Sunday, November 30, 2014

நெல்லிக்கனி

என் நண்பனே...
எங்கே நீ ஒளிந்துகொண்டாய்?
துயரங்கள் சுமையாகும் போது
உன் தோள்களைத் தேடுகின்றேன்.
சுமைகளைத் தூக்க அல்ல
சுமைதாங்கி இளைப்பாற.

பூமி உருண்டையில்
நாம் மீண்டும் சந்திப்போம் - என்றாய்.
பூமி உருண்டை என்பது உண்மைதான்.
ஆனால்
நம் சந்திப்பு மட்டும் எப்படி பொய்யானது?.

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள்
பெரியவர்கள் சிறியவர்கள்
எல்லோருடனும் பேசி சிரித்து
உண்டு உறங்கி
ஏறி இறங்கி
பயணம் செய்து
களைத்துப்போய் கண்மூடிக்கிடக்கிறேன்.
கனவில் என்னுடன் நீ பயணம் செய்வாய்
என்ற நப்பாசையில்.
.
"ராக்கி"கட்டி
நம் நட்பை சகோதரப்பாசமாக
பரிணாமம் செய்து தொடர நினைத்தேன்.
நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்.
நட்பு மேலானது என்பதால் தான்
எட்டாத உயரத்தில் நீ.
உன்னை எட்டிவிடும் கனவுகளில் நான்.
....
நான் அவ்வை
நீ என் அதியமான் என்றேன்.
எங்கே என் நெல்லிக்கனி?
என்றாய்.
தொலைந்துப்போன
நெல்லிக்கனியைத்
தேடி அலைகின்றேன்...
("ஹேராம்" கவிதை தொகுப்பில் நெல்லிக்கனி என்ற நீண்ட கவிதையின் சில வரிகள்....)

Saturday, November 29, 2014

சிவாஜிகணேசனும் லதா மங்கேஷ்கரும்






நடிகர்திலகம் சிவாஜிகணேசனையும் பாடகி லதா மங்கேஷ்கரையும்
நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
அவ்ர்கள் இருவருக்குமான அந்த உறவு ஒரு கவிதையைப் போல
இனிமையானது. அர்த்தமுள்ளது. போற்றுதலுக்குரியது.

சிவாஜிக்கு லதாவுடன் தொடர்ந்து பேசும் அளவுக்கு இந்தி மொழி
தெரியாது. லதாவுக்கோ தமிழ் மொழி தெரியாது. அதனால் என்ன?
அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
சிரித்தார்கள். ஒருவர் கலைத்திறமையை ஒருவர் மதித்தார்கள்.
கொண்டாடினார்கள். தங்கள்  தந்தையின் சாயலை சிவாஜியிடம்
கண்டார்கள் அந்த சகோதரிகள், லதா மங்கேஷ்கரும்
ஆஷா போஸ்லேயும்,
அதனால் தானோ என்னவோ சிவாஜிக்கு "ராக்கி" கட்டி
தங்கள் அண்ணன் என்று உறவு  கொண்டாடினார்கள்.

அந்த உறவு இன்றுவரை சிவாஜியின் மறைவுக்குப் பின்னரும்
தொடர்கிறது. எதையெல்லாமோ இந்த சினிமாக்காரர்கள்
டாகுமெண்ரி எடுக்கிறார்களே.. லதா மங்கேஷ்கரிடம்
யாராவது இதைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்தால்
என்ன? 

ஏழைகளின் தாஜ்மஹால்



கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்...

பாரதிதாசனின் கவிதை வரிகள் வெறும் கற்பனை அல்ல.
நிஜமாகி இருக்கிறது. இதைச் செய்து காட்டியவன் உங்களையும்
என்னையும் போல ரொமபவும் சாதாரணமான மனிதன்,
எந்த ஆளபலமோ அரசியல் பலமோ பணபலமோ அதிகார பலமோ
இன்றி ஒற்றை மனிதனாக 22 வருடங்கள்  உழைத்து
ஒரு தனிமனிதன் தன் மனைவிக்காக கட்டிய தாஜ்மகால் இது!
அவன் பெயர் தசரத் மஞ்சிகி.
மனைவி பஃகுனிதேவிக்கு காயம் ஏற்பட்டவுடன் மருத்துவரிடம்
கொண்டு செல்லும் வசதி அவன் வாழ்ந்த சிற்றூரில் இல்லை. அவன்
கிராமத்திற்கும் மருத்துவமனை இருக்கும் தூரத்திற்கும் உள்ள தூரம்
என்னவோ 15கி.மீட்டருக்கும் குறைவானதுதான். ஆனால் இடையில்
இருப்பதோ ஒரு மலை. (gehlour hills) எனவே அந்த ஊரில் வாழும்
அனைவரும் மலையைச் சுற்றி 80 கி.மீ பயணித்து தான்
மருத்துவமனைக்குச் செல்ல முடியும். (atri and wazirganj of gaya town,
in bihar state)

காயமடைந்த தன் காதல்
மனைவியை எடுத்துக்கொண்டு 80 கி.மீ பயணித்து மருத்துவமனையைச்
சென்றடைவதற்குள் "யூ ஆர் டூ லேட்" என்று சொல்லி விடுகிறார் டாக்டர்.
அன்றைக்கு அவன் ஒரு முடிவு எடுக்கிறான். இம்மாதிரி ஒரு காரணத்தால்
எனக்கு ஏற்பட்ட இழப்பு இனி எவருக்கும் ஏற்படக்கூடாது என்று.

