Wednesday, August 13, 2008
குசேலன் - பெரியாரின் விமர்சனம்
குசேலன் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
என்ன தான் சொல்லுங்க..
குசேலன் பற்றி எத்தனைப் பேர் விமர்சனம் எழுதினாலும்
ஏற்கனவே தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
மாதிரி "நச்"சுனு இருக்காது!!.
அய்யா கேள்வி கேட்காத வரை கண்ணபிரான் - குசேலன் கதை ரொம்பவே
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. பாடப்புத்தகத்தில் வாத்தியார் சொல்லிக்கொடுக்கும்
போதும் சரி, சினிமா காட்சியாக பார்க்கும் போதும் சரி, அய்யா இது பற்றி எழுதியிருந்ததை
வாசிக்கும் முன்புவரை இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றே யாருக்கும்
தோன்றவில்லை.
27 பிள்ளைகள் பெற்றவன் குசேலன். அவன் பிச்சை எடுக்க வந்திருப்பது மோசடி
என்றார். ஒரு ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று கணக்கு வைத்துப் பார்த்தாலும்
20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பிள்ளைகள் இருக்க வேண்டும். தோளுக்கு மேல்
வளர்ந்த 7 பிள்ளைகளைத் தடிமாடு மாதிரி வளர்த்திருக்கும் குடும்பத்தில் ஒருவர் பிச்சை
எடுக்கிறார் னெறால் அந்தக் குடும்பத்து யோக்யதை என்ன?"
என்று கேட்டார் பாருங்கள்..
எழுத்தாளர் ஞாநி்யின் பயிற்சிப்பட்டறை
ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
------------------------------------------------------>> புதியமாதவி, மும்பை.
யாராவது ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் எழுத்துகளை முன்வைத்து
எண்ணற்ற வலைத்தளங்கள் விவாதங்களால் கருத்துக் குவியல்களாக
கொட்டிக்கிடக்கின்றன என்றால் அந்த தனிநபர் இன்றைக்கு
"ஓ" போடு எழுத்தாளர் ஞாநி அவர்கள் தான்.
அவரோடு கருத்தளவில் மாறுபட்டவர்களும் இந்த உண்மையை அவ்வளவு
எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.
" நான் இதுவரை எழுதியவை எல்லாம் நான் விரும்பி எழுதியவை தான்.
ஆனால் நான் விரும்பிய அனைத்தையும் எழுதிவிட்டேனா என்றால்
"இல்லை "என்பது தான் என் பதில் " -
4000 பிரதிகள் விற்பனை ஆன என் சொந்த இதழில் எழுதியதை விட
ஒன்றரை இலட்சம் பிரதிகள் விற்பனை ஆகும் வெகுஜன இதழில் எழுதுவததை
நான் விரும்புகிறேன்." என்று சொன்னதன் மூலம்
"நான் ஏன் எழுதுகிறேன்" என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டதாக
நான் நினைத்தேன்.
தொடர்ந்து பெய்துக்கொண்டிருந்த மழை.. மழையின் பொருட்டு ஏற்படும்
வாகன போக்குவரத்து இடைஞ்சல்கள்... நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
இடமோ வெஸ்டர்ன் லைனிலிருக்கும் கோரேகான். நிகழ்ச்சியில் கலந்து
கொள்வார்கள் என்று எதிர்பார்த்தவர்கள் வாழ்விடமோ செண்ட்ரல், ஹார்பர் லைனில்.
எனவே நிகழ்வில் 15பேர்கள் கலந்து கொள்வார்கள் என்று தான் எதிர்பார்த்தோம்.
ஆனால் 29 பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் இதுவே மும்பையில் தமிழ்
எழுத்தாளர்களுக்கு நடந்த முதல் பயிற்சிப் பட்டறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இனிய நண்பர்கள் கே.ஆர். மணி,
கதிரவன், மற்றும் கே.ஆர்.ஸ்ரீநிவாசனும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
நிகழ்வு சரியாக (10/8/08) காலை 10.30க்கு ஆரம்பமானது.
ஏன் எழுதுகிறோம்? என்ற கேள்வியுடன் நிகழ்வை ஆரம்பித்தார் ஞாநி.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தளத்திலிருந்து வந்து விழுந்த அனைத்துப் பார்வையிலும்
மனிதனின் "பகிர்தல் " என்ற அடிப்படை உணர்வுதான் கலை இலக்கிய
தோற்றுவாயாக இருப்பதைத் தொட்டுச் சென்றார்.
தன்னைப் பற்றிய , தான் எழுத வந்தக் கதையை, நாளைய பொழுதுக்கு
என்ன செய்யப்போகிறோம் என்ற பயமுறுத்தலான வாழ்க்கையின்
ஊடாக தான் செய்யாத குற்றத்திற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திடம்
மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று உறுதியாக சொன்ன தன் தாயின்
நினைவுகளைக் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார் ஞாநி.
