Thursday, August 23, 2012
Monday, August 20, 2012
இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியா? அல்லது மக்கள் எவ்வழி தலைவனும் அவ்வழி என்று முடிவு செய்வது சரியா? எது சரி?
நம் வளரும் குழந்தைகளுக்கு தலைவர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட மறைந்த தலைவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது நம் தலைமுறைக்கான சோகம், அவலம். ஏன்?
காலையில் குடிக்கும் காஃபியிலிருந்து தண்ணீர், பால், பத்திரிகை, படம், பள்ளிக்கூடம் … எங்கும் நிறைந்திருக்கிறதே இந்த அரசியல்.. இதை இப்படியே விட்டுவிட்டு … இருந்தால் நம் வாரிசுகளுக்கு நாம் எந்த தேசத்தை அவர்களுடையதாகக் கொடுக்கப் போகிறோம்? இந்த எண்ண ஓட்டங்களில் படித்தவர்கள் பட்டதாரிகள் சிந்தனையாளர்கள் என்று பலர் எடுத்த அரசியல் முயற்சிகள் ஏன் செயல்பட முடியாமல் முடங்கிப் போனது?
உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் மக்களாட்சியைக் கொண்டாடுவதாக அடிக்கடி சொல்லப்படுகிறதே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் இந்திய நாடு என்று பெருமிதம் கொள்கின்றோமே இந்தப் பெருமிதம் பன்னாட்டு அரங்குகளில் நாம் போட்டிருக்கும் வெளிவேஷமா?
அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கும் போது இந்திய சட்டப்படி அறிவிக்கப்பட்டிருக்கும் எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இருக்க கூடாது என்கிற விதி இருக்கிறது நம் படிவங்களில். ஆனால் பொதுமக்களுக்கு அந்த விதிகளை உருவாக்கும் நம் நாடாளுமன்றத்தில் இருப்பவர்களின் தகுதி என்னவாக இருக்கிறது?
543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 153 பேர் சட்டப்படி குற்றவாளிகள். Association of democratic reforms (ADR) அமைப்பு நம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது. 2002ல் நம் உச்சநீதிமன்றம் தேர்தலில் நிற்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் கல்வி தகுதி, பொருளாதர நிலை மற்றும் சட்டப்படி அவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதைப் பற்றிய விவரங்களைக் விண்ணப்பத்தில் பதிவு செய்தாக வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்திய பிறகும் நம் நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
2 ஜி, 3 ஜி , இஸ்ரோ என்று என்னவெல்லாமோ செய்திகள் வருகின்றன. கண்துடைப்பு கைது காட்சிகளுடன் முடிந்து விடுகின்றன. ஊழல் என்பதும் அதில் சொல்லப்படும் தொகையும் ஓட்டுப்போடும் மக்களின் கற்பனைக்கு எட்டாத எண்ணாக இருப்பதும் ஒன்றை மிஞ்சம் வகையில் இன்னொரு ஊழல், அதற்குப் போட்டியாக இன்னொரு ஊழல்.. இப்படியாக வந்து கொண்டே இருப்பதால் பொதுமக்களுக்கு அரசியல் என்றால் ஊழல் அதில் ஓர் அங்கம் என்ற மனநிலை உருவாகிவிட்டது.
இங்கே தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எவரும் பெற்ற வெற்றிகள் அவர்களுக்கானவையாக இருப்பதில்லை. ஆளும்கட்சியின் மீது கொண்ட அதிருப்தி அதாவது எதிர்மறை வாக்குகள் எதிர்கட்சிக்கு சாதகமாக அமைவதால் மட்டுமே ஆட்சி அதிகாரம் கை மாறுகிறதே தவிர வேறு எவ்விதமான மன மாற்றங்களோ அல்லது ஆட்சியில் மிகப்பெரிய மாற்றங்களோ இருப்பதில்லை. .