கையில் கடப்பாறை, கூடை, மண்வெட்டி சகிதம் மலையடிவாரம் சென்று
இரவு பகலாக மலையை உடைக்கிறான். ஊரும் உறவும் அவ்னைப் பார்த்து
எள்ளி நகையாடுகிறது. " சரியான லூசுப்பய" என்று தானே நம் சமூகம்
சொல்லி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மலை உடைகிறது.
அவன் உழைப்பைக் கண்டு ஒரு சிலர் அவனுக்கு உணவும் இன்னும்
சிலர் அவனுக்கு போனால் போகிறது என்று மலையை உடைத்தெடுக்க
கடப்பாறையும் கொடுத்து உதவுகிறார்கள். நாட்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி வருடங்கள் உருண்டோடி... 22 ஆண்டுகள்..
.. மலையைக் குடைந்து அவன் பாதையை போட்டுவிட்டான்.
80 கி.மீ பயணிக்க வேண்டிய அவசியமில்லை இனி, அவன்
கிராமத்து மக்களுக்கு. 13 கி.மீ தூரம் பயணித்தால் போதும்.

360 அடி நீளம், 25 அடி ஆழம், 30 அடி அகலம் .. கொண்ட இந்த
மலையைக் குடைந்து தனிமனிதன் உருவாக்கிய தாஜ்மஹால்.....
பளிங்கு கற்களால் மன்னன் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜுக்கு
கட்டி எழுப்பி இருக்கும் தாஜ்மஹாலை விட எந்த வகையிலும்
குறைந்ததில்லை. என்னளவில் இதுவே எனக்கும் என் வருங்கால
தலைமுறைக்கும் என்றும் நம்பிக்கை கொடுக்கும் தாஜ்மஹால்.


Monday, November 24, 2014

புத்தகம் வெளியிட இருக்கும் தோழிக்கு



என் தோழியைப் பற்றி நானே பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடாது..
இந்த ஆகாயத்தின் கீழிருக்கும் எதைப்பற்றியும் அவளுடன் என்னால்
உரையாட , விவாதிக்க  முடியும். முரண்படும் கருத்துகளும் உண்டு.
எங்கள் நட்புக்கு அவை எதுவும் தடையாக இருந்ததில்லை.
 தோழியைப் பற்றிய இவ்வளவு அறிமுகம் ஏன்?
என்று நினைக்கின்றீர்களா?
நான் எழுதப்போகும் விஷயத்தை நீங்கள் வழக்கம் போல புனைவு
என்று கருதிவிடக் கூடாதல்லவா... அதனால்தான்!

உண்மைகளை புனைவுகளாகவும் புனைவுகளை அபுனைவுகளாகவும்
கருதிக்கொள்வதில் நிறைய வசதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போது
நான் சொல்லப் போவதெல்லாம் ரொம்பவும் தீவிரமாக யோசித்து
உதிர்க்கும் கருத்துகள் தான்.

அவளுக்குப் புத்தகம் வெளியிட வேண்டுமாம். அதுவும் கவிதைப்
புத்தகம். சரி.. பேஷா வெளியிடலாம்.. என்று நான் வேறு ஒருநாள்
சொல்லி வைத்ததால் தினமும் நச்சரிக்கிறாள்.

அவளுக்குச் சொன்ன டிப்ஸ்:

1)"உன் கவிதைப் புத்தகங்களை தமிழ்நாட்டில் இருக்கும் இரு
உலகப் பெயர் பெற்ற பதிப்பகங்க்கள் வெளியிட்டால் தான்
நீ கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவாய். அதிலும்
குறிப்பாக "பெண்ணியக்கவிஞர்" என்று.

2) புத்தகவெளியீட்டையும் ஜாம் ஜாம்னு நடத்த வேண்டும்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடத்தினால் தான் கவனிக்கப்படுவாய்.

3) புத்தக வெளியீட்டிற்கு கட்டாயம் ஸ்டார் அந்தஸ்த்து கவிதாயினி/
ஸ்டார் அந்தஸ்த்து வெகுஜன பத்திரிகையில் எழுதும் எழுத்தாளர் அவருடன்
ஒரு வலது/இடதுசாரி எழுத்தாளர் கட்டாயம் இருக்கிற மாதிரி பார்த்துக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் மீடியா கவனிக்கும். புரட்சி எழுத்தாளர்
என்ற அடையாளமும் வந்துவிடும்.

4) மாடலிங் துறையில் profile  தயாரிக்கிற மாதிரி நீயும்
ஒரு profile தயாரிக்க வேண்டும். உனக்கு என்று
ஒரு தனி காமிரமேன்/காமிரவுமனை வைத்துக் கொண்டால்
நல்லது.

5) இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம். என் தோழி என்பதால்
வெளிப்படையாக சொல்கிறேன்.
நீ கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
இத்தனை வருட என் எழுத்து அனுபவத்திலிருந்து
சில கசப்பான உண்மைகள்..
சொன்னா புரிஞ்சிக்கோ..
எழுத்து, திறமை, சுய சிந்தனை, சுயமரியாதை, வாசிப்பனுபவம்,
புரட்சி கருத்துகள்.. எல்லாம் வெறும் புண்ணாக்கு தான்
இத்தியாதி சகல்த்தையும் விட வலிமையானது ஜாதி.
அதனால் தான் சொல்றேன்..
 எழுத்து மற்றும் ஊடகத் துறையிலிருக்கும்
 உன் ஜாதி ஆட்களைக் கொஞ்சம்
கவனிச்சிக்கோ. என்னை மாதிரி "சாதியற்றவள்" என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு குட்டிச்சுவராகிவிடாதே!



