புதிய
மாதவியின் கவிதை தொகுப்பினூடாக
- கவிதாசரண்
💥💥💥
புதிய மாதவியை உங்களில் பலருக்குத் தெரியாம லிருக்கலாம் அதனால் என்ன ? உங்களில் பலரை அவருக்கும் தெரியாது என்பது போல இயல்பாக எடுத்துக் கொள்ளலாம். எனக்கும்கூட அவரை அதிகம் தெரியாது. அவரது கடிதங்கள். கவிதைகள் மூலமாகவே அறிமுகம். ஆனாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவரது பெயர் என் நினைவில் சுடர்கிறது. தெரிதல் என்பது நேரில் அறிதல், பேசிப்பழகுதல், சொந்தம் கொண்டாடுதல் சண்டை போட்டு நிறுவுதல் என்பதாகவே முழுமை பெற்று விடுவதில்லை. ஏப்ரல் 2003 கவிதாசரண் இதழில் அவருடைய கடிதம் ஒன்று வெளியாகி இருந்தது.. ஓர் அபவாதமாக என் விமர்சனங்கள் திசை திருப்பப்பட்டபோது எங்கள் குரலின் எதிரொலியாகத் தன் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார். எங்களைப் பற்றி அவர் பெற்றிருந்த தெரிதலின் அம்சம் அது. அவரைப் போய் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்லிக் கொள்வது சற்றுக் கூச்சமாகத்தான் இருக்கிறது. எங்களை விட நன்கறிந்த நுண்ணறிவுள்ள
பெண்மணி அவர்.
அவரைப்போல அப்படியொரு கனிவையும் பரிவையும் தன்னெழுச்சியாகக் காட்டுவதென்பது எல்லோருக்கும் முடிகிற காரியமல்ல. அவரை ஒரு கவிஞராகப் பார்ப்பதை விட ஒரு நல்ல மனுஷியாக, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்துருகும் பிறவியாகப் பார்த்து மகிழ்வதே ஒரு சுகமான அனுபவம். சொல்லைப்போல் வறியதொன்றில்லையாதலால் பல பெருமைகள் சொல்லாமையில்தான் நிறைவடைகின்றன.
புதிய மாதவியைத் தொடுபுள்ளியாக வைத்து இக்கட்டுரை விரிகிறது. மற்றபடி இது அவரையோ அவரது கவிதைகளையோ முதன்மைப்படுத்தி மதிப்பிடும் முயற்சியல்ல. ஒருவகையில் தமிழினம் என்று பீற்றிக்கொள்ளத் தெரிந்த நம்மை நாமே மறுமதிப்பீடு செய்து கொள்ளும் சிறு முயற்சி. இதில் புதிய மாதவியின் சில சொல்லாடல்கள் கவனம் பெறுகின்றன. ஒன்றைப் பாராட்டித்தான் அதன் ஓர்மையைச் சிறப்பிக்க வேண்டுமென் பதில்லை. புறக்கணித்துவிட முடியாதபடி விமர்சிப்பதற்கு விஷயம் இருப்பதே பெரிய விஷயம்தான்.
1994ஆம் ஆண்டில் இதழுக்குக் குறிப்பிடத்தக்க இரண்டு கடிதங்கள் வந்தன. 'சாரதா' இதழ் நேர்காணலில் ச.தமிழ்ச்செல்வன் என்னும் தோழர் தலித் பிரச்சினைகள் பற்றி சர்வ அலட்சியமாய் உதிர்த்திருந்த கருத்துகளைக் கண்டித்து கவிதா சரண் கடுமையாகச் சில கேள்விகளை முன் வைத் திருந்தது. அக்கேள்விகளால் தூக்கம் தொலைத்த தாகச் சொல்லி அவ்விரு கடிதங்களும் எழுதப்பட்டிருந்தன. ஒரு கடிதத்தை இரா. நடராசன் எழுதி யிருந்தார்.
(கவிதாரண் அக் நவம் 1994.) தன்னளவில் தனித்துவம் மிக்க, கட்டுரை வடிவிலான நீண்ட கடிதம். கவிதாசரணின் கேள்விகளை மேலும் கூர்மைப்படுத்திய கருத்துக்குவியல். அந்த வல்லமை அவருக்கு வெகு இயல்பாய்க் வந்திருந்தது. ஒரு தலித்தை விடவும் தலித் படும் அல்லல்களை ஆழமாகத் தொகுக்க வல்லவர் அவர். மற்றொரு கடிதத்தை எழுதியவர் புதியமாதவி ,மும்பை வாசி. மும்பைத் தமிழ் மன்றங்கள் நன்கறிந்த பெயராயிருக்கும் அவருடையது.
சீர் வரிசை' சண்முகராசன் அவர்களால் இதழுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். தலித் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெகு எதார்த்தமான மொழியில் விவரித்த அக்கடிதம் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சி யையும் அளித்தது. (டிசம். 1994 இதழில் வெளியிடப்பட்டது). வியப்புக்குக் காரணம் அதை எழுதியவர் ஒரு பெண்மணி என்றாலும் கடிதம் ஒரு பெண் பிரதியாக அடையாளம் காட்டாமல் ஒரு பொதுமைத் தன்மையுடன் அழுத்தமான அரசியல் மொழியில் எழுதப்பட்டிருந்தது. மகிழ்ச்சிக்குக் காரணம் அது இதழின் குரலாய் ஒலித்தது.
எழுதுகிறவர்களைப் பெண்
ஆண் என்று வகைப்படுத்துவது சிலருக்குப்பிடிக்காமல் போகலாம். ஆனால் நமக்கு அது வரலாற்றுத் தேவையாகப்படுகிறது. படைக்கவும் சிந்திக்கவும் தொடங்கியுள்ள அண்மைக் காலத்துப் பெண்கள் ஆணின் பொருண்மையற்ற பிம்பமாக அழிந்து போவதை வெறுக்கிறார்கள், புத்துணர்வு பெற்ற பெண்ணியவாதிகளாகவும் தன்னிலை பேசுகிறவர்களாகவும் வெளிப்படுகிறார்கள். பெண்ணின் அனைத்துப் பரிமாணங்களையும் புத்துருவாக்கம் செய்வதற்கு அப்படிப்பட்ட புதுவெளிச்சம் தேவையும் நியாயமும் ஆகிறது. பெண்ணின் முழுமுதற் பிரச்சினையே அவள் பெண்ணாயிருக்க அனுமதிக்கப்படுகிறாளா என்பதுதான். அவள் ஒரு தாயாக. சகோதரியாக, மனைவியாக, வேசியாகப் பெயர் தாங்கி, ஒரே நேரத்தில் உண்கலமாகவும் கழிவுக் கூடையாகவும் நடத்தப்படுகிறாளே தவிர, பெண்ணா யிருக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த இருட்டடிப்பைச் சகித்துக் கொள்கிறவள் தன் அடுப்படியில் ஒரு விறகாய், ஒரு திரியாய், ஒரு பொறியாய்க் கரைந்து போகிறாள். பெயர் தாங்கியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறவள் 'தன்பிள்ளை, தன்கணவன், தன்குடும்பம்' என்னும் சுதந்திரமற்ற பற்றுக்கோடுகளில் ஊசலாடி அடங்குகிறாள். இந்த வட்டத்துக்குள்ளும் அடங்காமல் தன்னைத் தாதிமைக்குத் தத்தம் பண்ணுகிறவள் எல்லா உயிர் மேலும் பற்றிப் படரும் தாய்மைப் பரிவு என்னும் அரூப இழைகளால் தன்னை நெய்தெடுத்துக் கிழிபடுகிறாள். இவை யாவும் ஒரு பெண் தன்னிலையைப் பின்னிருத்தக் கிடைத்துள்ள வாய்ப்புகள், பரிவுணர்வு என்பது கனிந்த மன நிலையில் எல்லா உயிர்களுக்குமான பொதுப் பண்புதான் என்றாலும், அடக்கப்படும் பெண் தன் அடிமைத்தனத்தை மறந்திருப்பதற்கு கிடைத்த தனிப்பெரும் பண்பாகத் 'தாய்மை' என்னும் பெயரில் உன்னதப்படுத்தி, வரலாறியாத காலந்தொட்டு புகட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது; அது ஒரு பிறவிக்கொடையாக அவள்பால் ஊன்றப்பட்டிருக்கிறது. உண்மையில் இதுதான் அவளுடைய அடிமைச் சங்கிலியின் ஆதார மையம். இதைக் கடந்து தன்னை மனுஷியாகப் புத்துயிர்த்துக் கொள்ளத்தான் பெண்ணினம் இன்று போராடிக் கொண்டிருக்கிறது.
