Sunday, May 22, 2011
அரசியல் குருபெயர்ச்சி
தேர்தல் முடிவுகள் வந்த நாள்..
மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.
வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.
எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை.
அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் ஒன்றாய் படித்த தோழியின் கணவர் வரைபோன் செய்து விசாரித்தார்கள்.
எங்கள் கணிப்பு இதுதான் என்று சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டுஇருக்க வேண்டியதுதானே. காரண காரியங்கள் எல்லாம் கேட்பார்கள்,அவர்கள் திருப்தி படுகிறமாதிரி பதில் சொல்லியாக வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் செய்த கருத்துக் கணிப்பு வேலை எல்லாம்ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிற மாதிரி பேசுவார்கள்.அப்படிச் சொல்கிறவர்களிடம் அப்புறம் நீங்கள் ஏன் சார் போன் போட்டுஎங்களிடன் கேட்கிறீர்கள் என்று கேட்டால் சரியான பதில் வராது.
வீனஸ் சேனலில் நாங்கள் கொடுத்திருந்தக் கருத்து கணிப்பு நான்கு மாநிலங்களிலும்சரியாக இருந்தது. அந்த டீமுக்கு நான் தான் பொறுப்பு என்பதால் மேலிடத்திலிருந்துஏகப்பட்ட பாராட்டு வந்தது.ஸ்டார், ஹெட் லைன்ஸ் என்று நான் இதற்கு முன்பு வேலைப் பார்த்த சேனல்நண்பர்களும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்என்று சொன்னது எனக்கு கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது.
எல்லோரின் கருத்துக் கணிப்பையும் மீறி ஜெயலலிதா அதிரடியாக இவ்வளவுஇடங்களைப் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றுஅரசியல் பிரிவில் வேலைப்பார்க்கும் நரேஸ் நாலு பத்திரிகை காரர்களைவைத்துக் கொண்டு அலசிக் கொண்டிருந்தான்.
செல்வி ஜெயலலிதா பழைய தவறுகளைச் செய்ய மாட்டார் என்றும்இன்னும் 10 வருடத்திற்கு அவரை அசைக்க முடியாது என்றும்சிலர் சொன்னார்கள்.
ஜெயலலிதா, மம்தா இருவரின் ஜாதகப்படி எதிரிகள்இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்றும் அவர்கள் வெற்றிக்குகுருபெயர்ச்சியே காரணம் என்றும் ஒரு பண்டிதர் அலசிக் கொண்டிருந்தார்..
தேர்தல் முடிவுகளை நக்கீரன் ஆசிரியரை வைத்துக்கொண்டு அட்டகாசமாகஆரம்பித்த கலைஞர் டிவி 10 மணிக்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்அல்லாடிக் கொண்டிருந்தது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரொம்பவும்பரிதாபமாக இருந்தது. எப்படியோ 'மானாட மயிலாட' போட்டு அன்றைய பகல் பொழுதை ஓட்டினார்கள்.
ஸ்டாலின் பின்னடைவு என்ற செய்தி அடிக்கடி வந்து பயமுறுத்தியது உண்மை!உண்மையாப்பா? என்று சென்னை நண்பர்களைத் தொடர்புக் கொண்டால்ஒவ்வொருவரும் அவரவர் கேள்விப்பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
என் கருத்துக்கணிப்புக்கு மிகவும் பலமாக இருந்தது திமுகாவின் பழம் பெரும்தொண்டர்களின் ரகசிய வாக்குமூலங்கள் என்று நான் யாரிடமும் வெளியில்சொல்லவில்லை.
