Wednesday, January 22, 2014

பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம்






பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு
நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால்
அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.





நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில் - என்றும்

'நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில்

இயற்கை தந்த இனிய வாழ்வை

இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும் - நாங்கள்

இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்

நாங்கள் வாழவேண்டும் இந்தப்  பூமியில்


யாழினி வரனின் இனிய குரலில் சி.ஜெயசங்கர் எழுதிய உருக்கமான
பாடல் வரிகளுடன் துவங்கியது
பெண்ணிய உரையாடலில் முதல் அரங்கம். யாழினி இலங்கையிலிருந்து வந்திருந்தார்.
"“முகாம் கூத்துச் செயற்பாடுகளில் பெண்கள்” வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையங்களை மையமாகக் கொண்ட- ஓர் பார்வை.
என்ற  தன் கட்டுரையை அவர் வாசித்த விதம் மட்டுமல்ல, கட்டுரை பேசிய பொருளும் மிகுந்த கவனத்திற்குரியதானது.

ஈழத்து தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளில் ஒன்றான கூத்து ஈழத்துத்தமிழர் மத்தியில் மகிழ்வுடனும், அழகியலுடனும் பயிலப்பட்டு வருகின்றது. ஈழத்துத் தமிழர் எங்கெல்லாம் செறிந்து வாழ்கின்றார்களோ அவ்வாறான பிரதேசங்களில் எல்லாம் அவர்களுக்கான பாரம்பரியக் கூத்து வடிவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமது பண்பாட்டுத் தளத்தில் நின்று சடங்குக்குரியதாகவும் மகிழ்வூட்டலுக்குரியதாகவும் கருத்திலெடுக்கப்படும் கலைச் செயற்பாடொன்று தமது வாழ்வின் இருப்புப் பெயர்க்கப்பட்டு இடப்பெயர்வு திணிக்கப்பட்டதான முற்றிலும் புறம்பான முகாம் வாழ்வுச் சூழலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் பாரம்பரியத் தொடர்ச்சிமிக்க வன்னிப் பெருநிலப்பரப்பிலே ஏற்பட்ட யுத்தப் பேரழிவு, இடப்பெயர்வு அதன் பின்னரான  முகாம் வாழ்வுச் சூழலிலும் அம்மக்கள் தமது பாரம்பரியக் கூத்துக்களை முன்னெடுத்துள்ளனர்.
போர்க்கால கூத்தரங்கின் அனுபவங்கள,;; பொருளிழப்பு, உயிரிழப்பு, சமூகச் சிதைவு, குடும்பச் சிதைவு, தனிமனிதச் சிதைவு என்பவை வெளிக்கிளம்பும் துயரங்களின் சேர்க்கையாகி கூத்தரங்கின் அதிர்வை, அதுதரும் அனுபவப் பகிர்வை வீச்சாக்குவதாகவும், கூத்தரங்கினதும், கூத்துப் பனுவலதும் அர்த்தங்களையும், அனுபவங்களையும் புதிய தளங்களுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கின்றது. இந்தப் பிண்னனியிலேயே வன்னிப் பேரழிவின் பின்னரான முகாம் வாழ் கூத்துச் செயற்பாட்டை சிறப்பாக  அச் செயற்பாடுகளில் பெண்கள் பங்களிப்பை  பேசுவது இக்ட்டுரையின் நோக்கம் என்று கூறிய யாழினி தொடர்கையில்
இலங்கை முகாம்களில் நடக்கும் கூத்துக்கலை பற்றிய செய்தியின் ஊடாக அவர் காட்டிய சித்திரம், போருக்குப்
பின்னரான வாழ்க்கைப் போராட்டத்தின் முகம்.  முகாம்கள் அனைத்தும் இன்றைக்கும் அரசின் அதிகப்படியான கவனிப்பு வட்டத்தில் தான் இருக்கின்றன. யார் முகாமுக்குள் நுழையலாம், யாருக்கு அனுமதி உண்டு , யாருக்கு அனுமதி கிடையாது என்கிற சட்டதிட்டங்களின் கெடுபிடிகள்.
இதற்கு நடுவில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின்
சகஜநிலை வாழ்வுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒன்றாகத்தான் முகாம்களில்
நடத்தப்படும் கூத்துவகைகளும். இன்னும் சொல்லப் போனால் அரசாங்கத்திற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் கூத்து நடத்துவதற்கான நோக்கமும்
முகாம்களில் கூத்துக்கலைஞர்கள் தொடர்ந்து கூத்து நடத்திக் கொண்டிருப்பதற்கான நோக்கமும் ஒன்றல்ல.
இரண்டும் வேறானவை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

தொடர்ந்து கண்ணகி கூத்தும் காத்தவராயன் கூத்தும் நடக்கின்றன. ஏன்? கதையும் கதைவசனமும் கூட அங்கு வாழும் அனைவருக்கும் தெரிந்ததாகவே இருக்கும். இருப்பினும் கண்ணகியின்  அறச்சீற்றத்தில் நடக்கும் கூத்து ஏதொ ஒருவகையில் " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்கிற உளவியல் மருந்தாகி அவர்களைத் தேற்றுகிறது. காத்தவராயன் தனக்கு விடப்பட்ட சவால்களை எல்லாம் நேர்க்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்ற கதை வாழ்க்கையில் அவர்களுக்கு ஓர்
நம்பிக்கை வெளிச்சத்தை தருகிறது.

கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு முகாமில். குடும்ப உறவுகள் என்ற கூடு
முகாம் வாழ்க்கையில் சிதைக்கப்பட்டிருக்கிறது. தன் குஞ்சுகளைத் தேடும் தாய்ப் பறவைகளாக, தன் இணையைத் தேடும் பறவையாக அலைக்கழிக்கப்பட்டிருக்கிறது முகாம்களில் இவர்களின் வாழ்க்கை. கூத்துக்கலைஞராக அடுத்த முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பின் ஊடாகவே தங்கள் உறவுகளைத் தேடும் விழிகளின் பயணமும் தொடர்கிறது.
கைகளை இழந்த போராளி ஒருவர் கூத்துக் கலைஞராக
தன் மனக்குரலை வேறு ஒரு தொனியில் ஒலிக்கவும்
இந்தக் கூத்து தான் கை கொடுக்கிறது. அதுவும் தன் கைகளில் சாக்ஸ் உறைகளை மாட்டிக்கொண்டு அவர் கூத்து நடத்துவதாக தெரிகிறது.

தமிழ்ச்சமூகத்தில் கூத்தும் பாட்டும் சாதியுடன் தொடர்புடையது தான். ஈழமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வேஷங்கட்டி ஆடிவந்தக் கூத்து இன்றைக்கு முகாம்களில் சாதியம் கடந்து  நிற்கிறது என்று யாழினி
என் கேள்விக்குப் பதிலாகச் சொன்னபோது, கூத்து
மேடையில் சாதியம் கடக்க முகாம்கள் வரை வர வேண்டியதாகிவிட்ட அவலம் முகத்தில் அறைந்தது.

போரில். கலவரத்தில் மாண்ட இன்னாரின் நினைவாக
என்றும் கூத்துகள் நடத்தப்படுவதை ஆதாரங்களுடன்
பட்டியலிட்டார் யாழினி.


