Sunday, January 22, 2017

நந்தி ஸ்லோகம் வீரவணக்கம்

.
தமிழரின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வீரமரணம் அடைந்த
தமிழினக் காளையர் கீரனூர் அருகேயுள்ள லெட்சுமணப்பட்டியைச் சேர்ந்த தம்பி மோகன் என்ற ராஜபாலுவுக்கும்
இலுப்பூர் அருகேயுள்ள ஓடுகரை ஊரைச் சேர்ந்த தம்பி இராஜாவுக்கும்
வீரவணக்கம். இராஜாவின் மனைவி மகன் மகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ''இன்று காலை புதுக்கோட்டை மட்டத்தில் ராப்பூசல் கிராமத்தில் நான் துவங்கி வைத்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், துரதிர்ஷ்டவசமாக 47 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது, ''ஆனால், மாடுகளுக்கு எந்த துன்புறுத்தலுக்கு நடக்கவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, இப்போட்டிகள் நடந்தது'' என்று
உறுதி செய்திருக்கிறார். அவருடைய நீதி தவறாத நெறிமுறையை
எண்ணி எண்ணி... எண்ணி எண்ணி...

(நந்தி ஸ்லோகம்)

நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ!!

ஓம் நமசிவாய.

Friday, January 20, 2017

மெளனவிரதம்

மெளனவிரதம்.. ஓம் சாந்தி..


இப்போதெல்லாம் விரதமிருப்பதில் எனக்கு நம்பிக்கைவந்துவிட்டது.
வாரத்தில் ஏழு நாட்களும் விரதமிருக்கும் அன்னலட்சுமியின்
நம்பிக்கை எனக்கு இல்லாவிட்டாலும்
விரதமிருப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதுதானே.
விரதமிருப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.
எந்தநாளில் விரதமிருக்கலாம் ?
. ஞாயிற்ருக்கிழமை விரதம் - சூரியபகவானுக்கு.
 அதுதான் தைப்பொங்கல் வைத்து சூரியனைக் கும்பிட்டாச்சே.
குந்தியைப் போல கர்ணனைப் பெற்றெடுக்கும் வயதும் இல்லை.
அவள் சொல்லிக்கொடுத்த  மந்திரமும் மறந்துவிட்டது.
திங்கட்கிழமை விரதமிருந்தால் சோமவிரதமாயிற்றே.
சிவனுக்குரியது. விரதமிருப்பதில் தவறு வந்தால் கோவக்காரன்.
நெற்றிக்கண்ணால் எரித்தாலும் எரித்துவிடுவான். வேண்டாம்.
செவ்வாய் கிழமை விரதம் செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்லது.
எனக்கு செவ்வாய் தோஷமில்லையே.
புதன் கிழமையோ வியாழக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ
புகழ் கல்வி செல்வம் தரும் விரதங்கள்...
சனிக்கிழமை விரதமிருந்தால் கேது திசைக்காரருக்கு நல்லது.
சனிப்பகவான் கொடுக்கும் போது விபரீதராஜயோகத்தைக் கொடுத்தாலும்
கொடுக்கலாம்.
எந்தக் கிழமை எதை வேண்டி விரதமிருக்கலாம்...
ஒரே குழப்பமாயிருக்கு...
என் குருவின் சிஷ்யையிடம் கேட்டேன்.
அவள் சொல்கிறாள்... இப்போதைக்கு உனக்கு நாக்கில் சனி இருப்பதாலும்
கணினியில் கேது இருப்பதாலும் மவுனவிரதமே உத்தமம் என்று.
மவுனவிரதம்.. மவுனவிரதம் , மெளனவிரதம்.
ஓம் சாந்தி.. ஓம் சாந்தி  ஓம் சாந்தி.

