Wednesday, June 29, 2016

அரிவாள் கலாச்சாரம்





ஒரு பெண் கொலை செய்யப்பட்டு துடித்துக்கொண்டிருப்பதை
வேடிக்கைப் பார்த்த சமூகம்.
அவள் உடலில் ஒரு துண்டு கைக்குட்டையைக் கூட
போடாமல் கடந்து சென்ற கூட்டம்.
இறந்துப்போனவளின் சாதி என்ன?
கொலை செய்தவனின் ம்தம்/ சாதி என்ன?
என்று ஆராய்ச்சியில் நாட்டம் கொண்ட சமூகம்.
இதை அரசியலாக்குவதில் சுயலாபம் தேடும்
மானங்க்கெட்ட தலைவர்கள்
இம்மாதிரி சம்பவம் தன்னுடையை பெண்ணுக்கும்
எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம்
என்பதை இன்னும் உணர்ந்து கொள்ளாத பெற்றோர்
யாதர்த்தம் என்ற பெயரில் அரிவாள்
கலாச்சாரத்தை பரப்பி இருக்கும் திரைப்படங்களும்
தொலைக்காட்சி தொடர்களும்.....
கூலிப்படைகளை ஏவிவிட்டு திரைமறைவில்
மறைந்திருக்கும் சமூகம்..
.....
ஒரு கொலையைப் பார்த்து அச்சத்திம் மவுனமாக
இருந்ததாகச் சொல்கிறார்களே..
இந்த அச்சத்தை ஊட்டியது யார்?
காவல்துறையின் கெடுபிடிகள் இவ்வளவு கேவலமான
அச்சம் தருபவையாக இருப்பதற்கு என்ன காரணம்?
கொலை செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தியதில் நம் அரசியல் தலைவர்களின்
ப்ங்கு என்ன?
ஆண் பெண் உறவில் ஒரு பெண்ணுக்கு ஆணை நிராகரிக்கும்
சகல உரிமையும் உண்டு என்ற அடிப்படை தர்மத்தைக்கூட
நம் இளைஞ்ர்கள் ஏன் அறிந்து கொள்ளவில்லை?

நம் கல்வி நிறுவனங்கள் , சமூக ஆர்வலர்கள்..
தொடர்ந்து நடக்கும் இச்சம்பவங்கள் குறித்து இதுவரை
என்ன் செய்திருக்கிறார்கள்.?

பணத்தை எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே
சொல்லிக்கொடுக்கும் நம் வியாபரக்கல்வி நிறுவனங்கள்
இளைஞர்களின் வாழ்வியலை படுகுழியில் தள்ளி இருக்கின்றன.

அரிவாள் கலாச்சாரத்தை யதார்த்தம் என்ற பெயரில்
கொடி கட்டி பறக்கவிட்ட திரைப்படங்களின் கொடூரமுகமிது.

கேள்விகள் மட்டுமே என் வசம்.
இதற்கான பதிலகளை எவரிடமும் கேட்கவில்லை.

முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை
அனைத்து மாணவர்களுக்கும் யோகா பயிற்சி கட்டாயப்பாடமாக்கப்பட
வேண்டும்.
உடல்வலிமையும் ஒழுக்க கட்டுப்பாட்டையும் தரும் இராணுவக்கல்வியும்
அவசியம் அவசியம் அவசியம்.
10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியப்பின் ஒவ்வொரு மாணவன் மாணவியும்
கட்டாய இராணுவக்கல்வி ஓராண்டு பயிற்சி பெற்ற பிறகுதான்
மேற்படிப்பைத் தொடர முடியும் என்ற ஒரு சட்ட்த்தைக் கொண்டுவர
வேண்டும்.
இது மட்டும் தீர்வல்ல என்றாலும் மாற்றத்திற்கான ஒரு
ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Sunday, June 26, 2016