புதிய மாதவியின் வெளிப்பாடு இதற்குப் புறம்பானதல்ல என்றாலும் அடிப்படையில் அந்தக் கோட்பாட்டுச் சாரமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை என்றே சொல்ல வேண்டும். சமூகத்தின்பால் மிகுந்த கரிசனமும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகக் கடும் விமாசனமும், தலித் விடுதலையில் தன்னெழுச்சியும் கொண்ட பொதுமானுடப் பார்வை அவருடையது. அதை ஓர் இயக்கவாதியின் மடைதிறப்பாகவும் நாம் மதிப்பிடலாம். நுண்ணரசியல் வகைமைகளில் குவியம் கொள்ளாத ஓர் எதிர் அரசியல் பார்வை அது, இன்னும் நுணுக்கமாக அணுகினால், பெரியார் காலத்து சுயமரியாதை சிந்தனையில் முளைப்பெடுத்து, பெரியார் காலத்திலேயே சுருங்கி, பெரியாரோடு தேங்கிப்போன், கவிதை மயக்கமற்ற திராவிட இயக்கத் தொகுப்புதான் என்றால் இதற்கு முன்பே இம்முடிவினை நான் தொடர்பார்வையாக அதனை அடையாளம் காண வேண்டும்.
(இவ்வகை கணிப்புகளுக்கு நான் வர உதவியது புதிய மாதவியின் புதிய கவிதை தொகுப்பு தான் என்றால் அது மிகை இல்லை. இதற்கு முன்பே என் முடிவினை நான் எட்டி இருக்க முடியும். இந்தப் புள்ளியில் குவியப்படவில்லை என்பதே காரணம்).
காந்தியடிகளின் கடைசி மூச்சு 'ஹேராம்' என்னும் சொற்படிமமாகத் திரண்டு ஒரு முணுமுணுப்பாய்க் காற்றில் கலந்ததாக உலகமகாப் பொய்ப்புனைவு ஒன்று உருவாக்கப்பட்டது. அவரை அருகிருந்து சுட்ட கோட்சே அப்படியொரு பொய் வாக்குமூலம் கொடுத்தானோ என்னவோ. அன்று முதல் இந்தியாவை அந்த படிம முழக்கம் பேயாய்ப் பிடித்தாட்டுகிறது. அதனால் பீடிக்கப்பட்ட ஒவ்வொருத்தரையும் பேயாகவே உருமாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த மனிதமற்ற தலைப்பில்தான் புதிய மாதவி தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். தலைப்புக் கவிதை ஏற்கனவே கவிதாச்சரனில் வந்தது.
கூடவே 'ஏ ...அல்லா..: என்னும் கவிதையும். நூல் வெகு நேர்த்தியாக வந்திருக்கிறது. பிசிறு இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கிறது. நூல் முழுதும் உயர்வகை வழுக்குத் தாள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நூலை அனுப்பிய சில நாட்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புதிய மாதவியிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதோடு "இவ்வளவு விலை உயர்ந்த ஆர்ட் தாளை நூல் முழுமைக்கும் பயன்படுத்தியிருப்பது வெகு அபூர்வம் அம்மா"
என்றும் சொன்னேன்.
அவர் இந்தச் சுட்டலை எதிர்பார்த்தார் போல் மிகுந்த அடக்கத்தோடு, "அது என் கணவர் எனக்களித்த கொடை, ஐயா '" என்றார். மயக்கமற்ற கவிதை போன்ற அந்தப் பதில்கூட அவர் செதுக்கலைக் காட்டுகிற தடயமாய் இருக்க வல்லது. கவிதை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது: "அது வடிவத்தில் இல்லை ஐயா, அதன் வாசத்தில் பிடிபடுவதாக்கும்." என்றார் ஒரு நண்பர், மெய்யாய் இருக்கும். குழலும் யாழும் மழலையை விடவா இனியன என்று தெரியாமலா கேட்டார் நம் திருவள்ளுவர்.
'சீர்வரிசை' சண்முகராசன் அவர்கள் நூலின் மதிப்புரையில் புதிய மாதவியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "மும்பை வாழ் தமிழர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்த குடும்பத்தின் நான்காவது தலைமுறை புதிய மாதவி... மும்பை திராவிட இயக்க வேர்களில் இவருடைய தந்தையார் திரு சு வள்ளிநாயகமும் ஒருவர். சுயசிந்தனையோடு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அவர் வல்லவர். என்கிறார். இதுதான் புதிய மாதவியின் மூலமும் பின்புலமும். கவிதாசரணில், பிப். ஏப்ரல் 2003 ல் வெளிவந்த அவரது கடிதமும் இதைக் கோடிட்டுக் காட்டுகிறது. பெரியார் காலத் து சுயமரியாதைப் பயிலரங்கில் பயிற்சி பெற்றவர்களா யிருப்பார்கள் இவரது மூத்தோர்கள். பெரியாரின் திராவிடர் கழக வேர்களாய் இருந்து கிளைகளாய்ப் பூத்திருப்பார்கள். மும்பைக்காரர்கள் என்பதால் சிதைவுருவாக்கம் பெற்று விடாமல், மூல பலத்தோடு முற்றிக் கனிந்திருப்பார்கள். புதிய மாதவி அந்தக் கனிகளின் சாறு . பெரியார் இயக்கம் என்னும் பெருங்காயக் குப்பியில் காயமும் வாசமுமாக எஞ்சியுள்ள எச்சம். திராவிடர் இயக்கப் பெறுமதியைப் பொறுத்த அளவில் தமிழகம் பெரும்பாலும் காலிப் பெருங்காயக் குப்பிதான். அதில் ஒட்டிக் கொண்டிருந்த வாசமும் காலியாகிவிட்டது. ஆனால் அது இன்னும் பெருங்காயக் குப்பி என்றே பெயர் கொண்டிருப்பதால் வாசம் இருப்பதாகப் பாசாங்கு செய்யப்படுகிறது.
பெரியாரை யுக புருஷர் என்றழைப்பது நம்மைப் பொறுத்தவரை குறைச்சலான மதிப்பீடுதான். ஏனெனில் யுகயகாந்திரமாக நாம் சிறுமைப்பட்டுக் கிடந்ததை அவர் மூலமாகத்தான் அறிந்தோம். இனியொரு முறையும் ஏமாந்துவிடக் கூடாது என்னும் சங்கல்பத்துக்கும் அவரைத்தான் முன்னோடியாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கும்கூட அவரைத்தான் காரணமாக்கப் போகிறோம். இதில் நம் அறிவின்மையும் இயலாமையும் தப்பித்தலும் எத்தனை சதவீதம் என்பது முக்கியமற்றுப் போய்விடும் போல் தெரிகிறது.
பெரியார் தன் பின்பற்றிகளையும், அவர்களின் அடியொற்றி நடக்கும் வழித் தோன்றல்களையும் இன்றைய சூழலில் எப்படிப்பட்ட இக்கட்டுக்கு ஆளாக்கிச் சென்றுள்ளார் என்பதை புதிய மாதவி மூலமாகவே நாம் அறியலாம்.
அவர் சொல்கிறார்:
'தெய்வமே!
