பரிசுகளோ விருதுகளொ ஒரு படைப்பாளனின் படைப்புக்கான மதிப்பீடல்ல
என்றாலும் கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும்
சிற்பி விருது பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
காரணம் கவிஞர் சிற்பி அவர்கள் ஒரு படைப்பாளனுக்கு கொடுக்கும்
அங்கீகாரமும் மரியாதையும். சிற்பி பரம்பரை பணக்காரர். எனவே அவரால்
மிகச்சிறப்பாக சிற்பி விருது நிகழ்வை நடத்த முடிகிறது என்று உங்களில் பலர்
சொல்லக்கூடும். ஆனால் அவரைப்போல வசதியானவர்கள் வழங்கும்
விருது நிகழ்வுகளில் விருது பெறும் படைப்பாளனின் இடம் எப்படி
இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கும் போது தான்
சிற்பியின் சிறப்பு நமக்குப் புரியும்.
முதலில் விருது பெறும் படைப்பாளரின் வருகையை உறுதி செய்வார்.
கோவையில் இறங்கியவுடன் படைப்பாளர் தங்குவதற்கான ஏற்பாடுகள்
கச்சிதமாக செய்யப்பட்டிருக்கும். நிகழ்வுக்கு முன் அதிகாலையில்
தன் விருந்தினர்களை நேரில் வந்து சந்தித்து வசதிகள் குறித்து
அக்கறையுடன் விசாரிப்பார். காலை உணவு அவருடைய இல்லத்தில்.
அழைத்துச் செல்ல கார் ரெடியாக இருக்கும். அவர் இல்லத்தில் அவர்
குடும்பத்தினரே தயாரித்த காலை டிபன்.. சுடச்சுட.. அவர் வீட்டினர்
பரிமாறுவார்கள். அதன் பின் ஹாலில் அவர் விருந்தினர்கள் அனைவருடனும்
ஒரு குட்டி உரையாடல் நடக்கும். விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரில் விழா நடக்கும் அரங்கத்திற்கு அழைத்துச் செல்ல
ஏற்பாடாகி இருக்கும். விழா அரங்கில் விருது பெறும் படைப்பாளர்கள்,
சிறப்பு விருந்தினர்,, விருது வழங்குபவர் அமர்ந்திருக்க நிகழ்வு தொடங்கும்.
ஒவ்வொரு விருது பெறுபவர் குறித்த குறிப்புகளுடன் கவிதைகளும்
இடம் பெற்ற வண்ணத்தில் அச்சிடப்பட்ட கையேடு வழங்கப்படும்.
அவ்விழா சிற்பியின் புகழ்ப்பாடும் விழாவாக இல்லாமல்
விருது பெறும் எழுத்தாளருக்கு முழுக்க முழுக்க சிறப்பு செய்யும்
நிகழ்வாக மிக செம்மையாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும்.
விருது பெறும் ஒவ்வொரு படைப்பாளரும் ஏற்புரை வழங்க
போதிய நேரமும் எழுத்தாளர் தன் மனதில் பட்டதைப் பேசுவதற்கான
முழு சுதந்திரமும் இருக்கும்.
நிகழ்வின் இறுதியில் தலைவாழை இலைப்போட்டு திருமண வீடு போல
பந்தி நடக்கும். கோவை எப்பொதுமே எழுத்தாளர்களின் கூடு.
பலர் வந்திருப்பார்கள். சந்திப்புகள், ஸ்நேகம் வளர்க்கும் புன்னகைகள்..
தொடரும்.
..............
சிற்பி விருதுகளில்
நம் படைப்புகள் மட்டுமே அங்கே முன்னிலை வகிக்கும்.
நம் சாதி, மதம், இனம், வாழ்விடம் இதெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.
(விருதுகளில் இவை எல்லாம் கண்டு கொள்ளப்படுகிறதா என்று என்னிடம்
எதிர் கேள்வி கேட்காதீர்கள். ப்ளீஸ் ..)
விருதுகளில் வழங்கப்படும் கேடயமோ, பரிசுத்தொகையோ, ஆடம்பரமான
மேடையோ ஒரு படைப்பாளனுக்கு பொருட்டல்ல. அவனும் அவன் படைப்பும்
அவ்விருது மேடையில் பெறும் இடம் ரொம்பவும் முக்கியமானது.
2006 ல் நிழல்களைத் தேடி கவிதை நூலுக்கு சிற்பி கவிதைப் பரிசு கிடைத்தது.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் கவிஞர் சிற்பி அவர்களுக்கு சொல்லாத
நன்றியை இவ்வளவு காலம் கடந்து சொல்கிறேன்...
என் ஆசை எல்லாம் என் நண்பர்களும் கவிதைக்கான சிற்பி விருது பெற வேண்டும் என்பது தான்.
நன்றி சிற்பி.