Sunday, November 23, 2014

வங்கிகளைக் கொள்ளையடிக்கும் முகமூடி இல்லாத திருடர்கள்


(amount in crores)






பிள்ளைங்க மேற்படிப்பு படிப்பதற்கு கடன் வாங்கும் நம்மிடம்,
இடிந்து கிடக்கும் வீட்டைக் கட்டி முடிக்க கடன் வாங்கும் நம்மிடம்,
ஏதோ நாமும் காரில் போனால் என்ன? என்று ஒரு பழைய காரை
வாங்க ஆசைப்பட்ட காரணத்திற்காக அலைக்கழிக்கப்பட்ட நம்மிடம்,
குமரு கரையேத்த கடன் வாங்கும் நம்மிடம்,
கிணறு தூரு வாரினால் ஏதோ தக்காளியும் மிளகாயும் பயிர் வச்சிடலாமா,
அதனாலே நாலு காசு சேர்ந்திடாதா என்ற கனவில் கடன் வாங்கும்
நம்மிடம்... கடன் வாங்கும் முன் தன் பொண்டாட்டியைத் தவிர
பிற அசையும் அசையா , உயிருள்ள உயிரற்ற அனைத்தையும்
அடமானமாக எழுதி வாங்கி கடன் கொடுக்கும் வங்கிகள்
கீழக்கண்ட பெரிய மனிதர்களுக்கு எப்படி கடன் கொடுத்தன?
எதை அடமானமாக வைத்து கடன் கொடுத்தன?

வங்கிகளின் வருமானம் பெரும்பாலும் அவர்கள் கொடுத்திருக்கும்
கடனுக்கான வட்டியிலிருந்து வருவது தான். இன்று பல வங்கிகளில்
வட்டி மட்டுமல்ல, முதலுக்கே மோசம் செய்திருக்க்கிறார்கள்
சில முகமூடி அணியாத பகற் கொள்ளைக்காரர்கள்.
இந்தப் பகற்கொள்ளைக்கு காரணம் அந்தக் குறிப்பிட்ட
வங்கியில் பணி புரிபவர்களோ அல்லது ஏன் அந்தக் குறிப்பிட்ட
வங்கியின் மேனேஜரா அல்ல என்பது தான் இன்னும் கூடுதலான
அதிர்ச்சி தரும் உண்மை

தாஜ், ஒபேரா நட்சத்திர ஹோட்டல்களில்
கான்பரன்ஸ் என்ற பெயரில் நடக்கும் விருந்துகளில்
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் டைரக்கடர்கள்
ஒப்புதலுடன்(வற்புறுத்தலுடன்) வங்கியின் சேர்மன்
முன்னிலையில் இப்பகற்கொள்ளை நடக்கிறது.


கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது
 மொத்த வாராக்கடன் 63,386 கோடி ரூபாய்
அதிகரித்திருக்கிறது.
 இந்த தகவலை என்.பி.ஏ.சோர்ஸ் டாட் காம் தெரிவித்திருக்கிறது.

SBI - march 2014. INR. 51,189 crores. 3RD QTR 2014. INR  67,799. CRORES.

UBI - march2014   INR    2,963. crores 3RD QTR 2014  INR   8,546. CRORES.

IDBI- march2014   INR    6,450  crores 3RD QTR 2014  INR 10,012. CRORES.

BOB-march 2014  INR   7,983   crors   3RD QTR 2014  INR 11,926  CRORES

மொத்த வாராக்கடன் இந்த 9 மாதங்களில் மொத்தம் 49 விழுக்காடு
அதிகரித்திருக்கிறது. 4வது காலண்டில் இது இன்னும் மோசமடையும்!

வங்கிகளின் வாராக்கடனில் இரும்பு–உருக்கு, உள்கட்டமைப்பு,
விமானச் சேவை, ஜவுளி மற்றும் சுரங்கம் ஆகிய ஐந்து துறைகளின்
 பங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த ஐந்து துறைகளும்
மிக முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன என்றும் நாட்டின்
பொருளாதர வளர்ச்சிக்கு ஏற்ப இத்துறைகளின் வளர்ச்சியும்
இருக்கும் . இதை  அடிக்கடி நம் நிதித்துறை அமைச்சர்கள்
நமக்குப் புரியாத கணக்குகளைச் சொல்லி விளக்கம்
சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இதில் உள்கட்டமைப்பு,
சுரங்க தொழில் துறைகளில் இருக்கும் ஊழல்களை
நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த வாரக்கடனில் முக்கியமானவை மொத்தத்தில் 30க்குள்
இருக்கும். வாராக்கடனில் 80 விழுக்காடு இந்த குறிப்பிட்ட
30 பெரும்புள்ளிகளின் கடனுக்குள் அடக்கம்.
மாதிரிக்கு சிலரின் பெயர்களும் கடன் விவரமும்.
அட்டவனையில் உள்ளது.

இந்தப்பட்டியல் தவிர நம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள்,
அவர்களின் உறவினர் என்று இருக்கும் பட்டியல் தனிப்பட்டியல்.

வாராக்கடன் வசூலிக்கும் முறை, சட்டதிட்டங்கள், ரிசர்வ் வங்கியின்
நடவடிக்கை, இதை எல்லாம் கண்காணிக்கும் குழு... இப்படி
இந்த வாராக்கடனுக்கு பல்வேறு செலவினங்கள் வேறு
தொடர்ந்து கொண்டிருக்கிறது.





குறிப்பு:

http://www.arcil.co.in/data/news/DNA_MUM_20_11_14.png

http://firstbiz.firstpost.com/corporate/bank-union-puts-out-npa-list-kingfisher-top-defaulter-47383.html

Wednesday, November 19, 2014

புனிதவதி தொலைத்த மாங்கனி





மாங்கனியில் சித்துகள் காட்டிய சிவன்
அறிந்திருக்க நியாயமில்லை.
புனிதவதியின் பெருமூச்சுகளை.