நாத்திக அறிவையும்
ஆஸ்திக மனசையும்
ஒரே உயிரில் ஏன்
ஒன்றாகத் தொடுத்தாய்?"
நல்லவேளை! புதிய மாதவி 'கடவுளே, கடவுளே' என்று கசிந்துருகவில்லை. அறிந்தோ, அனிச்சையாகவோ 'தெய்வமே, தெய்வமே' என்றே விளிக்கிறார். கடவுள் - கருத்தின் உருவகம்; சமஸ்கிருதம் உருத்தேற்றிய, எல்லாக் குப்பைகளையும் ஒன்றிணைக்கத் தோதான சரக்குப் பெட்டகம். தெய்வம் மனிதராய் இருந்து மறைந்து போன இருப்பின் மறுபடியாக்கம். அந்நியமற்ற பயபக்திக்கும் உறவுகளோடான குறை இறைஞ்சலுக்கும் வடிவமைத்துக் கொண்ட தமிழ் விதந்தேற்றும் நன்றிக்கடன்.
இந்தக் கவிதையில் தென்படும் இன்னொரு அம்சத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். புதியமாதவி பெண் நிலை வெளிப்பாட்டாளர் அல்ல. ஆனால் அடிப்படையில் அவர் ஒரு பெண் உணர்வாளர்தான் என்பது அனிச்சையாக இங்கே வெளிப்படுகிறது. "தெய்வமே.. தெய்வமே" என்று பெண்களால்தான் நெக்குருக முடியும், 'கடவுளர்' களிலும், 'தெய்வங்களைக் கண்டடைய முடியும். உருகக்காரணம் அவர்களின் பிறவித் தனிமை. மாதவியும் உருகுகிறார். எப்போதெல்லாம் அவர் பெண் உணர்வு களுக்குத் தாவுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவரது கவிதை வரிகளில் கவித்துவமும் கூடி வருகிறது. ஏக்கமே கவிதையின் இழையாகும் போல் மகளுக் கேங்கும் தாயாக, நட்பெனும் நெல்லிக்கனிக்கேங்கும் நங்கையாக வெளிப்படும் கவிதைகளில் அமுதம் துளிர்க்கிறது. பெண்ணொளிதான் கவித்துவத்தின் அமுதூற்றம் போல் தெரிகிறது.
வெகுமக்களுக்கு மனமே அறிவு. ஒளி பெற்றவர்களுக்கு அறிவே மனம், இரண்டும் ஓர் உயிரின் உயிர் தாங்கும் நபரின் அடுத்தடுத்தபடி நிலை வெளிப்பாடு. ஆஸ்திக மனசைவிட நாத்திக அறிவு-திறன் கூட்டப்பட்ட ஒளி உமிழ்வு.
அடிப்படையில் கடவுள் மறுப்பு என்பது எதிர்நிலை அங்கீகரிப்புதான். இருக்கும் ஒன்றுதான் இல்லாமலும் இருக்கும். ஒழித்தல் என்பது இருத்தலின் மேற்செல்லல். ஒழித்தலின் திரும்புதல் இருத்தலின் மனநிலை..
இதுபோன்ற விசாரங்களிலெல்லாம் பெரியார் சிக்காமலே போய் விட்டார் என்பது இக்கவிதையில் ஊடாடும் அலைவு.
உலகத்தில் எல்லா மொழிகளையும் போலத் தமிழும் ஆண்மொழிதான். பெண்ணுக்கும் அதுவே மொழியாக ஒரு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள், பொதுத் தன்மையிலான ஆண் சுட்டுகள் பெண்ணையும் உள்ளடக்கிக் கொண்டவை என்று. உதாரணமாக, "கடவுளை மற மனிதனை நினை" என்பதில் உள்ள 'மனிதன்' இருபாலருக்கும் பொதுவான சுட்டுச் சொல் என்பது இலக்கணம், இந்த உதாரணமே பெரியார் இயக்கவாதிகளுக்கும் தவிர்க்க முடியாத இலக்கணமாயிருந்தது என்பதைத் தெளிவாககுகிறது. அதனால்தான் புதிய மாதவியும் அதே கவிதையில் ''நான் மனிதன் என்று/ என் கவிதை பிறக்கின்றது" என்கிறார். மாதவி என்றில்லை. பெண்கள் பலரும் வேறு வழியில்லாமல் அல்லது மொழியில்லாமல் அவ்வாறுதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அநீதியைப் பொறுக்க மாட்டாமல்தான் பெண் கவிஞர்கள் பலரும் பெண் நிலைக்குத் தாவினார்களோ என்னவோ. (ஆனால் மொழியிலக்கணப் பயன்பாட்டில் அவ்வளவு சுத்தமெல்லாமா பார்க்கிறார்கள். என்னும் கேள்வியையும் எளிதாகப் புறக்கணித்து விடுவதற்கில்லை. ஒளவை காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினை உணரப்பட்டதா என்று ஆய்ந்து பார்க்கலாம். ஆனால் பிற்கால ஔவை ஒருத்தி ஆணுக்கும் பெண்ணுக்குமான பொதுச் சுட்டாக 'மானிடர்' என்னும் சொல்லை ('அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது') பயன் படுத்துகிறாள்.
புராண பிரவசனக்காரர்களுக்கு அடுத்தபடியாக திராவிட இயக்கக்காரர்கள்தாம் வேத, இதிகாசக் கதைகளையும், சமஸ்கிருதப்படிமங்கள், பாவனைகளையும் அதிகம் எச்சில்படுத்தியிருப்பார்கள் என்று நம்பலாம். ஒன்றை ஏற்கிறவர்களைக் காட்டிலும் மறுக்கிறவர்கள்தாம் அதைப் பற்றித் துல்லிய அறிவு பெற்றிருக்க வேண்டும் என்னும் தர்க்க நியாயப்படி அது நேர்கிறது என்று இதனைப் புரிந்து கொள்ளலாம். ஒரு கட்டத்தில் எதிர்ப்பின் பிடிப்புகள் மழுங்கும்போது அவை பற்றிய விளிப்புகள் எவ்வித பிரயாசையோ, வியாக்யானமோ இன்றி, நம்பிக்கையின் பாவனைகளாக ஒலிக்கத் தொடங்கிவிடும்.
இதை விளையாட்டாகச் சொல்வதாகவே வைத்துக் கொள்ளுங்கள் . ஒரு வகையில் வேறெவரையும் விட திராவிடக் கட்சிக்காரர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாய் மாறுவது எளிது என்று சொல்லலாம். இந்தப் பக்கத்தையும் அந்தப் பக்கத்தையும் ஒரு கோடுதான் பிரிக்கிறது. இந்தக்காலை அந்தப்பக்கம் எட்டி வைத்தால் போதும், அது ஒரு சமரசம் போல. பிழைத்துக் கிடப்பதற்கான நல்லம்சம் போலவும். சமரசம் சவக் குழிகளில் மட்டும்தானா? அடிமைப்படும் இனக் குழுக்களிலும் கூடத்தான்.
விளையாட்டுகள் எப்போதும் வினையாகத்தான் கனிகின்றன. அது பற்றிய விளக்கமாகத்தான் இக் கட்டுரையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விளையாட்டின் அப்பாவித்தனமான வெளிப் பாடாக புதிய மாதவியிடமிருந்தே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
'வான் மழை போற்றுதும்' என்று கவிதைக்குத் தலைப்பு கொடுத்துவிட்டு அந்த மழையை 'வருண பகவானே - வருண பகவானே' என்று கவிதை நல்ல பக்தையைப் போல உருக்கமாக விளிக்கிறார். உருகுதல் என்பது கரைதலின் ஓர் அம்சம்.
அக்கவிதையில் உள்ள வேறுபலநல்ல வரிகளில் ஒரு கொத்து -
"வருண பகவானே!