பெருந்தோட்ட பெண்கள் மீதான ஒடுக்குமுறையும்- வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளும் - என்ற தலைப்பில்
 சந்திரலேகா கிங்ஸலி (கொட்டகல மலையகம் இலங்கை) கட்டுரை வாசித்தார்.  சந்திரலேகா கிங்ஸ்லி நம்மால் பதில் சொல்ல முடியாத இன்னொரு கேள்வியையும்  வைத்தார்,

"நான் மலையகத்தின் தமிழச்சி,
எங்களுக்காக  குரல் கொடுக்க யாருமில்லையா? " என்று கேட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை, பெண்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவமும் குடும்பமும்
என்று அவர் கட்டுரை விரிந்தது. லைன் வீடுகள் என்று
சொல்லப்படும் தீப்பெட்டிகளை வரிசையாக வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட வீடுகளும்
அந்த வாழ்விட சூழலும் பெண்ணுக்கு ஏற்படுத்தி இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை அவர் பட்டியலிட்டார். அதிலும் குறிப்பாக பெண்ணின் கற்பைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகத்தில் தான் பெற்ற குழந்தைகளை தகப்பனை நம்பிக் கூட தனியே விட்டுவிட்டு செல்ல முடியாத தாய்மார்களின் பேரச்சத்தையும் பதிவு செய்தார். கல்வி கற்று
ஓரளவு வசதி வாய்ப்புகள் வந்தப் பின் மலையகத்தமிழர் தம்மை மலையகத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை முற்றிலும் தவிர்ப்பதைச் சுட்டிக் காட்டினார்.

வே.யமுனாதேவி இலங்கை தோட்டப்புற கர்ப்பினி பெண்களின் வாழ்க்கையைச் சித்திரமாக வரைந்துக் காட்டினார். கர்ப்பினி பெண் வேலைப்பார்க்கும் தேயிலைத் தோட்டம் செங்குத்தாக இருக்கும். அவள் குழந்தைப் பேறுக்கான மருத்துவமனை மலையடிவாரத்தில் இருக்கும். எப்போதும் பிரசவத்திற்கு முந்தின நாள் வரை தோட்டத்தில் வேலைப்பார்க்கும் இப்பெண்கள் பிரசவவலி வந்துவிட்டால் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல டிராக்டர்களைக் கூட பயன்படுத்துவோம். எப்போதும் வயிற்றைச்சுற்றிக் கட்டிய கூடையுடன் இருப்பதாலோ என்னவோ பிரசவம்
அவர்களுக்கு பெரும்பாலும் எளிதாக இருக்கிறது, அதனாலேயே அவர்களில் பெரும்பாலோர் "மாதம் ஒரு முறை ஏற்படும் மாதவிடாய் ' போலவே பிரசவத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள், எனவே பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளாகவே இருக்கின்றன என்றார். அத்துடன்
பிரசவத்திற்கு கொடுக்கப்படும் விடுமுறையும் மருத்துவ
வசதிகளும் கூட எப்படி அவர்கள் வாழ்க்கையில் அந்தப்
பெண்ணுக்குப் போய் சேர்வதில்லை என்பதையும்
தெளிவாக விளக்கினார்.

அடுத்து ஆழியாள் பேசிய படகு மனிதர்கள்.
என்னவோ ஆஸ்திரேலியா அகதிகளின் சொர்க்கம்
என்ற கருத்து நிலவுகிறது. பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் அக்கருத்து எவ்வளவு பொய்யானது என்பதை ஆழியாளின் படகு மனிதர்கள் விவரித்தது. இலங்கையிலிர்ந்து வரும் அகதிகளுடன் சேர்த்து  சூடான். ஆப்கானிஸ்தான். ஈரான். ஈராக் என்று
போர் சூழ்ந்த மண்ணிலிருந்து வந்த அனைத்து மனிதர்களின் முகங்களையும் காட்டினார் ஆழியாள்.

குடியுரிமை திட்டத்தில் குடிவரவுத்துறை அகதி ஒருவருக்கு குடியுரிமைக்கான அனுமதி கொடுத்தப்பிறகும் பாதுகாப்புத்துறையும் அந்த அனுமதியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே குடியுரிமை
கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு துறை குடியுரிமையை நிராகரிப்பதற்கான காரணங்களை
எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இப்படியாக
தங்கள் நாடுகளை விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடியுரிமைக் கனவுகளில் வந்தவர்கள் எந்த நாட்டுக்
குடிமக்களாகவும் வாழாமல் முடிந்துவிடும் அவலங்கள்,
 குடியுரிமைக்காக காத்திருக்கும் நாட்கள் வருடங்களாகி
முடிந்துப் போகும் வாழ்க்கை.. என்று ஆஸ்திரேலியாவின் படகுமனிதர்களாக வந்தவர்களின்
வாழ்க்கையைப் பதிவு செய்தார் ஆழியாள். அத்துடன்
படகில் வந்து இறங்குபவருக்கும் விமானத்தில் வந்து
இறங்குபவருக்கும் ... இருவருமே அகதிகளாக இருந்தாலும் அவர்களை அந்த அரசாங்கம் நடத்தும்
முறை வித்தியாசமானது தான் என்பதையும் ஒத்துக் கொண்டார்.


நளாயினி தாமரைச்செல்வன் - புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவர்களின் மனநிலையும் -- என்ற கருத்தில் உரையாடும் போது  புலம்பெயர் சூழலில் ஐரோப்பா போன்ற நாடுகளில் வாழும் தம் பிள்ளைகள் சந்திக்கும் கலாச்சார பண்பாடு குறித்த அதிர்ச்சிகளை
ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றார். அவர் சிரித்துக் கொண்டே பேசினாலும் ஒரு தாயாக அவரின் வலி,
எதிர்காலம் குறித்த கவலை அவர் பேச்சில் வெளிப்பட்டது. தமிழ்நாட்டின் தமிழ் தொலைக்காட்சிகளின் தொடர்களில் மூழ்கிக்கிடக்கும் ஐரோப்பிய புலம்பெயர் தமிழ்ப்பெண்களைப் பற்றியும்
மெகா தொடர்களின் தாக்கங்களைக் குறித்தும் பேசினார்.
புலம்பெயர்ந்த வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட மொழிச் சிக்கலைத் தாங்கள் எப்படி எதிர்கொண்டோம்,
எங்கள் இருந்தலுக்கான போராட்டத்தில் மொழி தெரியாத தேசத்தில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள
எடுக்கும் முயற்சிகளையும் நகைச்சுவையாக எடுத்து வைத்தார். அத்துடன் புலம்பெயர்ந்த பெண்கள் பலர் மன அழுத்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளதையும்  இரு  கலாச்சார விழுமியங்களை கடக்க முடியாமல் அவதிப்படுவதையும் சுட்டிக்காட்னார்


றஞ்சி தன் உரையாடல்களில் பல்வேறு கருத்துகளைப்
பேசினார். புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்பு அடைந்தபின்னர் பெண்விடுதலைச் சிந்தனைகள் மேலும் தோன்றின சில பெண்எழுத்துக்கள் -தெரிந்தோ தெரியாமலோ- ஆண்நோக்கு நிலையிலிருந்தும் எழுதப்படுகின்றன.
இலங்கையின் போர்ச்சூழல், இயக்க அராஜகங்கள, உடனடி உயிர்ப் பாதுகாப்பு என்பவற்றால் மட்டுமன்றி இதைப் பாவித்து பொருளாதார காரணிகளால் புலம்பெயர்ந்தவர்களிடமும்கூட முற்றுமுழுதான வேறான கலாச்சார சூழல், இந்த நாடுகளின் இயற்கைக்கு முகம்கொடுப்பதில் இருந்த சிரமங்கள், கூட்டுவாழ்க்கையினைப் பிரிந்து உதிரியானமை, மொழிப் பிரச்சினை, நிறவெறி போன்ற பல காரணிகள் இவர்களின் வாழ்வியலைத் தாக்கியதால் அவை இலக்கியங்களிலும் வெளிப்பட்டன. அவை பெண்எழுத்துக்களிலும் வெளிப்பட்டன. இயக்கங்களிலிருந்த வந்த ஆண்களால் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பிலிக்கியப் போக்கு ஆரம்பத்தில் பெண்ணியத்தில் வெளிப்படவில்லை என்பதை இலங்கையின் போராட்ட அரசியல் நிலைமைக்குள் வைத்தே பார்க்க வேண்டும். என்றார்