அவன் சுவைத்த மாங்கனிகள்
கசக்கட்டும்
அவன் ரசித்த மாவிலைகள்
உதிர்ந்து போகட்டும்
அவன் தூங்கிய மரக்கிளைகள்
ஒடிந்து விழட்டும்.
அவனுடன் வாழ்ந்த உடல்
அவனை அவன் முத்தத்தின் ஈரத்தை
எப்போதும் சும்ந்து கொண்டே
இருப்பதால்..
மருதம் திரிந்து பாலையாகட்டும். 

பாலையின் பேயுருவில்
யெளவனம் தொலைத்த புனிதவதி
இமயம் வரை அலைந்து திரிந்தாள்.

தென்னாடுடைய சிவனே 
போற்றி போற்றி
உன் நெற்றிக்கண் அறிந்திருக்க
நியாயமில்லை
இமைகளை தொலைத்த 
விழிகளின் கனவுகளை.

புனிதவதியின் பெருமூச்சில்
இமயத்தின் பனிப்பாறைகள் உருகி
கங்கையாக யமுனையாக
பெருக்கெடுத்து ஓடுகிறது.
பரமதத்தன் நினைவுகளைச் சுமக்கும்
அந்த மேகங்கள்
இன்னும் இளைப்பாறவில்லை.

Monday, November 17, 2014

தூய்மை இந்தியாவின் கனவான்களுக்கு..



எங்கள் குடியிருப்புக்கு அரசு சுகாதரப்பணியில் இருக்கும்
பெண்கள் வந்தார்கள். பால்கனியில் இருக்கும் செடிகளில்
தண்ணீர் தேங்க கூடாது, பூந்தொட்டிகளின் கீழ் தண்ணீர்
ஒழுகாமல் இருக்க வைத்திருக்கும் தட்டுகளைக் கூட
அக்ற்றிவிட்டு ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி
டிப்ஸ் வேறு சொல்லிவிட்டுப் போனார்கள்.

பரவாயில்லையே... தூய்மை இந்தியா ஏதோ ஒரு வ்கையில்
வெற்றிகரமாக செயல்படுகிறது. எதற்கெடுத்தாலும் அரசை,
அதிலும் குறிப்பாக் மோதியை விமர்சனம் செய்வதை
தவிர்க்கலாமோ, இன்றைக்கு யார் யார் கையில் எல்லோமோ
'துடைப்பத்தைக் கொடுத்து"  போஸ் கொடுக்க வைத்துவிட்டாரே
என்று பேசும் கன்வாண்களின் கவனத்துக்கு:

மும்பையின் மக்கள் தொகையில் 54% மக்கள் குடிசைப்பகுதியில்
வாழ்கிறார்கள். 25% முதல் 35% வரை மக்கள் சால் வீடுகளிலும்
சாலையோரங்களிலும் வசிக்கிறார்கள். மீதி 10 % முதல் 15%
மக்கள் தான் அடுக்குமாடி குடியிருப்புகளில் , அப்பார்ட்மெண்ட்
வீடுகளில் வாழ்கிறார்கள். உலக வங்கி 2025ஆம் ஆண்டில்
சற்றொப்ப 22.5 மில்லியன் மக்கள் மும்பையில் குடிசைவாசிகளாக
இருப்பார்கள் என்று அறிவித்திருக்கிறது.
காங்கிரசும் சிவசேனாவும் இக்குடிசை மக்களின் வாழ்க்கையில்
விளக்கேற்றப் போவதாக - குடிசை மாற்று வாரியத்தின்
திட்டங்களை அறிவித்திருந்தார்கள். இதுவரை அத்திட்டங்கள்
முழுமையடையவில்லை. தற்போது ஆளும் கட்சியாக
மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாரதீய ஜனதா கட்சி
"தூய்மை இந்தியா" என்று பேசுகிறது.

இக்குடிசைகளின் வாழ்க்கையை மக்கள் நலன் அரசாக
கவனிக்கத் தவறிவிட்டு இவர்கள் பேசும் தூய்மை இந்தியா
எவ்வளவு போலியானது!  ஒருவேளை இக்குடிசைகளில்
இருக்கும் மனிதர்களை இவர்கள் இந்தியர்களாக, ஏன் மனிதர்களாக
நினைக்கவே இல்லையோ?

"அம்மாக்களின் அவஸ்தை" என்ற தலைப்பில் நான் எழுதிய
கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

இரண்டு நிமிசத்திற்கு ஒரு டிரெயின்.
அறிவித்தார் அமைச்சர்
அச்சப்பட்டார்கள் என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்து நிற்கும்
அவஸ்தையை நினைத்து.
..
டிரெயினில் பயணம் செய்யும் எவரும் எல்லா மாநிலங்களிலும்
இக்காட்சியை இந்தியாவில் தான் பார்க்க முடியும்.
இதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தலை குனிய வேண்டும்.
வெட்கமா இல்ல ... தூய்மை இந்தியானு மேனா மினிக்கியாட்டம்
போஸ் கொடுக்கறதுக்கு.. ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்..
உள்ள இருக்காம் ஈறும் பேனும்.. போங்கடா.. நீங்களும்
உங்க நாறுன பொழைப்பும்.!

Friday, November 14, 2014

இதை எப்படி புரிந்து கொள்வது?





அண்மையில் பண்டித ஜவஹர்லால் நேரு  அவர்கள் பாபாசாகிப்
அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் ஒன்று என் வாசிப்புக்கு கிடைத்தது.

திரு ஜவஹர்லால் நேரு,
இந்தியப் பிரதமர்,

எண் : 2196
பி எம் எச் 56,
புதுடில்லி

செப்டம்பர் 15, 1956

என் அன்புக்குரிய டாக்டர் அம்பேத்கர் அவர்களே,

செப்டம்பர் 14 தேதியிட்ட உங்கள் கடிதம் கிடைத்தது.