அடுக்கு மாடியின்
கண்ணாடிக் கதவுகள்
உன்னை ரசிக்கலாம்
ஆனால்
உன்னை
வாழ்த்துவதும் வணங்குவதும்
எங்கள் குடிசைகள்தான்."
கவிதை எழுதுவது குடிசைவாசியா. குடிசை வாசிக்கா என்பதும் கூர்மையான கேள்வியாகிறது. குடிசைவாசிகள் இடி இடிக்கும்போது அர்ச்சுனனைக் கூப்பிடுவார்கள் மழையடிக்கும்போது வருண பகவானைக் கூப்பிடமாட்டார்கள்.
மழையை 'மழையே' என்று அழைக்க நமக்கு மனசில்லை. அதன் எளிமை பொசுக்கென்றி ருக்கிறது. சின்னக் குழந்தைகளின் அம்மணம் பார்த்தாற்போலக் கூச்சமாயிருக்கிறது. நாம் என்ன நீர் மோர் குடித்த காலத்திலா வாழ்ந்து கொண்டி ருக்கிறோம்? சாணி உருண்டையை பிள்ளையா ராகப் பிடித்து வைத்து, தேங்காய்க் கீற்றை நகத்தால் கிள்ளியெடுத்துப் பிள்ளையாருக்குக் கணபதித்து, வணங்கி முடித்த மறுபொழுதில் நிலத்திற்கு எருவாக்கிய தலைமுறையிலா வாசம் செய்கிறோம்? பெப்சி கோலா குடித்து, ஏவுகணை பிள்ளையாரை தரிசித்து தேசபக்தர்களான காலத் தில் அல்லவா குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். கூடவே பெரியார் பிறந்த மண்ணிலா இந்தப் பேயாட்டங்கள் என்றும் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொள்கிறோம். எனில், தெய்வங்களை விட்டால் வேறு யாரிடம் முறையிட?
★★★
பெரியார் இயக்கம் தமிழ்ச் சூழலில் எதைச் செய்தது, எதைச் செய்யாமல் விட்டது, பெரியாரின் பங்களிப்பில் தமிழகம் பெற்ற முன் நகர்வு என்ன, பின்னடைவு என்ன என்னும் விமர்சன பூர்வமான கேள்விகளை முன்வைத்து இதுவரை எந்தவொரு நடுநிலையாளரும் ஆய்வு செய்ய முன் வர வில்லை. அப்படி முன் வந்தால் அவர் உடனடி யாகத் தமிழினத் துரோகியாகவோ பார்ப்பனக் கைக்கூலியாகவோ முத்திரை குத்தப்படும் அபாயம் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்ததுண்டு. இன்று அந்த நிலைமை மாறியிருக்கிறது. பெரியார் பரவலாக விமர்சிக்கப்படுகிறார். அதேசமயம் அவர் உயிரோடில்லாத சூழலில், அவரது பெயரைக் கெடுத்துக் கைக்கூலி பெறவும் இனத்துரோகி ஆகவும் ஒரு விமர்சகனுக்கு வாய்ப்புகளும் கூடியுள்ளன. இந்த நிலையில் அப்படியொரு ஆய்வு முயற்சியைத் தன்னிரக்கம் கொள்ளாத தன்னிலையைத் துறக்காத ஒரு தலித் மேற்கொள்வது இரண்டு காரணங்களால் பொருத் தமாயிருக்கும் என்று படுகிறது. முதற்காரணம், சமூகம் சார்ந்த அறிவும் சுரணையுமுள்ள ஒரு தலித் தன்னிலையாளர் இனத் துரோகியாகவோ கைக்கூலியாகவோ சுருங்கிவிட முடியாது என்பது அவரது அடிப்படை அலகு. வழிதவறிக் கறை பட்டுக் கொண்டிருக்கும் பெரியாரின் பெயர் தாங்கிகளுக்கெதிரான விமர்சனங்கள், பெரியாருக்கான விமர்சனங்களல்ல என்ற தெளிவு அவருக்கிருக்கும். இரண்டாவது காரணம் பெரியார் இயக்கத்திற்குத் தலித் பங்களிப்பு ஒன்றும் அற்பசொற்பமானதல்ல. ஆனால் அதற்கேற்ப அவர்கள் பொருட்படுத்தப் பட்டார்களா, சமன்மை பெற்றார்களா என்பன தவிர்க்க முடியாத கேள்விகள், உரிமையோ, உதவியோ, கேட்காமல் தரப்படுவதில்லை. அலறாமல் கவனிக்கப்படுவ தில்லை. 'தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் தரப்படும்' என்பது எல்லோருக்குமான பொது விதிதான். 'அழுதபிள்ளை பால் குடிக்கும்' என்பது சம்பந்தனுக்கு மட்டுமல்ல ஒரு தலித் குழந்தைக்கும்
ஆன விதிதான். தட்டுவதும், கேட்பதும், அழுவதும் சுயமான முன்முயற்சிகள். இந்த முன்முயற்சி களுக்கான சுய தயாரிப்புகளை தலித் இனக் குழுக்கள் பெற்றிருந்தார்களா, பெறுவதற்கான குறைந்தபட்ச தகைமைப்பண்புகளேனும் அடை யாளம் காணப்பட்டனவா என்பனவெல்லாம் ஆய்வில் கண்டறியப்பட வேண்டிய உண்மைகள். இவற்றை
ஒரு தலித் ஆய்வாளர் செய்யும் போது தலித் விடுதலை அரசியல் புத்தொளி பெறக்கூடும். இந்தியாவின் எல்லாவித சாதிமதச் சமூக அவலங்களுக்கும் இன்று தலித்விடுதலைஅரசியல் ஒற்றைத் திறவுகோலாய் இருக்கிறது.
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த கையோடு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் இரண்டு சீரழிவுகள் பாதித்தன. ஒன்று பரிசுச்சீட்டு. மற்றொன்று மதுக்கடை திறப்பு. (பெரியாரிடம் பாடம் கேட்டவர்களின் போக்கிரித்தனமான வீழ்ச்சியாகவும் நாம் அவற்றை மதிப்பிடலாம்)
இரண்டும் மக்கள் வருமானத்தையும் அதனூடாக வாழ்வின் போக்குகளையும் பாதித்த சீரழிவுகள். உறுதியில்லாத நல்வாய்ப்பை நம்பி ஊதாரிகள் ஆக்கியது பரிசு சீட்டு. அரசு வருமானத்துக்காக புது குடியர்களை வெள்ளமெனப் பெருக்கி சீரழித்துக் கொண்டிருக்கிறது மதுக்கடை திறப்பு.
(மார்க்ஸ் கட்டுரை குடியை அறநெறிப் பிரச்சனையாக்குவது கேள்விக்குள்ளாகிறது. குடியின் எல்லைகள் எல்லாக் காலத்திலும் பிரச்சினைகளோடு உணரப்பட்டிருந்தன. குடியும் குடித்தனமும் அவரவர் சமர்த்து. இதில் அடுத்தவர் தலையீடு தேவையில்லை என்பது அதன் ஆதார செய்தி)
மனிதனின் முதன்மையான ஆக்க சக்திகள் இரண்டு ஒன்று மூளை. மற்றொன்று கைகள், மூளை நினைத்து உருவாக்குவதைக் கைகள் வடிவமைத்து இயக்குகின்றன. அப்படிப்பட்ட முதன்மை உறுப்பான மூளையின் இயல்பைக் குலைக்க வல்லது மது . மதுவோடு ஒப்பிடும்போது பரிசுச்சீட்டு நிகழ்த்திய சீரழிவுகள் புறவயமானவை; பொய்க் கனவு பற்றியவை. இரண்டும் அடிப்படையில் பொருள்வயப் பிரச்சினைகள் மட்டுமே. பாதிப்புற்றோரின் எண்ணிக்கை அளவிலும் அவை ஏற்படுத்திய சீரழிவின் வீச்சிலும் கணக்கிடப் படுபவை. இவற்றை ஒரே ஒரு சட்டத்தால் நம் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். அதனால் எந்த பண்பாட்டுப் பிரச்சனையும் எழப்போவதில்லை.