றஞ்சி தன் உரையாடல்களில் பல்வேறு கருத்துகளைப்
பேசி இருந்தாலும் இரண்டொரு கருத்துகள் மிக முக்கியமானவை. ஒன்று ஐரோப்பாவைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த பெண்கள் பெரும்பாலும் திருமணத்தை நோக்கித்தான் புலம் பெயர்ந்தார்கள்
என்பது. இன்னொன்று ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தங்கள் கலாச்சார அடையாளமாகக் கட்டிக் காக்கும்
"பூப்பு நீராட்டு" அதையும் ஹெலிகாப்டரில் அந்தப் பெண்ணை உட்கார வைத்து விழா நடத்தும் இடத்தில்
பூத்தூவி இறக்கி கொண்டாடும் ஆடம்பர அந்தஸ்த்து
அடையாளமாகி இருக்கும் நிலையை வருத்தத்துடன்
பகிர்ந்து கொண்டார்.
றஞ்சி பகிர்ந்து கொண்ட இன்னொரு முக்கியமான செய்தி ஐரோப்பாவில் பள்ளி கூடங்களில் கவுன்சிலிங் என்ற பெயரால் குழந்தைகளுக்கு நடத்தப்படும் தெரபி
கொடுமை. அதாவது ஐரோப்பா குழந்தைகளும் ஆசியக்குழந்தைகளும் நிறத்தால் மட்டுமல்ல, சில அடிப்படை குணத்தாலும் வேறுபட்டவர்கள். இந்த
அடிப்படை உண்மையை ஐரோப்பா அரசு முற்றிலும்
நிராகரிப்பதுடன் அவர்களுக்கான அளவுகோளையும் ஒரேமாதிரியே வைத்திருக்கிறது. அதன் விளைவு
ஆசியக்குழந்தைகள்  அதிகம் குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள். நம் பார்வையில் குறும்பு என்ற அந்த
துடிப்பான குழந்தைகள் அவர்களின் பார்வையில் வன்முறையைக் கையாளும் குழந்தைகளாக, அதாவது
அக்குழந்தையும் துறுதுறுப்பு அடக்கப்படாவிட்டால்
வன்முறையாகிவிடும் என்ற கருத்து அவர்களுக்கு
இருக்கிறது. இதனால் மூன்று முறைக்கு மேல் குழந்தை விதிகளை மீறிவிட்டால், தண்டனைக்குள்ளானால் பெற்றோர் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பத்தில் பெற்றோரிடம் கை எழுத்து வாங்கப்படுகிறது. மொழிச்சிக்கல் காரணமாக பல பெற்றோர்கள் எதற்கு கை எழுத்திடுகிறோம் என்பதை அறியாமலேயே கையொப்பம் இடுவது நடக்கிறது. அதன் பின் தெரபி என்ற சிகிச்சைக்குள்ளாகும் குழந்தை , அதுவரை நார்மலாக இருந்தக் குழந்தை அப்நார்மலான குழந்தையாக மாற்றப்படுகிறது. அப்நார்மல் குழந்தைகளுக்கு என்று ஒதுக்கப்படும் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே எதிர்காலத்தில் செய்ய வேண்டிய நிலைக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தள்ளப்பட்டிருக்கிறது, பெற்றோர்களிடம் இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் றஞ்சி.

இவை தவிர தமிழகச்சூழலில் கோ. சுஜாதா வாசித்த ஆய்வுக்கட்டுரை என் கவனத்தைப் பெற்றது. "திராவிட சொல்லாடல்களில் பெண்"  என்ற தலைப்பிலான அவர் கட்டுரை அறிஞர் அண்ணாவின் படைப்புகளை எடுத்துக் கொண்டு பேசியது. மனையாள் , இல்லத்தரசி, வேசி,
நடனக்காரி என்ற சொற்களின் ஊடாக பெண் என்பவளை எப்படி இன்பம் என்ற நுகர்ப்பொருள் அடையாளமாக்கி இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் காட்டினார். ஆனால் அவ்ர் கட்டுரையில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதை அங்கும் பதிவு செய்தேன்.
எப்போதும் எவ்விடத்தும் அண்ணாவை எவரும் ஒரு
பெண்ணியவாதியாக எடுத்துக் கொண்டதே கிடையாது.
ஒருவகையில் சொல்லப்போனால் அக்காலக்கட்டத்தில்
தந்தை பெரியார் மட்டுமே பெண்ணியவாதி. தந்தை பெரியாரின் பெண்ணிய கருத்துகளை எந்தளவுக்கு
அவரை ஏற்றுக்கொண்ட அறிஞர் அண்ணாவும் அவர் தம்பிமாரும், மற்றும் பாரதிதாசன் வகையாறாக்களும்
பேசினார்கள், முன்னிலைப்படுத்தினார்கள் என்பதை எல்லாம் நாம் மறுவாசிப்பு செய்தே ஆகவேண்டும்.
எப்படி இருந்தாலும் அண்ணாவின் சங்க கால, காப்பியக்கால பெண்ணின் மீட்டுருவாக்கம் என்பது முழுக்கவும் அரசியல் சார்ந்த பின்னணியில் பார்க்கப்பட வேண்டியதாகும். சுதந்திர போராட்ட காலத்தில்
இந்தியா எங்கும் ஆங்கிலேயரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு
எதிராக இந்திய கலாச்சாரமாக வேத இந்தியாவின் கலாச்சாரம் வைக்கப்பட்டது. இந்திய மொழிகள் எங்கும் இதன் தாக்கம் இருந்தது. மகாகவி பாரதி " ஆரியதேசம்"
என்று கொண்டாடுவதெல்லாம் இந்தப் பின்னணியில் தான். ஆனால் 2000 ஆண்டுக்கும் பழமையான கலாச்சாரமும் தேசிய அடையாளமும் கொண்ட தமிழினத்தை அண்ணா சங்க காலத்திலிருந்தும் சிலம்பிலிருந்தும் எடுத்துக் கொண்டார். என்று அரசியல் காரணங்களை முன்வைத்தேன்.


சாதியம் பெண்ணின் பிறப்புறுப்பில் பத்திரமாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று
சாதியம் குறித்து பேச வந்த கவின்மலர் அண்மையில் தர்மபுரியில் நடந்த இளவரசன் திவ்யா
காதல் விவகாரத்தில் வெளிப்பட்ட சாதிய முகத்தை தன் கருத்துகளுக்கான வலுவான ஆதரமாக
எடுத்துக்கொண்டு பேசினார்.

பெண் விவசாயிகளுடன் தொடர்ந்து களப்பணியாற்றும் ஷீலு, மற்றும் தலித் பெண்களுடன்
களத்தில் நிற்கும் தலித் போராளி ஃபாத்திமா பெர்நாட் இருவரும் தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து கொண்டனர்.இந்தியாவில் மதச்சாற்பற்ற நிலை சாத்தியப்படுமா என்ற கேள்வியின்
ஊடாக அதன் சாத்தியப்பாடுகளையும் அதற்கான தேவை அரசியல் சூழலில் வரவேண்டியதன்
அவசியத்தையும் தன் கட்டுரையில் விளக்கினார் காப்ரியல் டீட்ரிச். உலக மயமாக்கலில்
பெண்களின் பாதிப்புகள், வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், போராட்டங்கள்,
வாழ்வாதரங்களின் பாதிப்பு என்று பல்வேறு தளங்களை நோக்கி தமிழகத்து பெண்ணிய
சிந்தனையாளர்களும் களப்பணியாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை பல்கலை கழக மாணவ மாணவியர் மட்டுமின்றி சிதம்பரம் அண்ணாமலை
பல்கலை கழகத்திலிருந்தும் திருநெல்வேலி மனோண்மணி பல்கலை கழகத்திலிருந்தும்
எத்திராஜ் பெண்கள் கல்லூரி பேராசிரியர் முனைவர் அரங்கமல்லிகா, மற்றும் அவர்
கல்லூரி மாணவியரும் பேராசிரியர் கல்பனா சேக்கிழார், வழக்குரைஞர் ரஜனி , முனைவர்
தங்கம், தெ. மதுசூதனன், மரப்பாச்சி நாடகக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டு
கலந்துரையாடலில் தங்கள் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தார்கள்.