நீங்கள் கூறியபடி உங்கள் புத்தகத்தின் பிரதிகளை
அதிக அளவில் வாங்கமுடியுமா என்பது எனக்கு
ஐயமாகவே இருக்கிறது. புத்த ஜெயந்தியின் போது
வெளியீடுகளை வாங்குவதற்கு ஒரு தொகை
ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை முழுவதும்
செலவழிந்த தோடல்லாமல் அதற்கும் அதிகமாகவே
பணம் செலவிடப்பட்டுவிட்டது. புத்தமதம் சம்பந்தமாக
எங்கள் உதவியுடன் வெளியிடப்பட்ட இருந்த சில
புத்தகங்கள் பற்றிய பிரேரணைகள் ரத்து செய்யப்படும்
நிலை ஏற்பட்டுவிட்டது. புத்த ஜயந்திக் குழுவின் தலைவரான
டாக்டர். ராதாகிருஷ்ணனின் பார்வைக்கு உங்கள் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டவர்கள் வருகை தரும் புத்த ஜயந்தி
விழாவின் போது உங்கள் புத்தகம் புதுடில்லியிலும்
இதர இடங்களிலும் விற்பனைக்கு வரட்டும் என்று
யோசனை கூறுகிறேன். அப்போது நல்ல விற்பனை
இருக்கும்.

தங்கள் உண்மையுள்ள,

(ஓ-ம்) ஜவஹர்லால் நேரு.

பி.கு. தன்னால் இவ்விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது
என்று அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்
அம்பேத்கருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.


இதை எப்படி புரிந்து கொள்வது?
நேரு விதிகளைப் பின்பற்றினார் என்று எண்ணி
பெருமை கொள்ளவா?
அப்படியானால், ஏன் குடியரசு தலைவருக்கு
அனுப்ப வேண்டும்.?

14 அக்டோபர் 1956, அம்பேத்கர் 365,000 பேருடன் புத்தம் தழுவிய நாள்.
சரியாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன் , செப்டம்பர் 14ல் இக்கடிதத்தை
எழுதுகிறார். , ஒரு வகையில்
சொல்லப்போனால் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்.
அந்த வேண்டுகோள் தான் நிராகரிக்கப்படுகிறது! என்று
புரிந்து கொள்ளவா?

இதை எப்படி புரிந்து கொள்வது?!!!

Tuesday, November 11, 2014

அப்பாவின் நினைவுகள்

OUR DADDYS ARE GREAT..
மும்பையிலிருந்து நெல்லைக்கு தனியாக ரெயில் பயணம்.
3 ஏசியில் ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன்.
எப்படியோ ஒரு பகல் பொழுது கழிந்தது, மறுநாள் நான்
கைபேசியில் பேசியதை வைத்துக்கொண்டு என்னருகில் இருந்தவர்
என்னோடு பேசினார். வய்தானவர். மும்பையில் தற்போது பிரபலமாக இருக்கும் டாக்டர் மச்சிவேல் அவர்களின் அண்ணன் என்று தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின் நானும் என்னை அறிமுகம்
செய்துக் கொண்டேன். தாராவி பகுதியில் வாழ்ந்த பி.எஸ். வள்ளிநாயகம் அவர்களின் மகள் நான் என்று என்னை அறிமுகம் செய்தவுடன் அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
அந்தக் காலத்தில் உன்னோட அப்பா திருநெலவேலிக்கு வந்துட்டு திரும்பினார்னா... இந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிற கிராமத்து ஜனங்க எல்லாம் ஸ்டேஷன்ல் வந்து காத்துக்கிடப்பாங்க.
"அய்யா... என் மவன் பம்பாய்க்கு ஓடிவந்துட்டான், ஏய்யா , எம் பிள்ள
வெம்பாயைப் பாத்து போனவன் தான் ஒரு கடுதாசி கிடையாது,
செலவுக்கு மணியார்டர் அனுப்பறதில்லய்யா....இப்படியாக தங்கள்
கதைகளுடன் வந்து நிற்பார்கள். உன் அப்பா அவுங்க எல்லாரையும்
பார்த்து விவரம் கேட்டு மறக்காமல் அவர்கள் பிள்ளைகளைத் தேடி
அவ்ர்களுக்கு உதவுவார். அதுமட்டுமில்ல, ஸ்டேஷனுக்கு த்ன்னைப் பார்க்க வந்திருக்கும் அந்தப் பெற்றோர்கள் திரும்பி தங்கள் ஊருக்குப் போக பஸ் டிக்கட்டுக்கும் காபிச் செலவுக்கும் காசு வேறு கொடுப்பார்.
அந்த மாதிரி மனுஷங்க இப்ப யாரும்மா இருக்கா............."
அந்தப் பயணத்தில் அன்றிரவு எனக்குத் தூக்கம் வரவில்லை.
இப்படி அப்பாவின் மறைவுக்குப் பின் அப்பாவைப் பற்றி நாங்கள் பிறர் சொல்ல கேட்ட சம்பவங்கள்.. பல..
அப்பாவின் நினைவு நாள் இன்று. அப்பா மறைவு: 12 நவம்பர் 1986.
வருடங்கள் பலவாகியும் அப்பாவின் நினைவுகள்....
OUR APPAAS ARE GREAT.
அப்பாவின் நினைவிடம் -
— feeling sad.

Monday, November 10, 2014

மாநில கட்சிகளுக்கு அரோகரா..!