.இரண்டு திருடன், அல்லது கூட்டமாக திருடன்களும் கொலைகாரர்களும். இவர்களில் யாரைத் தேர்ந்த்தெடுப்பது என்று வருகிற போது அந்தக் காலக்கட்டத்தில் இவனை விட அவன் செய்தது அவ்வளவு பெரிய குற்றமோ ஊழலோ அல்ல என்கிற எண்ணம், மக்களின் ஓட்டுப்போடும் மனப்பான்மையில் இருக்கிறது. அரசியல் என்பது ஆள்பலம், ரவுடியிசம், பணபலம், பணபலத்திற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் துணியும் தலைவர்களை நாம் உருவாக்கி விட்டோமா? என்ற அச்சம் சமூக அக்கறைக் கொண்டவர்கள் நடுவில் ஏற்பட்டிருப்பதும் எதுவும் செய்ய முடியாத ஒரு கையறு நிலையில் விரக்தி அடைந்திருப்பதும் தெரிகிறது.\
இக்கேள்விகளின் ஊடாகவே நம் தேர்தல் முறை குறித்து நாம் யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.
நம் தேர்தல் முறை அதிக வாக்குப் பெற்றவர் வெற்றி பெற்றவர் என்ற (majoritarian electoral system) முறையைச் சார்ந்தது. நம்மை ஆண்ட ஆங்கிலேயரின் தேர்தல் முறையை நாமும் அப்படியே ஏற்றுக்கொண்டோம் என்று தான் சொல்லலாம். இந்திய சட்ட வரைவு குறித்த விவாதங்கள் நடந்தப் போது இத்தேர்தல் முறை குறித்த விவாதங்களும் நடந்தன. ஆனால் நம் இன்றைய தேர்தல் முறைக்கு எதிராக விவாதம் செய்தவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களாக இருந்ததாலோ என்னவோ விவாதம் திசை மாறிப்போனது. உள்நோக்கம் இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் மிகக்கடுமையாக மாற்று யோசனைகள் முறியடிக்கப்பட்டன. மேலும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் proportionate electoral system அப்போது 15% மட்டுமே படித்தவர்கள் வாழ்ந்த இந்திய சமூக வாக்களர்களுக்கு ஏற்றதல்ல என்று முடிவு செய்யப்பட்டது.
அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வது சரிதானே என்று மேம்போக்காக வெற்றி/தோல்வி குறித்த கருத்துகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்தியாவின் மக்களாட்சி மகத்துவமானதாகத் தெரியும். தெரிகிறது! ஆனால் இந்த வெற்றி/தோல்வியின் உள்ளீடுகளைப் பார்த்தால் இந்திய மக்களாட்சியின் சாயம் வெளுத்துப் போகும்.
உதாரணமாக ஒரு தொகுதியில் ஒரு இலட்சம் வாக்களர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ன் அதிகமாக வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக கற்பனைச் செய்து கொண்டு 70% ஓட்டுப் பதிவு என்று கணக்கில் வைத்துக் கொண்டாலும்
காங்கிரசு + திமுக கூட்டணி – 20,000 பி.ஜே.பி கூட்டணி – 15,000 அதிமுக கூட்டணி – 18,000 தேதிமுக +இதரக்கட்சி – 12,000 சுயேட்சை + செல்லாத ஓட்டுகள் – 5,000
மொத்தம் பதிவான ஓட்டுகள் – 70,000
ஒரு இலட்சம் வாக்குகள் உள்ள தொகுதியில் ஓட்டுப்போடாத 30,000 தவிர்த்து ஓட்டுப் போட்டவர்களில் வெறும் 20,000 பேர் தேர்ந்தெடுத்த வேட்பாளர் மீதி 50,000 வாக்காளர்களின் ஒப்புதலின்றி அந்தத் தொகுதியின் வேட்பாளராக நாடாளுமன்றமோ/சட்டசபையோ செல்லுகிறார். இந்த 50000 வாக்காளர்களும் இந்த வெற்றி பெற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது அவர் தகுதியானவரல்ல என்று தீர்மானித்தார்கள்.
