிகழ்வுகளுக்குப்
பின் இப்படி ஒரு மனக்குறையும்
அவஸ்தையும் ஏற்படுவதைத் தவிர்க்க
முடிவதில்லை.
எனக்காக என் கவிதைகளை இதோ
சத்தமாக வாசிக்கப்போகிறேன்!
(1)
மாநகரக் கவிதை
--------------------
எப்போது ஏறலாம் ?
எப்போது வேண்டுமானாலும் ஏறலாம்.
எப்போதும் இருக்கும்
எங்கள் மாநகர் வண்டியில்
மனிதர்களின் மந்தைக்கூட்டம்.
ஏறுவது மட்டும்தான் என்வசம்
இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய்
என் பயணம்.
அடிக்கடி இறங்கும் இடம் கூட
என்னால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சரியான பக்கத்தில் நின்றாலும்
சரியான நேரத்தில் சென்றாலும்
சரியான இடத்தில் இறங்குவதற்கு
உத்திரவாதமில்லை.
கஞ்சியில் உலர்ந்து
கடை இஸ்திரியில்
காஸ்ட்லியாக நடக்கும் காட்டன்கால்கள்
கசங்கி நொறுங்கி
மரக்கால்களூடன் நொண்டியடிக்கும்
கம்பீரநடையில்
கண்துஞ்சாமல்
வெற்றியை நோக்கி வீறுநடைபோடுகிறது
என் மாநகரத்தின் மனித வெளிச்சங்கள்.
லிப்ஸ்டிக்கில் சிவந்த உதடுகள்
எப்போதும் தூங்கிவழியும் சன்னல்
இருக்கைகள்
திறந்தவெளி முதுகுகளுடன்
போட்டிப்போடும் செழிப்பான மார்புவெளிகள்
எப்போதும் தாதர் ஸ்டேஷனில் இறங்கக்
காத்திருக்கும்
காய்கறிக்கூடைகள்
ஏறி இறங்கும் பூக்காரிகள்
மார்புச்சீலை மறைக்காத
பால்குடிக்குழந்தைகள்
போகிற வழியில் உட்கார்ந்திருக்கும்
மூட்டை முடிச்சுகள்
நைலான் புடவைக்குள்
அடங்க மறுக்கும்
அரவாணிகளின் சதைத்துடிப்புகள்
தொப்புள் வளையங்கள் சிரிக்க
செல்போனுடன் ஜனித்துவிட்ட
இளங்குமரிகள்
இவர்களுக்கு நடுவில்
எங்காவது
தொங்கிக்கொண்டிருக்கும்
என் முகம்!
மீன்கூடையின் கவிச்சல்
வாடாபாவுடன் கலந்து
மல்லிகைப்பூவில் உரசி
குளித்தவுடன் தடவிக்கொண்ட
வாசனைத்தைலத்துடன்
வியர்வையாய்
மெல்லிய உள்ளாடையை ஈரப்படுத்தும்
சேச்சியின் தோள்களுக்கும்
மவுசியின் தொடைகளுக்கும் நடுவில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்கும் இருக்கை.
அந்த இருக்கையில்
எப்படியும் எழுதிவிட வேண்டும்
இறங்கும் இடம் வருவதற்குள்
எனக்கான
என் கவிதையின் இருத்தலை.
------
(2)
புத்தக அலமாரி
----------------
கழிவறைச் சுவர்களைத் தவிர
மற்ற எல்லா சுவர்களிலும்
கண்ணாடிக் கதவுகளுடன்
தொங்கிக்கொண்டிருக்கிறது
புத்தக அலமாரிகள்.
ஒவ்வொரு பொங்கலுக்கும்
வெவ்வேறு தளங்களில்
மாறி மாறி அடுக்கப்படுகிறது
புத்தகங்கள்.
அலமாரிக்கு கண்களாய்
இருக்கும் புத்தகங்கள் சில.
பிரபலங்களின் பெயர்கள்
பளிச்சிடும் கண்ணாடிக்குள்
புத்தகமாய் இருப்பதுகூட
அலமாரிக்கு அந்தஸ்தை
அதிகரித்து காட்டும் என்பதால்
எப்போதும் முன்வரிசையில்.
நண்பர்களின் புத்தகங்களைத்
தொட்டுப் பார்க்கும்போதெல்லாம்
சிலிர்த்து போகிறது
தனிமையின் நாட்கள்.
அலமாரியில் எப்போதும்
போனசாக சேர்ந்து கொள்கிறது
நானே காசு போட்டு
அச்சடித்து வைத்திருக்கும்
புத்தக வரிசைகள்.
தூசி துடைத்து
கரப்பான் அடித்து
கவனிக்க
அதிக கூலி கேட்கிறான்
கண்ணன் என் சேவகன்.
வைக்க இடமில்லை
என்பதால் மட்டுமே
எந்தப் புத்தகத்தையும்
பழைய பேப்பர்கடைக்கு
பார்சல் செய்யமுடியாமல்
அடிக்கடி எல்லைத்தாண்டி
அடுத்தவர் அலமாரிகளை
அபகரிக்கும் குற்றத்திற்காய்
எப்போது வேண்டுமானாலும்
தூக்கிலடப்படலாம் நானும்
என் எழுத்துகளும்.
என் கவலை எல்லாம்
சாவைக் குறித்தல்ல.
என் சாவுக்குப் பின்
அனாதையாகப் போகும்
அலமாரியின்
புத்தகங்களைப் பற்றித்தான்.
...
அப்பாடா இப்போ தான் நிம்மதி!
No comments:
Post a Comment