இந்தப் பதிவை எழுதும் இந்நிமிடம் வரை மராத்திய மாநில அரசியல்
வட்டத்தில் சிவசேனா எதிர்க்கட்சியாகவே இருக்கிறது. சட்டசபையில்
பெரும்பான்மையை நிரூபித்தப்பின் சிவசேனாவை ஆட்சியில் பங்குதாரராக
கூட்டு சேர்ப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என்று
தெளிவாக மராத்திய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ் அறிவித்துவிட்டார்.
சிவசேனாவின் ஆதரவிலும் கூட்டணியிலும் மராத்திய மாநிலத்தில்
பிஜேபி தன்னை வலுப்படுத்திக் கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை.
கொள்கை அளவில் சிவசேனாவும் பிஜேபியும் ஒத்துப்போகும் அரசியல் கட்சிகள்
என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் . அப்படியான ஒரு கூட்டணியை
முறித்துக் கொள்வதிலும் கண்டு கொள்ளாமல் டில்லி வட்டாரம் மவுனமாக
காலம் கடத்துவதிலும் சிவசேனாவுக்கு தன்மானப் பிரச்சனை மட்டுமல்ல,
பெரும் தலைவலியாகவும் இருக்கிறது. அதனால் தான் டில்லியில் மந்திரி சபை
விரிவாக்கத்தில் சிவசேனாவுக்கு மத்திய அரசில் ஒதுக்கப்பட்ட மந்திரி பதவியை
ஏற்காமல் டில்லி வரை சென்ற சிவசேனா தலைவர் அனில் தேசாய் விழாவைப்
புறக்கணித்துவிட்டு திரும்பி இருக்கிறார்.

பிஜேபிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்று சரத்பவார் சொல்வது
ஏன்? பிஜேபிக்கும் சரத்பவாரின் NCP க்கும் என்ன தொடர்பு? என்று கொள்கை
ரீதியான கேள்விகளைத் தொடர்ந்து வைக்கிறது சிவசேனா. பால்தாக்கரேவின்
மறைவுக்குப் பின் பிஜேபி சிவசேனாவுக்கு உருவாக்கும் இந்நெருக்கடிகளை
கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதேநிலைமை தான் தமிழக்த்திற்கும். தமிழ்நாட்டின் அரசியலில் திமுகவக்கு
2G , அதிமுக வுக்கு சொத்துக்குவிப்பு வழக்கும் அதனால் ஏற்பட்டிருக்கும்
வெற்றிடம். இச்சூழலில் தான் இலங்கை அரசு அறிவிக்கிறது 5 தமிழக
மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை என்று. உடனே வழக்கம் போல
சில தமிழக ஒலிபெருக்கிகளின் அலறல்., அறிக்கைகள். (ஒலிபெருக்கி-யார்,
அறிக்கை - யார் என்ற ஊகத்தை தமிழ்ச் செய்திகளைத் தவறாமல்
பார்க்கும் உங்கள் சாய்ஸ்க்கு விட்டுவிடுகிறேன்) இவை எதையும்
கண்டு கொள்ளாமல்  காய் நகர்த்தியது பிஜேபி. இந்தியாவின் பிரதமர்
பேசினாராம் இலங்கை அதிபருடன். அதிபரும் ஒத்துக்கொண்டார்
தமிழக் மீனவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப. பிரச்சனைத் தீர்ந்தது.
நம் மீனவ சகோதரர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதில்
நமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இதை வைத்துக் கொண்டு
பிஜேபி  நடத்திய அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பிஜேபியும் "மோதி பக்வானு"ம் நினைத்தால் தான் தமிழர்களைக்
காப்பாற்ற முடியும் என்ற ஒரு எண்ணத்தை பொதுஜனப் புத்தியில்
ஏற்றியாகிவிட்டது.


இந்திய  நாட்டின் குடிமகனுக்கு இன்னொரு நாட்டின் அரசாங்கம்
தண்டனைக் கொடுத்தால் அதை அணுகும் அதிகாரமும்
தீர்வு காணும் பொறுப்பும் நடுவண் அரசுக்கு மட்டுமே உண்டு.
பிரச்சனையை இம்மாதிரி தான் நோக்க வேண்டும். ஆனால்
பிஜேபியின் தலைவர்கள் இதை என்னவோ தங்களின் வெற்றியாக
தங்களாலும் தங்களின் தலைவர்களாலும் மட்டுமே அதிலும்
குறிப்பாக மோதி பக்வானால் மட்டுமே செய்ய முடியும் என்ற
பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

இலங்கை அதிபருடன் அரசியல் பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல,
இம்மாதிரி ஸ்டண்டுகளுக்கான ஒத்திகைகளும் நடக்கிறதோ?


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில
கட்சிகளின் ஆதரவுடன் நுழையும் பிஜேபி அடுத்தக் கட்ட
நடவடிக்கையாக மாநில கட்சிகளை கருவறுப்பதில் கவனம்
செலுத்துகிறது. இன்று மராத்திய மாநிலம், தமிழ்நாட்டு அரசியலில்
நடப்பது இதுதான். ஒற்றை இந்தியா, ஒரே மொழி, ஒரே மதம்,
அகண்ட பாரதம் என்று படிப்படியாக தன் அசல் முகத்தைக்
காட்டுகிறது.

வாஜ்பாய், அத்வானி, சுஷ்மா சுவராஜ் என்று பிஜேபியின்
குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளும் மோதி என்ற
ஒற்றைப் பிம்பத்தில் அடங்கிப் போனார்களோ அல்லது
அடக்கப்பட்டார்களோ ..,தெரியவில்லை.

நேற்று நடந்ததை எதிர்த்தோம்.
நம்  அழுகுரல் உலகமெல்லாம் கேட்டது.
இன்று நடப்பதை சபதமின்றி
உங்கள் செவிகளுக்கு மட்டுமே கேட்கும்படி
மெல்லிய குரலில் .சொல்ல மட்டும் தான் முடிகிறது.
நாளை??.

Monday, November 3, 2014

மதிப்பெண் வாங்கவைக்கும் எந்திரங்களா, ஆசிரியர்கள்?