எங்கள் ஊரில் திமுகாவின் பழம் பெரும் தொண்டர் ஒருவர் சொன்னக் கருத்துதான்என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அவரும் என் அப்பாவும் நெருங்கியநண்பர்கள். இருவரும் கலந்துக் கொள்ளாத திமுக மாநாடுகளே கிடையாது.இரண்டு பேருமே மனைவி பிள்ளைகள் என்று கவலைப்பட்டதே இல்லை.என் அப்பாவுக்காவது மாசச்சம்பளம் வரும் உத்தியோகம் இருந்தது.அவருக்கு அதுவும் கிடையாது. இரண்டு வீட்டிலும் பிள்ளைச் செல்வங்களுக்குமட்டும் குறைவில்லை. எந்தப் பிள்ளை எந்த வகுப்பு படிக்கிறது, என்ன செய்கிறதுஎன்று இருவரிடமும் கேட்டால் தெரியாது. ஆனால் கட்சியில் யார் யார் என்னசெய்து கொண்டிருக்கிறார்கள், என்ன எழுதினார்கள், இத்தியாதி விசயங்கள்அத்துப்படியாகத் தெரியும். அதெல்லாம் ஒரு பெரிய கதை.
அவரிடம் தான் எலெக்ஷனுக்கு முந்தியே கொஞ்சம் பல்ஸ் பிடிச்சிபார்ப்பதற்காக போனில் பேசிக்கொண்டிருந்தேன்.
ஆவடையப்பன் தோற்கட்டும்
எல்லாரும் தோக்கட்டும் அப்போ தான் புத்தி வரும்..
மூணே மூணு பேரு ஜெயிச்சா போதும்..
தலைவரு, ஸ்டாலினு அப்புறம் நம்ம பேராசியர்..'"
நான் வேறு அவர் வேறல்ல, நான் தான் அவர், அவர்தான் நான்... என்றுஅடிக்கடி அன்பழகன் சொல்வாராம் நெல்லை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.பாவம் அவருக்கு ரொம்பவும் வேண்டியவரு அவுட் போலிருக்கே என்றுஅன்பழகனின் தோல்வியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் விழித்தெழு இயக்கத்திலிருந்து தம்பி ஸ்ரீதர் வீட்டுக்குவந்தான். எலெக்ஷன் ரிசல்ட் குறித்து ரொம்பவும் காரசாரமாகப்பேசிக்கொண்டிருந்தான்.அன்பழகன் தோல்விக்கு மிகவும் சரியாக ஒரு நியாயத்தை முன் வைத்துப்பேசினான்.
பிறகென்ன அக்கா,
மக்களுக்கு இப்போதெல்லாம் புரிந்துவிட்டது,குற்றம் செய்பவன் மட்டும் குற்றவாளி இல்லை,அந்தக் குற்றத்தைக் கண்டும் காணாமல் கூட இருப்பவன் மிகப்பெரிய குற்றவாளி.அதற்குரிய தண்டனையைத் தான் வழங்கி இருக்கிறார்கள்! வாழ்க.
என்றான்.
அவன் எதைப் பேசினாலும் கொஞ்சம் சூடாகத்தான் பேசுவான்.அவன் சொல்வதிலிருந்த நியாயங்கள் எனக்கும் புரிந்தது.செம்மொழி மாநாட்டு மேடையில் மியுசிக் சேரில் உட்கார இடம் பிடிப்பதுமாதிரி வாரிசுகள் போட்டிப் போட்டதைக் கண்டும் காணாமல்இடிச்சப்புளி மாதிரி மனுசன் உட்கார்ந்திருந்தக் கோலம் நினைவுக்கு வந்தது.
அன்றிரவு,நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே படுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு நட்சத்திரமாக கடலில் விழுந்துக் கொண்டிருக்கிறது என்றுகாற்று வந்து மெதுவாகச் சொல்கிறது
புதிய வானம், புதிய நட்சத்திரங்கள் வரட்டும், என்கிறேன்.
ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை புதிய வானம் புனரமைக்குமா?காற்று கேட்கிறது கண்ணீருடன்.
கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல கைகளை நீட்டியவுடன்காற்று காணாமல் போகிறது..
தெற்கிலிருந்து அழும் விம்மல் ஓசை..
முட்புதரில் கிழிந்துத் தொங்கும் உள்ளாடை
மருத்துவமனைகள் எங்கும் பிணவாடை.
சாபமிடுகிறாள் என் ஆதித்தாய்.
பயமாக இருக்கிறது.. குருதி வழிய காயத்துடன்அவள் நின்ற கோலம்
மன்னித்து விடு தாயே ... என்று அலறுகிறேன்.