சோமேஸ்வரா



கடலடியில் இன்னும் ஆறாமல் இருக்கிறது
சோமேஸ்வ்ரியின் பெருமூச்சு.
தோட்டத்தின் சிதறிய பன்னீர்ப்பூக்கள்
கடலில் மிதக்கின்றன.
பேரிரைச்சலுடன் இடியும் மின்னலுமாய்
கோட்டையின் மதில்கள் உடையும்
அகால வேளையில்
சென்னி மல்லிகார்ஜூனா
என்னை அழைக்கிறாய்.
விரிந்திருக்கும் உன் வெண்கொற்றகுடைக்குள்
ஒதுங்கும் காலம் கடந்துவிட்டது.
முழுவதுமாக மழையில்
நனைந்துவிட்டேன்.
சிதலமாகிப்போன கடற்கோபுரத்தில்
தீட்டிய ஓவியங்கள்
செதுக்கிய கல்வெட்டுகள்
எதிலும் எனக்கான சாட்சியம் இருக்கப்போவதில்லை.
எப்போதாவது வழிப்போக்கர்கள்
இவ்வழியாக வரக்கூடும்.
அவர்கள் விருப்பப்படி எதையும் எழுதட்டும்.
வாழும்போது எழுதமுடியாத ரகசியங்களை
வழிப்போக்கனாக வந்தவன் எழுதிவிடவா போகிறான்?
சோமேஸ்வரா... ஈஸ்வரா..

Wednesday, June 22, 2016

அண்டர்கிரவுண்ட் கூட்டணி



நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக
இந்த இரு பெரும்கட்சிகளின் எதேச்சதிகாரத்திற்கு
சாமரம் வீசி அரியணையில் ஏற்றி இருக்கிறது.
இந்த இரு பெரும்கட்சிகளும் திராவிட அரசியல் கட்சிகள்
என்று கொண்டாட முடியவில்லை.
இவர்களிடம் திராவிடமும் இல்லை, தந்தை பெரியாரும் இல்லை.

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் என்பது கானல்நீர்தானா?
என்ற கேள்வி இப்போது விசவரூபமெடுக்கிறது.
நீ இருக்கனும்
இல்ல நான் இருக்கனும்
கொடுக்கல் வாங்கல் சண்டை சச்சரவு
கோர்ட் வாய்தா அடிதடி கொலை கொள்ளை
நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம்
ஆனா .. நம்மள விட்டா ஒரு பய இனி உள்ளே
வந்திடப்பிடாது... ஆமா சொல்லிப்பிட்டேன்.

அடடா... எனக்கென்னவோ .. இப்படி ஒரு அண்டர்கிரவுண்ட் கூட்டணி
செமையா வேலை பார்த்திருக்கிறது என்ற எண்ணம் வருகிறது.
எம்ஜியார் ஆட்சியில் இருந்தப்போது...
சூட்கேஸ் வந்தா .. கொண்டுவந்தவரிடம் கேட்பாராம்..
கோபாலபுரத்திற்கு போயிடுச்சா னு.
ஆளும்கட்சிக்கு இத்தனை விழுக்காடு பங்கு
எதிர்க்கட்சிக்கு இத்தனை விழுககாடு பங்கு என்று
உடன்படிக்கை இருக்கிறது .
இந்த தேர்தல் முடிவுகளை ஆழ்ந்து கவனித்தால்
அச்சம் ஏற்படுகிறது.
ஏதோ ஒரு வகையில் தமிழக அரசியலில்
ஜனநாயகத்தை கொலை செய்து புதைத்துவிட்டன.

தமிழ்த்தேசியம் கேள்விக்குரியதாகிவிட்டது மட்டுமல்ல
கேலிக்குரியதாகவும் ஆகிவிட்டது.
இது ஏன்? என்று யோசித்தாக வேண்டும்.
அதுவும் ஈழ அரசியலுடன் இணைத்து தமிழ்த்தேசிய அரசியலை
பார்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
தலித் அரசியல் நீர்த்துப் போய்விட்டதா..?
என்ற கனமான கேள்வி எழுகிறது.
தொல். திருமா, சிவகாமி, டாக்டர்  கிருஷணசுவாமி மூவருமே
இத்தேர்தலில் மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்
வெற்றியை இழந்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான
களத்தில் நின்றவர்கள் இவர்கள். இவர்களை ஒதுக்கிவிட்டு
அதே தொகுதிகளில் (ரிசர்வ் தொகுதிகள்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
வேட்பாளர்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்று பார்த்தால்
இந்த அரசியல் களத்தில் தனக்கென தனி அடையாளம் இல்லாத
முழுக்கவும் சார்பு நிலை கொண்டவர்களை ம்ட்டுமே
தனித்தொகுதிக்கான தவப்புதல்வர்களாக முடியும் என்று
காட்டி இருக்கிறது. இதுவும் ஒருவகையில் தனித்தொகுதி
என்ற சலுகையை கேலிக்குரியதாக்கிவிட்டது.
தலித் அரசியல் பேசினால் இடமில்லை.
இரு பெரும் கட்சிகளின் எடுபிடிகளாக இருந்தால் மட்டுமே
அரசியல் களத்தில் தலித் அரசியல் சாத்தியப்படும் என்பதை
இம்முடிவுகள் மூலம் உணர்த்தி இருக்கிறது இந்த இருபெரும்
கட்சிகள். தலித்திய அரசியல் களத்தில் இருப்பவர்கள்
இது குறித்து என்ன முடிவு செய்திருக்கிறார்கள்?
நாலு எருதுகளும் இரண்டு ஓநாய்களும் கதை எழுதவேண்டும்.