இவைதவிர என்னில் அதிர்ந்து கொண்டிருக்கும் இன்னும் சில:

*இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா கொண்டு வரப்பட்ட தமிழர்களுக்கு குடியுரிமை
கொடுப்பதைப் பற்றி எவரும் பேசவில்லை.
ஏனேனில் அவர்கள் காடுகளில் விலங்குகளுடன் விலங்காக விடப்பட்டார்கள்.

*நோக்கியா தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் அதிகம். அவர்களும் உள்ளூர்ப் பெண்களாக இருப்பதில்லை. தூரத்து ஊர்களிலிருந்து மிகக்குறைந்த
சம்பளத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறது நோக்கியா.

*கிளிநொச்சி குடியேற்றப்பகுதி தான் போருக்குப் பின் வங்கிகளின் கிளைகள் அதிகம் திறக்கப்பட்ட பிரதேசம்.
வாங்கியக்கடனைத் திருப்பிக் கட்டமுடியாமல் தொடரும் தற்கொலைகள்.

*தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள்.. இவர்கள் மீது
திணிக்கப்பட்டிருக்கும் கட்டாயக்கடன்.
பெண்களை ஒடுக்கும் அரசின் முகம்.

*கடந்த 4 ஆண்டுகளில் சிங்கள விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது.

*2100ல் நெல் உற்பத்தி 80% குறையும்.

*புலிகள் காப்பகம் என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன.

*பிறமாநிலங்களிருந்து தமிழகத்தில் வாழ்வாதாரம் தேடி வந்திருக்கும் இன்றைய சூழலில் உருவாகி இருக்கிறது
சென்னைக்குள் இன்னொரு நிழல் சென்னை.

*தமிழகத்தில் இன்றைக்கும் ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு என்று தனிநாள் ஒதுக்கப்படுகிறது.

ஆழியாளின் கருநாவு என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. மரப்பாச்சி குழுவினரின்
கவிதை நாடகத்துடன் நூல் வெளியீடு நிகழ்ச்சி
வெகு சிறப்பாக நடைபெற்றது.
இரு நாட்களிலும் காலை மாலை என்று தொடர்ந்து
நடந்த அரங்கு நிகழ்வுகளை மிகவும் செம்மையாக
ஒருங்கிணைத்து கட்டுரை வாசிப்புக்குப் பின் கேட்கப்பட்ட கேள்விகளின் ஊடாகவும் பல்வேறு செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்தனர் வ.கீதாவும்
ரேவதியும் மங்கை அவர்களும். கட்டுரைகள் புத்தக
வடிவமாகும் போது இக்கலந்துரையாடல்களும் இணைக்கப்பட்டால் கட்டுரைகள் தொடர்பான பிற
செய்திகளும் கணக்கில் கொள்ளப்பட்டு  பெண்ணிய உரையாடலுக்கான தளம் விரிவடையும்.

கருநாவு கவிதைநூலில் இருந்து சில வரிகள்:

எல்லா கதவுகளையும்
முகத்தில் அடித்து மூடுபவர்களே!
ஜன்னல்களை
அறைந்து சாத்துபவர்களே!
காற்றுப் புகும் வழிகளையும்
வெளிச்சம் கசியும் எல்லாத் துளைகளையும்
இறுக்கி அடைப்பவர்களே!

எங்களை முற்றிலுமாய்க் கைவிடுங்கள்
எங்களை முற்றிலுமாய்க் கைவிடுங்கள்

அப்போதுதான்
கடும் உறை குளிரிலும்
பிரிண்டபெல்லா மலைக்காடுகளை அண்டாத
பண்டுலக்ஸ் கிளிக்கூட்டங்களுக்குக்
கிட்டியது போல்,
நாங்களே  தேடிக்கொள்வோம்
எங்களுக்கான தானியங்கள்
விளைந்து இறைந்து கிடக்கும் இடங்க்ளையும்
எங்களுக்கான நகரங்கள்
எழும் நாட்களையும்.

(வாசித்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறார்கள். கட்டுரைகளின் ஊடாக என் அனுபவங்களின் சில துளிகளை மட்டுமே பதிவு செய்திருக்கின்றேன். மற்றவை அச்சில் வெளிவரும்)

Sunday, January 19, 2014

எம் ஜி ஆரும் ஒன்றரை லட்சம் தாலிகளும்






இன்று (19/01.14) பிற்பகல் பாலிமார் தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றம்.

சினிமா  சமூகத்தைப் பிரதிபலிக்கிறதா?
அல்லது
சமூகம் சினிமாவைப் பிரதிபலிக்கிறதா?

என்ற தலைப்பில் . 

சாலமன் பாப்பையா மற்றும் லியோனி பட்டிமன்ற
வகையறாவிலிருந்து சற்று மாறுபட்ட பட்டிமன்றம் என்பதால்
பாதியிலிருந்து பார்க்க ஆரம்பித்த நான் தொடர்ந்து பார்த்தேன்.

அப்போது ராதா ரவி அவர்கள் பேசினார். எம்ஜிஆரின் பாடல்கள் 
எந்தளவுக்கு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின என்பதை
அனைவரும் பேசியது போல ராதா ரவி அவர்களும் எம்ஜிஆர்\பெருமையைப்
பேச ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்ன செய்தி:

எம்ஜி ஆரின் இறுதிச்சடங்கின் போது  தமிழ்ப் பெண்கள் ஒன்றரை இலட்சம்
பேர் தங்கள் தாலியைக் கழட்டி வீசினார்கள் என்றார்., அதாவது தாலி \அறுத்துக் கொண்டார்கள் , 
இந்தச் செயல் எம் ஜி ஆர் அவர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக
'இருக்கலாம்... ஆனால் தமிழ்ச்சமூகத்திற்கோ, தமிழ்ப் பெண்ணுக்கோ..?????

இது அவமானம். வெட்க கேடு. 

எம் ஜி ஆர் அவர்கள் தன் சினிமாக்களில் கூட திருமணக் காட்சிகளில்
மாலை மாற்றிக்கொள்வதை மட்டுமே பெரும்பாலும் காட்டுவார்.
தாலி கட்டவதாகக் காட்ட மாட்டார். 

மேலும், 

இச்செய்தியை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள் பேசி இருந்தால்
எவ்வளவு கிண்டல் அடித்து பேசி இருப்பார் என்பதையும் நினைக்காமல்
இருக்க முடியவில்லை.