Wednesday, January 11, 2017

பொங்கல் ஆன்லைனில்

பொங்கல் ஆன்லைனில் டும் டும் டும்இனிமேல் எவரும் வயலுக்குப் போய் உழைக்க வேண்டியதில்லை. பச்சரிசி, பனங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பூசணி, தடியங்காய், புடலை, முருங்கைக்காய், கத்தரிக்காய், தக்காளி, புளி, தேங்காய்,
வெல்லம், நெய் , வெற்றிலைப்பாக்கு, வாழை இலை
கரும்பு, மஞ்சல் குலை. இஞ்சி, இத்தியாதி சகலமும்
அமேசான் புண்ணியத்தில் ஆன்லைனில்...
டும் டும் டும் ஆனலைனில் பொங்கல்
ட்டும் டும் ட்டும்.
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி... பொங்கல் கொண்டாட
தேவையான பொருட்கள் மட்டுமல்ல, பொங்கலுடன் சம்பந்தப்பட்ட சகலலும் அதாவது ஜல்லிக்கட்டு உட்பட
இனி ஆன்லைனில்...
இது என்ன புதுச் செய்தியா இருக்கேனு என் தமிழினப் பற்றாளர்கள் என் மீது ஐயம் கொள்ளற்க.
அமேசான் பொங்கல் கொண்டாட மாட்டுச் சாணியை நூறு
ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது அந்த சாணி போடும்
மாட்டைக் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்திவிடாதா என்ன..?
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஆன்லைனில் ஜல்லிக்கட்டு.. டும் டும் ட்டும்.

Tuesday, January 10, 2017

திமுக..செயல்தலைவர் ..ஏன்?

Image result for words


செயல் தலைவர் ?
தலைவர் என்றால் செயல்படுபவர். முன்னோடி.
இயக்கம், கட்சி, நிறுவனம் என்று அமைப்பு ரீதியாக
அனைத்து தளங்களிலும் தலைவர் என்றால் வழிநடத்துபவர்,
செயல்களுக்கு பொறுப்புள்ளவர் இத்தியாதி பல்வேறு
பொருட்கள் உண்டு.  ACTING CM, ACTING PRESIDENT
என்ற சொற்கள் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக கீழ்க்கண்ட
பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

when someone is said to be acting in a position it can mean one of three things.
*The position has not yet been formally created.
*The person is only occupying the position temporarily, to ensure continuity.
*The person does not have a mandate.

இதன் அடிப்படையில் தான் தமிழில் இடைக்கால முதல்வர்,
இடைக்கால பிரதமர், இடைக்கால தலைவர் என்ற மிகச்சரியான சொற்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
திமுக என்ற மாபெரும் அரசியல் கட்சியில்  திரு. ஸ்டாலின்
அவர்களுக்காகவே செயல் தலைவர் என்ற ஒரு பொறுப்பான
புதிய பதவி உருவாக்கப்பட்டது. தமிழக அரசியலில் கலைஞர் அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு
அக்கட்சி இப்பதவியை உருவாக்கியது காலத்தின் கட்டாயம்.
ஆனால் அது என்ன "செயல் தலைவர்  ...? "
தொலைக்காட்சியில் ஒவ்வொரு செய்தியையும் வாசிக்கும் போது முன்பெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் என்று அறிவித்தவர்கள் இப்போதெல்லாம் செயல் தலைவர் ஸ்டாலின் என்றே அறிவிக்கிறார்கள். செயல் தலைவர் என்ற
சொல் செயல் தலைவரை மட்டும் குறிப்பிடாமல் செயல்படா
தலைவரும் இருக்கிறாரா... என்ற இன்னொரு பக்கத்தையும்
சேர்த்தே வாசிக்கிறது. அந்தப் பக்கத்தில் அவர்களையும் 
அறியாமல் கட்சியின் மாபெரும் தலைவராக இருக்கும்
அவர்கள் போற்றும் கலைஞர் அவர்களே காட்சி அளிக்கிறார்.
இது எந்த வகையில் நியாயம்? யாருக்கோ பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு இன்னொரு அநியாயத்தையும் அல்லவா சேர்த்தே செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை?
துணைத் தலைவர் என்ற் சொல் தலைவருக்குத் துணையாக இருப்பவர்
என்பதைக் குறிக்கும். நிர்வாகத்தலைவர் என்ற சொல் என்னவோ
நிர்வாகம் அதாவது  administration சம்ப்ந்தப்பட்டது என்பதால் ஓர்
அரசியல் கட்சியின் நிர்வாகத்தை முழுவதும் குறிப்பதில்
குறைபாடு வரும். அத்துடன் துணைத் தலைவர், நிர்வாகத் தலைவர்
என்ற சொற்கள் தலைவர் என்ற பதவியின் இரண்டாம் நிலையையும்
சேர்த்தே குறிப்பதால் அச்சொற்கள் விலக்கப்பட்டிருக்கலாம். ஆனால்