களப்பணியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் பொதுவுடமை
இயக்கத் தோழர்கள் இத்தேர்தல் முடிவுகளை
"பண நாயகம் வெற்றி பெற்றது"
என்று மட்டுமே சொல்லி நகர்ந்துவிடும் கொடுமை..
சிறுதுளி நம்பிக்கையையும் நீர்த்துப்போகச்செய்கிறது.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது ஒரு பாடம்.
அதைப் பாடமாக கற்று தேர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு
யார் நகரப்போகிறார்கள்?

.

Monday, June 20, 2016

கூத்துக்காரனின் கவிதைமொழி



"தாண்டுகால்" கவிதை தொகுப்பு என் வாசிப்புக்கு வந்து சில
மாதங்கள் கடந்துவிட்டன. கவிதை எழுதிய தவசிக்கருப்பசாமி தான்
நான் அறிந்த தம்பி ஹரி கிருஷ்ணன் என்பதைப் புரிந்து கொள்ள
என் மரமண்டைக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.
இரு நாட்களுக்கு முன் ஹரி என்னுடன் பேசினார்.
அவருடைய கவிதைகளை வாசித்தவர்கள் " நீ இனிமேல்
கவிதை எழதவேண்டாம்" என்று சொன்னார்களாம்!! ஆம்
சொன்னார்களாம்.!!
நீங்க வாசித்தீர்களா , எதுவுமே சொல்லவில்லையே! என்று இரு
தினங்களுக்கு முன் அவர் என்னிடம் கேட்டார். அறிந்தப்பெயரும்
அறியாத பெயரும் ஏற்படுத்திய குழப்பத்தை அவரிடம் சொல்லி
ரசித்தேன். எவரெல்லாம் அவரை கவிதை எழுதவேண்டாம் என்று
சொன்னார்கள் என்று அவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகவும்
அருவெறுப்பாகவும் இருந்தது.

"கவிதை என்ன இவனுகளுக்கு பட்டா போட்டு எழுதிக்கொடுத்த
சொத்தா?"
இவனுகளின் மொழி தான் வசீகரமானதா?
கவிதையை ஒளிவட்டமாக தலையில் தூக்கி சுமந்துக்கொண்டு
அலையும் இந்த விருது சிகாமணிகளுக்கு
தாண்டுகால் மொழி நிச்சயமாக மிரள வைத்திருக்கும்.
அந்த மிரட்சியில் அரண்டு போய் அந்தக் கவிதா
சிகாமணிகள் அலறுகிறார்கள் ..
கூத்துக்காரனின் மொழி தமிழ்மொழி இல்லையா?
இவனுகளைப் போல கொஞ்சம் கொஞ்சும் சமஸ்கிருத
வார்த்தையைக் க்லந்து கவிதை எழுதிவிட்டால்
தமிழின் செம்மொழி அந்தஸ்த்து பாதுகாக்கப்படுமா என்ன?
சற்றொப்ப் (1500 ஆண்டுகள்) சில நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழ் மண்ணை தமிழன் ஆளவில்லை.
தமிழ்க்கவிதையின் ஆணிவேரை தன் கூத்துகளில்
மறையாது பறை அடித்து முழங்கிக்கொண்டிருந்தவன்
இவர்கள் விமர்சிக்கும் இந்தக் கூத்துக்கவிதைககாரன் தான்.
என்னடா நியாயம் இது?
கவிதை நீதிமன்றத்தில் இவனுகளை எவண்டா நீதியரசர்களாக
நியமித்தது? !!