பெரும்பான்மையால் தகுதியற்றவராக தீர்மானிக்கப்பட்ட ஒருவர் வெற்றி பெற்று தகுதியானவராக ஆக்கப்படுகிறார் என்றால் இந்த தேர்தல் முறை எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?
இவரும் இவரைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும்தான் இந்தியாவை ஆளும் மக்களாட்சி. இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியாளர்கள். இது எவ்வளவு கேலிக்கூத்து? இது மக்களாட்சிதானா? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! என்றெல்லாம் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோமே.. இதெல்லாம் எவ்வளவு மேசமான ஏமாற்றுவித்தை!. மேலே சொல்லியிருக்கும் எடுத்துக்காட்டு ஒரு கற்பனை அல்ல., இதோ சில உண்மையான புள்ளிவிவரங்கள்:
*இன்றைக்கு ஆளும் காங்கிரசு பெற்ற மொத்த வாக்குகள் 28.6% . இது 2004ல் காங்கிரசு பெற்ற வாக்குகளை விட 2% அதிகம். அவ்வளவுதான்.
* பீகாரில் நாவ்டா பார்லிமெண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற பி.ஜே.பி வேட்பாளார் போலாசிங் பெற்ற வாக்குகள் வெறும் 10% தான்
.
*முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தாண்டன், குக்கும்தேவ் நாராயண் சல்மான் குர்ஷித், பரூக் அப்துல்லா ஆகியோர் வெற்றி பெற்றது 1/8 வாக்குகள் மூலம்தான்.
* மீராகுமார் பெற்ற வாக்குகள் 1/8
* 50% வாக்குகள் பெற்று நாடளுமன்றம் வந்திருப்பவர்கள் மொத்தமே 5 பேர்தான் நாகாலந்து, சிக்கிம், வங்காளம் தாலா ஒருவரும் திரிபுராவிலிருந்து 2 பேரும்
.
* 145/573 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20%க்கும் குறைவாக ஓட்டுகள் பெற்று நாடாளுமன்றம் வந்தவர்கள்.
அப்படியானால் 20 அல்லது 30 விழுக்காடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதி 80 அல்லது 70 விழுக்காடு மக்களையும் சேர்த்தே ஆட்சி செய்கிறார்கள் மக்களாட்சி என்ற பெயரால்!.
* அடிக்கடி தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் நம் அரசியல் தலைவர்கள் சில உண்மைகளை உதிர்ப்பார்கள்… “நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்காதீர்கள். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகள் அதிகம் என்ற உண்மை மக்களிடம் எங்களுக்கிருக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது” இத்தியாதி வசனங்கள் எழுதப்படும்.
நம் அரசியல் தலைவர்கள் சொல்வதில் எதில் உண்மையிருக்கிறதோ இல்லையோ இது மட்டும் உண்மைதான்!! அதுமட்டுமல்ல, நம் நாட்டில் தேர்தல் வெற்றி என்பது ஒரு எந்த ஓர் அரசியல் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் தேர்தல் அறிக்கைகள் இவைகளின் அடிப்படையில் அமைவதாக நாம் நினைப்பதும் தவறு. (நம் அரசியல் கட்சிகளுக்கு கொள்கை கோட்பாடுகள் இருக்கிறதா என்பது அடுத்தக் கட்ட கேள்வி.) கூட்டணியில் சேரும் அரசியல் கட்சிகள் அல்லது அக்கட்சிகளின் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் தாக்கம் இத்துடன் தொகுதி வாரியாக இருக்கும் சாதிகளின் கணக்கெடுப்பு இப்படியாக பல்வேறு புள்ளிவிவரங்களைச் சேகரித்து எந்தக் கூட்டணி சரியாக கணக்கைப் போடுகிறதோ அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதையும் கடந்த தேர்தல் புள்ளிவிவரங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக , 2006 மற்றும் 2011 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளையோ அல்லது தேர்தல் கமிஷன் வெளியிட்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவரங்கள், அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டுகளின் விகிதாச்சாரம் இவற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் நாம் மக்களாட்சி என்ற பெயரால் என்ன நடத்திக் கொண்டிருக்கிறொம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