இந்தியாவில் வய்து 6 முதல் 14 வயதுவரை அனைத்து
குழந்தைகளுக்கும் கல்வி இலவசம் என்று சட்டம் இயற்றியது
04 ஆகஸ்டு 2009ல் இந்திய பாராளுமன்றம். அச்சட்டத்தின் மூலம்
 "கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை"
என்ற 135 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டது.
இச்சட்டம் காஷ்மீர் மாநிலம் தவிர பிற அனைத்து இந்தியா மாநிலங்களிலும்\
அமுலுக்கு வந்துள்ளது. இத்தருணத்தில் இச்சட்டத்தை அமுலுக்காவதில்
உள்ள சிக்கல்கள் குறித்தும் நிதி தேவை குறித்தும் பலவேறு வாதங்கள்
தொடர்கின்றன. ஆனால் எல்லோரும் ஒத்துக்கொள்வது என்னவென்றால்
"கல்வி ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை" என்பதைத்தான்.

இத்தருணத்தில் கல்வி முறை குறித்தும் அதன் நிறை குறைகளையும்
விமர்சனத்திற்குள்ளாக்கி இருக்கும் எழுத்தாளர் நா.முத்துநிலவனின்
புத்தகம் மிகுந்த கவனிப்புக்குரியதாகிறது. முத்துநிலவன் அவர்கள்
அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணி செய்து அண்மையில் பணி ஓய்வு
பெற்றவர் என்பது கூடுதல் கவனிப்புக்கான காரணமாவதுடன்
கூர்மையான கருத்துகளுடன் எவராலும் மறுக்க முடியாத யதார்த்தங்களை
முன்னிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

சாப்பிடும் பிஸாவிலிருந்து அணியும் காலணி வரை அமெரிக்க மயமாக
விரும்பும் இளைஞர்கள் கல்வி முறையில் இந்தியா ஏன் அமெரிக்காவைப்
பின்பற்றுவதில்லை, அமெரிக்காவில் செருப்பு தைப்பவன் குழந்தையும்
அமெரிக்க ஜனாதிபதி குழந்தையும் ஒரே பாடப்புத்தகத்தைத்தான்
படிக்க வேண்டும். கல்விமுறையில் வசதியானவர், வசதியில்லாதவர்
என்ற பாகுபாடு அங்கில்லை. ஆனால் நம்மிடம் அரசு பள்ளியில்
படிக்கும் குழந்தை என்றாலே, குடிசை வாசியின் குழந்தை என்ற
புரிதல் பொதுஜனப் புத்தியில் பதிந்திவிட்டது.ஏன்?

நம் கல்வி முறை குறித்து பேச வரும் அனைவரும் "மெக்காலே கல்வித்திட்டம்"
தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் வெள்ளையர் ஆட்சியில் ஆங்கிலேய
பேரரசு தன்னிடம் வேலைப்பார்க்க குமாஸ்தாக்களை உருவாக்கும் நோக்கத்துடன்
திட்டமிடப்பட்ட கல்விதான் மெக்காலே கல்வித்திட்டம் என்று சொல்கிறார்கள்.
இது முழுக்க உண்மையும் அல்ல, புனைவும் அல்ல என்ற புரிதல் முதலில்
வேண்டும். ஏனேனில் மெக்காலே கல்வித்திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்
இந்தியாவில் ந்டைமுறையில் இருந்த கல்வித்திட்டம் என்ன? என்ற
வரலாற்றை அறிந்தால் அதன் விளைவுகள் இன்று வரை நம் கல்வித்திட்டத்தில்
ஏற்படுத்திய ஏற்படுத்திகொண்டிருக்கும் விளைவுகளைப் புரிந்து கொள்வது
எளிதாக இருக்கும்.

மெக்காலே கல்வித்திட்டத்திற்கு முன் இந்தியாவில் இரு கல்வி முறைகள் இருந்தன.
அந்த இரண்டுமே மதம் சார்ந்த , மத நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்
கல்வி முறை. ஒன்று அரபிக் மொழியில் கற்பிக்கப்பட்ட மதரசா பள்ளிகள்,
இன்னொன்று  - சமஸ்கிருத மொழியில் கற்பிக்கப்பட்ட இந்துத்துவ பள்ளிகள்.
இந்த இரு பள்ளிக்கூடங்களும் கல்வியில் த்லைசிறந்து விளங்கிய
இந்தியாவின் நாளந்தா பல்கலை கழகம் என்ற பவுத்த கல்வியை
அழித்தொழித்த சிதைவிலிருந்து வளர்ந்தவை.

உலக நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து கல்வி கற்றார்கள்,
நாளந்தாவிலும் காஞ்சிபுரத்திலும் அக்கல்விக்கூடங்க்கள் இருந்தன
என்று நம் வரலாறு சொல்கிறது. பவுத்தத்தை அழித்த வருணாசிரமம்
கல்வி எல்லோருக்குமானது என்ற பவுத்தத்தின் அடிப்படைக் கொள்கையை
முற்றிலும் நிராகரித்தது. இப்படியான சம்ஸ்கிருத பள்ளிகளும் மதரசா
பள்ளிகளும் இருந்தக் காலக்கட்டத்தில் 1835ல் மெக்காலே கல்வித்திட்டம்
பரிந்துரைக்கப்பட்டது. மெக்காலே கல்வித்திட்டத்தின் நோக்கம் வேறாக
இருந்தாலும் அதன் விளைவுகள் தான் சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம்
என்ற பிரஞ்சு புரட்சியின் தாரக் மந்திரத்தை உரக்க படிக்க வைத்ததுடன்
ஒவ்வொரு படித்த இளைஞனையும் அக்கருத்துகள் வசப்படுத்தியதும்
நிகழ்ந்தது.