அவள் கருப்பை வெடித்துச் சிதறுகிறது
ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது அவள் குழந்தை பிணமாக..
மயங்கி விழுகிறேன்.எழுந்து நிற்கத் தெம்பில்லை.
ஆதித்தாயின் சாபம் என்னைத் துரத்துகிறது.
என் இருத்தலை ஆயிரம் ஏவுகணைகளால் துளைத்து எடுக்கிறது.
ஊரில் அப்பா பெயரால் ஏற்றப்பட்டிருந்த கொடிக்கம்பம்
சாய்ந்துவிழுந்துவிட்டதாம்.
மீண்டும் கொடிக்கம்பதை தூக்கி நிறுத்தவா?
அல்லது விழுந்தது விழுந்ததாகவே இருக்கட்டுமே என்று விட்டுவிடவா? கேட்கிறான் தம்பி, புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?
காலம் என் பதிலுக்காக காத்திருக்கப் போவதில்லை.
கொடிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்தஅப்பாவின் பெயர்
கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைகிறது.பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.. மவுனமாக.
அந்தப் பெயர், அந்த மனிதர், அந்த முகம், அந்த வாழ்க்கை
அதில் எனக்கான இடம் ஒரு சின்னப் புள்ளிதான் என்றாலும்
ஓ வென்று அழ வேண்டும் போலிருக்கிறது.
என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்..
நான் தூக்கத்தில் அழுதேனா.. தெரியவில்லையே
நட்சத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் நீண்ட நேரியல்என் கண்ணீரைத் துடைக்கிறது.
காலையில் திமுக தொண்டர் தோல்வி தாங்காமல் தற்கொலை என்ற செய்தியை வாசித்தவுடன் கோபம் வந்தது.உங்கள் ஊரில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் தற்கொலை, தீக்குளிப்பு!அடிப்படையில் உங்கள் எல்லோருக்குமே எதோ ஒரு வகை மனவியாதிப்டித்திருக்கிறது என்கிறார்கள் என்னுடன் வேலைப்பார்க்கும்வீன்ஸ் டிவி நண்பர்கள்.
இருக்கலாம் ! என்று சொல்லிவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம்பெற மராட்டிய மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எனக்குத் தெரிந்தவர்தான், ஆதிமூலம் ஏதொ யாகமெல்லாம் செய்யப் போகிறாராம்அதைக் கவர் செய்ய காமிராமேனுடன் வேகமாக வெளியில் புறப்பட்டேன்.
Tuesday, May 17, 2011
இன்னமும் போராளிகளே..
மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும். (..நன்றி சாத்திரி -@தமிழ்மணம் )
இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள். இராணுவ முகாம்களினுள் புகுந்து வேவுபார்த்தார்கள். கடலிலும் தரையிலும் சமர்கள் செய்தார்கள். இப்படி எதிர்மறையானதொரு மாற்றத்தினை கொண்டிருந்தார்கள். சமூகத்தில் ஒரு ஆணை எதிர்த்து பெண் கதைத்தாலே அவளை அடங்காப்பிடாரி என்றும்.உடைகளில் மாற்றங்களை கொண்டிருந்தாலே அர்த்தங்கள் சொல்லமுடியாத பல பட்டங்களை அள்ளி வழங்கும் தமிழ் சமூகம் பின்னர் சமராடிய அதே பெண்களை அணைத்து ஆனந்தக்கூத்தாடி அவர்களை ஆயுதம் தரித்த பெண்தெய்வங்களான துர்க்கை காளிமாதா என்று போற்றி கொண்டாடியது.