இவற்றுக்கு இணையாக, தமிழகத்தின எட்டுத் திசைகளையும் அறிவுத்தளத்தில் தட்டியெழுப்பிய அமைப்புதான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம். பின்னாளில் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்ற இயக்கம். இனி அதைப் பெரியார் இயக்கம் என்றே அழைக்கலாம் (பெரியார் இயக்கத்தைப் போய் பரிசுச்சீட்டு, மதுக்கடை திறப்போடு இணைத்துப்பேசி கொச்சைப்படுத்தி விட்டதாக நீங்கள் நினைக்கக் கூடும், எனக்கு மட்டும் அதில் விருப்பமா என்ன? காமராசர் பெயரிட்ட ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை'யும் அவரைப் பச்சைத் தமிழன்' என்று உயர்த்திப் பேசிய பெரியாரையும் இணைத்துப் பேசுவது போலத்தான் இதுவும் என்று எடுத்துக் கொள்வதே நல்லது.) பெரியார் இயக்கம் நிகழ்த்திய அறிவு நிலைத்தாக்கத்தை ஒரு சட்டத்தால் துடைத்துவிட முடியாது. அதனால்தான் அவருடைய ஓர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அந்தத் தாக்கத்தைத் தகர்த்து விடலாம் என்று அவருக்கெதிரான குறை விமர்சனங்கள் பெருக்கப்படுகின்றன.
பெரியார் ஓர் அரை நூற்றாண்டுக் காலம் தமிழகத்தைத் தட்டியெழுப்பினார். அவர் எழுத்தையும் பேச்சையும் செயலையும் அவற்றின் அடர்த்தியையும் பார்க்கும்போது, அவருக்கு இணையாக இந்தியாவில் இன்னொருத்தர் எந்தக் காலக் கட்டத்திலும் இயங்கியதாகத் தெரியவில்லை. அவருக்கு இணையான தீவிரத்தை ஒருவேளை சம்பந்தன் காலத்துச் சைவ மீட்பு இயக்கம் பெற் றிருக்கக்கூடும். 'அன்பே சிவம்' என்னும் மதத்தை மீட்க அவன் காலத்தில் எண்ணற்ற இரத்தக் குளியல்கள் நிகழ்த்தப்பட்டன. பெரியார் இயக்கம் தோன்றிய அதே காலத்தில் தோற்றம் பெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட பொறுப்பேற்க வேண்டிய கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் கணக்கு வழக்கில்லை. எல்லாம் காந்தி கணக்குதான். ஆனால் தவறுதலாகக் கூடக் கொலைக்கறை படியாத. முன்னறிவிப்பில்லாமல் போராட்டம் நடத்தியறியாத பெரியார் இயக்கம் இன்று வரை அராஜக இயக்கமாகவே எதிரிகளால் பேசப்படுகிறது. இது ஒன்றே போதும், அதிகார மையத்துக கெதிரான பெரியார் அரசியலின் தீவிரத்தை அறிந்து கொள்ள . ஒருவேளை 'பூணூலை அறு, குடுமியை வெட்டு' பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடி' என்றெல்லாம் சொல்லால் அறைகூவல் விடுத்தது செருப்பால் அடிப்பதைவிட, செருப்பால் அடிப்பேன் என்பது அதிகபட்ச தண்டனைக்குரியது என்னும் விதிப்படி மோசமான வன்முறையாகப் பேசப்பட்டிருக்கும்
பெரியார் நிகழ்த்தியது எதிர் அரசியல், வைதிக, வர்ணாஸ்ரம தர்மங்களால் நிறுவப்பட்ட அனைத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கிளார்; புரட்டிப் போட்டார்; அடித்து நொறுக்கினார். இதை வேறு வகையில் சொல்வதானால் புல் பூண்டுகளால், முட்புதர்களால், நச்சுச் செடிகளால் மூடுண்டு கிடந்த விளைநிலத்தைப் புழுதி பறக்க உழுது போட்டார். வெடிப்பும் வீறல்களும் மிகுந்து, நச்சுயிர்களின் வாழிடமாகிச் சிதிலமடைந்து கலகலத்துப்போன கட்டிடத்தை புதிய நிர்மானத்துக்காக இடித்துத் தரைமட்டமாக்கினார். இது ஒரு வகை 'அழிவு' வேலை என்றே சொல்ல வேண்டும்.
பெரியாரின் எல்லா 'அழிவு' வேலைகளையும் தமிழகம் தாங்கிக் கொண்டது என்பது இதிலுள்ள கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம். அவர் நிகழ்த்திய 'அழிவு' வேலைகளோடு ஒப்பிடும்போது, சந்தித்த எதிர்ப்புகள். தாக்குதல்கள் என்பதைப் பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லாதவை. அவரால் பிள்ளையாரை உடைக்க முடிந்தது. ராமனுக்கு செருப்பு மாலை போட முடிந்தது அரசியல் சட்டத்தை எரிக்க முடிந்தது. எல்லாம் முன்னறிவிப்போடு செய்தவைதான். இந்தியாவின் பிற மாநிலங்களில் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத 'அழிவு' வேலைகள். அதனால்தான் இன்றும்கூட உபி போன்ற மாநிலங்களில் அவருக்கு ஒரு சிலை வைக்க முடியவில்லை. தலைநகரில் உள்ள பெரியார் மையத்தை ஆதிக்க சக்தியினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவர் முதலில் திராவிட நாடு கேட்டார் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினார். தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்கள் அவரது எதிர் அரசியலை அநாகரிகமாக மதிப்பிட்டது அதற் கொரு காரணமாயிருக்கக்கூடும். பெரியாரைத் தமிழகம் மட்டுமே பெரியாராக'த் தாங்கிக் கொண் டதைப் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்க வேண்டும்
பெரியார் எவற்றையெல்லாம் எதிர்த்தாரோ அவற்றின் நிழல்கூடப் படாமலேதான் தமிழர் களின் தொன்மை வாழ்வியல்முறை அமைந் திருந்தது .பார்ப்பனக் கருத்தியல் ஒற்றைத் தன்மை கொண்டது.ஒரேநாடு,ஒரே மொழி,ஒரே கலாச்சாரம் என்பதாக. அதை முற்றும் நிராகரிக்கிற முழக்கம்தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்". பார்ப்பன் ஊடுருவலுக்கு முற்பட்ட சாதியற்ற மதமற்ற, கடவுளற்ற ஆன்மிகப் புனைவற்ற நாகரிக வாழ்வியல் என்பது தமிழ்ச்சமூகத்தில் மட்டுமே நிலவியிருந்தது . கணியன் பூங்குன்றன் ''தீதும் நன்றும் பிறர் தர வாரா!" என்று பேசும் போது, அது பிறவிப்பயன் என்றோ மதம் சார்ந்த பாவ புண்ணியம் என்றோ, கடவுள் சார்ந்த வரம் சாபம் என்றோ மடமை பேசவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நம் வாழ்க்கையைத் தொல்பழங்காலத்துக்குத் திருப்பிக் கொண்டு போக முடியாது . ஆனால் சாதி மத, கடவுள் கறைபடாத தொன்மைப் பண்பாட்டையும் அதைப் பேசும் மொழியையும் மீட்டெடுத்துக் கொள்ள முடியும் ஆயிரக் கணக்கான கறையற்ற தமிழ்ச்சொற்கள் பார்ப்பனக் கலாச்சாரத் தாக்கத்தால் புறக் கணிக்கப்பட்டன. மறக்கடிக்கப்பட்டன; இழிவுபடுத்தப்பட்டன. வடமொழி சொற்களால் மாற்றீடு செய்யப்பட்டுக் கறைபடுத்தப்பட்டன. பௌத்தம்,ஜைனம் சைவம், வைணவம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் மதங்களால் தமிழ் வளர்க்கப்பட்டது உண்மை. ஆனால் அதற்கும் முன்னே கடவுளையும் மதத்தையும் கடுகளவும் கற்பிக்காத, முதிர்ந்த நாகரிகம் உள்ள மாந்தரின் கவிதைமொழியாகத் தமிழ் இருந்தது அதனினும் உண்மை " தமிழ் காட்டு மிராண்டி மொழி" என்று சொன்னதற்குப் பெரியாருக்குக் காரணங்கள் இருக்கலாம் ஆனால் சாதிமதக் கறை படிந்த மொழி என்பதற்காகத் தமிழைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலத்துக்கு மாறச் சொன்னது நியாயமற்ற கோரிக்கை. தமிழ். கறை படிந்த மொழி எனில் இந்தியாவில், அல்லது அகிலத்தில் வேறு எந்த மொழிதான் கறைபடியாத மொழி? போதிய மொழிப் பயிற்சியும், பழந்தமிழ் பரிச்சயமும் உள்ளவர்களுக்கு அப்படியொரு மீட்டுருவாக்கத்துக்கு உகந்த மொழி தமிழ்தான் என்பது தெரிய வரும், ஆங்கிலத்துக்குள்ள தகுதி அது அகிலத்தை ஆண்டவனின் மொழி. பன்னாட்டுச் செலாவணியுள்ள மொழி என்பதைத் தவிர வேறென்ன? விஞ்ஞான மொழி என்னும் அதன் தகுதிக்காக,உலகத்தார் தங்கள் பண்பாட்டு மொழிகளையெல்லாம் உருவிப்போட்டு விட
வேண்டுமா? பெரியாரின் நோக்கம் சந்தேகத் திற்கப்பாற்பட்டது என்பதற்கா ஒரு பிழையைப் பேசாமல் விட்டு விடுவது நியாயமாகாது.