"இணைத் தலைவர் " என்ற சொல் தலைவருக்கு இணையானவர் என்ற மிகச்சரியான பொருளைக் கொடுக்கும். அப்படியான ஒரு சொல் தமிழருக்கோ தமிழக அரசியலுக்கோ புதியதும் அல்ல.. ACTING  என்ற சொல்லை நேரடியாக  செயல், செயல்படுவது என்று பொருள் கொண்டு இப்படியான" செயல் தலைவர் " என்ற புதிய அரசியலை ஆரம்பித்திருக்கிறார்களோ என்னவோ!

இக்கருத்து குறித்து இயக்கத்தோழர்களிடன் பேசியபோது
தமிழில் அவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை.,
அதெல்லாம் அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
என்று சொல்கிறார்கள்.
எல்லா சொற்களும் பொருள் குறித்தனவே..! சொற்கள் வெறும் சொற்கள் மட்டுமல்ல., சொற்கள் வரலாற்றின் அடையாளங்கள். சொற்கள் வெளிப்படையாக சொல்லுவது
கொஞ்சம், சொல்லாமல் உணர்த்துவது அதைவிட அதிகம்.
எல்லா சொற்களும் பொருள் குறித்தனவே.
பொருள் குறித்தனவே.


Monday, January 9, 2017

சிறுகதைகளின் நிறப்பிரிகை

தென்பெண்ணைக் கதைகள்
----------------------------------------------------சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?
தமிழ் இலக்கியத்தின் தனிப்பாடல்கள் சிறுகதைகளா இல்லையா ?
சிறுகதை மேற்கத்திய இலக்கியமா?
இப்படியாக எப்போதும் சிறுகதைகள் குறித்து விவாதிக்க நிறைய இருக்கிறது.
சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எவராலும் அறுதியிட்டு
சொல்லிவிட முடியாது. சிறுகதைக்கான எல்லைக்கோடுகள் வரையப்பட்ட
அடுத்த நொடியில்  எல்லைக்கோடுகளைத் தாண்டி சிறுகதை பயணித்துவிடுகிறது..

அண்மையிலவாசித்த  எழுத்தாளர் அன்பாதவனின்
"தென்பெண்ணைக் கதைகள்"   படைப்பிலக்கியத்தின் பரிசோதனைக்களமாகவே மாறி இருப்பதைக் கண்டேன்.
ஒரு நிகழ்வு,  ஓர் உணர்வு சிறுகதையாகிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துதான்.
ஆனால் "நீர்மங்களின் நிறப்பிரிகை" ஒரு நிகழ்வைச் சுற்றியோ ஒர் உணர்வைச் சுற்றியோ எழுதப்படவில்லை. இன்னும் சொல்லப்ப்போனால் ஒவ்வொரு நீர்நிலையும் ஒவ்வொரு தனித்தனி  சிறுகதையாக இருக்கின்றன.
கடல், பெருங்கடல், வளைகுடா, நதி,  குளம், ஏரி, கிணறு என்று ஒவ்வொரு நீர்நிலைகளாக பயணிக்கிறது.. வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் சாட்சியாக நீர்நிலைகள் இருக்கின்றன.
சிறுவனாக இருக்கும்போது கடலில் குளிக்கப்போகிறான்..அப்பா பக்கத்தில் இருப்பதால்  பெருங்கடலோ அலையோ அச்சிறுவனை அச்சுறுத்தவில்லை.