வாழ்க்கையின் விழுமியங்கள்.. இவை என்று தன் கருத்தை முன்வைத்தப் போது
இம்மாதிரியான மதிப்பீடுகள் இன்றைக்கு எந்தளவுக்கு நம்மிடம் நம் வாழ்க்கையில்
இருக்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
"ப்பி பிராக்டிகல்" என்று தான் இன்றைய தாய் தன் மகனிடம் சொல்வாள் என்று
என் எண்ண ஒட்டம் என்னைத் துரத்தியது.
தனி மனித மதிப்பீடுகள் மாறவில்லை. விழுமியங்கள் அப்படியே தொடர்கின்றன
என்றால் அந்த தனிமனிதர்களின் கூட்டாக இருக்கும் இச்சமூகத்தின் மதிப்பீடுகள்
எங்கே தொலைந்து போனது என்ற கேள்வி இந்த நிமிடம் வரை என்னை
துரத்திக்கொண்டுதானிருக்கிறது.
ஒரு காலத்தில் லஞ்சம் வாங்கியனைப் பார்த்து "இந்த ஆளு லஞ்சப்பேர்வழியாக்கும்"
என்று சொல்லிக்கொள்வதும் அவனை அதற்காகவே மதிப்புக்குறைவாக நினைப்பதும்
இருந்தது. இன்று..?
"யாருய்யா லஞ்சம் வாங்கலை?!"
ரொம்பவும் சர்வ சாதாரணமாக சொல்லிக்கொள்கிறோம். லஞ்சம் கொடுப்பதும் சரி,
லஞ்சம் வாங்குவதும் சரி.. எந்த வகையிலும் இங்கே யாரையும் உறுத்தவில்லை.
இதில் கூட இப்பொதெல்லாம் ஒரு தர்மம் பேசுகிறோம்..
அந்த ஆளு ரொம்பவும் கரெக்கடா இருப்பாரு.. பைசா வாங்கிட்டா கட்டாயம் அந்த
வேலையைச் செய்து கொடுத்திடுவாரு!"னு அந்த ஆளின் சிறப்பாக அவருக்கு
மரியாதைக் கொடுக்கிறொம்.
இவை அனைத்திற்கும் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை,
கிராமத்து பஞ்சாயத்து ஆபிஸிலிருந்து செங்கோட்டை வரை..
எல்லோரும் பழகிப்போனோம்.
இன்னும்சொல்லப்போனால் இந்த அமைச்சர் லஞ்சம் வாங்கினார் என்று
குற்றம் சொல்லி அந்த தனிப்பட்ட அமைச்சரின் வெற்றி தோல்வியைப்
பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. அந்தளவுக்கு நாமும் நம் சிந்தனைகளும்
சொரணையில்லாமல் போய்விட்டோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
அப்படியானால் நம் மதிப்பீடுகள் என்னவாயிற்று?
தனிமனித மதிப்பீடுகள்.. நாம் நம் தலைமுறைக்கு அதை வழிவழியாக
பாதுகாத்து வாழ்க்கையின் மதிப்பீடுக்ளாக கொடுத்திருக்கிறோமோ என்ற
கேள்வி எழுகிறது.
"நம் வாழ்க்கையின் மதிப்பீடுகள், விழுமியங்கள் அவரவர் குடும்பத்திலிருந்து
ஆரம்பிக்கப்பட வேண்டும்" என்று ஞாநி பட்டறையில் கருத்து களத்தில்
சொன்னது இதைத்தானோ.
அரசியல் குறித்த நிறைய கேள்விகள் கலந்து கொண்ட அனைவருக்கும்
என்னைப் போலவே இருந்திருக்கும்.
சில கேள்விகளுக்கு ஞாநியின் பதில்கள்:
*தமிழகத்தில் அரசியல் சாராத சமூக அமைப்புகளாக மூன்று அமைப்புகளைப்
பட்டியலிட்டார்.
அ) தமிழ்த்தேசியம் ஆ) பெரியார் பேரவைகள். இ) நக்சல்பாரி அமைப்புகள்
* கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா.. இரண்டுபேரையும் பற்றி..
எந்த தனிப்பட்ட அரசியல் வாதியையும் சொல்வதைவிட
ஒட்டுமொத்த இந்த அரசியல்வாதிகள் அனைவரும் சமூகவிரோதிகள் என்று சொல்லலாம்.
அத்வானிக்கும் வாஜ்பாயிக்கும் என்ன பெரிய வேறுபாடு?!!
* திராவிட அரசியல், வாரிசு அரசியலாக குடும்ப அரசியலாக இருப்பதைப்பார்க்கும் போது..