கடவுளைத் தூக்கியெறியச் சொலகிறார் பெரியார். தரக்கியெறிந்து விட்ட இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி பிறக்கிறது 'நடு வீட்டில் நரகல் கிடக்கிறது, எடுத்தெறி என்றால் எதை வைக்கிறது என்கிறாயே,: என வெடிக்கிறார். இது ஒரு அறிவு ரீதியான பதில் என்பதில் ஐயமில்லை. கடவுளை நரகலாகப் படிமப்படுத்தி, எடுத்தெறிவதை முன்னுரிமைப் பிரச்சினையாக்கும் பதில். ஆனால் ஒரு பாமரனுக்கு இது போதுமான பதிலல்ல. அவனுக்கு மாற்றுகள் தவிர்க்க முடியாதவை.
சிறகுள்ளவைகளையே பறவைகள் என்கிறோம். மனித வாழ்வில் சிறகுகள் என்பவை ஆடுவதும் பாடுவதும் கொண்டாடுவதுவமே, நம்பிக்கைகளில் உறைவிடமே மனித மனம். ஆகவே கடவுளை எறிந்து விட்டால் அதற்கு இணையாக நம்பிக்கை வைக்க ஒன்றியிருக்க, உறவு கொண்டாட, ஊமை ஆறுதல் பெற, ஏதேனும் மாற்று வேண்டும் . :கடவுளை மற, மனிதனை நினை ' என்பது சொல்வதற்கு இனிக்கலாம். பசியாலும் சுயநலத்தாலும் வார்க்கப்பட்ட மனிதனுக்கு சகமனிதனை நினைப்பதொன்றும் உள்ளுருக்கும் விஷயமல்ல. இங்கேதான் சிறு தெய்வ வழிபாடு அர்த்தமுள்ளதாகிறது. சிறு தெய்வங்கள் மதங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் இல்லை, சொத்து சுகங்களைக் கட்டியாளும் நிறுவனச் சின்னங்கள் இல்லை. சிறு தெய்வங்கள் தமிழ் வாழ்வின் நம்பிக்கை அம்சங்கள், பெருந்தெய்வங்கள் அதாவது கடவுளர்கள் மதங்களின் உருவாக்கம்.
சிறு தெய்வங்கள் அதாவது நாட்டார் தெய்வங்கள் உறவின் கிளை அம்சம்; நம்பிக்கையின் நட்புருவம், கிராமங்களில் இன்றும் நீங்கள் பார்க்கலாம்: ஒரு பாமர இந்துப்பெண் தன் பாதையில் தென்படும் பள்ளிவாசலையும், மாதா கோவிலையும் அனிச்சையாக வணங்கி விட்டே செல்கிறாள். இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் வழிபடும் முறையை அறிந்தவளானால் அவர்களைப் போலவே வணங்கவும் தயங்குவதில்லை. அவளுக்கு வழிபாட்டிடங்களை மதப் பிரதிகளாகப் பார்க்கும் குறு மனப்போக்கு இன்னும்கூட உருப்பெற வில்லை. சிறு தெய்வங்கள் வாழ்ந்த மனிதர்களின் பிரதிகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களாய்ப் பிறந்து தங்கள் உயிர்த் தியாகங்களால் தெய்வங்கள் ஆனவர்கள் அவர்கள், தமிழகத்தில் 18 சித்தர்கள் .தங்கள் பாடல்களால் அறியப்படு கின்றனர். அவர்களின் சமாதிகளின் மேல் எழுந்துள்ள கோவில்கள்தாம் சக்தி உள்ளவை என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. அக்கோவில்கள் பெருந்தெய்வ வழிபாட்டிடங்களாய் நிறுவனப்பட்டிருந்தாலும் அவற்றை சிறு தெய்வங்களின் உறைவிடங்களாகவே பாவித்துக் கொள்ளும் மனப்போக்காகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் . தெய்வங்களை மதங்களோடு இணைத்துப் பார்க்க மறுக்கும் தமிழ் வாழ்வின் வெளிப்பாடு.
