((புகைப்படம்- ப்ரீத்தி -சாவந்த் குழந்தையுடன்)
கண்ணீரில் கரையாத இரத்தக் கறைகளுடன்... (நாள்: 12/07/07)
--------------------------------------------------------.
இன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது.
11/7 மும்பையின் ஒவ்வொரு மனிதனையும் குண்டுகளால் துளைத்து எடுத்த
இரத்தம் தோய்ந்த நிமிடங்கள்.
கண்ணீர் வற்றிவிட்டது.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
எப்படியும் வந்துவிடுவான், கவலைப்படாதே..
என்று தொலைபேசி அருகிலிருந்துஆறுதல் சொன்னதெல்லாம்
அப்போதே தெரியும் அர்த்தமில்லாத சொல்பிதற்றல்கள் என்பது.
' அம்மா இன்னும் அரை மணி நேரத்திற்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன்.நீ கோவிலுக்குப் போ, எனக்கு ஜிம் போக வேண்டும்' இதுதான் அவன் கைபேசியில்கடைசியாக பேசிய வார்த்தை.
யாருக்குத் தெரியும் இந்த வார்த்தையை பேசி முடித்தவுடனெயே
அவனும் அவன் வாழ்க்கையும் தண்டவாளங்களில் முடிந்து போகும் என்பது? இப்போது என் நெருங்கிய உறவு பெண் என்னிடம் கேட்கிறாள்
'சித்தி... என் பிள்ளை இப்போ வாரேன்னு சொன்னானே சித்தி.. இன்னும் வரலியே..நாங்க என்ன தப்பு செய்தோம் சித்தி.."
அன்னிக்கு கோவிலில் தீபாரதனையில் தானேஇருந்தேன் !ஆண்டவன் எனக்கு ஏன் சித்தி இந்தச் செய்தியை அனுப்பினான்?"
அவள் கேள்விகளுக்கு என்னிடம் என்றுமே பதிலில்லை. எவராலும் அவளைப்போலதன் உறவுகளை இழந்தவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாது. அவள் அழட்டும்..அவளை அழவிடுங்கள்.
அவள் பெயர் சுசிலா இராமசந்திரன்.
இராமசந்திரன்மகேந்திரா அண்ட் மகேந்திராவில் பணி புரிந்து விருப்ப ஓய்வுப் பெற்று (ஏற்றுமதி& இறக்குமதி சர்வீஸ்) தனியாக கம்பேனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டுவரும் கடின உழைப்பாளி.
மகன் பிரபு , MBA நுழைவுத் தேர்வுக்காக தன்னைத் தயார்செய்து கொண்டிருந்தான். அன்றுதான் முதல் வகுப்பு பாஸ் எடுத்திருக்கிறான்.
அப்பாவின் கம்பேனிக்கு பயிற்சிக்காக போய்வந்தவன்.
*மும்பை மகிம் இந்துஜா மருத்துவமனையில்
பழைய நினைவுகள் எதுமில்லாமல் படுக்கையிலிருக்கும் பரக்சாவந்த்.
படுக்கை எண் 28ல் படுத்திருக்கும் அவனிடம்
தங்களுக்குப் பிறந்த குழ்ந்தையை அவள் காட்டுகிறாள்.(see photo)
எந்த உணர்வுகளும் இல்லாமல்.. அவன்.
திருமணமாகி 7 மாதங்கள் முடிந்து தங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருந்த காதல் தம்பதியர்.
பிறந்த குழந்தைக்கு 'ப்பிராசித்தி' (prachiti)என்றுபெயர் வைத்திருக்கிறாள். பிராசித்தி என்றால் "அனுபவம்" என்று பொருள்.
சாவந்தின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்றுள்ளது.
நஷ்ட ஈடாகப்ரீத்திக்கும் இரயில்வேயில் கிளார்க் வேலை கிடைத்துளளது. நம்பிக்கையுடன்கையில் குழந்தையுடன்,
வாழ்வதற்கான வேலைக்கு ஓடி, மருத்துவமனையில்
அவன் உருவம் கண்டு எப்படியும் சாவந்திற்கு பழைய நினைவுகள் திரும்பும், அவனும் தன் சாவ்ந்தாக ,
தன் குழந்தைக்கு தந்தையாக
மீண்டும் தன்னிடம் வருவான்
என்று அவள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்.
இழந்துப் போன வலியை விட
இருக்கும்போதே இல்லாத நிஜம் தரும்
இழப்பின் வலியுடன்
நித்தமும் வாழ்க்கையைத் தொடர்வது
எவ்வளவு கொடுமையானது,
மரணத்தை விடக் கொடுமையானது,
அவள்
எங்கள் அன்புப்பிரீத்தி
மரணத்தின் வலியை வென்று விட்டாள்.
அவளுக்கு மட்டுமல்ல ......
அவள் போலவே வாழ்வதற்கான போராட்டத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும்
இந்தப் பூவுலகில் அனைவரின் வலிமையும்
ஒன்று சேர்ந்து கொடுக்கட்டும்
வாழ்க்கையைத் தொடர்வதற்கான மன உறுதியை.
அவள் நம்பிக்கை அவளைவாழ வைக்கும்,
அவள் நம்பிக்கை வீண் போகவில்லை
என்று நாளை வரப்போகும் செய்திதான்
கோடான கோடி மனித உள்ளங்கள் அவளுக்காக வேண்டும்வரம்.
*
ஒரு வருடம் கடந்தும் மறக்க முடியவில்லை
அந்த இசுலாமிய சகோதரனின் கண்கள்
என்னிடம் பேசிய அந்த மவுனத்தின் மனக்குரலை.
போரிவலியிலிருந்துபிரபுவின் எல்லா காரியங்களுன் முடிந்து கொட்டும் மழையில் டிரெயினுக்காககாத்திருந்தோம்.
போரிவலியிலிருந்து கிளம்பும் வண்டி. கூட்டம் அதிகமில்லை.ஏறியவுடன் பக்கத்திலிருந்தவரைப் பார்க்கிறேன்.
தலையில் வெள்ளை நிற தொப்பி,இளம்தாடி, நீண்ட வெள்ளைக் கலர் குர்த்தா மிரண்ட கண்கள்,
அவனருகில் , அன்று நானிருந்த மனநிலையில் உட்கார முடியவில்லை. ,
மின்சாரம் பாய்ந்தது போல உடனே எழுந்து வேறு இருக்கைக்குப் போய்விட்டேன். அவன் விழிகள் அன்றுஎன்னிடம் கேட்ட கேள்விகள் பலகோடி.
என்னையும்
என் அறிதல், புரிதல், எழுத்து
எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது அவன் பார்வை.
கிழிந்து போனது நானும்என் எழுத்துகளும்
என் மனித நேயமும்.
என்னிலிருந்த மிருகம் என்னைத் தின்ற காயங்களின் வடு
இந்தப் பிறவியில் ஆறாது.
எட்டிப்பார்க்கிறேன்
கண்ணீரில் கறையாத இரத்தக் கறைகளை.
ஓராண்டு நினைவஞ்சலிக்கு அணிவகுத்து நிற்கின்றன
அரசியல் வளைவுகள்,
தண்டவாளத்திலும் தண்டவாளத்திற்கு வெளியிலும்.
இழப்புகளுக்காக அழும்போதெல்லாம்
சில இருத்தல்கள் பயமுறுத்துகின்றன.
ஆனாலும்எங்கள் தண்டவாளங்களில்
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது
நம்பிக்கையுடன்மின்சார வண்டிகள்.
------------------------------------------------
No comments:
Post a Comment