ஹரி.. உனக்குத் தெரியுமா.. மராத்தி மொழியில்
நாம்தேவ் தாசல் என்ற புகழ்பெற்ற கவிஞ்ருக்கும்
இதே நிலை ஏற்பட்டது.
"மொழியின் அந்தரங்க உறுப்பில்
நான்
பால்வினை வியாதியின் ஆறாதப் புண்."
என்ற அவன் வரிகளில் அதிர்ந்துப்போனது மராத்தி இலக்கிய உலகம்.
இன்றுவரை அந்த அதிர்ச்சி அலைகள் ஓயவில்லை.
ஆனால் நாம்தேவ் தாசலின் மொழி ஆளூமையை
எவராலும் எட்டமுடியவில்லை.

தாண்டுகால் தொகுப்பிலிருந்து..

"ஓடிப்போன பதினேழு வயசுக்கரியைத்
தேடி மீட்டுக்கொண்டு வந்தாயிற்று.
அடி அதிரசம் குத்து கொளுக்கட்டை
வாலிபத்திற் கிட்டாத வாய்ப்பையெண்ணி
உடனமர் காதலனை காரில் வைத்துப்போர்த்தியதில்
நிபந்தனையற்ற கெட்டியன்பு நீர்த்துப்பின் விட்டோடி நீங்கியது.
பரம்பரை மானம் சொல்லி கயிறுப்பிடித்துக் கூத்தாட்டும்
மசிர்பொசுங்க சாம்பலைத் தேய்த்தோ
உசிர் கருக உறுப்பில் சூடிழுத்தோ
பிறந்த ஒழுக்கமற்ற அரும்பாவியை உய்விக்காதா
மனுஷஞ் செத்தாலும் நாயம் சாகப்பிடாது.

----

பெண்ணியம் பேசும் ஆண்களை விட ஆண் பெண் உறவில்
ஆணின் அவஸ்தைகளை வெளிப்படையாக சொல்லவரும்
ஆண்கள் நம்பிக்கையானவர்கள். உண்மையானவர்கள் என்பதால்.!
சிலர் அந்த உண்மைகளை வெளிப்படையாக
பேசினாலும் எழுத்தில் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவதை
அறிவேன்.. காரணம் தங்களை முற்போக்காளர்
பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்களொ என்ற அச்சம்தான்!
ஆனால் ஹரி எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
தொலைபேசியில் பேசும்போது இப்படியும் கூட பெண்கள்
இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுவார்,.

என்றைக்கு  நம் வீட்டு படுக்கை அறையில்
தொலைக்காட்சி பெட்டி ஓரிடத்தைப் பெற்றுவிட்டதோ
அன்றே வாழ்க்கை நுகர் கலாச்சாரமாகிவிட்டது.
பெண்கள் நுகர்ப்பொருட்கள் அல்ல என்ற விழிப்புணர்வு
இருக்கும் பெண்களிடமும் கூட உலகச்சந்தையும்
விளம்பர உலகமும் மயக்கத்தை ஏற்படுத்திவிடும்
உண்மையை இனியும் நாம் மறைக்க வேண்டியதில்லை.
இந்தப் பின்புலத்தில் தான் கீழ்க்கண்ட இக்கவிதை என் கவனத்தை
ஈர்த்திருக்கிறது

குடலைப் பிடுங்கிக் காட்டினாலும்
வாழை நாரேங்கிறவாள் வாய்த்தாளெனக்கு.
காதல் கடிமணம் கரைந்தது பணம்
மகன் பிறந்து அப்பாவென விளித்ததொன்றுதான் சாக்கு
வரதட்சணை புகார் கொடுத்து ஓடிப்போனவள் மீண்டுத் திரும்ப
புருஷன் நான் கூடிக்கொண்டேன்.
ரத்தினப்பிரகாசத்துடன் பத்துவிரற் மோதிரம் தரித்தேன்
உடமை மேலுடமை சேர்த்து உபரியை பதுக்கியும் வைத்தேன்.
லாரியை நான் பார்த்துக்கொள்கிறேன்
அவளை யோனர் பராமரிக்கிறார்
மண்ணு திங்கற பண்டத்த மனுஷன் தின்னாலென்ன.

(தாண்டுகால் கவிதை தொகுப்பு வெளியீடு
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்.)