ஒவ்வொரு நபருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. இந்தியாவில் அது சாதி அடை யாளமாகக் குவியம் பெறுகிறது. ஒரு சமூகப் போராளி எந்த அடையாளத்திலிருந்து தன்னுணர்வும் கிளர்ச்சியும் பெற்றெழுந்தானோ அந்த அடையாளத்திலிருந்தே தன் கலகத்தைக் கட்டமைக்கிறான். அவன் விடுதலைப் போராளி என்பதால் தன் கலகத்தை ஒற்றைப்புள்ளியில் சுருக்கி விடாமல் பலநோக்குப் பரிமாணங்களில் விரிவுபடுத்திக் கொள்கிறான். அம்பேத்கர் தலித் அடையாளத்திலிருந்து தன்னுணர்வு பெற்றார். ஆகவே தலித் விடுதலை என்னும் தொடக்கப் புள்ளியிலிருந்து தன் போராட்டத்தை விரிவு படுத்தினார். அதுபோல பெரியார் குத்திர அடையாளத்திலிருந்து கிளர்ந் தெழுந்தவர். ஆகவே அவர் தன் போராட்டத்தை குத்திர இழிவு நீக்கத்தைத் தொடக்கமாகக் கொண்டு விரிவு படுத்தினார். ஒரு நதி தன் மூலத்திலிருந்தே வலிமை முழுவதையும் திரட்டிக் கொள்வதில்லை. துணைநதிகளின் பெருக்கமே அதனை வற்றாத பெருநதியாக வளர்த்தெடுக்கிறது. தலைவர் களும் அப்படித்தான் என்பது நம் அடிப்படை புரிதலாயிருந்தால், அவர்களைப் பற்றிய நியாயமற்ற விமாசனங்களைத் தவிர்ப்பதன் மூலம் நம்மை யோக்கிய மானவர்களாகத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
பெரியார் தன் சமூகப் பணிகளாக விதவைத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம், பெண் விடுதலை முதலானவற்றை முன்வைத்து இடைவிடாமல் பரப்புரை நிகழ்த்தினார். விதவைத் திருமணத்தை எடுத்துக் கொண்டால் விதவைக் கொடுமைகள் நிறைந்த சமூகக் குழுக்களுக்கே அது முக்கியமான பிரச்சினையாய் இருக்கும். அப்படிப்பட்ட குழுக்கள் ஒட்டுமொத்த சமூகத்தில் ஒரு 15% அல்லது 20% மக்களைக் கொண்டி ருக்கும். பெரியார் பிறந்த சாதியிலும் அந்தக் கொடுமை நிலவியது. வர்ணாசிரம சீலத்தைத் தங்கள் மேலான ஒழுக்கமாகப் பாவித்த சாதிகளில் நிகழ்ந்த கொடுமை அது, பிற சாதிகளில் அது ஒரு பிரச்சினையே இல்லை. இதனை வைத்துக் கொண்டு பெரியார் தன் சாதிக்கே முன்னுரிமை கொடுத்தார். சாதிப் பிரச்சினையையே ஒட்டு மொத்த சமூகப் பிரச்சினையாக ஊதிப்பெருக்கினார் என்று விமர்சனம் வைத்தால் அது நம்மைக் குறுங்குழுவாதிகளாகவே படம் பிடித்துக் காட்டும் . சாதி மறுப்புத்
திருமணங்கள் எல்லாருக்குமான விஷயம். ஆனால் இதைப் பரவலாக செய்து கொண்டவர்கள் இடைநிலைச் சாதிக்காரர்களே. அதாவது இடைநிலைச் சாதி ஆண்கள், தாழ்த்தப் பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண் டார்கள். தாழ்த்தப்பட்ட ஆண்கள் பார்ப்பனப் பெண்களைத் தவிர பிறசாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பெரியார் காலத்தை விட இன்றுதான் பெரும்பாலும் கொலையில் முடிவதாக இருக்கிறது. பெரியார் காலத்திலும் சரி, இப்போதும் சரி இந்த சாதி மறுப்புத் திருமணங்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளே நடைபெறுவது வெகு அபூர்வமாயிருக்கிறது. இதுமாதிரி செயல்களை ஊக்கப்படுத்த உட்குழுத் தலைமைகள் முன் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. தலைமைகள் உருவாக்கக் கிடைத்த நல்வாய்ப்புகள் கண்டு கொள்ளப்படவில்லை.
கலப்புத்திருமணங்கள் புரட்சிகரமானவைதான் என்றாலும் அவை நிகழ்ந்தேறிய முறையில் ஒரு எதிர்நிலை அம்சமும் இருக்கிறது. 'மேல்' சாதிக்காரன் அவனைவிடக் கீழ்ச் சாதிப் பெண்ணை மணம்புரிந்து கொள்வதை மனுநீதி விதிவிலக்காய் அனுமதிக்கிறது. மாறி மணம்புரிவதைக் கொலைக் குற்றம்போல் நிராகரிக்கிறது அதைத்தான் இந்த மனுசாதிகளும் அனுசரிக்கின்றன. பெரியார் முன்னெடுத்த ஒட்டுமொத்த சமூகப் புரட்சி, அவரது இயக்கக்காரனை மனுதர்ம ஆதரவாளனாகக் காட்டும் முரண்பாடே செயல்வடிவம் பெற்றது. இந்த வகையில் பார்ப்பனப் பெண்களை நாம் பாராட்ட வேண்டும். தாழ்ந்த சாதி ஆண்களை மணந்து கொண்டு அதற்கு கழுவாயாகத் தங்கள் தலைவர்களை நல்ல 'இந்து'வாக, மேல்நிலைப் படுத்திவிட்டாலும் அடிப்படையில் அவர்கள் மனுவின் எதிரிகள்: ஆனாலும் மதத்தின் அங்கங்கள்.
பெண் விடுதலைப் பேச்சில் பெரியார் அதன் எல்லா எல்லைகளையும் தொட்டவர்.
எல்லைகளையே உடைத்தவர். ஆனால் பெரியார் தொண்டர்கள் பெண்ணைப் பெண்ணாகப் புரிந்து கொள்ள, அனுமதிக்கக் கற்றார்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் ஒரு விளிச் சொல்லாகவே எல்லோரையும் தோழர்கள் ஆக்கிவிட்டதைப்போல, பெரியார் இயக்கத்திலும் பெண்களை ஆண்களுக்குச் சமமாக, ஆண்களாக, ஆண்களின் பிம்பங்களாகவே பார்த்தார்கள். அதன் வளர்ச்சியாக, பெண்களை ஒழுக்கச் சின்னமாக, கற்பரசிகளாக. ஒரு வகையில் பாவிக்கும் காதலற்றவர்களாகப் பாவிக்கும் மனநிலையிலேயே உறைந்திருக்கிறார்கள். பெரியார் அந்த அளவுக்குத்தான் புரிந்து கொள்ளப்பட்டார்; செரிக்கப்பட்டார்.
இந்நிலையில்தான் அவரது ஆக்கப்பணிகள் அழிவுப் பணிகளாக அல்லது அவற்றின் தொடர்ச்சியாக அடையாளங்காணப்பட்டனவே தவிர, திட்டமிட்ட ஆக்கங்களாக, பண்பாட்டுத் தளத்தில் வரையறை செய்யப்பட்ட தீர்வுகளாக முன்னெடுக்கப்படவில்லை. பெரியார் பணிகள் அவருக்குப் பிறகு. அவர் கொண்டிருந்த பொருளில் தொடரப்படவும் நிலைப்படுத்தப்படவும் இல்லை. உண்மையைச் சொல்வதானால் இந்தப் பின்னடைவு பெரியார் காலத்திலேயே உருவாகி விட்டது.
'உலகத்தில் ஒரே ஒரு கிறிஸ்தவர் இருந்தார் அவர்தான் இயேசுநாதர்' என்பார்கள். அதுபோல பெரியார் இயக்கத்தில் ஒரே ஒரு தொண்டர் இருந்தார் அவர் பெரியார் தான்' என்று சொன்னால் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.அவ்
வகையில் பெரியாரைச் சுற்றி இருந்த சீடர்கள் நாணய குறைவானவர்கள் மட்டுமல்ல, அழுக்குப் பிறவிகள். பெரியார்தான் தினமும் குளிக்காத பல்தேய்க்காத துணி மாற்றிக் கொள்ளாத அழுக்குப் பிறவி என்று சொல்லி மனதுக்குள்ளேயே தங்களை பாராட்டிக் கொள்ளும் வாசனைத் தடவிய அழுக்குப் பிறவிகள். விதிவிலக்குகள் எங்கேயும் இருக்கும். இறுதி மூச்சு வரை பெரியார் தொண்டர்களாய் இருப்பவர்கள் உண்டு. நான் பேசுவது பெரும்பான்மை பற்றி.