பெண்கள் மீதான பார்வையே தனிமதிப்பாகிப்போனது.அவர்களின் வீரக்கதைகள் விதவிதமாகப் பேசப்பட்டது. ஆனால் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்டு ஆயுதப்போரும் முடிவிற்கு வந்தபின்னர். ஆயுதங்களற்ற அதே துர்(கா);கைகளும் காளிகளும் அதே சமூகத்தால் தெரு நாயினும் விடகேவலமாய் பாரக்கப்படுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அவர்கள் போற்றப்படுவதில்லை. கொண்டாடப்படுவதில்லை. எங்களை போற்றவேண்டாம். தூற்றாமல் இருந்தாலே போதும் என்று மனதினுள் அழுகின்றார்கள் முன்னைநாள் பெண்போராளிகள்.இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து விசாரணைகள் சித்திரவதைகள் மனஉழைச்சல்கள் என்று அத்தனையையும் தாண்டி விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கைக்கு திரும்பிய பல நூறு பெண்களின் கதைகள் ஒரு கட்டுரை மூலமாக அத்தனையும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இன்று தமிழ் சமூகத்தால் ஒதுக்கபடுவதற்கான முக்கிய காரணங்களாக பாதிக்கப் பட்ட பெண்கள் கூறுவது முதன்மையானது. 1)சாதியம்(திருமணமானவர்கள்) 2) பிரதேசம் 3)யுத்தத்தில் அவர்கள் அடைந்தஅடைந்த ஊனம். 4)வறுமை என்று தரம் பிரிக்கலாம்.
1)சாதியம்...இங்கு அதிகமாகப் பாதிப்படைந்தவர்கள் நீண்டகாலம் போராளிகளாக இருந்து இயக்கத்திலேயே திருமணமாகி யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களே. புலிகள் அமைப்பின் எழுச்சிகாலகட்டங்களில் அமைப்பில் சாதிகளற்ற கலப்பு காதல் திருமணங்களே ஊக்கிவிக்கப்பட்டது. அது புலிகள் அமைப்பில் இருந்தவர்களிற்கு மட்டுமல்ல சாதாரணமான பொதுமக்களிலும் சாதி மாறி காதலித்தவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர்.இப்படி சாதி மாறி திருமணம் செய்தவர்கள் யுத்தத்தில் கணவர்களை பறி கொடுத்தபின்னர் தங்கள் குழந்தைகளுடன் வாழவழியற்று வருமானமும் இல்லாத நிலையில் கணவனின் உறவுகளாலும்; ஏற்றுக்கொள்ளப்படமல் பெண்ணின் உறவுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனியே தவிப்பது மட்டுமல்லாது சமூகத்து ஆண்களின் தவறான கண்ணோட்டங்களும் இவர்கள் மீதே அதிக அழுததத்தினை கொடுக்கின்றது இவர்களே அதிகம் பாதிக்கபட்டவர்களாகின்றனர்.
2)பிரதேசம்..இங்கு அதிகம் பாதிப்படைவது கிழக்கு மாகாண பெண்களே முகாம்களிலிருந்து வெளியே வந்த பெணகள் தங்கள் சொந்த ஊரிற்கு திரும்ப முடியாத நிலை அதற்கான காரணங்கள் அவர்களின் கிராமங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களாகி விட்டது .அல்லது அவர்களிற்கு உறவுகள் யாரும் இல்லை அல்லது தொடர்புகள் அறுந்து பலவருடங்களாகியிருக்கும். முக்கிய காரணமாக அவர்கள் போராளிகளாய் இருந்த காலத்தில் உயர்நிலை பதவிகளில் இருந்திருப்பார்கள்.அல்லது ஊரில் சிறு பிரச்சனைகளிற்காக யாரிற்காவது தண்டனைகள் வழங்கியிருப்பார்கள். இவர்கள் சொந்த ஊரிற்கு திரும்பி சாதாரண வாழ்வில் ஈடுபடும்பொழுது பாதிக்கப்பட்டவர்களாலேயோ அல்லது அவரிற்கு வேண்டதவர்களால் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வாளர்களால் கைது செய்யப்படலாம் அல்லது உயிராபத்து ஏற்படலாமென நினைத்து வேறு பிரதேசங்களில் குடியேறியவர்கள். அப்படி வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தாலும் மேலே சொன்ன அனைத்து பிரச்சனைகளுடன் பிரதேசவாதமும் அவர்களை ஒதுக்குகின்றது.