நம் தேர்தல் முறையே நமக்குப் போதுமானது. மிகவும் கடுமையாக நம் விதிகளைப் பின்பற்றினால் போதும் என்று சிலர் சொல்வதுண்டு. எழுத்தாளர் திரு ஞானியின் “ஓ” போடு ஓரியக்கமாகவே வளர்தெடுக்கப்பட்ட காலத்தில் நான் அவருடன் பேசி இருக்கிறேன். 49 ஓ என்பது தேர்தலில் போட்டியிடும் எந்த உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்வது. ஆனால் ஓட்டுரிமையில் இருக்கும் ரகசிய வாக்களிப்பு என்ற தனிமனித உரிமை இங்கே பறிக்கப்படுகிறது. 49 ஓ படிவத்தை நிரப்பும் வாக்களர் தன்னைப் பற்றிய முழுவிவரத்தையும் இன்னொரு படிவத்தில் நிரப்ப வேண்டும். மேலும் கொந்தளிப்பு நிறைந்த தொகுதியில் துணிந்து “ஓ” போட யார் தான் முன்வருவார்கள்? அப்படியே “ஓ” போட்டாலும் அது வாக்களர்களின் அதிருப்தியை மட்டுமே காட்டும் அடையாளம் மட்டும்தாம். அது வெற்றி தோல்வியைப் பாதிக்காது என்று தேர்தல் ஆணையம் தெளிவு படுத்திவிட்டது.. மேலும் இன்றைய நம் வாக்குப்பதிவுகள் அனைத்தும் எந்திரமயமான நிலையில் நம் ஓட்டுப்பதிவு மிஷினில் “யாருக்கும் ஓட்டுப் போடவில்லை” என்று வாக்காளர் தெரிவு செய்யும் வசதி இல்லை.
நம் அரசியல் தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை நாம் மிகவும் சாதாரணமாகவே பார்த்து பழகிவிட்டோம். எப்படியும் நாடாளுமன்றம் சென்றுவிட வேண்டும் என்ற நிலையில் தற்காப்புக்காக இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுவிடுவார். அதன் பின் ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கோ நாடாளுமன்றத்திற்கோ போவார், இன்னொரு தொகுதியில் மீண்டும் தேர்தல் வரும். இந்த ஒரு குறிப்பிட்ட தலைவரின் தற்காப்புக்காக இன்னொரு தேர்தல், அந்த தேர்தலுக்கு ஆகும் செலவு? யார் தலையில்!
அரசியல் கட்சிகள் அனைத்திலுமே அடிமட்டத் தொண்டர்களும் ஒரு சில விதிவிலக்கான ஊழல் படியாத நபர்களும் இல்லையா என்று கேட்டால் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் தேர்தலில் நிற்கவே முடியாது. தேர்தலில் நிற்க செலவு செய்யும் தகுதி இருக்க வேண்டும். இதுவும் ஒரு காரணம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் கூட தகுதியற்றவர்கள் பதவிகளை எட்டிப்பிடிப்பது எளிதாக இருக்கிறது. இதற்கும் இன்றைய தேர்தல் முறையே காரணம். இக்கருத்தை முன்வைப்பவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு ஓட்டு முறையை அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள். முதல் வாக்குச்சீட்டு இன்றைய தேர்தல் முறையாகவும் இன்னொரு வாக்குச்சீட்டு தான் விரும்பும் அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுப்பதாகவும் அமையும். அதன்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முன்பே அவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். இப்பட்டியல் அதன் பின் மாற்றத்திற்குட்பட்டதல்ல. இந்த இரண்டாவது வாக்குச்சீட்டின் மூலம் விகிதாச்சார அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவரவர் பட்டியலிலிருந்து வரிசைப்படி உறுப்பினர்களை அனுப்பலாம். இடைத்தேர்தல் என்பதே இல்லை. இடைத்தேர்தலுக்கான சூழல் ஏற்படும் போது அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பட்டியலிருந்து உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்திய தேர்தல் முறையின் மாற்றங்கள்/ சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மக்களாட்சி தேர்தல் முறைகளில் 80க்கும் அதிகமான நாடுகள் இன்று விகிதாச்சார தேர்தல் வாக்கு முறைக்கு மாறிவிட்டன.