"ஹ என்ன பெரீய்ய கடல், எங்கப்பாவை விடவா..!" என்று வங்களாவிரிகுடாவில் ஆரம்பிக்கும் நீர்மங்களின் கதை  தமிழ்நாட்டில் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்படும்  சமகால அரசியலுடன் முடிகிறது.
கடலைக் கண்டு அதிசயித்தவனும் அப்பாவை கடலினும் பெரிதாக நினைத்தவனும் கடந்துவந்தப் பாதையில் ஒரு நதியின் மரணம் நிகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ., நீரின்றி அமையாது உலகு என்ற வாழ்வியலை கதையின் அடிநாதமாக மெல்லிய இழையாக கோர்த்திருக்கும் நேர்த்தி கதையை வீரியமுள்ளதாக்குகிறது.
கதையின் சம்பவங்களும் கதைப் பாத்திரங்களும்
 நிறப்பிரிகையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றன. கதைக்களமான நீர்நிலைகளே  கதையின் முதன்மைப் பாத்திரமாகிவிடுகின்றன. கதை நீர்மங்களின் கதையாக
நீர்மங்களின் நிறப்பிரிகையாக ஜாலம் செய்துவிடுகிறது. இத்தனையும் இந்த ஒற்றைக் கதைக்குள் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் படைப்பிலக்கியத்தின்
அன்பாதவன் என்ற தேர்ந்த கதை சொல்லியை மிகச்சிறந்த உத்திகளைக்
கையாளும் எழுத்தாளராகவும் மெய்ப்பிக்கிறது.
 ரொம்பவும் இயல்பாகவும் அனைவரின் வாழ்க்கையிலும்
நிகழும் சாதாரண சம்பவங்களின் பார்வையில் கதையை நகர்த்தி இருக்கும் பாணி         வாசிப்பவனைக் கதையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது.
.  ஒற்றை நிகழ்வு ஓர் உணர்ச்சி என்றெல்லாம்
வரையறுக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீர்நிலைகளின் படைப்பு
வெள்ளம் அடித்துச் செல்லுகிறது.
நிகழ்வுகளின் ஈரம் நீர்நிலைகளின் ஈரத்தையும்
சாயலையும் பார்க்கும் போதெல்லாம் நமக்குள் நம் கதைகளைச் சொல்லும் நிறப்பிரிகையாக மறுஅவதாரம் எடுக்கின்றன. . கதை,  கதையையும் தாண்டி பயணிக்கிறது என்பது ஒரு படைப்பாளனின் ஆகச்சிறந்த வெற்றி என்றெ கருதுகிறேன்.


காக்கை குருவி எங்கள் சாதி என்று எழுதினானே பாரதி. அவன் மனுஷன்.
அவனைப் போல இருக்கனும்... அப்படினு  காக்கை குருவிகள் பேச
ஆரம்பிக்கின்றன.
சின்ன வயதில் பறவைகளை கல்லெறிந்து காயப்படுத்தியதும்
கொலை செய்ய உதவியதும் என்ற குற்ற உணர்விலிருக்கும் கவிஞன்
பறவைகளின் மன்னிப்பு கேட்கிறான். கவிதை எழுதுகிறான்.
அத்தருணத்தில் பாதிக்கப்பட்ட பறவை இனங்கள் என்னவெல்லாம்
பேசக்கூடும்? என்ற கற்பனைக்குள் புகுந்து அதுவே சுயவிமர்சனமாகி 
"சிறகுகளின் சாபம் " கதையை கனமுள்ளதாக்குகிறது.
"மூட்டை மூட்டையா பாவம் பண்ணிட்டு காசியில போயி கரைக்கிறமாதிரி..
பாதிரியார் கிட்ட பாவமன்னிப்பு கேட்கிற மாதிரி , ஒத்தக் கவிதை எழுதிட்டு
என்னமா பாவலா காட்டறான் பாரு இந்த ஆளு "
என்று பறவைகள் கவிஞனைப் பார்த்து கிண்டல் செய்கின்றன.
எள்ளல் சுவையுடன் எதையும் எழுதுவதில் திறமைமிக்க அன்பாதவனுக்கு
பறவைகளின் மொழி  கை கொடுக்கிறது.
" நீ பாவமன்னிப்பு கவிதை எழுதறது.. குற்ற உணர்ச்சியில மிதக்கிறது..
இதெல்லாம் செத்துப்போன எங்கள் தொப்புள் கொடி உறவுகளை
மறுபடியும் உசுரோட கொண்டு தருமா என்ன.." என்று வாகை மரத்து
மைனா கோபத்துடன் கேட்கிறது.
அது மைனாவின் குரல் மட்டுமா..? அருகிலிக்கும் முள்ளி  வாய்க்கால்
தாண்டி அக்குரல் எதிரொலிக்கிறதே!
. ..
சிறுகதையின் ஒரு சொல்,,, தொப்புள் கொடி உறவு பற்றிய உரையாடல்...
கதைக்கு பன்முகப்பார்வையைக் கொடுக்கிறது. சிறுகதையும் பன்முகத்துடன்
பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது இக்கதை.