Wednesday, June 8, 2016

தமிழினத்துரோகி


நீங்கள் திமுக குடும்ப ஆட்சியை ஆதரிக்கவில்லையா?
நீங்கள் திமுகவின் நிரந்தர தலைவர் திருவாரூர் மு. கருணாநிதியை தமிழினத்தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லையா?
அப்படியானால் -
நீங்கள் தமிழ் அறியாதவர்.
தமிழகம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.
தமிழ் இலக்கியம் பற்றி பேசும் தகுதி உங்களுக்கில்லை.
மொத்தத்தில் நீங்கள் தமிழினத்துரோகி.
இதற்கும் ஒரு படி மேலே போய் நீங்கள் அதிமுக தலைவர்
செல்வி ஜெயலலிதாவை ஏதாவது காரணங்களால் ஆதரிப்பவரா..?
போச்சு.. !போச்சு..!! எல்லாம் போச்சு.!!!
அப்படியானால்-
நீங்கள் மிகவும் பிற்போக்கானவர்.
முற்போக்கு சிந்தனைகளுக்கு எதிரானவர்.
இன்னும் சிலரின் பார்வையில் நீங்கள் பார்ப்பன அடிவருடி.
மொத்தத்தில் நீங்கள் தமிழினத்துரோகி.
அடடா.. என் தமிழினமே
உன் இன அடையாளம் இப்படியா சுருங்கிப்போகவேண்டும்?!!..
(இம்மாதிரியான விமர்சனங்களை முன்வைக்கும்
 பிரபலமான எழுத்தாளர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்)

Tuesday, June 7, 2016

அம்ரிதா ப்ரிதம்






வாரத்தில் ஒரு முறையாவது அம்ரிதா ப்ரிதம் வாசிக்கவிட்டால்
என்னவோ பித்துப்பிடித்த மாதிரி இருக்கும்.
என்னை வசீகரித்த அந்த எழுத்துகள்.. 
இதோ இந்த நிமிடத்திலும் என்னால் அவளுடைய
ஒரு வரியைக் கூட எழுதிவிட முடியாது.
என் மீள் மீள் வாசிப்புகளில் அவள்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக எரித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு சிகிரெட் துண்டுகளை விட்டுச்சென்ற ஷாகிர்
எனக்கு வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறான்.
ஜீவராசிகள் வாழ்வதற்கு காற்று இருக்கும்வரை
பூமியில் எதுவும் வெற்றிடமில்லை என்பது மட்டும்தான்
இத்தருணத்தில் ஆறுதல் தரும் உண்மையாக
அணைத்துக்கொள்கிறது.
அந்தக் கடைசிக்க்டிதத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.
அதை வாசிக்கப்போகிறேனா
எழுதப்போகிறேனா
காலம் இன்னும் முடிவுசெய்யவில்லை.
------
Amrita Pritam
i
There was a pain
That like cigarettes
I inhaled quietly
Just a few poems remain
That I flicked along
With ash from the
Cigarettes

Monday, June 6, 2016

மழைக்கவிதை




குடைகள் விரிவதற்கு தயாராகிவிட்டன..
மழைக்கால காலணிகள் வாங்கியாகிவிட்டது.
சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி
வேகமாக நடக்கிறது.
தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை
அவசரமாக அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பளமும் வடகமும்
டப்பாக்களில் பொரிவதற்கு காத்திருக்கின்றன.
கோபுரத்தில் விழுந்த காக்கையின் எச்சத்திலிருந்து
ஆலமரத்தின் விதை முளைவிட விழித்திருக்கிறது...
புழுக்கம் தாளாமல் புறாக்கள்
தனித்தனியாக பெருமூச்சில்.
இன்றொ நாளையோ
இன்னும் இருபத்திநாலு மணிநேரத்தில்
மழை வந்துவிடும்.
அறிவித்துவிட்டார்கள் அவர்கள்.
படபடப்புடன் கண்ணாடி சன்னலைத் திறக்கிறேன்.
சூல்கொண்ட கருமேகங்கள் மெல்ல அசைகின்றன.
தொட்டில் அழுகிறது
அணுகுண்டுகள் துளைத்த என் பூமியில்
பூக்கள் பூக்காவிட்டாலும் பரவாயில்லை.
புல் முளைக்குமா .,,?.
காத்திருக்கின்றன  என் கவிதைகள்