Sunday, May 27, 2007

poem

ஒரு சொல்.. தேடி..
-------------------->> புதியமாதவி, மும்பை

பிரபஞ்சத்தில் வீசி எறிந்த
ஒற்றைச் சொல்லைத் தேடி
சுற்றி சுற்றி அலைகிறது
கோள்களும்விண்மீன்களும்,

எழுதப்பட்ட
எல்லா காவியங்களிலும்
தேடியாகிவிட்டது
கிடைக்கவில்லை.
ஒவ்வொரு பிறப்பிலும்
வெவ்வேறு மொழிகளுடன்
தேடும் பயணம்.
செத்த மொழியிலும் இல்லை
செம்மொழியிலும் இல்லை.
தேடித் தேடிகளைத்துப் போய்
கண்களை மூடும்போது
எங்கோ கேட்கிறது
தேடிய வார்த்தை.
எழுத்துகள் இல்லாத
பேச்சுமொழியில்.
அதை அப்படியே
எழுதமுடிவதில்லை.
**

கோடை வெக்கையில்
வாடிப்போனவார்த்தைகளை
ஈரப்படுத்தி எழுத நினைக்கும்போது
சிதறிப்போகிறது சேமித்து வைத்திருந்த
எழுத்துப்பொட்டலம்.

ஒவ்வொரு எழுத்தாகஎடுக்கவோ?
எடுத்ததை வார்த்தையாகதொடுக்கவோ?
கூட்டி மணல்வீட்டில்அடைக்கவோ..?
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
யுகம் யுகமாய்.
களவாடிச் செல்லும்
கடலலைகளைப் பார்த்துக் கொண்டே.
------------------

poem

சூரியமுகங்கள்
---------------->> புதியமாதவி, மும்பை

ஒவ்வொரு கணமும்
வெவ்வேறு முகங்களில்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நிஜம்.

மாறும் நிஜங்களின்
வித்தைகள் அறியாமல்
இருக்கின்ற நிஜங்களை
இழந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

அருவியாய்
ஓடையாய்
ஆறாய்
கடலாய்
ஈரப்படுத்தும்
மேகங்களுக்குள்
எரிந்து கொண்டிருக்கிறது
எரிமலையாய்
ஆயிரம்கோடி
சூரிய முகங்கள்.
-----------------------

Thursday, May 10, 2007

வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்

வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்_
_____________________________________>> புதியமாதவி, மும்பை



அரியணைக்காக அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட கதைகள்முடியரசின் வரலாற்று கதைகள் என்று எண்ணி இருந்தவர்களைப் புரட்டிப் போட்டிருக்கிறதுஅண்மையின் நடந்த சில நிகழ்ச்சிகள். கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை எப்போதும் மில்லியன் டாலர் கேல்விக்குரியதுதான்!சில கேள்விகள் சன் தொலைகாட்சியின் செய்திகளுக்கு நடுவில் தினகரன் விளம்பரமாகவெளிவரும்போதெ எல்லோருக்கும் தெரியும் பதில் என்னவாக இருக்கும் என்பது.குறிப்பாக தமிழகத்தின் மத்திய அமைச்சர்களில் மிகச்சிறப்பாக செயல்படுபவர் யார்? என்றகேள்விக்கு தினகரன் வழங்கும் கருத்து கணிப்பு முடிவு என்னவாக இருக்க முடியும்என்பதற்கு யாரும் தினகரன் வாங்கிப் படிக்க வேண்டியதில்லை!சில கேள்விகளுக்குப் பின்னால் டாக்டர் ராமதாசு அவர்கள் சொல்வது போல கீழ்த்தரமானஅரசியல் தான் இருக்கிறது. உண்மையிலேயே மத்திய அமைச்சர் தயாநிதிமாறனின்செயல்பாடு போற்றுதலுக்குரியதாகவும் அவர் மிகச்சிறப்பாக செயல்படுபவராக இருந்தாலும்அதையே சன் குழுமம் நடத்தும் தினகரன் வெளியிடும்போது அதற்கான நம்பகத்தன்மைகேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது!சன் குழுமம், தினகரன், கலைஞர், கலைஞர் நடத்தும் அரசியல்.. இவை எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத இடியாப்பச் சிக்கல்கள். என்னதான் காரணம்சொன்னாலும் அவை எல்லாம் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும்.
சட்டசபையில் கலைஞர் 50 பொன்விழா கொண்டாட இருக்கும் நேரத்தில் கலைஞரின் வாரிசுகளுக்கு நடுவில் நடக்கும் இச்செயல் கரும்புள்ளியாய்..... ஒரு மூத்த அரசியல் தலைவர் என்பதற்கு அப்பால் ஒரு தந்தையின் இடத்திலிருந்துஇந்தச் செயல்களைக் காணும்போது அந்த தந்தையின் உள்ளம் எப்படி துடித்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கும் போது மனம் பதைக்கிறது, அழுகிறது,ஆறுதல் சொல்ல துடிக்கிறது.

இந்த நிகழ்வுகளைக் காணும் போது தமிழகத்தின் எதிர்காலம் இவர்களின் கைகளில்கொடுக்கப்பட்டால் என்னவாகும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.காந்தியின் வாழ்க்கையில் அவருடைய மூத்தமகன் ஹரிலால்காந்தி பலமுறைபொது இடத்தில் பலர் முன்னிலையில் காந்தியை அவமானப்படுத்தி இருக்கிறார்.பாபாசாகிப் அம்பேத்கரின் வாழ்க்கையிலும் இம்மாதிரியான நிகழ்வு நடந்திருக்கிறது.ஆனால் அவை எல்லாம் அரசியல் அரியணைக்கான, அரசியல் வாரிசு போட்டிகள் இல்லை.உறவுகளின் விரிசல்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள்.


இங்கே போட்டியும் போராட்டமும் ஆட்சி, அதிகாரம், ஆள்பலம் தேடி நடக்கும் வேட்டை. காயப்படுபவர் யார் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்கும்வெறித்தனமான தெருச்சண்டை. அரசியல் வாரிசுகளை காலம் தேர்ந்தெடுக்கும், கருத்து கணிப்புகள் அல்ல.


கவிதாசரண் (ஜனவரி-ஜூலை 2007) இதழில் கவிதாசரண் அவர்கள் "தமிழ்க்கனவும், தமிழ்ப் புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும்கலைஞரும் திராவிடப் பேரரசும்" என்று தலையங்கம் எழுதியுள்ளார்.நடக்கிற நிகழ்வுகளைக் காணும்போது நமக்கும் எழுதத் தோன்றுகிறது..தமிழ்க்கனவும் தமிழ்ப்புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் அவர் அரசியல் வாரிசுகளும்.