செய்திகளும் செய்திகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் உண்மை அறியும்
குழுக்களின் அறிக்கைகளும் சமகால வரலாற்றுடன் நேரடியாக தொடர்புடையவை.
அவை அனைத்தையும் தன் படைப்பிலக்கியத்தில் கொண்டுவர எடுத்த முயற்சியில் , கொஞ்சம் கூடுதலான ஆசையில் அன்பாதவன் எழுதி
இருக்கும்"  நடுக்கடல் தனிக்கப்பல்" இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால் தனித்துவமான சிறுகதையாகி இருக்கும்., ஆகி இருக்க முடியும். ஆனால் நடுக்கடல்  தனிக்கப்பல் தென்பெண்ணையில்
ஆவணமாகவும் செய்தியாகவும் மட்டுமே... பயணித்திருக்கிறது..
ஆவணங்களை சிறுகதைக்கான நிகழ்வுகளின் ஆதாரமாகக் கொண்டுவரும்போது அதுவே
சமகால சமூக அரசியல் பிரச்சனைக்கான கருப்பொருளுக்கு அழுத்தும் கொடுக்கும்..
ஆனால் அதுமட்டுமே ஒரு சிறுகதையாகிவிட முடியாது..

" சம்பவாமி யுகே யுகே " சிறுகதை முழுக்கவும் நாடகத்திற்கான
கூறுகளைக் கொண்டுள்ளது.
தன் சமகாலத்து கவிஞர்களின் கவிதைகளை தன் சிறுகதைகளில் ஓர் உத்தியாகவே கையாண்டிருக்கிறார் அன்பாதவன்.
. சிறுகதைகளில் அதிகமாக  கவிதைகளைக்
கையாண்டவர் அன்பாதவனாகத்தான் இருப்பார் என்று எண்ணுகிறேன்.
அன்பாதவன் கவிஞர், நாடக ஆசிரியர். சிறுகதையாளர். அவருடைய இத்தொகுப்பில் இலக்கியத்தின் இந்த மூன்று கூறுகளுமே  விரவி இருக்கின்றன.
சிறுகதை என்ற வடிவம் பெற்றுள்ள மாற்றம், செழுமை, வளர்ச்சி, வடிவச்சோதனைகள், பரிசோதனை முயற்சிகள்  என்று பல்வேறு சோதனை முயற்சிகளின் களமாக  தென்பெண்ணைக். கதைகள்.
களத்தில் இறங்கிவிட்டால் கடைசிவரைப் போராடும் குணம் கொண்டவர்
அன்பாதவன்.   தென்பெண்ணை அவர் படைப்பிலக்கிய முயற்சியில்
இன்னொரு மைல்கல்
. வாழ்த்துகளுடன்...
--
தென்பெண்ணைக் கதைகள்
அன்பாதவன்
இருவாட்சி (இலக்கியத்துறைமுகம்) வெளியீடு
விலை : ரூ 130