Friday, January 17, 2014

மாநகரத்தின் மஹாகவிதை : நாம்தேவ் தாசல்




தன் 64 வயதில் அண்மையில் மறைந்த மராத்தி மொழியின் மஹாகவிதை
நாம்தேவ் தாசல். மராத்தி கவிதை உலகத்தின்  கலகக்குரல்.
மராத்தி கவிதை உலகத்தை தன் மொழி வட்டத்திற்குள் இழுத்து வந்து
இந்த மாநகரத்தின் ஒவ்வொரு அனுபவங்களின் முகங்களாகவும்
மாற்றிக்காட்டியவன். மும்பையின் சாலையோரமே அவன் வீடுகளாக
இருந்தது. காமட்டிபுரம் (பாலியல் தொழிலாளர்கள் வாழுமிடம்) அவன்
உறவின் முகமாக இருந்தது. வயிற்றுப்பிழைப்புக்காக குற்றங்கள் செய்யும்
மும்பை இளைஞர்கள் அவன் நண்பர்களாக இருந்தார்கள்.
மஹர்களின் பேசு மொழி அவன் கவிதை மொழியானது.
மராட்டி கவிதை உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அந்தப் புதுவெள்ளத்தை
எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தன் 23 வயதில் தலித் சிறுத்தைகள் (தலித் பைந்தர்) அமைப்பு உருவாக்கி
களத்தில் நின்ற இளைஞன் நாம்தேவ் தாசல்.
.
இந்தப் புள்ளி மட்டும் தான் தமிழ் தலித் கவிதை வரலாற்றுக்கும்
 மராத்திய தலித் கவிதை வரலாற்றுக்குமான மிகப்பெரிய வேறுபாடு.
அம்பேத்கர் மண்ணில் தலித் கவிதை எழுதியவன்
சாலையில் இறங்கி போராடிக் கொண்டிருந்த களப்பணிக்காரன்.
.
ஆனால் தமிழ்நாட்டில் தலித் இலக்கியப் படைப்பாளர்களும்
தலித் களப்பணியாளர்களும் இணையும் புள்ளிகள் கூட தெரிவதில்லை.
விதிவிலக்காக ஒரிருவர் இருக்கிறார்கள், அவ்வளவு தான்.

நாம்தேவ் தாசல் மராத்தி மண்ணில் தன் கவிதைகளையே
ஆயுதங்களாக ஏந்தி எப்போதும் போராட்டக்களத்தில் நின்றவர்.
அவருடைய அரசியல் சார்புகளில் கருத்து வேறுபாடுகள்
எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவருடைய வெளிப்படையான
தன்மை என்னை மிகவும் கவர்ந்தது.

திலீப்சித்ரே நாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்திருக்கிறார் POET OF THE UNDERWORLD என்று.
காமட்டிபுரம் என்ற தலைப்பில் நாம்தேவ் கவிதையின் ஆங்கில மொழியாக்கம்:

KAMATIPURA
The nocturnal porcupine reclines here
Like an alluring grey bouquet
Wearing the syphilitic sores of centuries
Pushing the calendar away
Forever lost in its own dreams

Man’s lost his speech
His god’s a shitting skeleton
Will this void ever find a voice, become a voice?

If you wish, keep an iron eye on it to watch
If there’s a tear in it, freeze it and save it too
Just looking at its alluring form, one goes berserk
The porcupine wakes up with a start
Attacks you with its sharp aroused bristles
Wounds you all over, through and through
As the night gets ready for its bridegroom, wounds begin to blossom
Unending oceans of flowers roll out
Peacocks continually dance and mate

This is hell
This is a swirling vortex
This is an ugly agony
This is pain wearing a dancer’s anklets

Shed your skin, shed your skin from its very roots
Skin yourself
Let these poisoned everlasting wombs become disembodied.
Let not this numbed ball of flesh sprout limbs
Taste this
Potassium cyanide!
As you die at the infinitesimal fraction of a second,
Write down the small ‘s’ that’s being forever lowered.

Here queue up they who want to taste
Poison’s sweet or salt flavour
Death gathers here, as do words,
In just a minute, it will start pouring here.

O Kamatipura,
Tucking all seasons under your armpit
You squat in the mud here
I go beyond all the pleasures and pains of whoring and wait
For your lotus to bloom.
— A lotus in the mud.

Thursday, January 16, 2014

லீனா மணிமேகலையும் நானும்....., நடந்தது என்ன?





பெண்ணிய உரையாடல் நிகழ்வில் நடந்தது என்ன?
சுற்றறிக்கை வெளியிட்ட பின்னரும் பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
ஏனேனில் அந்த இடத்தில் அத்தருணத்தில் நான் சாட்சியாக மட்டுமல்ல
பாதிக்கப்பட்ட முதல் நபராகவும் நின்று கொண்டிருந்தேன்.

பெண்ணிய உரையாடல் தமிழ் மண்ணில் புலம் பெயர் பெண்களுடன் சேர்ந்து
நடக்க வேண்டும் என்பது என் பல வருடங்களின் கனவு. அக்கனவை நனவாக்க
நான் செய்த முயற்சிகள் பல. சென்னை பல்கலை கழகமும் சென்னை
பெண்களின் சந்திப்பும் - அ. மங்கை, வ.கீதா மற்றும் ரேவதி
எம் முயற்சியை முழுமையாக சாத்தியப்படுத்தி மிகச்சிறப்பாக
தமிழக பெண்ணிய படைப்பாளர்கள், களப்பணியாளர்களையும் அழைத்து
பெண்ணிய உரையாடல் வெளியைத் திறந்து வைத்தார்கள்.

இச்சூழலில் தோழர் லீனாவின் முதல் நாள் அமைதிப்போராட்டம் நடந்தது. லீனா
வெள்ளைவேன் துண்டறிக்கை வெளியிட்ட பிறகுதான் அரங்கில் இருந்த
அனைவருக்கும் அப்பிரச்சனை குறித்து முதன் முதலாக தெரியவந்தது.
தன் கருத்துகளை பொதுமேடையில் கவனத்திற்கு கொண்டுவர தோழர் லீனா
எடுத்த முதல்நாள் அதாவது ஜனவரி3 மாலை 4 மணி பொது நிகழ்வு
முயற்சியில் என் போன்றவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை.
அப்போது தான் முதல் முறையாக நான் தோழர் லீனா அவர்களை நேரில்
சந்திக்கின்றேன். நான் அழைத்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும்
முனைவர் தங்கம் அவர்களை அழைத்துச் செல்ல ஆட்டோ டிரைவர் அரங்கின்
வெளியில் காத்திருந்தார். தொடர்ந்து கைபேசியில் அவர் தொடர்பு கொண்டிருந்த
சூழலில் அரங்கில் வைத்து கைபேசியில் பேச முடியாத சூழலில் நான் அரங்கிலிருந்து
எழுந்து வெளியில் செல்லும் தருணம், லீனாவைக் கடந்து சென்றே ஆகவேண்டும்.
'நீங்கள் புதியமாதவி தானே?" என்று அவர் கேட்டதும் நான் "ஆம்" என்று தலையசைத்து
கடந்து சென்றதும் எங்கள் முதல் சந்திப்பு.
துண்டறிக்கை என் கைக்கு வரவில்லை.

அன்றிரவு நானும் என்னுடன் தங்கி இருந்த கவிஞர் சுகிர்தராணியும் றஞ்சி
மற்றும் ஆழியாளுடன் இதுபற்றிய விவரங்களைக் கேட்டறிந்தோம். அப்போதும்
றஞ்சி உங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்டிருக்கின்றேன், இனி தோழர் லீனாவின்
தரப்பில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்டுவிட்டு தான் எங்கள்
நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று சொன்னேன்.



ஊடறு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல இது.
அப்படியும் ஊடறுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நான் என்ன சுவிட்சர்லாந்தா
போக முடியும் ? என்று கேட்ட தோழர் லீனாவின் கேள்வியின்
நியாயத்தை அக்கணத்தில் புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருத்தி.
தன் எதிர்ப்பை பதிவு செய்வது மட்டுமே தன் நோக்கம் என்றால்
அவருடைய முதல்நாள் போராட்டத்தில் எனக்கும் உடன்பாடே.