3) யுத்தகாலத்தில் ஊனமடைந்த போராளிகள் புலிகளின் காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததோடு அவரவர்களின் திறைமைகளிக்கேற்ப இயலுமான வேலைத்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் ஊனமடைந்த பெண்போராளிகளின் நிலை அவர்களது உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.அவர்களை தனியாக பராமரிக்க இயலாது அதே நேரம் சாதாணமாள பெண்களிற்கே திருமணம் செய்வதற்கு சீதனம் செலவுகள் என பணம் தேவைப்படும் இந்த நிலையில் ஊனமான பெண்ணை வைத்து என்ன செய்வது என்பது அவர்களது காரணங்களாகின்றது. அண்மையில் ஒரு முன்னைநாள் போராளிப் பெண்ணொருத்தி என்னுடன் தொலைபேசியில் கதைத்தபொழுது சொன்ன விடயங்கள்.அவள் யுத்தத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுடன் இழந்தவள்.பின்னர் அவளது குரல் வளத்தால் அவள் புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவள். யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி அவனது வீட்டிற்கு சென்ற பொழுது தாய் தந்தை அவளை துரத்தி விட்டார்கள் தனக்கு யாரையும் தெரியாது எங்கேயும் போக முடியாதென வீட்டு வாசலில் அழுதபடி இருந்தவளை அவளது சகோதரன் மீதமிருந்த முழங்கால்களில் பிடித்து தரதரவென இழுத்துவந்து வீதியில் எறிந்துவிட்டு போய்விட்டானாம். பின்னர் அவளின் நண்பர்கள் மூலம் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியதில் அவளை பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்த்து அடிப்படை உதவிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு உதாரணம்தான்.
4)வறுமை என்பது நான் முதலில் எழுதியிருக்கும் காரணங்களுடன் சேர்ந்தே வருகின்ற ஒரு விடயம்தான். யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் காயங்களோ அற்ற திருமணமும் செய்திருக்காத பெண்கள் உடல் ரீதியிலான தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் உளரீதியான தாக்கங்கள் நிறையவே உள்ளது. புலிகள் அமைப்பில் பலவருடங்கள் இருந்துவிட்ட காரணத்தால் இவர்களது கல்வியை தொடராது இருந்தவர்கள். இன்றைய வேகமான வளர்ச்சிகண்ட உலகில் இவர்களது கல்வி அடிப்படைகளை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. திருமணம் என்று வரும்பொழுது புலிகள் அமைப்பில் இருந்தது ஒரு காரணத்தடையாக முன்னே நிற்கின்றது. அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் பிரான்சில் வசிப்பவர் தனது மகனிற்கு ஊரில் ஒரு நல்ல பெண்ணாக தேடுவதாக சொன்னார் நான் அவரிடம் எனக்கு தெரிந்த நிறையபெண்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இப்போ வெளியில் வந்து சரியாக சிரமப் படுகிறார்கள் வேணுமானால் விபரம் தருகிறேன் போய் பார்த்து விரும்பினால் திருமணத்தை நடத்து என்றேன்.உடனே அவர் பதறியவராக ஜயோ புலியிலை இருந்தவளா அதுகள் குடும்பத்துக்கு சரிவராது என்றார்.
இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றை மட்டும் நாம் வெகு இலாவகமாய் மறந்து விட்டோம் அல்லது மறந்தது போல் நடிக்கிறோம் இவர்கள் போராட பேனது யாரிற்காக?? எம்சமூகத்திற்காகவும் எம்மினத்திற்காகவுமேஅதற்காக அவர்பட்ட சிரமங்கள் வலிகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் வெற்றிகளை கொண்டாடிய சமூகம் தோல்விகளை துரத்துவது ஏன். அன்று அவர்கள் கைகளில் ஆயுதங்களை கொடுத்து இன்னொரு இனத்துடன் போராட தள்ளிவிட்டோம். ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்களற்றவர்களாயும் தோற்று போனவர்களாயும் களைத்துப்போயிருந்தாலும் எமது சமூகச்சாக்கடைகளுடன் போராட தள்ளியிருக்கிறோம். எனவே அவர்கள் முன்னைநாள் பெண் போராளிகளல்ல.......... இன்னமும் போராளிகளே..
நன்றி தமிழ்மணம் & சாத்திரி