1930களில் பண்டித ஜவஹர்லால் நேரு இந்திய சமூகத்திற்கு விகிதாச்சார தேர்தல் வாக்குமுறை ஏற்றது என்பதை வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டிருக்கிறார். 1999 களில் நேஷனல் லா கமிஷன் விகிதாச்சார தேர்தல் வாக்குமுறையை இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ராஜ்யசபாவில் பொதுவுடமை கட்சியைச் சார்ந்த தோழர் டி. ராஜா அவர்கள் லஞ்ச ஒழிப்பு குறித்துப் பேசும் போது தேர்தல் முறையில் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் விகிதாச்சார தேர்தல் வாக்குமுறைக்கு மாறுவதைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
இந்திய தேர்தல் முறை சீர்திருத்தங்கள் குறித்து அண்மையில் வெளிவந்திருக்கும் செய்திகள் சில:
தேர்தல்முறை சீர்திருத்தங்கள் குறித்து டில்லியில் நடந்த கருத்தரங்கில் விகிதாச்சார தேர்தல் முறை குறித்த கையேட்டை வெளியிட்டு பேசிய இந்திய தேர்தல் தலைமை ஆணையர் Dr. S Y Quraishi விகிதாச்சார தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி நிறுவப்படும் என்று உறுதி அளித்திருக்கின்றார். பொதுவுடமை கட்சிகள் ஏற்கனவே இம்முறையை சிபாரிசு செய்கின்றன. நாடாளுமன்றத்தின் எதிரணி தலைவராக இருக்கும் திருமிகு. சுஷ்மா சுவராஜ் அவர்கள் விகிதாச்சார தேர்தல் முறையை பிஜேபி கட்சியின் பாலிஸி கமிட்டி ஏற்றுக்கொள்ளும் என்று 17 மே 2012 ல் அவருடனான சந்திப்பின் போது உறுதி அளித்திருக்கிறார்.
தேர்தல் முறையில் மாற்றங்கள் மட்டுமே தீர்வாகிவிட முடியாது, இங்கே அரசியல் கட்சிகளில் மாற்றங்கள் ஏற்படாதவரை. அரசியல் கட்சிகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகளின் நிதிநிலையைக் கண்காணிக்கும் அதிகாரம் தேவை என்ற கருத்தை மிகவும் தெளிவாக முன்வைத்து
Association of Democratic reforms (ADR) அமைப்பு National Election watch டன் இணைந்து நம் தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் அறிக்கையை கடந்த ஏப்ரல் 2011ல் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல்முறை சீர்திருத்தங்கள் குறித்து ஏற்கனவே வெளிவந்த 7 கமிஷன்களின் அறிக்கையையும் கணக்கில் கொண்டு சற்றொப்ப 11 வருட கள ஆய்வுகளின் பின்னணியில் இந்த அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மிகச்சிறந்த கள ஆய்வும் அறிக்கையும். தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து நம்பிக்கையுடன் பார்ப்போம்.
.
மக்களாட்சி என்ற பெயரால் – யாரை நாம் ஏமாற்றுகிறோம்? நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா? நம் தேர்தல் முறையை நாம் உண்மையாகவே மக்களாட்சிக்கு மிகவும் நெருக்கமான முடிவுகளைத் தரும் தேர்தல் முறையாக மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.