மறுநாள் பொதுநிகழ்வில், என் தலைமையில் நிகழ்ச்சி
நடந்துக் கொண்டிருக்கும் போது
எழுத்தாளர் பாமா பேசி முடித்து
எழுத்தாளர் தமிழ்ச்செல்வி தன் படைப்பை வாசிக்கும் தருணத்தில்
லீனா மேடையை நோக்கி வந்தார். அவர் நேரடியாக எழுத்தாளர் பாமாவை நோக்கிப்
பேசினார். முதல் நாள் நிகழ்வுக்கு வராத பாமாவுக்கு எதுவும் புரியவில்லை.
அந்நிலையில் நான் எழுந்து லீனாவிடம்
"இந்த நிகழ்வு முடிந்து பேசலாம் தோழர்"

லீனா வின் எதிர்ப்பு


"உங்கள் சகப்படைப்பாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்,
அவர்களை மதிப்போம், நிகழ்ச்சி முடியட்டும் தோழர், பேசலாம்"

லீனா எதிர்த்தார். கேட்கவில்லை.

"எனக்கும் உங்களுடன் பேச வேண்டி இருக்கிறது தோழர்,
கட்டாயம் நேரம் தருகின்றேன், பேசலாம் தோழர்"

நீ என்ன சொல்வது, நான் என்ன நீ சொல்லிக் கேட்பது என்கிற
தோரணையில் அப்போதே அக்கணமே அந்த மேடை தனதாக
வேண்டும் என்று உரத்தக்குரலில் லீனா மீண்டும் என்னிடம்...

நான் பொறுமை இழக்கவில்லை.
லீனாவுக்கு பேச இடம் கொடுத்தால் என்ன நடக்கும்? என்பதை நான்
அறிந்திருந்தாலும் அதற்கும் நான் அச்சப்படவில்லை.
என்னால் முடியும் என்ற நம்பிக்கை அக்கணம் வரை என்னிடம் இருந்தது.

ஆனால்...?


நான் என் பொறுப்பிலிருந்து தோழமையுடன் கேட்டுக்கொண்ட எந்த ஒரு சொல்லையும்
உள்வாங்கிக் கொள்ள தோழர் லீனா ஏன் மறுத்தார்?

"எனக்கும் உங்களுடன் பேச வேண்டி இருக்கிறது தோழர் " என்று நான் சொன்ன
வார்த்தைகள் அரங்கில் கடைசி வரிசையில் இருந்தவருக்கும் கேட்டிருந்ததே,
லீனாவுக்கு மட்டும் , அதுவும் என்னருகில் நின்ற தோழர் லீனாவுக்கு மட்டும்
ஏன் கேட்கவில்லை?
கேட்கும் மனநிலையில் அவர் இல்லையா?

என்னையும் என் வேண்டுகோள்களையும் நிராகரித்தன் மூலம் லீனா
அந்த அரங்கத்தில் எதை எதிர்பார்த்தார்?
ஜனநாயக முறையில் நடந்துக் கொண்ட என்னை தோழர் லீனா
ஏன் அவமதித்தார்?
அந்த நிகழ்வில் தலைமை என்ற பொறுப்பிலிருந்து நான் திறந்த
அனைத்து கதவுகளையும் கடந்து சென்றவர் தோழர் லீனா அவர்கள் தான்!


நிகழ்ச்சி என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவியதற்கு யார் காரணம்?


பேச வேண்டும் என்றும் அதற்கு நான் நேரம் தருவேன், கட்டாயம் வாய்ப்பு
தரப்படும் என்று என் தரப்பிலிருந்து உறுதி தரப்பட்ட பிறகும்
தோழர் லீனா தன் இருக்கையில் அமர்ந்திருக்கலாம், பேசி இருக்கவும்
முடியும்,
ஒருவேளை அந்த மேடையில் வெள்ளைவேன் குறித்து பேச வேண்டும்
என்ற நோக்கமே அவருக்கு இல்லையோ என்னவோ?
தனக்குத் தரப்பட்ட வாய்ப்பை அவர் நிராகரித்ததை எப்படித் தான்
புரிந்து கொள்வது?

லீனாவின் விளம்பர உத்திகளையும் வெள்ளைவேன் கதைகளை எல்லாம்
புறம்தள்ளிவிட்டு அதிகார துர்வாசனை என்று கூவம் நதிக்கரையில்
நின்று கொண்டு அவர் அலறும் குரலும் அதன் வீச்சும் டில்லி,
கேரளா என்று பறந்து கொண்டிருக்கிறதாம்.

மும்பை டில்லி நண்பர்கள் என்னிடம் சொல்லி சொல்லி
கவலைப்படும் தொனியில் துக்கம் விசாரிக்கின்றார்கள்!



முதல் நாள் நிகழ்வில் அமைதியாக போராட்டம் நடத்தி சென்ற தோழர்
லீனா இரண்டாவது நாள், அதிலும் குறிப்பாக தலித் தலைமை, தலித்
படைப்பாளர்கள் இருக்கின்ற அரங்கில் வந்து தலித்துகளை அவமதித்தார்
என்று அரங்கிலிருந்த இளைஞர் ஒருவர் என்னிடம் சொன்ன போது
உண்மையில் அதிர்ந்து போனேன்!
அவரிடம் தலித் அரசியலுக்கும் தலித் படைப்புகளுக்கும் இம்மாதிரியான'
விளம்பரஙகள் தேவையில்லை, தயவுச்செய்து பிரச்சனைகளைத் திசைத்'
திருப்பாதீர்கள் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.


ஜனநாயகத்தின் எல்லா கதவுகளையும் உடைத்து எறிந்துவிட்டு
வன்முறையைத் தூண்டி அதில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம்
என் போன்றவர்களுக்கு இல்லை.


வேதனைத் தருகிறது தமிழகத்தின் அரசியல் சூழல் மட்டுமல்ல,
தங்களைப் போராளிகளாக பெண்ணியவாதிகளாக படைப்பாளர்களாக
எப்போதும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி சுயவிளம்பரங்களில்
சுயலாபங்கள் தேடும் பெண் முகங்கள் கண்டும் வெட்கப்படுகின்றேன்.

மிகச்சிறந்த கட்டுரைகளும் பேசு பொருள்களுமாக நடந்து முடிந்த
பெண்ணிய உரையாடலின் முதல் பதிவு இம்மாதிரியான ஒரு
பதிவாக நடந்துவிட்ட அவலத்திற்காக வேதனைப்படுகின்றேன்.








Thursday, January 9, 2014

பெண்ணிய உரையாடல்கள் : ஈழம், தமிழகம், புலம் பெயர் சூழல்




கருத்தரங்கு அறிக்கை

இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவை, பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி.

பேசிய வெளி - சென்னையிலுள்ள பெண்கள் சந்திப்பும் சென்னை பல்கலைக் கழக தமிழிலக்கிய துறையும் இணைந்து நடத்திய 2 நாள் (ஜனவரி 3, 4, 2014) கருத்தரங்கம். சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம். இதை மும்பையை சேர்ந்த புதிய மாதவி சாத்தியப்படுத்தினார். பேசுவதற்கான பின்னணி - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றிய உரையாடல். இந்த கருத்தரங்கு நடந்த இரண்டு நாட்களிலும் பொது அமர்வுகள் இருந்தன, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பெண்கள் சந்திப்பும் இவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தன.