பெரியார் காலத்திலேயே அவர் நிழலில் நிறம் ஏற்றுக் கொண்டவர்கள்
அவருக்குப் பொய்யாகத்தான் நடந்துக் கொண்டார்கள் . பெரியார் தேசியங்களை கேள்விக்கு உட்படுத்திக் கொண்டிருந்தபோது அவர் சீடர்கள் தமிழ் தேசியம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இன்று திருமாவளவன் செய்வது போல் அன்று தங்கள் பெயர்கனை மாற்றிக் கொண்டார்கள். தமிழ்ப் பெருமிதம் பேசினார்கள். பாண்டிய சோழ மன்னர்களின் பாம்பரைகளாக தங்களை வடிவமைத்துக் கொண்டார்கள். ஆண்ட பரம்பரையாகத் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறவர்கள் அனிச்சையாக அதிகார மையங்களின் அயோக்கியத் தனங்களை மோசிக்கிறவர்களாக, நியாயப்படுத்துகிறவர்களாக மாறிவிடுகிறார்கள். இந்தப்பேர்வழிகள்தாம் மெல்ல மெல்லச் சரிந்து சாதிப்பெருமிதம் கொண்டவர்களாக விடைத்துக் கொள்கிறவர்கள் . பெரியார் காலத்து அந்தப் போக்குகளை அவரும் வகைபிரித்து விமர்சிக்கவில்லை . பெரியார் பெண் விடுதலை பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் கண்ணகியை கற்புடை தெய்வமாக போற்றிக் கொண்டிருந்தார்கள். தேவதாசிப் பிரியனான ராஜராஜ சோழனை, பொற்காலச் சோழப் பேரரசனாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டையும் ஒன்றிணைத்து பார்ப்பதுதான் இந்துத்துவா புனிதம். அது அவர்களுக்குப் பெரியாரின் சீடர்கள் என்ற பெயரிலேயே வாய்த் திருந்தது. பெரியார் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லி அந்த கற்பரசர்கள் வெளியேறினார்கள். பெரியாரை பெண் விடுதலைக்கு எதிரான அந்த குற்றவாளியாக்கி விட்டுச் சென்றார்கள். அவர்கள் ஆட்சி அமைக்கும்போது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று ஒற்றைத்துவம் பேசும் சுதந்திரப் பிராமணனாக தங்களை உயர்த்திக் கொண்டார்கள். அந்த வாசகத்தின் எதிரொலியாகத்தான் ' பிஜேபி தீட்டுக் கட்சி அல்ல' என்று சொல்லி அவர்களோடு
தோள் சேர்த்துக் கொண்டு, தங்களை 'நல்ல' இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டது . எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை" என்று இன்னும் வெட்கமில்லாமல் சொல்வார்கள். நல்ல இந்து நாத்தி கனாயிருப்பது விசேஷம் என்பது அவர்களுக்கும் தெரியும்.
பெரியார் தன் ஆக்கப்பணிகளைத் தொடரத் திட்டங்களோ தோழமை உறவுகளோ, செயலறிவுப் புலமைகளோ, அதிகார வலிமைகளோ, வயதோ கொண்டிருக்கவில்லை. அவற்றைத் தேடிச் செல்வதும் அவர் கோட்பாட்டுக்கு ஏற்புடையதல்ல. கடைசிக் காலத்தில் இயக்கச் சிதைவுகளுடேயும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது ஒரு 'பச்சைத் தமிழனைக்' கண்டடைந்ததன் மூலமாகத்தான். அந்தத் தமிழன் ஆட்சி இழந்ததும் விரைவிலேயே அவரது பெயர் தாங்கிச் சீடர்கள் அவரைப் புதைத்து விட்டார்கள்.
பெரியார் இயக்கம் தேங்கிக் கிடக்கிறது. சந்தனமே ஆனாலும் தேங்கிப் போனால் அது நாற்றச் சேறுதான். இந்தத் தேக்கத்தால் தமிழகம் திரும்புகால் அலையில் சிக்கிக் கொண்டு விட்டது. மாபெரும் கடல் அலை அதன் தலைமீது அழுக்கையும் நுரையையும் சுமந்து கொண்டு கரை நோக்கிச் சீறி வரும். கரையில் மோதி, கடக்கமாட்டாமல் கால் மடக்கி வற்றிய கடல் நோக்கி எவ்விதப் பிரயாசையும் இன்றி மடிந்து விழும். அலை கரை நோக்கி வரும்போதும் அழுக்கோடு வந்தது. ஆனால் அந்த அழுக்கை நிராகரிக்கிற மூர்க்கம் அதற்கிருந்தது. இப்போது மடிந்து விழுகிறது. அழுக்கு ஒரு சுமையாக வந்து அழுத்துகிறது; தவிர்க்க முடியாத அதிகாரச் சுமையாகும்.
இனி ராமன் நல்லவனாகத் தெரிவான். மாதவி சொல்வது போல், 'குகனைத் தம்பி என்றான் குரங்கைக் கூட நண்பன் என்றான்' என்பது மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும், அதற்குப்பின்னிருந்த வஞ்சகம் தெரிந்தாலும் சொல் ஏறாது. பா.ஜ.க எத்தனை வானரங்களைத் தம்பிகளாகச் சேர்த்துக் கொண்டு ஆள்கிறது. ராமன்தான் அவர்களுக்கு முன்னோடி. பெரியார் நல்லபடி போய்ச் சேர்ந்து விட்டார். ராமன் எவ்வளவு நல்லவனாயிருந்தால் 96 ஆண்டுகள் தன் பெயரில் அவனைச் சுமந்திருப்பார்! இப்படிச் சொல்லித்தான் இனி நம்மால் பெரியாரையும் நிம்மதியையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
.
ஃஃஃ
தொகுப்பிலிருந்து
சில துளிகள்...
1. ஹே...ராம்
உன் ராம ராஜ்யத்தில் மனித தர்மம் ஏன்
வாலி வதையானது?
2. ஏ... அல்லா
எரிகின்ற
புகை வண்டிகளில்
இனி உன்
குரான் ஒலிக்கட்டும்
3. தெய்வமே உன் கடைசி அவதாரமாவது எங்கள் சேரியில் நடக்கட்டும்
4. நான்கு முகங்கள் எட்டுக்கைகள்
அசுரர்களைக் கொன்ற ஆயுத பலங்கள் கோட்டைகள் கொடிகள் இத்தனை இருந்தும் ஆண்டவனே
உனக்கு ஏன்
எங்கள்
கருப்புப் பூனைகளின் காவல்!
5. அவள் விழிநீர் நெருப்பாகச் சுட்டாலும் நெருப்பை அணைக்கும்
6. வாஸ்து சாஸ்திரத்துக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் கண்ணகியின் கற்பு சாஸ்திரத்தைக் கற்றிருக்க நியாயமில்லை.
7. நீமட்டும்தான்
பெண்ணை
அலங்காரம் கூட அடிமைப்படுத்தும்
என்றாய்
8. மின்சார யுகத்தில் கூட மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து போகும் நட்சத்திரங்கள்
9. தமிழா!
உன் தூக்கத்தில்
திராவிடம்
கானலாகிவிட்டது .
காவேரி பகற்கனவாகிவிட்டது
10 சுற்பில் நான் புதுக்கவிதை
காதலில்தான் மரபுக்கவிதை.
11. நட்பு
மேலானது என்பதால்தான் எட்டாத வானத்தில் நீ
எட்டி விடும் கனவுகளில்
நான்.
12. நான் இயல்
நீ இசை.
நம் நட்பு நாடகம் என்று
ஏன் சொல்லாமல் விட்டுவிட்டாய்.
13. இந்த
மனிதச் சங்கிலியை
சாதிச் சங்கிலி தொடும்போதெல்லாம்
தாராசு
தடம் புரள்கிறது.
14. கம்யூனிசம்
வர்க்கங்கள் பேசி
வறண்டு போனது.
காந்தியம் கதராடையாகி
கிழிந்து போனது.
15. என் கனவுகளில்கூட
தன் மண்ணின் வாசனையை பரிமாறிக் கொண்டிருந்த என் கிராமம் தொலைந்து போய்விட்டது.
16. கூடு கட்ட
கிளைகள் இல்லாத என் குருவிகள்
டி.வி. ஆண்டனாக்களில் தலைகீழாக
தர்ணா செய்கின்றன.
17. பசியை
அவள் சாப்பிட்டாள்.
பசியின் உடலை
அவன்
பசி சாப்பிட்டது.
18. ஓரிரவில் கள்ளச்சாராயம்
அவனை சாப்பிட்டபோது விதவையின் கோலத்தில் அவளுக்கு விடியல் பிறந்தது.
19, கதறினாள் சின்னாத்தா எந்தக் கண்ணனும் வரவில்லை .
அவள் கதறலுக்கு ஓடி வர அவள் என்ன
அய்வருடன் படுத்த தர்மராசனின் தர்மபத்தினியா?
கவிதாசரண் இதழ்
செப்- அக் 2003
பக் 2 - 7