... ஜெயலலிதாவுக்கு சசிகலா என்ற குடும்பம் இருப்பதும் அக்குடும்பத்தை அவரால்
விட்டு விலக முடியாததும்கூட குடும்ப அரசியல் தான் என்று தனக்கே உரிய பாணியில்
கிண்டல் அடித்தார்,
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களை 5 குழுவாகப் பிரித்து
5 தலைப்புகளில் எழுத வைத்ததும் மும்பையில் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும்
நிவேதா, ஹர்ஷாவின் 24வாரக் குழந்தையின் கருக்கலைப்பு குறித்து நீதிமன்றம் சொன்ன
முடிவு சரியா என்று தனிப்பட்ட ஒவ்வொருவரையும் எழுத வைத்து அத்தனைப் பேரின்
கட்டுரை/கவிதை/சிறுகதை/தலையங்கம் எல்லாத்தையும் வாசித்து..
(அட.. என் கை எழுத்து அவருக்கே சவலாக இருந்ததால் என் கவிதையை மட்டும்
நானே வாசிக்க ஞாநி என் கவிதையை வாசிக்கும் அற்புதமான தருணத்தை
இழந்துவிட்டார்...!!!!!) எல்லோருமே நிவேதா என்ற தாயின் உணர்வைக் காயப்படுத்தாமல்
இருக்கும் பொதுத்தன்மையைச் சுட்டிக் காட்டினார்.
கருவைக் கலைத்துவிடுவது, குறையுடம் குழந்தையைப் பெற்றுக்கொள்வது
என்று இரு தரப்பிலும் கருத்துகள் எழுதப்பட்டிருந்த போதும் யாருமே
நிவேதாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை! இந்த ஒப்புமையைச்
சுட்டிக் காட்டி ஆனால் யாருமே இந்தப் பிரச்சனையை கருவில் வளர்ந்து
கொண்டிருக்கும் அக்குழந்தையின் பார்வையில் பார்க்காததையும்
சுட்டிக்காட்டினார். எழுத்து , அச்சு ஊடகத்தில் ஒரு எழுத்தாளனுக்கு
இருக்கும் அதிகப்படியான இடத்தையும் அதுவே காட்சி ஊடகத்தில் எந்தளவுக்கு
விளம்பரதாரரின் ஆளுகைக்கு உட்படுகிறது, ஏன்? என்பதையும் பல்வேறு
எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாகச் சொல்லிச்சென்றார்.
எழுத்தாளர்களுக்கு வாசிப்பு இருக்க வேண்டும் எனபதையும்
மொழியின் ஆளுமை அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
பல்வேறு கருத்து பின்புலத்திலிருந்து வந்தவர்கள் கலந்து கொண்ட
பயிற்சிப் பட்டறை. ஞாநி என்ற தனிப்பட்ட நபருக்கு அப்பால்
அவருடைய எழுத்துகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டவர்களும்
முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாதவர்களும் கலந்து கொண்ட
பயிற்சி பட்டறை.. மும்பையில் எந்த அமைப்புகளும் சாராத சில
தனிமனித முயற்சிகளின் ஊடாக நடந்து முடிந்திருக்கும்
பயிற்சிப்பட்டறை நிறைய நம்பிக்கைகளைத் தந்திருக்கிறது.
கொட்டும் மழையில்.. குடைப்பிடித்தும் நனைய வைக்கும்
பொழுதில்..பட்டைத் தீட்டினால் நிறைய வைரங்களை அடையாளம்
காணமுடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன்.....
-----------------------------------------------------------------
Tuesday, August 5, 2008
சிறகு எரிந்த பறவை
சுமைகளின் பாரம் தாங்காமல்
மரக்கிளையில் அமர்ந்து
ஆகாசத்தின் எல்லைகளை
ஏக்கத்துடன் பார்க்கிறது
நேற்றுவரைப் பறந்து திரிந்த
அந்தப் பறவை.
காதல் முத்தங்களின்
கண்மூடிய தருணங்கள்
மீண்டும் மீண்டும்
பற்றி எரிய
கொஞ்சம் கொஞ்சமாய்
சிறகுகள் எரிவது தெரியாமல்
கழிந்துப்போனது
கண்ணாடிக்கூடுகளில்
அதன் காலம்
எப்போதும்
எல்லோருக்காகவும்
எதையும் சுமக்கவே
தயாராக இருப்பதால்
வரிசைவரிசையாக
காத்திருக்கும் நட்சத்திரங்களுக்காக
சூரியனை இழந்துப் போனது
பறவையின் ஆகாயம்.
"நட்சத்திரங்களும் சூரியந்தானாம்"
ஆறுதலாய் இருக்கிறது
இப்போதைக்கு
இந்த உண்மைமட்டும்தான்.
"பறக்கும் துணிவிருந்தால்
அத்தனை சூரியனும்
என் ஆகாசத்தில் வசப்படும்"
தனக்குத்தானே பேசிக்கொள்கிறது
எரிந்த சிறகுகளை
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே
அந்தப் பறவை.