இரண்டாம் நாள் அரங்கில் பேசிய ஜமுனாவுக்கு முன் பேசிய சேர்ந்த சந்திரலேகா (இவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்) கோணிச் சாக்குடனும் முதுகில் பிணைக்கப்பட்ட கூடையுடனும் கலந்து விட்ட பெண்களின் வாழ்க்கையை சித்திரம் போல் தீட்டிக் காட்டியிருந்தார். இவர்களின் கட்டுரைகளில் விரிந்த ஈழ நிதர்சனம் ஒரு வகை என்றால், றஞ்சி, ஆழியாள், நளாயினி ஆகியோரின் பேச்சில் வெளிபட்ட புலம்பெயர் தமிழர் வாழ்க்கை அனுபவங்கள் வேறு வகையானவை. 1980களில் தொடங்கி வெவ்வேறு சூழ்நிலைகளில் அகதிகளாக சென்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக காதல், குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவை நிகழ்ந்த வரலாற்று சூழ்நிலைகளின் பின்புலத்தில் வைத்து இவர்கள் விளக்கினர். தவிரவும் தமிழர்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் அகதிகள் எதிர்கொள்ள வேண்டிய சட்டத் திட்டங்கள், இனவெறி, பண்பாட்டு குழப்பங்கள் குறித்தும் இவர்கள் பேசினர். ஆழியாள் அவுஸ்திரெலியாவில் தஞ்சம் புக விழையும் அகதிகள் - தமிழர்கள் மட்டுமல்லாது ஈரானியர், சிரியர்கள், சுதானைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் - முகங்கொடுக்க வேண்டிய அரசு கட்டுபாடுகள் குறித்து பல புதிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த யாழினி முகாம்களில் உள்ள உள்நாட்டு தமிழ் அகதிகளுக்கென முன்னெடுக்கப்பட்ட நாடக நிகழ்வுகளை அவர்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளாக ஆக்கிக் கொண்டதையும் இதன் மூலம் தங்களுடைய வேதனையை, ஆற்றாமையை வெளிபடுத்தியதையும் பற்றிய உளவியல்சார்ந்த அவதானிப்புகளை முன்வைத்தார். கொழும்பிலிருந்து வந்திருந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மதுசூதனன் ஈழப் போராட்டம் ஈன்ற இராணுவ வெற்றிகளையும் அரசியல் தோல்விகளையும் போராளிப் பெண்களின் தற்கால வாழ்க்கை நிலைமைகளின் பின்னணியில் வைத்து விளக்கினார். போரும் போராட்டங்களும் உருமாற்றி, முடிவில் அழித்த வாழ்க்கைகளுக்கு ஆறுதல் அளிக்கவல்ல எதுவும், படிப்பினைகள், மாற்று சிந்தனை உட்பட எதுவும் இல்லாத அவல நிலையை மிக கவனமாக சித்தரித்தார் - அவரது பேச்சையும் சிந்தனையையும் ஊடறுத்த கனத்த மௌனமும் பேசியது.

ஈழ யதார்ததங்களை வித்தியாசமான நோக்கில் வைத்து அலசிய இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் தற்கால தமிழகத்தில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றியும் கட்டுரைகளும் வாசிக்கப்பட்டன. ஷீலு அவர் சார்ந்திருக்கும் பெண்கள் குழு இயற்கை விவசாயத்தைக் கைக்கொண்டதன் பொருளாதார, வரலாற்று பின்னணி குறித்தும், பெண்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள பெண்களுக்கு வாழ்வாதார உரிமைகள் தேவை என்பது பற்றியும் பேசினார். பிரேமா ரேவதி, பெண்கள் சந்திக்கும் சவால்களை அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியது குறித்து பேசினார் - விவசாயம், வனவளம், கடல்வளம் ஆகிய மூன்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கானவையாக இருக்கும் நிலைபோய் பன்னாட்டு மூலதனக் குவிப்புக்கும் இலாபத்துக்குமானமாக மாறியுள்ள சூழலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார "வளர்ச்சி" என்று சொல்லப்படுவதைக் கொண்டு விளக்கினார் - யாருக்கான, எதற்கான வளர்ச்சி என்பது குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பினார். கல்பனா கருணாகரன் இத்தகைய சூழலில் பெண்களின் வாழ்க்கையை "மேம்படுத்த" அரசு கையாண்டு வரும் சமாளிப்பு செயல்பாடுகளை பட்டியலிட்டு, அவை பெண்களின் கடன்சுமையைகூட்டி அரசை அண்டி வாழும் நிலைமையை நிரந்தரப்படுத்தினாலும், பெண்கள் எவ்வாறு இத்தகைய மாற்றங்களுக்கு முகங்கொடுக்கின்றனர், அவற்றை தமக்கு சாதமாக்கிக் கொள்கின்றனர் என்பது பற்றி பேசினார். கேப்ரியல் டீட்ரிச் இந்து பாசிசத்தின் எழுச்சி, தமிழகத்தில் சில தலைவர்கள் பொறுப்பின்றி இதற்கு ஆதரவாக பேசும் போக்கு, சமயத்தின்பால் பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, அதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது என்று பல்வேறு விஷயங்களை விவாதித்தார்.

சென்னைக்கு வடக்கே உள்ள அரக்கோணம் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித் பெண்கள் மத்தியில் வேலை பார்த்து வரும் பர்நாட் பாத்திமா ரேஷன் கடையில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை எதிர்த்தும், தாசில்தாரின் முறைகேடான பாலியல் நடத்தையை கண்டித்தும் போராடிய தாயரம்மா, சென்ஸம்மா போன்றவர்களின் கதையையும் அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் தனக்கு முன்னுதாரணமாக அமைந்ததைப் பற்றியும் பேசினார். கவின் மலர், சாதி கடந்த காதல், மணம், (அ)கௌரவ கொலைகள் பற்றியும் பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கிளைக்கும் சாதியடையாளம் குறித்தும், பிள்ளை பெற்று கொள்ளாது இருத்தல் என்பதன் அரசியல் குறித்தும் பேசினார். சுஜாதா கண்ணகி அறிஞர் அண்ணாவின் எழுத்துகளில் பெண் பிம்பம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, குடும்பம் என்பது எவ்வாறு இன்பம் துய்ப்பதற்கான வெளியாக புதிய வகைகளில் அடையாளப்படுத்தப் படுகிறது, மனைவி-வேசி என்ற பாகுபாடு எவ்வாறு கையாளப்படுகிறது குறித்து விவாதிக்கும் கட்டுரையை வாசித்தார்.

இந்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் மூன்று பிரதேசங்களை பற்றியதாக இருந்தன. ஈழம் - நாம் அதிகம் பேசாத மலையகம் உட்பட - தமிழகம், புலம்பெயர் நாடுகள். இந்த மூன்று தளங்களிலும் பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வாறு இருக்கின்றன, எங்கு வேறுபடுகின்றன, இவற்றை ஓப்பிட்டு பார்ப்பதற்கு தோதான வரலாற்று சூழல், நிகழ்வுகள் என்னென்ன, இனம், மொழி, தேசம் சார்ந்த அடையாளங்களை சாதி, பாலினம், சமயம் என்பன போன்றவை எவ்வாறு ஊடறுக்கின்றன, உழைப்பும் மறுஉற்பத்தியும் பெண்களின் வாழ்க்கையை வடிவமைத்துள்ள விதங்கள் என்று பல விஷயங்களை உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக இந்த கருத்தரங்கம் அரங்கேற்றியது.

புலம்பெயர் கவிஞர் ஆழியாளின் நூல் வெளியீடு முதல் நாள் அமர்வில் நடந்தது. வெளியீட்டு விழாவுக்கு முன் ஆழியாளின் "கறுப்பி" கவிதையை மையமாகக் கொண்ட அப்பெயரிட்ட நாடகப் பனுவல் சென்னையை சேர்ந்த மரப்பாச்சி குழுவினர் வாசித்தனர். நாடு விட்டு நாடு சென்ற உழைக்கும் வர்க்க தமிழ்ப் பெண்களின் வாழ்வனுபவங்களை பற்றி பேசும் பனுவல் அது. இரண்டாவது நாள் பொது நிகழ்வாக எழுத்தாளர்கள் பாமா, தமிழ்ச்செல்வி, சுகிர்தராணி மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த நாடகத்துறை செயல்பாட்டாளர் யாழினி யோகேஸ்வரன் ஆகியோர் வாழ்வும் படைப்பும் என்ற தலைப்பில் தங்கள் வாழ்க்கை அனுபவம்-படைப்பாக்கம் இவற்றின் இணையும் புள்ளிகள் பற்றி பகிர்ந்துகொண்டார்கள். அமர்வு தொடங்குமுன் பேராசிரியர் அரசு அரங்கில் பேசவிருந்த பெண் எழுத்தாளர்களை பற்றிய ஆழமான அறிமுகவுரையை வழங்கினார். நல்ல இலக்கிய பாடமாக அமைந்த அவரது உரையைத் தொடர்ந்து புதியமாதவி அரங்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

இரண்டு நாட்களின் அரசியல் பொருளாதார பண்பாட்டு விவாதங்களை அவற்றின் சாராம்சத்தோடு இயைந்த உணர்வுரீதியான பரிமாணத்தை மொத்த விவாதத்திற்கும் சேர்த்த இந்நிகழ்வு பெரும் மன உந்துதலை ஏற்படுத்தியது.