மெக்காலே கல்வித்திட்டம் மேற்கத்திய கலாச்சாரத்தைப் புகுத்திவிட்டது
என்ற எண்ணமும் இந்தியர்களை வெறும் குமாஸ்தாக்களாக மட்டுமே
வைத்திருக்கும் கல்விமுறை என்ற எண்ணமும் மேலோங்க அதற்கு
மாற்றாக மீண்டும் கடந்த காலமே பொற்காலம் என்ற கனவுகளுக்குள்
நம் கல்வியாளர்களும் சிக்கினார்கள். அதாவது குருகுலக்கல்வியின்
பெருமைகள் பேசப்பட்டன. புராண இதிகாச நாயகர்கள் நம் தலைவர்களாக
கடவுளர்களாக புனையப்பட்டார்கள். நம்  காந்தி மகான் கூட
"அரிச்சந்திரம் நாடக்த்தைப் பார்த்து தான் " வாழ்க்கையை " சத்தியசோதனை"
ஆக்கி தேசப்பிதா ஆன பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
கட்டுரையாளர் நா.முத்துநிலவன்  இப்பிம்பங்க்களைக் கட்டுடைக்கிறார்.
.

"சாதாரணமான ஒரு மனிதனின் கடமையையோ
சத்தியம் தவறாத ஒரு புருஷனின் கடமையையோ
சரித்திரத்தில் நிற்கும் ஓர் அரசனின் கடமையையோ
சரியாகச் செய்யாத அரிச்சந்திரனின் கதை சரியானதுதானா?
(பக் 118)

என்ற கேள்வி அந்தப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான
தனக்கே ஏற்படுவதாகவும் அரிச்சந்திரன் பாடம் நடத்தும் போதெல்லாம்
தனக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டிருப்பதையும் மிகச்சரியாகவே
உணர்த்துகிறார் முத்துநிலவன்.

ஏன்? இந்த தர்மச்சங்கடம், அதுவும் அப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியருக்கே!

தீண்டாமையை ஒழிக்கும் வாசகங்க்கள் தமிழக அரசின் பாடநூல் அனைத்திலும்
முதல் பக்கத்தில். ஆனால் பாடத்தில் "குல வித்தை கல்லாமல் பாகம் படும்" என்ற
குலக்கல்விக்கு ஆதரவான பழமொழிப் பாடல். எது உண்மை, எது புராணம்,
எது கற்பனை? எது வரலாறு ? என்ற புரிதலின்றி இடம் பெறும்
பாடங்கள்...இது நம் பாடத்திட்டத்தின் குறைபாடு.



இன்னொரு முக்கியமான குறைபாடு... நம் நாட்டில் : தாதாக்கள் எல்லாம்
கல்வித்தந்தைகள்" ஆகிவிட்ட அவலம். புறறீசல் போல பெருகிவரும்
தனியார் கல்விக்கூடங்கள்  , கல்வி நிறுவனங்களாகி பெரும்
பணம் குவிக்கும் வியாபாரமாக கல்லூரி கார்ப்பரேட்டுகள் என்ற
புதியதொரு வர்க்கம் உருவாகிவிட்டது..
இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் சட்டங்களை நிறைவேற்றுவதுடன்
தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறது. சட்டங்கள் நிறைவேற்றும்
போதெல்லாம் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வது போல இந்தப்
புதிய வர்க்கமும் மேல்முறையீடு செய்கிறது. அதன் பின் கண்துடைப்புக்கு
கமிட்டி, கமிஷன், திட்டக்குழு இத்தியாதி காட்சிகள் தொடர்கதையாகின்றன.
இதற்குள் ஆட்சி மாறுகிறது, காட்சி மாறுகிறது.. கல்வித்திட்டங்க்கள்
மட்டும் மாறுவதே இல்லை.!!


*தேர்வு முறையும் மாறவேண்டும்,
திருத்தும் முறையும் மாறவேண்டும்,

*எப்படியாவது மதிப்பெண் வாங்க வைக்கும் எந்திரங்க்களா, ஆசிரியர்கள்?

*செய்தித்தாளைக் காசுக் கொடுத்து வாங்கிப்படிக்கும் ஆசிரியர்கள், எத்தனைப்பேர்?

*ஆங்கிலேயர் ஆட்சியில் கூட 13 வயதில் தான் ஆங்கிலம் அறிமுகமானது.
தமிழர் ஆட்சியிலோ 3 வயதிலேயே அறிமுகப்படுத்துகிறோம்!
அரசனை விஞ்சிய அரச விசுவாசம்!!

*ஆசிரியருக்கு விருது வழங்க அந்த ஆசிரியரே விண்ணப்பிக்க வேண்டுமா?

*தமிழ் மெய் எழுத்துகள் வரிசையில் காரணத்துடன் இருக்கும் ஓர் ஒழுங்குமுறை,

*தமிழாசிரியர்களே செய்யும் தமிழ்ப்பிழை.. என்று சுவையான , பயனுள்ள
கட்டுரைகள் பல இடம் பெற்றிருக்கின்றன.

வலைத்தளம்/வலைப்பூக்களில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றுக்கு
உடனுக்குடன் வெளிவந்த பின்னூட்டங்களையும் கட்டுரையில்
இணைத்து வெளியிட்டிருப்பது கட்டுரையாளரின் பரந்துப்பட்ட
மனப்பான்மையைக் காட்டுவதுடன், கட்டுரைக்கான பன்முகத்தையும்
ஒருசேரக் கொண்டுவருகிறது. இப்புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் அய்யா.

இன்றைய இக்கல்வி முறை குறித்து இன்னும் பலநூறு குரல்கள்
எழவேண்டும். அனைத்தும் கலவியாளர்களிடமிருந்து வரவேண்டும்.
கல்விச்சிந்தனைகள் வளர வேண்டும்.

"முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே (னே).."



- அகரம் வெளியீடு,
பக் 157, விலை ரூ 120/