My name is Raghuram Rajan, and I do what I do
There has been pleading demands and threats
(for a rate cut).. Everybody and his uncle has a theory
on how to run the economy.. There are savants and
idiot savants available to give you advice...
இப்படியான பஞ்ச் டயலாக் வசனங்களுடன் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு
இன்றைய தினசரி (ஆங்கிலம்) பத்திரிகைகளில் ஹீரோவாக
வலம் வருகிறார் இந்திய ரிசர்வவங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.
பொதுவாக 25 பைசா வட்டி விகிதக்குறைப்பு இருக்கும். ஆனால்
ரகுராம் 50 பைசா வட்டிவிகிதத்தைக் குறைத்துவிட்டதாக
அறிவித்தவுடன் நம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களும்
அவசரம் அவசரமாக இந்த வட்டிவிகிதத்தின் பயன்பாடு வங்கி
வாடிக்கையாளருக்கு/பொதுமக்களுக்கு உடனடியாக போய்ச்சேர
வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
பொதுஜனங்களுக்கு இதனால் என்ன பயன்? என்ற கேள்விக்கு
எவருமே நேரடியாக பதில் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும்
புரிந்து கொள்ளும்படி சொல்வதே இல்லை!
அதாவது இனிமேல் வங்கிகள் வழங்கும் கடன் தொகைக்கான வட்டிவிகிதம்
50 பைசா குறைகிறது. அதாவது நீங்கள் வீட்டு லோன் வட்டிவிகிதம்
9.50% என்றால் இனி வங்கிகள் 50 பைசா குறைத்து 9% வட்டியை
உங்களிடம் வசூலிக்கலாம். அதனால் உங்கள் கடனுக்கான மாத தவணையும்
குறைகிறது. இப்படியாக housing loan, car loan. domestic purpose loan, house repairing loan, study loan என்று நாம் வங்கியில் வாங்கும்
கடனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வட்டிவிகிதக் குறைப்பு..
அதாவது எல்லோரும் கடன் வாங்குங்கள், நீங்கள் கடன் வாங்கிக்கொண்டே
இருந்தால் தான் நுகர்வோக் மார்க்கெட்டில் வெளிநாட்டினர் தங்கள் பணத்தைக் கொண்டுவருவார்கள். ரியல் எஸ்டேட் என்ற பெருமுதலாளிகள்
தங்கள் கறுப்பு பணத்தைக் கொட்டி பெருநகரங்கள் எங்கும் அடுக்குமாடிக்
கட்டிட குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 30 லட்சத்திற்கும்
குறைவான முதலீடு செய்து கட்டப்படும் அடுக்குமாடி ஒரு வீட்டின் விலையை அவர்கள் 1.25 கோடி விலை நிர்ணயித்திருக்கிறார்கள். அப்படி
அவர்கள் கட்டிப்போட்டிருக்கும் வீடுகள் வாங்குவதற்கு ஆளில்லாமல்
அப்படியே இருக்கின்றன. அதை எல்லாம் இனி இந்த வட்டிவிகித
குறைப்பு ஆசை யில் அந்த விளம்பரங்களில் பொதுமக்கள் வாங்க வேண்டும்.
அப்படி வாங்கும் போது சிமெண்ட் முதல் எலெக்ட்ரிக் பல்ப் வரை வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும். மார்க்கெட் தேக்கநிலையிலிருந்து
மீளும். நினைவிருக்கிறதா... ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மனநிலையில் அவர்கள் பொருட்கள் வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டார்களாம். உடனே ஜப்பானிய அரசாங்கம்
தன் மக்களிடம் கேட்டுக்கொண்டது.. எப்போதும் போல பணத்தைச் செலவு
செய்யுங்கள்.. அப்போதுதான் நாட்டின் பொருளாதரம் சீராக இருக்கும் என்று.
ஓர் அரசாங்கம் தன் மக்களை அதிகமாகக் கடன் வாங்கச் சொல்வதும்
செலவு செய்யச் சொல்வதும் நம் நாட்டில் கார்ப்பரேட்டுகள் தவிர
அனைத்து மக்களுக்கும் நுகர் கலாச்சாரத்தின் எதிர்விளைவுகளை மட்டுமே
கொடுக்கும். அதன்பின், நம் நிதியமைச்சர்கள் இந்தியப் பொருளாதரம்
அமெரிக்க பொருளாதரம் போன்றதல்ல, எம்மக்கள் சேமிக்கும் மனப்பான்மைக் கொண்டவர்கள். என்றெல்லாம் ஆபத்து வரும்போது
பேசுகின்ற பெருமைகள் காலாவதியாகிவிடும்.
இந்த வட்டிவிகிதக்குறைப்பில் பொதுஜனங்களுக்கு கிடைக்கும்
ஆதாயம் என்பது கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை.
ஏனேனில் அவர்களின் கடன் தொகைக்களுக்கான வட்டிவிகிதம்தான்
குறைந்திருக்கிறதே தவிர அவர்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டிவிகிதம்
கூடவில்லை. மாறாக அதுவும் குறைகிறது.
அதாவது ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வாங்கும் கடனுக்கு வட்டி குறைவதால்
அவர் வங்கிக்கு கொடுக்கும் வட்டித்தொகையும் குறையும். அதே நேரத்தில்
அவர் தன்னுடைய சிறுசேமிப்புகளுக்கு
(PPF, Fixed deposit, recurring deposit, post office savings accout,
NSC, )
இதுவரை வங்கி./ போஸ்டாபீஸ்களிலிருந்து வாங்கிக்கொண்டிருந்த வட்டித்தொகையும் குறைக்கப்படுகிறது!!!!
இதனால் பெரும்பாதிப்புக்குள்ளாவது மாதச்சம்பளம் வாங்கும் சாதாரண
பொதுமக்கள் தான்.
பொதுஜனம் வாங்கும் கடன் அதிகபட்சமாக 1 அல்லது இரண்டு கோடிகள்
இருக்கும். ஆனால் கார்ப்பரேட்டுகள் வாங்கும் கடன் குறைந்த தொகையே
100 கோடி இருக்கும். எனவே இந்த வட்டிவிகிதக் குறைப்பு
யாருக்கு அதிக பயன்பாட்டைத் தரப்போகிறது?
உங்களுக்கும் எனக்குமா ..? அல்லது ரிலையன்ஸ், லோதா,
ஹீரநந்தானி , டாடா, டோஸ்தி இத்தியாதி ரியல் எஸ்டேட்
பெருமுதலைகளுக்கா?
அவர்கள் சந்தையில் கொண்டு நிரப்பும் கார், வீடு, வீட்டு
பொருட்கள் எல்லாம் வாங்க பொதுஜனத்திற்கு கடன் கொடுக்கப்படுவதால்
மார்க்கெட் ஓஹோ என்று ஜொலிக்கும்.
மாடு வாங்க லோன் கேட்டால்
மாட்டேன் என்றவர்கள்
காரு வாங்க லோன் கொடுக்க
காத்துக்கிடப்பார்கள்..
ரகுபதி ராகவ ரகுராமா..
மோதி ராஜா ரகுராமா..