பெண்ணுடல் DANGAL

DANGAL  திரைப்படமும் பெண்ணுடலும்

பதின்ம வயது பெண்.. அதே வயது ஆணுடன் குஸ்தி சண்டை..
அவனைக் கீழே தள்ளி அவன் எழுந்திருக்க முடியாமல்
தன்னுடல் பலத்தால் அழுத்தி ...
அவன் கால்களை இழுத்துப் போட்டு புரட்டி எடுக்கிறாள்.
இதையே இன்னொரு வகையில் சொல்வதனால் ஒரு விடலைப் பையன்
இரண்டும் கெட்டான் வயசு பெண் குழந்தையின் உடலைத் தூக்கிப்
போடுகிறான். கால்களை இழுத்து மடக்கித் தள்ளுகிறான். இப்படியாக...
வெல்டன்.. அமீர்கான்.. பதின்மவயது பெண்ணை ஆண் தொட்டவுடன்
சிலிர்ப்பது போலவும் அவள் வெட்கப்படுவது போலவும் அந்த உடல்களின்
தொடு உணர்ச்சி பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதிலிருந்து தப்பிக்கவே
முடியாது... இதெல்லாம் வயசுக்கோளாறு ... இப்படியாக கோளாறுத்தனமாக
ஆண்- பெண் பதின்மவயதினரைத் திரையில் காட்டி காட்டி... அதையே
உண்மை என்று எண்ணி அம்மாதிரியான ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட ஒரு இந்திய சினிமா சூழலில்... டங்கல்... ஆண் பெண் குத்துச்சண்டைக் காட்சி..
மனதுக்கு இதமாக இருந்தது. உண்மையாக இருந்தது. அதையும் ஒரு தகப்பனே செய்வது இன்னும் ஆறுதலாக இருந்தது.

Thursday, January 5, 2017

துரத்தும் மோகினிதொலைதூரத்தில் உன்   மூச்சுக்காற்று தீண்ட முடியாத
மலைச்சாரலில் அலைந்து திரிகிறேன்.
அலைபேசிகளின் காற்றலைகள் எட்டமுடியாத தூரத்தில்
கொட்டும் பனிமலையில் எலும்புகள் சிலிர்க்கின்றன
தொங்கிக்கொண்டிருக்கும் நரிலதா மலர்களின் கவிதைமொழியில்
எனக்காக காத்திருக்கிறாய்..
சூடான மூச்சுக்காற்று என்னருகில்.
மலர் செடி கொடி மரம்
வனம் வானம்  ... அடியே
நோக்குமிடமெல்லாம் உன் களிநடனம்.
 நிறைவேறாத ஆசைகளும் காதலும்
என்னைக் கொத்தி தின்னுகின்றன.

கரு விழிகள் பிதுங்கி கைவிரல்கள் நடுங்க
கருச்சிதைவு.
பஞ்சாட்சர மந்திரம்  எழுதி
அதில் " அ , இ , அரி, ஓம் " கீறிய பீஜாட்சர மந்திரத்துடன்
அருகில் வருகிறான் அகத்தியன்.
காவிரி கொணர்ந்தவன் தோற்கிறான்.
வானம் பொய்த்த பூமியில்
தற்கொலை செய்து கொள்கிறான்.
சமைந்த மூன்றாம் நாள்  கிருஷ்ணபட்சத்தில்
என்னைப் பிடித்த மோகினி
சுக்லபட்சத்தில் முழுநிலவாய் ..
சிதை நெருப்பாய் சுடுகிறாள்.
வெந்து தணியுமோ இக்காடு?
Sunday, January 1, 2017

அதிகாரமொழி

 நீ முழுவதுமாக அதிகாரத்தின் அடையாளமாகி
ஒலிக்குப்பைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறாய்
கவனிக்கப்படுவது என்பதையும் தாண்டி
யார் கவனிக்கிறார்கள்,
எதன் பொருட்டு கவனிக்கிறார்கள்
என்பதையும் சேர்த்து வாசித்தால்
கூவத்தின் நாற்றம்.. மித்தியின் தற்கொலை.
அடுக்குமாடியில் படிகள் இருந்தாலும்
இறங்கிவருவதும் தரையில் நடப்பதும்
மறந்துபோன கால்கள்
சக்கரநாற்காலியில் சுழலும் உலகம்
அழுகிப்போன கவுசிகன் உடலைத் தூக்கிச் சுமக்கும்
நளாயினி தேவியர் சூரிய அஸ்தமனத்தை 
நிரந்தரமாக்கிவிட்டார்கள்.
அனுசுயைக்கள் சொன்ன சொல் மந்திரமில்லை.
இருள் அடர்ந்த இருள்..
நாற்காலிகள் இன்னொரு ஒத்திகைக்காக
புறப்பட்டுவிட்டன.
பேயரசு செய்தால் பிணமெழுதும் ..
த்தூ