பின்குறிப்பு

இந்த இரு நாட்களும் நடந்த பகிர்வும், சிரத்தையான விவாதங்களும் திசைமாறிப் போகும் வகையில் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின் இடையீடு இருந்தது. ஈழத்தில் உள்ள நிலைமைகளைப் பேசிய அரங்குகளில் கூட அவருடைய ‘வெள்ளை வான் கதைகள்’ ஆவணப்படம் குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை. அங்கு வந்திருந்த பலருக்கு ‘வெள்ளை வான் கதைகள்’ படம் பற்றித் தெரியவும் இல்லை. அப்படம் குறித்து ஊடறு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து பலர்முன் பேச வேண்டும் என்ற கோரிக்கை அமைப்பாளர் எவருக்கும் வரவும் இல்லை. இருந்தும், அவருக்கு தன் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் நாள் அவரது போராட்டம் தன்னுடைய எதிர்ப்பு அட்டையோடு அரங்கில் அமர்ந்திருப்பதும் அவர் கொண்டு வந்த துண்டு பிரசுரத்தை விநியோகிப்பதும்தான். அவற்றை பேராசிரிய வீ. அரசுவே அனைவரிடமும் கொடுத்தார். அவரை அங்கிருந்து வெளியே செல்லுமாறுகூட யாரும் சொல்லவில்லை மாறாக இருக்கையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவியுங்கள் என்றும் வீ.அரசு கூறினார்.

அரங்கு முடிந்தபின் பிரச்சினை குறித்து அவருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அ. மங்கை எடுத்த முயற்சிக்கும் லீனா மறுத்துவிட்டார். பலகாலம் கழித்து இப்படி ஒரு ஈழம் - புலம்பெயர் சூழல் - தமிழகம் என்ற புள்ளிகளில் பெண்கள் கலந்துரையாடுவது அதற்கென பங்கேற்பாளர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள்வரை தங்கள் சொந்த செலவில் வந்து கலந்துகொண்டது என உருவான ஒரு கலந்துரையாடலை தன் பக்கம் திருப்ப லீனா அவர்கள் காட்டிய முனைப்பை கண்டு கலந்துகொண்டவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

இரண்டாவது நாள் பொது அரங்கிலும் அவர் அரங்கில் இருக்க யாரும் தடை செய்யவில்லை. ஆனால் சிறப்பான ஒரு பதிவை பாமா அவர்கள் உணர்வெழுச்சியோடு வாசித்து முடித்ததும் லீனா தான் அந்த அரங்கில் பேசவேண்டும் என்ற புதிய கோரிக்கையை எழுப்பினார். அரங்கு முடிந்தபின் அதுகுறித்து பேசலாம் என அரங்கின் தலைவர் புதியமாதவி பலமுறை அவரை வேண்டியும் அவர் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் உரத்து பேசத் தொடங்கினார். பேராசிரியர் வீ. அரசுவும் மேடைக்கு வந்து பேசுவதற்கு தடையில்லை என்றும் பேச்சாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தில் பேசி முடித்துவிட்டால் பேச நேரம் வழங்குவதாக கூறியபோதும் லீனா தன்னுடைய “அமைதியான போராட்டத்தை” நடத்தி கூட்டம் நடக்கவிடாமல் செய்தார். அமைதியாக ஒழுங்கமைக்க எடுத்த முயற்சிகள்பலனற்றுப் போனது. நிலைமை கைமீறியது.

வருந்தத்தக்க முறையில் எங்களை செயல்படவைத்த அந்த “அமைதிப் போராட்டத்தை” ஒருவேளை நாங்கள் அனுமதித்து இருந்தால் மிகுந்த சிரமங்களுக்கிடையே ஒருங்கு திரட்டப்பட்ட ஒரு முக்கியமான கலந்துரையாடல் அரைகுறையாக நிறுத்தப்பட்டு இருக்கும். பேசப்படாத வலிகளும் பேசமுடியாத சூழல்கள் தரும் பேரச்சமூட்டும் நிசப்தமும் பலருக்கு தொடந்திருக்கும்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பேசப்பட்ட அரிய விஷயங்களை விவாதிக்க, மாணவர்கள் இவை போன்ற விவாதங்களில் பங்கேற்க சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி பீடங்கள் வெளி ஏற்படுத்திக் கொடுத்தள்ள சூழலில் தேவையற்ற இடையீடுகள் நடைபெற்றது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இந்த இடையீட்டுக்கு காரணமான ‘வெள்ளை வான் கதைகள்’ ஆவணப்படம் பற்றியும் ஆவணப்படத்துக்குரிய அறம் குறித்தும் விவாதிக்க அதற்கென களம் அமைத்து விவாதத்தை வேறு தளங்களில் முன்னெடுப்பதுதான் முறையாகும் என்று ஊடறு றஞ்சியும் ஆழியாளும் கருதினர்.

இப்போது தனது குறுக்கீட்டைக் குறித்துத் திரித்துச் செய்திகளை லீனா வெளியிட்டு வருகிறார். அவர் செய்த வன்முறை (உடல், சொல், செயல் ரீதியாக) பற்றிய பதிவே இல்லாமல் தன்னை ஒரு அப்பாவியாகக் காட்டிக்கொள்வதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும் அப்பட்டமான கயமை. அந்த இரு நாள் கலந்துரையாடல் நிகழ்வே அவரது ‘வெள்ளை வான் கதைகள்’ குறித்துத்தான் என்பது போலவும் அந்த சூழ்ச்சியை முறியடிக்கவே தான் அறப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் பதிந்து வருவது நகைப்புக்குரியது. தான் எடுத்த படம் குறித்த மோதலை மட்டும் மையப்படுத்தும் அவரது செயலுக்கும் அதைக் குறித்த வலைப்பதிவுகளில் எந்தவித சிந்தனையும் இன்றி பலரும் தத்தம் தீர்ப்புகளை வழங்கி மகிழும் நிலைமையையும்கண்டு தமிழகத்தில் நிலவும் அரசியல் உணர்வு பற்றி மனம் நோவது தவிர, வேறு வழி இல்லை.

அரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்ட இளம் தோழர் ஒருவர் இலங்கை குறித்து நாம்பொதுவெளியில் அறிய முடியாத பல தகவல்களைக் கேட்டு குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார். உண்மைநிலவரம் அப்படி இருக்க தனி மனித உட்பூசல்களுக்கும் குழுவாத மோதல்களுக்கும் முன்னுரிமை கொடுக்கமுடியாத/ தேவையில்லாத சூழலில் நாம் இயங்குகிறோம். கூட்டுச் செயல்பாடுகளின் அரசியல், தத்துவச்செறிவு, முரண்களை அங்ஙீகரித்த தோழமைக் கனவுகளை அடைகாக்க வேண்டிய கடமையை நினைவில்கொண்டு மேலும் பல பகிர்தல்களை முன்னெடுப்போம் என நம்புகிறோம்.